இலங்கையின் இயற்கைக் கொடையாக அமைந்தது சிங்கராஜ வனம். மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு இயற்கை வளம் அருகிவரும் நிலையில், இலங்கையில் எஞ்சியுள்ள ஒரே ஒரு ஈரவலய காடாக சிங்கராஜவனம் காணப்படுகின்றது. சிங்கராஜவனம் பற்றிப் பேசும் போது உடனடியாக நம் நினைவுக்கு வருவது தெற்காசியாவிலேயே மிகவும் அரிய வகையான ஈரவலய காடுகளில் வாழும் இரண்டு யானைகள் பற்றியே.
எனினும் சிங்கராஜ வனப்பகுதியில் வாழ்ந்த அந்த இரண்டு யானைகளில் ஒன்றை கடந்த ஒன்றரை வருடங்களாக காணவில்லையென சிங்கராஜ வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு யானைகளும் வனப்பகுதியிலிருந்து வெளியே வருவது வழக்கம். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கழுத்தில் பெல்ட் கட்டப்பட்ட 45 வயதான ஒரு யானையை மட்டுமே காண்பதாக கிராமவாசிகள் தெரிவித்தனர். இந்நிலையில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் காணாமல் போன யானையை தேடிவருகின்றனர். வருடாந்தம் சராசரியாக 3614 மில்லிமீற்றர்- முதல் 5006 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகும் சிங்கராஜ வனத்தில் வாழும் இந்த ஈரவலய யானைகள் உலர்பிரதேச யானைகளை விட மாறுபட்ட நடத்தை கொண்டவையாக காணப்படுவதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆரம்பகாலங்களில் ஈரவலய யானைகள் கூட்டம் கூட்டமாக சிவனொளிபாதமலை, புளத்சிங்கள, உடவளவை போன்ற பகுதிகளில் வாழ்ந்தன. எனினும் கிராம அபிவிருத்தி, காடழிப்பு, பயிர்ச்செய்கை போன்ற காரணங்களால் அவை பிரிந்துசென்றதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவற்றில் சிங்கராஜவனத்தில் 1920ஆம் ஆண்டளவில் ஈரவலய யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்துள்ளன. கிட்டத்தட்ட 40-முதல் 50 யானைகள் வரை இப்பகுதியில் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. எனினும் அக்காலப்பகுதியில் ஒரே நாளில் 20 யானைகள் பிடிக்கப்பட்டு கலவான சமன்புர பிரதேசத்திலிருந்த பண்ணைக்கு இவை கொண்டு செல்லப்பட்டு விற்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அக்காலத்தில் கலவான பிரதேசத்தில் இயங்கிய பாடசாலைகளில் யானைகள் மீதான பயம் காரணமாக மாணவர் வரவு குறைவடைந்ததாகவும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி இலங்கையில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடந்து பலர் விவசாயத்தை கைவிட்டு தேயிலை பயிர்ச்செய்கையில் ஈடுபட ஆரம்பித்தமையாலும் யானைகளின் வழித்தடங்கள், இருப்பிடங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. இதன் பிரதிபலனாக கடைசியாக மூன்று ஈரவலய யானைகள் மாத்திரம் இப்பகுதியில் எஞ்சின. தாயும் இரண்டு மகன்களுமாக சிங்கராஜவனத்தில் மூன்று யானைகள் எஞ்சின. ஆனால் 1990ஆம் ஆண்டின் பின்னர் இந்த மூன்று யானைகளையும் நேரில் கண்ட சாட்சியங்களில்லை. அதன்பின்னர் இரண்டு யானைகள் மட்டுமே எஞ்சியிருந்ததாக அறியக்கிடைத்தது.
இந்த இரண்டு யானைகளும் இறந்துபோனால் சிங்கராஜவனத்திலிருந்த ஈரவலய யானைகளின் வரலாறும் முடிவுக்கு வந்துவிடும்.
கிராமவாசிகளின் கருத்துபடி இந்த இரண்டு யானைகளும் தமக்கு தேவையான உணவைப் பெற்றுக்கொள்வதற்காக ஆண்டின் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களை ரஜவத்த, மாணிக்கவத்த போன்ற பகுதிகளில் கழிப்பதாகவும் ஜுன் மாதமளவில் சிங்கராஜவனத்தின் வடக்கு எல்லைக் காட்டுப்பகுதிக்குள் அவை செல்வதாகவும் தெரியவருகின்றது.
