Home » நீதி கேட்டு நிற்கும் சிறுபான்மை இனங்கள்

நீதி கேட்டு நிற்கும் சிறுபான்மை இனங்கள்

by Damith Pushpika
February 25, 2024 6:00 am 0 comment

இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவோடு, உலகில் புதிதாகத் தோற்றம் கண்ட அரசுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு சென்றது. புதிய தேசங்களின்- அரசுகளின் இந்த அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் என்ன? ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கமும் அதன் சாசனமுமே முக்கிய காரணமாகும். அதுகாலவரை குடியேற்ற நாடுகளைக் கட்டியாண்ட வல்லரசுகள், தாங்கள் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்த நாடுகளுக்கு சுதந்திரமும் விடுதலையும் வழங்கியாக வேண்டும் என்று சர்வதேசச் சட்ட வரையறைகளையும் நிபந்தனைகளையும் முன்வைத்தன. ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது வல்லரசுகள் நடத்திக்கொண்டிருக்கும் ஆட்சிமுறை சட்டவிரோதமானது அன்று அவை தீர்ப்பெழுதின. அதுகாலவரை நாடுகளின் சுயநிர்ணய உரிமை என்பது அரசியற் கோரிக்கையாக மட்டுமே இருந்த நிலை இப்போது மாறிவிட்டது. சுயநிர்ணய உரிமை சர்வதேசச் சட்டத்தின் பிரிக்கமுடியாத அங்கம் என்றும் காலனிய நாடுகள்மீது சுயநிர்ணய உரிமையை அமுலாக்கவேண்டிய பொறுப்பு வல்லரசுகளுக்கு உண்டு என்றும் விதி செய்தது.

இத்தகைய சர்வதேச அரசியற் பின்னணியில், இந்தியா தனக்கென்ற தார்மிக நோக்கினைக்கொண்டு, தனித்துவத்துடன் செயற்பட்டு வந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்திற்கான சட்ட வரைவுகள் பற்றிய ஆலோசனை மாநாடுகளில் இந்தியா ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கியுள்ளது. ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை உலக சமாதானத்திற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வாளாவிருக்கும் சந்தர்ப்பங்களில், பெருமளவு அங்கத்தவர்களைக்கொண்ட பொதுச் சபை தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தைச் சாசனங்களில் சேர்த்துக் கொள்வதற்கு இந்தியா ஏனைய நாடுகளுடன் இணைந்து முக்கிய பங்காற்றியுள்ளது.

இந்திய காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டம் வேகம் பெற்றபோது, இரண்டாம் உலக யுத்தத்தோடு களைத்துப்போன பிரித்தானிய இராணுவம் இன்னுமொரு யுத்தத்தை எதிர்கொள்ளத் தயாரில்லை என்று அன்றைய பிரித்தானியப் பிரதமர் பொதுமக்கள் சபையில் அறிவிக்க நேர்ந்தது. இவை இந்திய விடுதலையை முன்னோக்கி நகர்த்தின.

இந்தப் பின்னணியில் இலங்கைத் தீவைத் தொடர்ந்தும் வைத்திருப்பதனால் ஏற்படக்கூடிய இலாப,-நஷ்டக் கணக்கை பிரித்தானியா கையில் வைத்திருந்தது. இலங்கை அமைச்சரவை அப்போது பிரித்தானிய அரசிடம் முன்வைத்திருந்த சுயாட்சிக் கோரிக்கையையும், இரண்டாம் உலகயுத்தத்தின்போது இலங்கை அமைச்சரவைக்கு பிரித்தானிய அரசு அளித்த வாக்குறுதிகளையும் அது எடை போட்டுப் பார்த்தது. வரலாற்று ரீதியாக இலங்கைத்தீவு ஓர் இந்து மாகாணமே என்ற கருத்தும், இலங்கை ஒரு கலாசார சுயாட்சிப் பிரதேசமாக இருக்கமுடியுமே தவிர, இறைமை கொண்ட நாடாக விளங்க முடியாது என்ற இந்தியத் தலைவர்களின் கருத்தும் மேலோங்கி நின்ற காலம் அதுவாகும்.

