Home » அடியில்லா ஆலமரம்

அடியில்லா ஆலமரம்

by Damith Pushpika
December 8, 2024 6:00 am 0 comment

அது ஒரு குக்கிராமம். கிராமத்திற்கான அனைத்து தன்மைகளையும் அங்கு காணலாம். சுமார் மூன்று கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள நகரத்தில்தான் இக்கிராம மக்களுக்கான சந்தை, கடைகள், ஏன் மருத்துவ வசதிகளும் உள்ளன. அக்கிராமத்தின் ஊடாக ஓடும் அரச பேருந்து வண்டிதான் அக்கிராமத்தையும் அருகில் உள்ள நகரத்தையும் இணைக்கும் பாலம். காலை ஏழுமணிக்கு வரும் அப்பேருந்து மாலை இரண்டு மணிக்கு திரும்பி வரும். இப்பேருந்து சில சமயங்களில் தலைமறைவாகி விடுவதும் உண்டு. நிச்சயமற்ற இப்போக்குவரத்து காரணமாக இக்கிராம மக்கள் நடந்தும், துவிச்சக்கர வண்டியிலும், வசதி படைத்தவர்கள் மோட்டார் சைக்கிள்களிலும் நகருக்கு சென்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்.

இக்கிராமத்தில்தான் உடையார் பரம்பரையைச் சேர்ந்த சிவசம்பு என்பவர் வசிக்கின்றார். உடையார் பரம்பரை எனக்கூறி தன்னைச் சுற்றி ஒரு அகம்பாவ வேலியுடன் வாழும் அவர் தானாக சாதித்தது என்றால் ஒன்றுமில்லை. தனது பிறப்பால் வந்த பெயரையும் சொத்தையும் வைத்து ஊரை தான்தான் ஆளுவது எனும் கற்பனையில் வாழ்பவர். தனது வார்த்தைக்கு எதிர் வார்த்தை இருக்க கூடாது என்பதற்காக வீட்டிலும் வெளியிலும் அதிகமாக போராடுபவர்.

சிவசம்பு வருகிறார் என்றால் மக்கள் நடுநடுங்கி பயப்பட வேண்டுமென்பது அவரின் நப்பாசை. சில மக்கள் அவரை புரிந்துகொண்டு அப்படி நடிப்பதும் உண்டு. அவ்வூர்க் கோயிலுக்கும் அவர்தான் மணியக்காரர். தனது கோவில் என்று பெருமை பேசுபவர், கோவில் செலவிற்கு ஊரில் உள்ள ஏழைகளிடம் நிதி சேகரிப்பது மிகவும் வேடிக்கையானது. ஊரில் நடக்கும் பொது பிணக்குகளையும் தானே முன்னின்று தீர்த்து வைப்பார்.

தான் உடையாரின் மனைவி என்பதில் அவரது மனைவி சிவகாமி அடையும் பெருமை சொல்லில் அடங்காது. அவர்களின் ஒரே மகள்தான் அஞ்சலி. தனக்கு ஆண் வாரிசு வீட்டில் இல்லை என்பது அவரின் மனக்கவலைகளில் ஒன்று. வீட்டில் இல்லாவிடிலும் அவரது ஆண் வாரிசுகள் ஊரில் உள்ளன என்பது வதந்தி. அஞ்சலி நகரப்புற பாடசாலையிலேயே கல்விகற்று வந்தாள். தினமும் காலை ஏழுமணி பேருந்தில் பாடசாலை செல்வாள். படிப்பிலே மிகவும் கெட்டிக்காரி. வகுப்பிலே முதலாம் பிள்ளை மட்டுமல்ல, பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மனங்களிலும் இடம்பிடித்த நற்பண்புகள் நிறைந்தவள்.

அதே கிராமத்தில்தான் கனகு என்பவரும் வாழ்ந்து வருகின்றார். விவசாயியான கனகு நெல்வயல், தென்னந்தோட்டம், மரக்கறித்தோட்டம் என பலதரப்பட்ட வேலைகளில் ஈடுபாடு கொண்டவர். கனகு பெரிய பணக்காரன் என்று சொல்ல முடியாத ஒரு சாதாரண விவசாயி. இவரின் சகோதரி கமலம் வாழவேண்டிய வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டாள். அவளது ஒரே மகன்தான் அரவிந்தன். தாயின் கருவறையில் இருக்கும்போதே தந்தையையும் பறிகொடுத்த துர்பாக்கியசாலி அரவிந்தன். தாய் மாமனாகிய கனகுவே அரவிந்தனைப் பொறுப்பெடுத்து வளர்த்து வந்தார். கனகுவிற்கும் இரண்டு ஆண்களும், பெண்களுமாக நான்கு பிள்ளைகள்.

