Home » ஒதுக்கப்பட்ட 400 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயணிகள் போக்குவரத்தில்

ஒதுக்கப்பட்ட 400 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயணிகள் போக்குவரத்தில்

by Damith Pushpika
February 25, 2024 6:00 am 0 comment

“கைவிடப்பட்ட இ.போ.சபை பஸ் சேவை “இ.போ.சபை காலாவதியாகிவிட்டது” இவை கடந்த காலங்களில் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக இருந்தன. இ.போ.சபை அந்தளவுக்கு மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தது. அந்த மோசமான நிலை எந்தளவுக்குச் சென்றிருந்தது என்றால், தனியார் பஸ்கள் தங்கள் ஆதிக்கத்தை வியாபித்திருந்த அளவுக்காகும். என்றாலும் இன்று அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. இ.போ.சபை பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, பொதுப் பயணிகள் சேவை மேன்மையடைந்தது. நமது பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி புதிய பஸ்களை இறக்குமதி செய்யுமளவுக்கு அது வளர்ச்சியடைந்தது, இது எமது தொழில்நுட்பத்தினாலேயே அதிகம் சாத்தியமானது. அத்தியாவசிய உதிரிப் பாகங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டன.

இதனடிப்படையில் இ.போ.சபை பஸ்களின் எண்ணிக்கை பல துறைகளிலும் மேம்படுத்தப்பட்டது.

அதன் ஒரு செயன்முறையாக இருந்தது பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு பல்வேறு குறைபாடுகள் காரணமாக சேவையிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்த பஸ்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தியதாகும். அதன் ஊடாக பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்கி, அதன் மூலம் தினமும் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது.

உதிரிப் பாகங்கள் இல்லாமல் சேவையிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்த பஸ்களை மறுசீரமைத்தமை மற்றொரு சிறப்பு நடவடிக்கையாகும். இது இரண்டு கட்டங்களின் கீழாகும்.

அது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் ஆலோசனையின் பேரில் இ.போ.சபையின் தலைவர் லலித் டி அல்விஸின் வழிகாட்டுதல்களின் மூலமுமாகும். இ.போ.சபையின் தலைமை இயந்திர பொறியாளர் (உற்பத்தி) ஆர்.பி. லக்ஷ்மன் புஸ்பகுமாரவின் மேற்பார்வையில் 12 பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது போன்ற பஸ்களை டிப்போக்களில் நிறுத்தி விட்டு, சில காலம் கழித்து ஏலம் விடப்படும், பாவனைக்கு உதவாத பஸ்களை ஏலம் விட வேண்டும் என்ற உண்மையைச் சுட்டிக் காட்டினர். ஆனால் இம்முறை அந்த விளையாட்டை நடுநிலையான அதிகாரிகளால் ஆட முடியவில்லை. பேருந்துகளின் குறைபாடுகளே, அவை சேவையில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணமாகும். பேருந்து உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு, அவை எத்தனை கிலோமீட்டர்கள் ஓடின மீண்டும் சேவையில் ஈடுபடுத்த பார்க்க வேண்டிய பழுதுகள் மற்றும் பல காரணங்கள் நிறுத்தப்பட்ட பல பேருந்துகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடியும் என்று உணர்ந்ததால் அவை முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டன.

முன்னைய காலங்களில் இவ்வாறான பஸ்கள் டிப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டு சிறிது காலத்திற்குப் பின்னர் ஏலத்தில் விற்கப்படுவது வழக்கம். எனினும் இம்முறை அந்த விளையாட்டைச் செய்வதற்கு இ.போ.சபை நடுநிலை அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பஸ்களின் குறைபாடுகள், கோளாறுகள், அவை சேவையில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம், பஸ்கள் உற்பத்தி செய்யப்பட்ட வருடம், எத்தனை கிலோமீட்டர்கள் ஓடின, மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்குச் செய்ய வேண்டிய பழுது பார்ப்புக்கள் போன்ற பல காரணங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கப்பட்டது. அவ்வாறு ஆராய்ந்து பார்த்ததில் சேவையிலிருந்து ஒதுக்கப்பட்ட பல பஸ்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடியும் எனக் கண்டறியப்பட்டு அவை முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டன.

