ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.
அதேபோல், நடிகர்கள் ஃபஹத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைய உள்ளதாக லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளது. தற்போது இந்தக் கூட்டணியில் பாலிவுட் பிக் பி எனப்படும் அமிதாப் பச்சன் நடிக்கிறார் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டில் வெளியான ‘ஹம்’ படத்தில் கடைசியாக ரஜினியும் அமிதாப்பும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 32 ஆண்டுகளுக்கு பின் ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இதனிடையே, இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் இன்று திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றுள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இப்படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்” என்றார். 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி!