தற்கொலை வேண்டாம் தங்கங்களே
தரணியை ஆளும் செல்வங்களே
தணிவாய்ப் பழகி வாழ்ந்திடுவோம்
தக்கதாய்த் தீர்வு கண்டிடுவோம்
ஒவ்வொரு உயிரும் உயர்வானது தான்
இறைவனின் படைப்பில் தரமானது தான்
தற்கொலை என்பது தீர்வு அல்ல
தாழ்வு மனநிலை இனி வேண்டாம்
இகத்தினில் இன்னல்கள் ஏராளம்
பகுத்து நீ நடந்திட்டால் கடந்திடலாம்
பாதையில் முட்களும் தாராளம்
தவிர்த்திட இலக்கை நீ அடைந்திடலாம்
கவலைகள் சேர்த்து வைக்காதே
காதல் தோல்வியில் துவளாதே
வாட்டும் வறுமையில் அழ வேண்டாம்
விரக்தியில் தன்னிலை இழக்க வேண்டாம்
மனதினில் இருப்பதைப் பகிருங்கள்
அடக்கி வைப்பதைத் தவிருங்கள்
இணக்க சூழலை உருவாக்குங்கள்
இயைந்து வாழப் பழகுங்கள்
நம்பிக்கை இழந்து நலிய வேண்டாம்
நிராகரிப்பில் நிரந்தரமாய் உடைய வேண்டாம்
மனச்சோர்வில் மகிழ்ச்சி தொலைக்கக் கூடாது
மகத்தான வாழ்வை இழக்கக்கூடாது
மனம் விட்டுப் பேசி மகிழ்ந்திருங்கள்
மனித மாண்பை உணர்ந்திடுங்கள்
அழுத்தத்தை அழுந்தத் துடைத்திடுங்கள்
அறிவுரை கேட்டு நடந்திடுங்கள்
வாழ்க்கை பற்றிய பயம் வேண்டாம்
வாதப்பிரதிவாதங்கள் இனி வேண்டாம்
மனதின் நலனே மகா பாக்கியம்
மகிழ்ச்சியாக வாழ்வதே நம் நோக்கம்
தற்கொலை வேண்டாம் தங்கங்களே…
989
previous post