எனினும் உலக பாரம்பரியமிக்க சிங்கராஜ வனப்பகுதியில் வசித்த இந்த கடைசி இரண்டு ஈரவலய யானைகளால் சிங்கராஜவனத்தை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த கிராமமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்தனர். பலர் கொல்லப்பட்டனர். கஜுகஸ்வத்தையில் வசித்து வந்த 84 வயதுடைய நபரொருவர் தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோது முற்றத்தில் யானையால் மிதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
2016, 2017 ஆண்டுகளில் ஒரு பெண்ணும், ஆணும் யானையின் தாக்குதலில் உயிரிழந்தனர். இவ்வாறு இந்த இரண்டு யானைகளும் அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாகவிருந்தமையால் கிராமமக்களால் அவை கொலைக்கார யானைகள் என்றும் அழைக்கப்பட்டன.
எனினும் சிங்கராஜ வனப் பிரதேசத்தில் வாழும் யானைகள் பயணிக்கும் பிரதான வழித்தடங்கள் அழிக்கப்படுவதாலேயே அவை, ரம்புக, தனவெல, அல்லகம, ஹண்டிகேகடே கிராமம், கஜுகஸ்வத்த, பொத்துப்பிட்டிய, கோபிகெல்ல, சைப்ரஸ்வத்த ஆகிய கிராமங்களுக்குள் புகுந்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளதுடன்
கிராம மக்களின் உயிர்களைப் பறிப்பதோடு விவசாய நிலங்கள் மற்றும் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுவதாகவும் சுற்றாடல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த ஈரவலய யானைகள் விவகாரம் அரசியல் அரங்கிலும் அதிகளவில் பேசு பொருளாக மாறியிருந்தது.
இரண்டு யானைகளையும் பிடித்து வேறு இடத்துக்கு அனுப்புவதற்கும் பல வருடங்களாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையிலேயே சுமார் ஒரு வருடகாலமாக சிங்கராஜ வனப்பகுதிக்கு அருகில் வாழும் இரண்டு யானைகளில் ஒன்றை மட்டுமே காணமுடிந்ததாக சிங்கராஜ வனஜீவராசிகள் காரியாலயத்தின் வனவிலங்கு அதிகாரி சரத் விஜேதுங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கலவன ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் கருத்து வெளியிட்டார்.
“கடந்த ஒரு வருடமாக சிங்கராஜ வனப்பகுதியில் ஈரவலய யானை குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ஒரு யானையை மட்டுமே காண்கின்றோம். மற்றைய யானையை நீண்ட நாட்களாக நாங்களோ, ஊர் மக்களோ காணவில்லை. சிங்கராஜ வனத்தின் இரத்தினபுரி எல்லையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் தென் மாகாண காலி நெலுவ வரையுள்ள பரந்த பிரதேசத்தில் உலாவி வந்த இந்த இரண்டு யானைகளை அடையாளம் காண்பதற்காக ஒரு யானையின் கழுத்தில் கறுப்பு நிற கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டது. எனினும் தற்போது கறுப்புநிற கழுத்துப்பட்டி அணிந்த யானையை மட்டுமே காணமுடிகின்றது என்றார். யானைகளின் பயண வழித்தடங்கள் அழிக்கப்படுவதே யானைகள் மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுவதற்குக் காரணமாகின்றது. இது யானை மனித மோதலுக்கும் வழிவகுக்கின்றது.
துரித அபிவிருத்தி, விவசாயம், குடியிருப்பு போன்ற தேவைகளுக்காக யானைகளின் பாரம்பரிய வாழிடங்களான காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் அவை தங்களது பயண வழியறியாது குடியுருப்புகளுக்குள் புகுகின்றன. இவ்வாறு யானைகள் வீதிகளைக் கடக்கும் போது, ரயிலில் மோதுண்டு இறப்பதைத் தடுப்பதற்காகவே அண்மையில் அதற்கான சுரங்கப் பாதையொன்றும் நிர்மாணிக்கப்பட்டது. எனினும் யானை மனித மோதலுக்கான நிரந்தரத் தீர்வென்பது சாத்தியமற்றதாகவே உள்ளது.
வசந்தா அருள்ரட்ணம்