அதன்படிப்படையில், அதன் முதல் கட்டமாக 2023 மார்ச் மாதத்தில் அவ்வாறான 200 பஸ்களை மறுசீரமைப்புச் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த கட்டத்தின் கீழ், இ.போ.சபையால் அந்தப் பணி மிகவும் வெற்றிகரமாகச் செய்யப்பட முடிந்தது. 200 பஸ்களில் 193 பஸ்களின் மறுசீரமைப்புப் பணிகளை முடித்து சேவையில் ஈடுபடுத்துவதற்கு இ.போ.சபைக்கு 5 மாதங்களுக்கும் குறைவான காலமே தேவைப்பட்டது.

முதற் கட்டத்தில் இந்த பஸ்களை முழுமையாக புனரமைப்பதற்காக 197 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. (ரூபா 197,676, 828.28) இதன்பிரகாரம் சராசரியாக ஒரு பஸ்ஸுக்காக செலவிடப்பட்ட தொகை ஒரு மில்லியன் ரூபாவை அண்மித்த தொகையாகும். இந்தப் பஸ் ஒன்றை இந்தியாவிலிருந்து புதிதாக இறக்குமதி செய்வதானால், ஒரு பஸ்ஸூக்கு 21 மில்லியன் ரூபாய் (இரண்டு கோடி பத்து இலட்சம்) செலவழிக்க வேண்டும். அப்போது எமது பணம் வெளிநாட்டிற்குச் செல்கிறது. எமது வேலைவாய்ப்பின்மை அப்படியே இருக்கும். இந்நாட்டின் வளங்கள் பயன்படுத்தப்படாமல் அவ்வாறே இருக்கும்.

இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதால் ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் வருமானத்தை ஒரு பஸ்ஸின் மூலம் ஈட்டிக் கொள்ள முடியும். இதனடிப்படையில் மறுசீரமைக்கப்பட்ட அந்த பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் பெருமளவிலான வருமானத்தை இ.போ.சபையினால் ஈட்டிக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பஸ் ஆறு முறை பயணத்தை மேற்கொண்டால் குறைந்தது அந்த 394 பஸ்களில் (முதற் கட்டத்தில் 193 பஸ்களும், இரண்டாம் கட்டத்தில் 201 பஸ்களும்) ஒரு பஸ்ஸில் 50 பயணிகள் வீதம் பயணிப்பதாக எடுத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு (50 X 6 X 394) 118,200 பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க முடியும். எனினும் நெரிசலான பிரதேசங்களில் சேவையில் ஈடுபடும் இ.போ.சபை பஸ் ஒன்று சாதாரணமாக ஒரு நாளைக்கு 10 -முதல் 15 முறை பயணத்தில் ஈடுபடுவதோடு, அவ்வாறு பார்க்கும் போது இந்த பயணிகளின் தொகை சில பஸ் சேவைகளில் இரு மடங்காகக் கூட அதிகரிக்க கூடும்.

இந்த பஸ்களைத் துரிதமாகச் சேவையில் ஈடுபடுத்துவதற்காக ஒரே இடத்தில் அன்றி பிராந்திய ரீதியாக அந்த பஸ்களை மறுசீரமைக்குமாறு அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இ.போ.சபைத் தலைவருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதன்பிரகாரமே, பஸ்களின் சீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அதன்பிரகாரம் நாடு முழுவதிலுமுள்ள 11 பிராந்தியங்கள் ஊடாக இந்த பஸ்களின் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. லேலண்ட் மற்றும் டாடா எனும் இரண்டு வகை பஸ்கள் மற்றும் மலையகம் மற்றும் கிராமப்புறங்களில் சேவையில் ஈடுபடும் ஒற்றைக் கதவுகளை மாத்திரம் கொண்ட பஸ்களும் இதன் கீழ் முழுமையாக மறுசீரமைக்கப்பிக்கப்பட்டன.

கடந்த 2003 ஜனவரி மாதமாகும் போது இ.போ.சபை டிப்போக்களில் 852 பஸ்கள் சேவையில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்ததோடு, நாடு முழுவதிலும் உள்ள 107 இ.போ.சபை டிப்போக்கள் மற்றும் 12 பிராந்திய வேலைத் தளங்களில் பணியாற்றும் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் பஸ்களை மறுசீரமைக்கத் தொடங்கினர்.

