சுபஹூத் தொழுகைக்கான அதான் ஒலித்ததும் விழித்துக் கொண்டாள் சகீனா. கட்டிலிலிருந்து எழுந்து வர விருப்பமின்றிப் புரண்டு கொண்டிருந்தாள். நேரம் மெது மெதுவாக நகர்ந்து சென்றது.தொழ வேண்டும், சமைக்க வேண்டும் பரபரப்போடு எழுந்து உட்கார்ந்தாள்.
பின்னர்… வுழூச் செய்து சுபஹூத் தொழுகையைத் தொழுது முடித்துவிட்டுச் சமையலை தொடர்ந்தாள்.
என்னை விடு…என்னை விடு..! என்னைக் கொல்லாதே..! அவலக் குரலைத் தொடர்ந்து அழுகுரலும்,பெரிய தொனியில் சப்தமிட்டுப் பேசுவதைக் கேட்டு நடுநடுங்கினாள் சகீனா. என்ன நடந்தது..? காதைக் கூர்மையாக்கி உற்று நோக்கினாள். பின் ஓடிச் சென்று யன்னலைத் திறந்து பார்த்தாள். எதுவுமே நடந்ததாகத் தெரியல.
பொழுது புலர்ந்தது. மீண்டும் அதே குரல் என்னைக் கொல்லாதே..! சகீனாவின் உள்ளம் பயத்தால் ஓராயிரம் தடவைகள் டக்டக்கென அடித்துக்கொண்டது. அவளுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. நடுக்கம்நின்றபாடில்ல. அப்போது…. சுபஹூத் தொழுகையை முடித்துக் கொண்டு மகன் டில்சாத் சமையலறையை நோக்கி வந்தான். சகீனா நடந்த விடயங்களைக் கூறினாள்.
உம்மா..! ஒரு வாரமாக உஸ்மானுக்குச்சுகமில்ல. அவர் உண்பதுமில்ல, உறங்குவதுமில்லை. இரவு பகலாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். இவரால வீட்டிலுள்ளவர்களுக்கு நிம்மதி இல்லையாம். சாப்பாடு கொடுத்தாலும் நஞ்சைப் போட்டுத் தருவாங்க எனக் கூறி சாப்பிடுவதையும் நிறுத்திக் கொண்டாராம். மகன் கூறுவதைக் கேட்கச் சகீனாவுக்கு வேதனையாக இருந்தது. வயசு போன காலத்தில எல்லாரையும் கஷ்டப்படுத்துகிறார். அல்லாஹ் தான் அவருக்கு நல்ல ஈமானைக் கொடுக்கணும் என்றவாறு அவசர அவசரமாகச் சமையலைத் தொடர்ந்தாள்.
இப்போதெல்லாம் இவரது கதறல் பழக்கப் பட்டுவிட்டது. ஒரு நாள் இரவு… டேய்…வாங்கடா….!
இவனக் கொல்லுவோம். இளைஞர்களை அழைத்து அவர்களிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார். இவன் சரியான கள்ளன். கம்பனியிலுள்ளதை எல்லாம் சுருட்டிக் கட்டி வீட்டுக்குக் கொண்டு வந்திடுவான். இவனப் பிடித்துத் தாங்க. கண்டதுண்டமாக வெட்டுறன். அப்பத்தானடா ஏன்ட மனசு ஆறும். இவரின் கதையைக் கேட்டு இளைஞர்கள் வாய் விட்டுச் சிரித்தனர். உஸ்மானின் ஒரு கையில் பெரியதொரு தடி. மறு கையில் கத்தி. வாங்கடா…இவனக் கொல்லுவோம். வாய் ஓயாமல் கூறிக் கொண்டிருந்தார். தம்பிமார்களே..! சிரிக்காதிங்கடா..! கையிலே ஆபத்தான பொருட்கள் உள்ளன. கவனம்..!முதலில் கையில உள்ளதைப் பறியுங்க. இது உஸ்மானின் காதில் விழுந்தது. நீ என்னடா கதைக்கிறாய்..? ஒனக்கு என்ன செய்றன் பாரு..! துரத்திச் சென்றார். நின்றவர் சற்றும் எதிர் பார்க்கவில்லை. தப்பினேன், பிழைத்தேன் என ஓட்டம் பிடித்தார். இளைஞர்கள் அவ்விடத்தை விட்டகன்றனர்… டேய் தம்பிமாரே…. எங்கே போறீங்க..? நானும் வாறேன்..! அவர்களின் பின்னால் சென்றார்.இளைஞர்களின் பெயர்களை ஞாபகத்தில் வைத்துக் கொண்டார். ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று நள்ளிரவில் கதவைப் பலமாகத் தட்டினார். வீட்டுக்காரர் என்னவோ.. ஏதோவெனத் திடுக்கிட்டு விழித்தார். இது தொடர்ந்தது. தாய்மார் தம் மகன்மாருக்கு ஏசத் தொடங்கினர். வீதியில் நிற்பதும், உஸ்மான் பேசுவதைக் கேட்டுச் சிரிப்பதுமே வேலை. அதனால தேடி வரத் தான் செய்வார். அவரச் சொல்லிக் குத்தமில்ல. நாம தான் யோசிக்கனும். பெற்றோர் எச்சரித்தனர். உஸ்மானின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. பிள்ளைகள் என்ன செய்வதென்று தெரியாது திண்டாடினர். வைத்தியசாலைக்குச் செல்வதற்கும் மறுத்தார். கடைகளுக்குச் சென்று ஏதாச்சும் தாங்க. பசி வயித்தக் கிள்ளுது. ஏன்ட பொண்டாட்டி எனக்குச் சாப்பாடு தராமல் பட்டினி போடுகிறாளென பழி கூறினார். இவரைப் பற்றிஅறியாதவர்கள்,என்ன பொண்டாட்டியிவள்.?. கணவனைப் பார்க்காதவள் வேற யாரைப் பார்க்கப் போகிறாள்..? என வாய்க்கு வந்தவாறு பேசத் தொடங்கினர். சும்மா கதைப்பவர்களுக்கு அவல் கிடைத்தால் கேட்கவும் வேண்டுமா..?
உஸ்மானின் மனைவி மிகவும் அமைதியானவள். கதைப்பது பக்கத்திலுள்ளவர்களுக்கும் கேட்காது. தானும் தன் பாடுமாக இருப்பாள். இவர்களுக்கு ஐந்துபிள்ளைகள். அவர்களைப் படிக்கவைக்க, சாப்பாட்டுக்கு,
உடுப்பு வாங்க என வாழ்க்கைப் பட்டியல் நீண்டு சென்றதே தவிர, அதற்கான வருமானம் ஏதுமில்லை.
உஸ்மான் எதுவித வேலையுமின்றி வீட்டு மாப்பிள்ளையாகவே இருந்தார். சகீனா எதையும் அலட்டிக் கொள்வதில்லை.” கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்” எனும் கோட்பாட்டுக்கமையவே வாழ்ந்தாள். வீடு வீடாகச் சென்று பாத்திரம் தேய்த்து, வீடு வாசல் பெருக்கி, துணிகள் துவைத்து, சமையல் செய்து வரும் வருமானத்தில் பிள்ளைகளையும், புருஷனையும் கண்ணை இமை காப்பது போலக் காத்து வந்தாள். போதாதற்கு…. வீட்டில் அப்பம் அவித்துக் கடைகளுக்கும் கொடுத்தாள். அவள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எல்லாவற்றையும் பொறுமையோடு சகித்து வந்தாள். பிள்ளைகளும் கல்வியால் உயர்ந்தார்கள்.வேலை வாய்ப்புகளும் தேடி வந்தன. அவர்களுக்கேற்ற இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமைந்தது. தாயின் அர்ப்பணிப்பே எல்லாவற்றுக்கும் காரண மென ஊரே மெச்சியது. ஐந்து பிள்ளைகளையும் திருமணம் முடித்துக் கொடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் சகீனா.தாயையும் தந்தையும் தம்மோடு சேர்ந்து கொள்ளுமாறு பிள்ளைகள் கேட்டுக் கொண்டனர். அதனை உஸ்மான் வெறுத்தார். தான் மௌத்தாகும் வரை தன்னோடிருந்து தனிக் குடித்தனம் நடாத்தவே விரும்பினார். கணவனின் விருப்புகிணங்கச் செயற்பட்டாள். வயது செல்லச் செல்ல முன்பிருந்த சுறுசுறுப்பும், உற்சாகமும் குறைந்து நோயாளியானாள். மாதம் ஒரு முறை வைத்தியசாலைக்குக் “கிளினிக்” சென்று வந்தாள். உஸ்மான்தான் நினைத்த நேரத்தில் தேத்தண்ணி கேட்டு அடம்பிடிப்பார். அவளோ…எழுந்திருக்க முடியாவிட்டாலும், தட்டுத் தடுமாறி எழுந்து சென்று தேநீர் ஊற்றிக் கொடுப்பாள். ஒரு நாள்…
