ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உயர்தரப்பரீட்சைக்கு பின்னர் பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்யும் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென தனது மலையகத்துக்கான விஜயத்தின் போது தெரிவித்திருந்தார். இது ஆரோக்கியமான விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
மலையக கல்வி என்பது ஆரம்பகாலங்களில் எட்டாக்கனியாகவே இருந்தது. ‘இவர்களுக்கு எதற்கு கல்வி’ என்று அவர்கள் ஒரம் காட்டப்பட்டனர். எனினும் 1900களின் பின்னர் மலையகத்தில் ஆங்காங்கே பாடசாலைகள் தோற்றம் பெற்று படிப்படியாக கல்வித்துறையில் வளர்ச்சிகண்டனர்.
வறுமை, போசாக்கு குறைபாடு, போக்குவரத்து வசதிகள் இன்மை, ஆசிரியர் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை என பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலும் கல்வி கற்று பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலாசாலைகள் சென்று கல்வி கற்கும் சமூகமொன்று உருவாகியது.
இருப்பினும் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் க.பொ.த உயர்தரத்துக்கு பின்னர் மலையக பெருந்தோட்ட மாணவர்களுடைய பல்கலைக்கழக அனுமதி, தொழிற்கல்வி, தொழில்பயிற்சி பெறுதல் என்பன ஒப்பிட்டளவில் குறைவாகவே உள்ளன.
சரியான வழிகாட்டல்கள், ஆலோசனைகள் இல்லாத காரணத்தால் அவர்களுக்கான பல வாய்ப்புகளை இழக்கின்றனர். இதனால் அவர்களால் தமது திறமைக்கேற்ப உயரிய தொழிலை பெற்றுக்கொள்ள முடிவதில்லை.
பல்கலைக்கழக அனுமதியை எடுத்துக்கொண்டால், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து குறைந்தளவிலான மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர். பல்கலைக்கழகங்களில் அனுமதியை பெறுவதில் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.
இதற்கு வறுமையும் பிரதான காரணமாகவுள்ளது. நான்கு வருடங்கள் என்றிருந்த பல்கலைக்கழக கல்விநடவடிக்கைகள் கொவிட் 19, பொருளாதார நெருக்கடி, போராட்டங்கள் என்பவை காரணமாக 7 வருடங்கள் வரை தற்போது நீடித்துச் செல்வதால் சிலர் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் குடும்பத்தின் பொருளாதார நிலைமை கருதிற்கொண்டு வேலை தேடிசெல்கின்றனர். இன்னும் சிலர் கல்வியை இடைநடுவே கைவிட்டு தொழிலுக்கு செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில்நுட்பம் போன்ற முக்கிய பாடங்களைக் கற்பிப்பதற்கு மலையக பாடசாலைகளில் ஆசிரியர்கள் போதாமையாலும் பாடசாலைகளில் ஏனைய பௌதிக வளங்கள் குறைவாக காணப்படுகின்றமையாலும் பெரும்பாலான மாணவர்கள் உயர்தரத்தில் கலைப்பிரிவு, வர்த்தகம் ஆகிய பாடங்களையே தெரிவுசெய்கின்றனர். அதுமட்டுமின்றி ஆரம்பகாலம் முதல் முறையான ஆங்கில அறிவினை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு மலையக பாடசாலைகளில் குறைவாகவே காணப்படுகி்ன்றது.
இதனால் ஆங்கில மொழிமூலமான உயர்தர கற்கைநெறிகளுக்கு அவர்களால் விண்ணப்பிக்க முடிவதில்லை.
அதேபோல் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் தொழில்நுட்பப்பயிற்சி, வினைத்திறன் ஆற்றல்கள் என்பவற்றிலும் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியே காணப்படுகின்றனர். வேலையில்லாத இளைஞர்களில் 93.0 வீதமானோரிடம் எவ்வித தொழில்சார் தகைமைகளோ, தொழில்நுட்பத் தகைமைகளோ இன்றியிருப்பது மதிப்பிடப்பட்டுள்ளது.
தொழிற் பயிற்சியில் சேர்வதற்குத் தேவையான ஆகக்குறைந்த தகைமைகளாவது அவர்களிடம் இல்லாதிருத்தல். பெரும்பாலான பயிற்சிநெறிகள் சிங்கள மொழியில் மட்டுமே நடத்தப்படுதல்.
பயிற்சிநெறிகள் தொடர்பில் தெளிவான தகவல்கள், விளக்கங்கள் கிடைக்காமை, கடும்போட்டிக்கு மலையக இளைஞர்களால் ஈடுகொடுக்க முடியாமை, பொருளாதார பிரச்சினைகள், தொழிற்பயிற்சி மையங்கள், நிறுவனங்கள் என்பன தோட்டங்களுக்கு வெளியே தொலை தூரங்களில் அமைந்திருத்தல், தொழில்வாய்ப்புகளுக்கு ஏற்ற பொருத்தமான பாடநெறிகளின்மை போன்ற பிரச்சினைகளை தொழில்கல்வியை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்குகின்றனர்.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தகவல்களின்படி இரத்தினபுரி மாவட்டத்தில் 12 தொழிற்பயிற்சி நிலையங்களும், கேகாலை மாவட்டத்தில் 8 தொழிற் பயிற்சி நிலையங்களும், பதுளை மாவட்டத்தில் 8 தொழிற்பயிற்சி நிலையங்களும், மொனராகலை மாவட்டத்தில் 9 தொழிற்பயிற்சி நிலையங்களும் காணப்படுகின்றன. அதேபோல் மத்திய மாகாணத்தில் 9 தொழில் பயிற்சி நிலையங்களும், மாத்தளை மாவட்டத்தில் 6 தொழிற்பயிற்சி நிலையங்களும் நுவரெலியா மாவட்டத்தில் 5 தொழில் பயிற்சிகளும் இயங்குகின்றன.
எனினும் இவற்றில் வருடாந்தம் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிக குறைவாக காணப்படுவதாக இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வசந்தா அருள்ரட்ணம்