அதனடிப்படையில், வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்கள் மாத்திரம் ஒரு பஸ் சேவையில் ஈடுபட்டால், அந்த 394 பஸ்கள் மூலம் ஆண்டுக்குக் கிடைக்கும் வருமானம் குறைந்தபட்சம் (ரூபாய். 30000 X 394 X 365) = 35,46,000,000) 354 கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும். அந்தப் பஸ்களை நீண்ட தூர சேவைகளுக்குப் பயன்படுத்தினால், அல்லது ஆண்டுக்கு ஓடும் நாட்களை 325 ஆக உயர்த்தினால், அந்தத் தொகை நிச்சயமாக 400 கோடி ரூபாய் எனும் 4 பில்லியனைத் தாண்டும். அந்தப் பணத்தைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து சுமார் 200 புதிய பஸ்களைக் கொள்வனவு செய்திருக்க முடியும். அதில் பாதியை பஸ்களின் பராமரிப்பு உள்ளிட்ட இதர செலவுகளாக ஒதுக்கினால் குறைந்தது 100 புதிய பஸ்களையாவது வாங்க முடிந்திருக்கும்.

இது இதுவரைக்கும் நாம் அறிந்திராத இரகசியமாகும். அந்த இரகசியத்தை ஏன் எம்மால் வெளிப்படுத்த முடியாமல் போனது? இ.போ.சபையின் சில டிப்போக்களது தலைவர்கள் தனியார் பஸ்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளனர். அம்பாறை போன்ற டிப்போக்களின் பிரதானிகள் ஊழல் மோசடிகளின் மூலம் நன்மையடைந்தனர். இவை கண்டுபிடிக்கப்பட்ட ஓரிரு சம்பவங்கள் மாத்திரமேயாகும். இ.போ.ச பஸ்களின் டிக்கெட் பரிசோதகர்கள், நடத்துனர்கள் மற்றும் நேரக் கண்காணிப்பாளர்கள் போன்றோர் அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் சுரண்டிய முறைகளை நாம் கடந்த காலங்களில் வெளிப்படுத்தினோம். இந்த அனைத்து முறைகேடுகளும் நடந்திருக்காவிட்டால் இ.போ.சபை முன்னேற்றப் பாதையில் வெகு தூரம் சென்றிருக்கும். எனினும் அவை தொடர்பில் ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை மேற்கொள்ளாமை அதற்கு காரணமாகியது.

இந்த பஸ்கள் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டது இ.போ.சபையின் பிராந்திய வேலைத்தளங்களான ஊவா, நுவரெலியா, கண்டி, வடமேற்கு, கொழும்பு, கம்பஹா, சப்ரகமுவ, களுத்துறை, றுஹூனு, ரஜரட்ட, வடக்கு, கிழக்கு ஆகிய வேலைத்தளங்களிலாகும். அத்துடன் கொழும்பு மத்திய பஸ் வண்டி அலுவகத்தில் முதலாம் கட்டத்தின் கீழ் ஒரு பஸ் வண்டியும், இரண்டாம் கட்டத்தின் கீழ் மற்றொரு பஸ் வண்டியும் புதுப்பிக்கப்பட்டது. அதேபோன்று சிசு செரிய பாடசாலை மாணவர் சேவை பஸ்களும் இங்கு முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டது.

காடு மண்டிப் போயிருந்த பல பஸ்கள் இவ்வாறாக வீதிக்கு வந்துள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள டாடா பஸ்களில் ஒன்று இன்னும் சில மாதங்கள் அங்கேயே இருந்திருந்தால் அதன் தலைவிதியைச் சொல்லத் தேவையில்லை. இ.போ.சபையைக் கட்டியெழுப்புவது எமக்கு சிரமமான விடயமல்ல. அதற்குத் தேவை மனோநிலை மாற்றம் மாத்திரமேயாகும். அந்த மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளதாக இந்த பஸ்களின் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் ஊடாக எமக்குத் தெரிய வருகிறது. டிப்போக்களில் உள்ள பஸ்களின் உதிரிப் பாகங்கள் தனியார் பஸ்களுக்கு திருட்டுத்தனமாக வழங்கப்படும் செயற்பாடுகள் கூட இ.போ.சபையில் இடம்பெற்றதாக எமக்கு இதற்கு முன்னர் செய்திகள் வந்தன. அந்த நிலையும் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் இ.போ.சபைக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தாரக விக்ரமசேகர தமிழில் - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division