முகங் குப்புறத் தள்ளி விட்டார். சகீனா அருகிலுள்ள கதவு நிலையில் அடிபட்டு இரத்தம் பீறிட்டுப் பாய்ந்ததும் மூர்ச்சையானாள். பிள்ளைகள் வாய்விட்டுக் கதறியழுதனர். அக்கம் பக்கத்திலுள்ளோர் ஓடி வந்தனர்.முகத்தில் நீரைத் தெளித்தனர். சகீனா மெதுவாகக் கண் திறந்தாள். வைத்தியசாலைக் கொண்டோடினர். பிரசர் கூடிச் சென்றது அம்பாவிப் பெண்ணை அநியாயமாகக் கொல்லப் பார்க்கிறார். அவர் கண்ணில் படாமல் எங்காவது மறைந்து வாழ வையுங்கள் என உறவுகளும், சொந்தங்களும் துடித்தன. எல்லோருக்கும் அது சரியாகவே பட்டன. இனியும் தந்தையின் அட்டகாசத்தைப் பொறுக்க முடியாது. இவரில்லாத நேரம் பார்த்துத் தாயை மகள் அழைத்துச் சென்றாள். வீட்டுக்கு வந்த தந்தை, தாயைக் காணாது துடித்தார். பிள்ளைகளிடம் விசாரித்தார்.தெரியாது என்ற பதிலைத் தவிர வேறெதுவும் வரவில்லை. தன் மனைவியைச் சந்து பொந்தெல்லாம் தேடினார். என் மனைவி என்னை விட்டு எங்கோ ஓடி விட்டாள். சகீனா இல்லாமல் என்னால வாழ முடியாது. தலையிலடித்துக் கதறினார். வருவோர், போவோரிடம் என் மனைவியைக் கண்டனீங்களா..? அவள் என்னைத் தவிக்கவிட்டு யாரோடு ஓடிவிட்டாள். நான் தனித்து விட்டேன். வீதி..வீதியாகப் புலம்பத் தொடங்கினார். இவரைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம். கையையும், காலையும் கட்டி அறைக்குள் அடைத்து வைத்தனர். என்னைக் கொல்றங்க..! காப்பாத்துங்க..! எனக் கூக்குரலிட்டார்.
நீங்க உங்க மனைவிக்குச் செய்த அநியாயத்தால கட்டிப் போட்டிருக்கிறார்கள். எல்லா ஆம்பிளைகளையும் போலிருந்தால்..ஏனிப்படிச் செய்றாங்க..? இன்னுஞ் சிலர் பாவம்..! தகப்பனல்லவா..?இவ்வாறு செய்யலாமா..? இந்தப் பொல்லாத பாவம் உங்களச் சும்மா விடாதெனத் திட்டித் தீர்த்தனர்.கொடுக்கும் சாப்பாடு எதையும் சாப்பிட மறுத்தார். உடல் பலவீனமானது. நான் மௌத்தாகும் முன்னர் என் மனைவியைப் பார்க்க வேண்டும். படுத்த படுக்கையாகப் பேச்சு மூச்சற்றுக் கிடந்தார்.
இது இவரின் இறுதி மூச்சாக இருக்குமோ..எனப் பயந்து தாயை அழைத்து வந்தனர். என்னை மறந்து எங்கே போனாய்..? என்னைத் தனிமையில் விட்டுச் செல்லாதே..! சின்னப் பிள்ளை போல அழுதார். சகீனாவுக்குத் தான் பெரியதொரு தவறு செய்ததாக உள் மனம் சுட்டிக் காட்டியது. இனிமேல் உங்கள விட்டு எங்கேயும் போக மாட்டேன். எனக்கு ஒண்ணுமில்லடி. ஒன்ன வரவழைக்கவே இவ்வாறு நடிச்சேன். ஹஹ்..ஹா..எனக் குலுங்கிக் குலுங்கி சிரித்தார். அருகில் நின்றவர்களுக்குக் கன்னத்தில் ஓங்கி அறையணும் போலிருந்தது. இவரை நம்பித் தாயை எவ்வாறு விட்டுச் செல்வது..? பிள்ளைகளிடத்தில் கேள்வி மேல் கேள்வி எழுந்தது.
இதற்குப் பிறகும் உம்மாவைக் கொடுமைப்படுத்தினீங்கன்னா.. நாங்க சும்மா இருக்க மாட்டோம். உங்கள முதியோர் இல்லத்தில் சேர்த்திட்டுத் திரும்பியும் பார்க்கமாட்டோம்.