பிரித்தானிய அரசு தனது கையில் வைத்திருந்த லாப நஷ்டக் கணக்கோடு, தங்கள் நலன்களை இலங்கையில் எவ்வாறு தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதற்கான வழிவகைகளைத் தேடியது. அதுவரை அமுலாக்கப்படாதிருந்த அரசியற்சட்ட ஏற்பாடுகளோடு, சுதந்திர இலங்கையின் அரசாங்கத்தோடும் புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள முடிவெடுத்தது.1947ஆம் ஆண்டு வெஸ்ட்மின்ஸ்டர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை சுதந்திர மசோதாவானது, இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதற்கான சட்ட நடவடிக்கையில் பிரித்தானிய அரசு முனைப்புடன் இருந்தது என்பதை நிரூபிக்கிறது. அம்மசோதா மீதான விவாதங்களில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறுபட்ட கருத்துகளையும் கரிசனத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர். அவற்றில் ஹோன்சி தொகுதி உறுப்பினர் சேர். டேவிட் கமன்ஸ் அன்று தெரிவித்த கருத்துகள் இன்றைய இலங்கையின் இடர்மிகுந்த சூழலில் நாம் கவனத்திற் கொள்ளவேண்டிய ஒன்றாகும். அந்த மசோதாமீது அவர் உரையாற்றுகையில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்:’இலங்கை ஒரு இன அலகு கொண்ட நாடு அல்ல. அத்தீவில் இரு இனங்கள் வாழ்கின்றனர். இலங்கைத் தமிழர்கள் மொத்த சனத்தொகையான 6,500,000 பேரில் 1,500,000 பேர்களைக் கொண்ட சமூகத்தவர்கள் ஆவர். இவர்கள் சிங்கள சமூகத்திலிருந்து இன, மத, சமூகப் பின்னணி போன்ற அடையாளங்களினால் வேறுபட்டவர்கள். அவர்கள் அபரிமிதமான திறமையும் வல்லமையும் கொண்டவர்களாவர். ஒரு நாட்டில் இன அடிப்படையிலான சிறுபான்மையினர் இருப்பார்களானால், அவர்கள் நிரந்தர அரசியற் சிறுபான்மையினராகக் கூடிய அபாயம் காணப்படும். அவ்வாறு அவர்கள் நிரந்தர சிறுபான்மையினராக்கப்படுவார்களானால், இலங்கை ஜனநாயக அடிப்படையில் பரிணாம வளர்ச்சி காண்பதில் தோல்வியையே சந்திக்கும்.இந்நிலை இந்த இரு இன மக்கள்மீதும் மிகப்பெரிய பொறுப்புகளைச் சுமத்துகிறது. நியாயமான அவசியமேற்படின், தமிழர்களை நியாயமானதற்கும் மேலான உரிமைகளுடன் நடத்தவேண்டிய பொறுப்பினைச் சிங்கள மக்கள்மீது சுமத்துகிறது. இப்பொறுப்பு அரசியல் அதிகாரத்தில் மட்டுமல்ல, நிர்வாகம் சார்ந்த அதிகாரங்களினால் ஆனதாகவும் இருக்கவேண்டும். இவ்வாறு தமிழர்கள் நடத்தப்படுவதன் மூலமே அவர்கள் தம்மை நிரந்தர அரசியற் சிறுபான்மையினராகக் கருதாத நிலை ஏற்படும்’

இது சேர். டேவிட் கமன்ஸ் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்து. இலங்கையில் பிரித்தானிய ஆட்சி முடிவுற்று, பின்னர் நடந்த நிகழ்வுகளின் அடைப்படையில் நோக்கும்போது, இவரின் அரசியல் எதிர்வுகூறல் முற்று முழுவதும் பொருத்தமானது என்பது உறுதியாகிறது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையினூடாகவும், சர்வதேசரீதியாகவும் அரசுகள்மீது ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டக் கடமைப்பாடுகளை நோக்கும்போது, அரசுகள், தேசிய இனங்கள், சிறுபான்மைச் சமூகங்கள் என்பன சர்வதேசச் சட்டத்தின் முக்கிய பேசுபொருளாக மாறியிருப்பதை அவதானிக்கலாம். அவற்றின் உரிமைகளும் கடப்பாடுகளும் உறுதிப்படுத்தப்படும் நிலையும் வளர்ச்சிகண்டுள்ளது.

சிறுபான்மை இனங்களின் உரிமைகள், பாதுகாப்புகள் தொடர்பாக சட்டபூர்வமாக இவ்வளவு ஏற்பாடுகள் இருந்தபோதும், இலங்கையில் தமிழ்த் தேசிய இனமும் சிறுபான்மைச் சமூகங்களும் இன்றுவரை நீதி மறுக்கப்பட்ட இனங்களாகவே இருந்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையினதும் ஏனைய நீதித்துறை நிறுவனங்களினதும் செயலற்ற தன்மை காரணமாகவே இந்த நிலை நீடித்து வருகிறது.

மேலும் தமிழர்களின் இன்றைய அவல நிலைக்கு 1948இல் பிரித்தானிய அரசு ஏற்படுத்திய அரசியல் சட்ட ஏற்பாடுகள், இலங்கையின் புராதன தமிழ் அரசுகளது ஆள்புல எல்லைகள் அகற்றப்பட்டு, மத்தியப்படுத்தப்பட்ட அரசின் உருவாக்கத்தை மேலும் வலுப்படுத்திச் சென்றமையாகும். ஆனால் 1948 ஆம் ஆண்டிலிருந்தே இந்த ஆள்புல எல்லைகள் பற்றி தமிழ் அரசியல் தலைவர்கள் பேசிவந்திருக்கிறார்கள். முன்னாள் வவுனியாத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சி.சுந்தரலிங்கம் அங்கம் வகிகித்த அடங்காத் தமிழர் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆங்கிலேய ஆட்சியில் இடம்பெற்ற சட்டத் தவறுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே போன்று, சாவகச்சேரித் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் வி.குமாரசாமி ஐக்கிய நாடுகள் சபை மூலமாக நமது எல்லைகளை நிர்ணயம் செய்து, தமிழ், சிங்கள தனித்துவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்வோம் என்று குரல் கொடுத்தார். சமஷ்டிக் கோரிக்கையும் அதனைத் தொடர்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானமும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சங்களாகும்.

இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாக்குரிமையைக் கபளீகரம் செய்யச் சட்டம் இயற்றிய உடனேயே தமிழ் காங்கிரசிலிருந்து வெளியேறிய தந்தை செல்வநாயகமும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து, இலங்கைத் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்துவைத்தனர். 1952ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை முதன்முறையாக எதிர்கொண்ட இக்கட்சி, 1956ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசியல் ஆதரவினைப்பெற்று, இன்றுவரை சமஸ்டிக்கோரிக்கைக்கு உயிரூட்டி வருகின்றது.

1970ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு 2/3 பெரும்பான்மையை வழங்கியது. பதவிக்கு வந்த மக்கள் ஐக்கிய முன்னணி நடைமுறையிலிருந்த சோல்பரி அரசியல் அமைப்பை மாற்றி, 1972 மே 22 இல் புதிய இலங்கை அரசியல் யாப்பினைப் பிரகடனம் செய்தது. புதிய அரசியல் சட்டத்தின் வரைபு நிலைக் கூட்டங்களில் தமிழர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் தோற்கடிக்கப்படவே, தமிழ் அரசியற் கட்சிகள் அரசமைப்பு அங்குரார்ப்பணச் சபையிலிருந்து வெளியேறின. மாற்றுத் திட்டத்துடன் அரசியற் செயற்பாட்டில் தீவிரங் காட்டின. தமிழர் அரசியல் புதிய வடிவம் பெறலானது.

1948 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற சகல பொதுத் தேர்தல்களிலும் சமஷ்டி முறையிலான அரசியல் சட்ட ஆட்சி முறையினைக் கோரிநின்ற தமிழரசுக்கட்சி, வடக்கு- கிழக்கு மாகாணங்களின் பாராளுமன்ற ஆசனங்களில் பெரும்பான்மை பெற்று, தமிழ்த் தேசிய இனத்தின் தலைமையினைப் பேணி வந்துள்ளது.

பாராளுமன்ற வழிமுறையிலான அரசியற் செயற்பாடுகளின் பெறுமதியினையும் தமிழ்த் தேசிய இனத்தின் சட்ட உரிமைக் கோரிக்கைகளின் வலிமையையும் உணராது, அவை அரசினால் உதாசீனம் செய்ய்யப்பட்டன. இவையே ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழரசினை அடைவதற்கான வழிமுறைகள் தீவிரங் கொண்டன. ஐக்கிய நாடுகள் சபையின் 1948 ஆம் ஆண்டின் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், ‘மனிதன் இறுதி ஆயுதமாக கொடுங்கோன்மைக்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் கிளர்ச்சி செய்ய நிர்ப்பந்திக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், சட்ட ஆட்சி மூலம் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது அத்தியாவசியமானது என்று வலியுறுத்தியுள்ளது. ஆனால், இலங்கைச் சட்ட ஆட்சியாளர்கள் சட்ட ஆட்சி மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. மாறாக, பலமான இராணுவத்தின்மூலம் போர் யுக்திகளையே கையாண்டனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளும் தமிழர்களுக்கு போதிய நிவாரணத்தைப் பெற்றுத் தரவில்லை.

இத்தகைய அரசியற் பின்னணியில் இலங்கையின் தேசிய இனங்களதும் சிறுபான்மையினதும் சட்ட அந்தஸ்தினை நோக்கும்போது பின்வரும் அம்சங்கள் தெளிவாகின்றன.

1. தமிழ், முஸ்லிம் தேசிய இனங்கள், பெரும்பான்மையினரால் கட்டுப்படுத்தப்படுகின்ற அரசாங்கங்களின் அடக்குமுறைக்கு உட்பட்டனவாகவே வாழ்ந்து வருவதாக உணரத் தலைப்பட்டுள்ளனர்.

2. கடந்த 76 வருட கால அரசியலும் ஆட்சிமுறையும் பெளத்த சிங்கள மேலாதிக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டு வந்திருப்பதை உறுதி செய்கிறது.

3.இவர்கள் மேலாதிக்கம் செலுத்தும் அரசு தமிழ்த் தேசிய இனத்தின்மீதும், சிறுபான்மைச் சமூகங்கள்மீதும் செலுத்துகின்ற அதிகாரமும் ஒடுக்குமுறைகளும் பழைய குடியேற்ற ஆட்சித் தன்மையையே தெளிவாகப் பிரதிபலிக்கின்றது என்பதே இன்றைய யதார்த்தமாகும்.

கலாநிதி சந்திரசேகரம் பரமலிங்கம், சட்டத்தரணி

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division