பெற்றோர்களின் மாத வருமானம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவாகவுள்ள மாணவர்கள் புலமைப் பரிசிலுக்கு உரித்துள்ளவர்கள். எனவே தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் அனைவரும் புலமைப் பரிசில் திட்டத்தில் உள்வாங்கும் தகைமை கொண்டவர்கள்.
இந்த நாட்டில் பல்வேறு துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களே, நாளாந்தம் ஆயிரம் ரூபாவை வேதனமாக பெறுகிறார்கள். இந்த நாடெங்கிலும் உள்ள பெருந்தோட்டங்கள் இருபத்தியிரண்டு தனியார் கம்பனிகளினால் நிர்வகிக்கப்படுகின்றன. அந்த இருபத்தியிரண்டு கம்பனிகளில் ஒரு சில கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவுக்குk; குறைவான தொகையையே நாளாந்தம் சம்பளமாக வழங்கி வருவதை அந்த தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.
கம்பனிகளினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களைத் தவிர்ந்த ஏனைய தோட்டங்கள் தனியாரினால் நிர்வகிக்கப்படுகின்றன. அவ்வாறான பெரும்பாலான தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவுக்கும் குறைவான தொகையையே வழங்கி வருவதை பத்திரிகைகைள் வாயிலாகவும் அத்தகைய தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள் வாயிலாகவும் அறியக் கூடியதாக உள்ளது.
எனவேதான் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் வானளாவ உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியாதவர்களாக அவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் இருந்து இடையில் விலக்கி அவர்களை வெவ்வேறு துறைகளில் ஈடுபடச் செய்து தமது செலவுகளை சிறிதளவில் குறைத்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக தோட்டத் தொழிலாளர்களை குறைகூறிப் பயனில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டு ஏறத்தாழ மூன்று வருடங்களாகின்றன. தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் 1700/- வழங்குவது சம்பந்தமாக பெருந்தோட்டக் கம்பனிகளின் கருத்தை ஜனாதிபதி 31.12.2023 திகதிக்கு முன்பு தெரிவிக்க வேண்டும் என பெருந்தோட்டக் கம்பனிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரியும் எந்தவித சாதனமான பலனும் இதுவரை கிடைக்கவில்லை.
அதன்பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் சம்பந்தமாக முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தியபோது முதலாளிமார் சம்மேளனம் 33 சதவீத சம்பள உயர்வை வழங்க இணங்கியது. ஆனால் தோட்டத் தொழிற்சங்கங்கள் அந்த சம்பள உயர்வை ஏற்றுக் கொள்ளாததனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நெருக்கடியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலையை கருத்திற் கொண்டு தரம் ஒன்றிலிருந்து தரம் 11 வரை நாடளாவிய ரீதியில் கல்வி கற்கும் மாணவர்களில் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
இந்த நாட்டில் இருபத்தைந்து மாவட்டங்கள் உள்ளன. அதன்படி ஒரு மாவட்டத்துக்கு நாலாயிரம் புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
எனவே இந்தச் சந்தர்ப்பத்தை தோட்டத் தொழிலாளர்கள் நல்ல விதத்தில் பயன்படுத்தி தமது பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டத்தை பெற்றுக்கொடுத்து அவர்களை கல்வியில் சிறந்து விளங்கும் விதத்தில் அவர்களை உருவாக்கவேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இன்னும் தெளிவில்லாதவர்களாக இருப்பதனால் தமது பிள்ளைகள் கல்விகற்கும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களை சந்தித்து அவர்களின் வழிகாட்டல்களை உரிய விதத்தில் பெற்று அந்த அறிவுறுத்தல்களின் படி செயல்பட வேண்டும்.
தமது பிள்ளைகள் புலமைப் பரிசில் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிந்து கொண்ட பின்பு அவர்கள் தமது பிள்ளைகளின் பெயர்களில் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஆகிய அரச வங்கிகளில் ஏதாவது ஒன்றில் கணக்குகளை ஆரம்பித்தால் மாதா மாதம் அரசாங்கம் புலமைப் பரிசிலுக்கான மாதாந்தத் தொகையை வங்கியில் வைப்பு செய்யும்.
ஒரு மாணவன் அல்லது ஒரு மாணவி தரம் 11 வரை கல்வி பயிலும்வரை புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பயன்கிட்டும்.
எனவே, தோட்டத் தொழிலாளர்களை தொழிற்சங்க ரீதியிலும் அரசியல் ரீதியாகவும் பிரதிநிதித்துவப்படுத்தும் தோட்டத் தொழிற்சங்கங்களும் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு மாணவர்களின் கல்விக்காக வழங்கப்படவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புலமைப் பரிசில் திட்டத்தை உரிய விதத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கான அறிவூட்டல்களையும் ஆலோசனைகளையும் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி வழங்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை சுபீட்சமடையச் செய்வதில் தமது பங்களிப்பை நல்க வேண்டும். ‘கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்பதாக தோட்டத் தொழிலாளர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் கரிசனை காட்டி செயல்பட்டு அவர்கள் சவால்களை எதிர்கொண்டு வாழ்வில் உன்னத நிலையை அடையச் செய்யவேண்டும்.
ஆசிரியர்கள் கல்வி சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகள் என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். மலையக ஆசிரியர்கள் பொறுப்புணர்ந்து செயற்பட்டால் சமுதாயம் உச்சத்தைத்தொடும்.
- சி.ப.சீலன்