நான் அவள ஒன்னும் செய்ய மாட்டேன். தந்தையின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து தாயை விட்டுச் சென்றனர். தாயின் வீட்டுக்கருகில் ஒரு மகளிருப்பதால் பார்த்துக் கொள்வாள் எனும் தைரியம் மற்றச் சகோதரர்களின் உள்ளத்திலிருந்தது. ஏதும் விபரீதம் நடந்தால், உடனடியாகத் தகவலனுப்புங்க. நாம் உம்மாவை அழைத்துச் செல்கிறோம் என்றனர். ஒரு வாரமாக எவ்விதப் பிரச்சினையுமில்லை.
மனைவி வந்ததும் அடங்கி விட்டாரெனச் சந்தோசப்பட்டனர். அது நீடிக்கவில்லை. மறு வாரமே பழைய குருடி கதவைத் திறவடி. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவளின் கால்களைப் பிடித்துச் சரசரவென இழுத்துச் சென்றார். என்னை விடுங்க. என்ன வேணும்..? சமைத்துத்தாடி..! நீங்க கேட்பதைச் சமைத்துத் தாரேன். என்னை விடுங்க. அவர் விடுவதாக இல்லை.
அவளால் அழுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியல. இறைவா..! என்ன சோதனை..? யாருக்கு என்ன பாவம் செய்தேன்..! ஏன் இப்படித் தண்டிக்கிறாய்..? மனைவியின் வார்த்தைகள் அவர் மனதை உருக்கியதோ என்னவோ..? அழுங்குப் பிடியாகப் பிடித்திருந்த கைகளை மெதுவாக எடுத்தார். நான் சந்திப் பக்கம் போய் வருவதற்குள் தேத்தண்ணி ஊத்தி பிஸ்கட்டையும் எடுத்து வை என்றவாறு திரும்பிச் சென்றார். தேநீரை ஊற்றுவதற்குள், அசுர வேகத்தில் வந்தவரின் தலையை தடி பதம் பார்த்தது. என்ர அல்லாஹ்..! என்றவாறு நிலத்தில் சாய்ந்தாள். இரத்தம் குபீர்..குபீரெனப் பாய்ந்து தரையைச் செந்நிற மாக்கியது.
மகள் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள். தாயின் நிலையைப் பார்த்து வாய் விட்டுக் கதறினாள்.
அக்கம் பக்கத்தவர், உற்றார் உறவினர் ஓடோடி வந்தனர். வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றனர். அதிக இரத்தம் வெளியானதால் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அதிக ஓய்வு கொடுத்து மனசை ஆறுதல்படுத்துமாறு வைத்தியர் கேட்டுக் கொண்டார். அவரை உடனடியாக மனநல ஆஸ்பத்திரியில் சேர்க்குமாறு ஆலோசனை வழங்கினார்ææ. உஸ்மானோ எதற்கும் கட்டுப்படுபவராக இல்லை. யாராலும் மடக்கிப் பிடிக்க முடியவில்லை. பாய்ந்து.. பாய்ந்து ஓடினார். இவர் சும்மா நடிக்கிறார். இவருக்கு ஒன்னுமில்ல. அப்பாவி மனைவியை படாதபாடுபடுத்துகிறார். எல்லோரும் வெறுக்கத் தொடங்கினர். இவரது அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது. இது ஆண்டவனுக்கும் பொறுக்கவில்லை போலும். திடீரென ஏற்பட்ட காய்ச்சலால் எழுந்து நடக்கவோ, மனைவியைத் தண்டிக்கவோ முடியாது படுத்த படுக்கையானார்.
ஆயினும்.. மனைவி சகீனா அருகிலிருந்து சோறு ஊட்டுவது, மலசலம் கழிப்பதற்கு அழைத்துச் செல்வது, குளிப்பாட்டுவது போன்ற கடமைகளை மனங் கோணாது செய்து வந்தாள். இவரது அட்டகாசத்தையும், முரட்டுத் தனத்தையும் சகீனாவால் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடிந்தது். பொறுமையின் சிகரம்..! அடக்கத்தின் பிறப்பிடம்..! அவளது சகிப்புத் தன்மைக்கு அல்லாஹ் சுவனத்தைக் கொடுப்பான் என மக்கள் பேசத் தொடங்கினர். ஆயினும்… தனது கணவனின் பாவங்களை மன்னித்துப் பூரண சுகம் பெறக் கண்ணீர் மல்க இறைவனிடம் இருகரமேந்திப் பிரார்த்தித்தாள்.
யாவும் கற்பனை
கிண்ணியா ஜெனீரா தௌபீக் ஹைருல் அமான்