காங்கிரஸ் கட்சிக்கு காலம் கடந்து கிடைத்த மிக முக்கியமான தலைவர் சோனியா காந்தி ஆவார். அவரது கணவர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கொல்லப்படும் போது அவரது வயது 49.
இந்தியாவின் வசீகரமான தலைவராக இருந்த அவர், இளம் வயதிலேயே மரணம் அடைந்தார். அப்போது சோனியாவுக்கு 45 வயது. அப்போது ராகுல்காந்திக்கு சுமார் 20 வயது.
‘இனிமேல் எங்கள் குடும்பத்திற்கு அரசியலே தேவையில்லை. மீண்டும் எங்கள் குடும்பத்திலிருந்து ஒரு உயிர்ப்பலி கொடுக்க நாங்கள் தயார் இல்லை. இதுவரை அனுபவித்த துன்பங்கள் போதும்’ என்று சோனியா அமைதியாக குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தார்.
அப்போது சோனியாதான் அடுத்து கட்சியைத் தலைமையேற்று நடத்துவார் எனக் காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கை மீது பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார் சோனியா காந்தி.
அதன் பின்னர் இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சி சரியான தலைமை கிடைக்காமல் தள்ளாடியது. ஏறக்குறைய மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சீதாராம் கேசரி கட்சியைப் புதைகுழிக்குள் போட்டுப் புதைத்துக் கொண்டிருந்தார். அவர் கண்முன்னால் கட்சி அழிவை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருந்தது. காங்கிரஸ் சாதாரண கட்சி இல்லை. இந்திய நாட்டுக்கு ஜவஹர்லால் நேரு தொடங்கி, மன்மோகன் சிங் வரை 7 பிரதமர்களை அக்கட்சி உருவாக்கி உள்ளது. அதன் கூட்டணி மூலம் 4 பிரதமர்கள் உருவாகி உள்ளனர்.
ஏறக்குறைய 54 ஆண்டுகள் காங்கிரஸ் மட்டுமே இந்திய நாட்டை ஆட்சி செய்து இருக்கிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர் ஆச்சார்யா கிருபாளினி தொடங்கி மல்லிகார்ஜுன கார்கே வரை 20 பேர் தலைவர்களாக இருந்துள்ளனர். அவர்களில் 17 ஆவது தலைவராக 1998 இல் பொறுப்புக்கு வந்தவர் சோனியா காந்தி. அதாவது கணவர் இறந்து 7 ஆண்டுகள் கழித்து கட்சிக்குள் வந்தார் சோனியா காந்தி.
சோனியா காந்தியின் தேர்தல் அரசியல் பயணம் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தொடங்கியது. அன்று தொடங்கி 25 ஆண்டுகள் அவர் மக்களவை உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றி வந்துள்ளார். அந்தப் பயணம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.
அவர் ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இது வெறும் அவை மாற்றம் மட்டும் அல்ல; அரசியல் மாற்றம் ஆகும். எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களைவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்து நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராக வருவார் என ஊடகங்கள் கூறி வருகின்றன.
இந்த நிலையில் சோனியா சபையை காலி செய்து கொண்டு செல்ல இருக்கிறார். இப்போது 77 வயதை எட்டியுள்ள சோனியா காந்தி, 2004 மற்றும் 2009 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி இரண்டு முறை வெற்றிவாகை சூடுவதற்கு வழிவகுத்துக் கொடுத்தவர்.
அதன் பின்னர் 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 44 இடங்கள்தான் கிடைத்தன. வெற்றியை எப்படி அவரது காலத்தில் நேரடியாகச் சந்தித்தாரோ அதே அளவுக்குக் கட்சி வீழ்ச்சி பெற்றுவருவதையும் தொடர்ந்து இவர் பார்த்து வருகிறார். ஒரே சமயத்தில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதி மற்றும் கர்நாடகாவின் பெல்லாரி தொகுதி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இருப்பினும், தனது குடும்பத்தினரின் கோட்டையாகத் திகழ்ந்து வரும் அமேதியை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்து பெல்லாரி தொகுதியை இராஜினாமா செய்தார். 2004 ஆம் ஆண்டு, தனது குடும்ப உறுப்பினர்களின் பிடித்தமான தொகுதியாக இருந்து வந்த அமேதி தொகுதியைக் கைவிட்டுவிட்டுத் தேர்தல் களத்தை ரேபரேலிக்கு மாற்றினார்.
தனக்குப் பதிலாக மகன் ராகுல் காந்தியை அமேதி தொகுதியிலிருந்து மக்களவையில் அறிமுகம் செய்து வைத்தார். அமேதி தொகுதி காங்கிரஸ் கோட்டையாகத் திகழ்ந்து வந்தது. 1984 முதல் 1991 வரை ராஜீவ்காந்தி அதன் முகமாக இருந்தார்.
அதன் பின்னர் 1999இல் சோனியா அதன் முகமானார். அவருக்குப் பின்னர் 2004 தொடங்கி 2014 வரை ராகுல் இந்தத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார். 2006 ஆம் ஆண்டு, சோனியா காந்தி தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர் பதவி வகித்தது தொடர்பான சர்ச்சையில் சிக்கினார். அதைத் தொடர்ந்து தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்தார்.
அதன் பின்னர், மே 2006 இல், சோனியா ரேபரேலியில் போட்டியிட்டு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 மற்றும் அதனையடுத்து 2019 ஆகிய இந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் நாடு முழுவதும் நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசியது. காங்கிரஸ் கட்சி தனது பல தொகுதிகளை இழந்தது. அப்போதும் கூட, சோனியா காந்தி தனது தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்.
இருந்தாலும் 2019 தேர்தலில் அமேதி தொகுதியை பா.ஜ.க கைப்பற்றியது. ஸ்மிருதி இரானி எம்.பி. ஆனார். காங்கிரஸ் கோட்டையான அமேதியில் பா.ஜ.க கொடி பறக்க ஆரம்பித்தது. இப்போது காங்கிரசின் அடுத்த கோட்டையாகத் திகழ்ந்து வரும் ரேபரேலியும் சோனியாவின் முடிவால் கைவிட்டுச் சென்றுள்ளது.
எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் கோட்டையான ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமுறை தலைமுறை யாக காங்கிரஸ் தக்க வைத்து வந்த ரேபரேலி தொகுதி பிரியங்கா மூலம் மீண்டும் வசப்படுமா என்பது மாபெரும் கேள்வியாக உள்ளது.
இவ்வாறான நிலையில், சோனியா காந்தியின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடுவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. அதுமாத்திரமன்றி, காங்கிரஸ் கட்சி மீண்டெழுவதற்கும் நீண்ட காலம் செல்லுமென்றே ஊகிக்க முடிகின்றது.
எஸ்.சாரங்கன்