கனகுவின் மனைவியோ கொஞ்சம் அகங்காரமும் சுயநலமும் பிடித்தவள். அரவிந்தனை ஒரு வேலைக்காரனைப்போல் நடத்தி வந்தாள். அரவிந்தன் காலை ஐந்து மணிக்கே எழும்ப வேண்டும். மாடு, ஆடுகளின் வேலைகளை முதலில் பார்க்க வேண்டும். வீட்டுமுற்றம் கூட்டுதல், கிணற்றிலிருந்து வாளியால் தண்ணீர் அள்ளி தொட்டியில் நிறைத்தல், பூமரங்களுக்கு நீரிறைத்தல் என அனைத்து வேலைகளையும் அவன் முடிக்கும் போது காலை ஏழு மணியாகிவிடும். அதன் பின்பு தான் பாடசாலை செல்ல ஆயத்தமாவான். ”உனக்கென்னடா படிப்பு. நீ படிச்சு என்னத்தை கிழிக்கப் போறாய். பழஞ்சோறு போட்டு வைச்சிருக்கிறன் போய்ச் சாப்பிடு” என காலையில் அர்ச்சனை போடும் மாமியாருக்கு அரவிந்தனை சற்றும் பிடிக்காது. அரவிந்தனுடன் எந்தநாளும் கடுகடுப்பாய்த்தான் நடப்பாள். பொறுமையே வடிவான அரவிந்தன் அவசர அவசரமாக வேட்டியைக் கட்டிக் கொண்டு பேருந்து நிற்கும் இடத்திற்கு செல்வான். சில வேளைகளில் அவனால் பேருந்தை பிடிக்க முடியாமல் போய்விடும். அந்த நாட்களில் ஓட்டமும் நடையுமாக பாடசாலையை சென்றடைவான்.

படிப்பிலே மிகவும் கெட்டிக்காரன். மற்ற மாணவர்களைபோல அவன் காற்சட்டை அணிவதற்கு அவனிடம் வசதி இல்லை. பாடசாலைக்கு வேட்டிதான் அணிவான். அஞ்சலியைவிட இரண்டு வகுப்பு மேல் படிப்பவன். சக மாணவர்கள் அவனை “அரவிந்தன்” என்றழைக்க மாட்டார்கள். கிண்டலாக “வேட்டி” என்றுதான் அழைப்பார்கள். இதனால் ஆத்திரமோ, கோபமோ அடையாது அவன் பொறுமையுடன் அமைதியாகவே இருப்பான்.

அன்று காலை அரவிந்தன் தனது வேலைகளை அவசர அவசரமாக முடித்து விட்டு பேருந்து நிலையத்தை ஓட்டமும் நடையுமாக அடைந்தான். அங்கு அஞ்சலி வழமைபோல் பேருந்துக்காக காத்து நின்றாள். அவள் இரட்டை பின்னலிலும் பாடசாலை சீருடையிலும் மிளிர்ந்தாள். அன்று பேருந்து வரவில்லை. அரவிந்தன் பாடசாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அஞ்சலியும் அவனுடன் இணைந்து கொண்டாள். அஞ்சலி அவனை நிழல் போல் பின்தொடர்ந்தாள். அவள் ஏதோ தன்னிடம் கூறவருவதை உணர்ந்தவன் “நீ ஏன் நடக்கிறாய். உன்ரை அப்பாவிடம் கூறியிருந்தால் மோட்டார் சைக்கில் கொண்டே பள்ளிக்கூடத்திலை விட்டிருப்பாரே?” என்றவனிடம் “எனக்கு நடக்க விருப்பம். அதுகும் உன்னோடை சேந்து நடக்க நல்ல விருப்பம்” என்றாள் அவனது கண்களை பார்த்தவாறு.

அரவிந்தனின் அமைதியான சுபாவம், மெலிந்த நிமிர்ந்த நடை, நேர்மை அனைத்தும் அவளின் மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. அது அவளின் மனதில் காதலாக வளர ஆரம்பித்தது. அஞ்சலியின் உள்ளக்காதல் கட்டில்லா வெள்ளமாகி அவளது நாணம், தயக்கம் எனும் படகுகளை அடித்து சென்றது. அவளது உதடுகள் காதலை வார்த்தைகளாக உதிர்த்தது. “அரவிந்தன், நான் உங்களிடம் ஒன்று சொல்லட்டுமா?…” எனத் தயங்கித்தயங்கி ஆரம்பித்தவளிடம், “அப்படி என்ன சொல்லப் போகிறாய்?” என்றான் அரவிந்தன்.” அது.. வந்து…வந்து…ம்ம்” என்று தயங்கிய அஞ்சலியிடம் “பயப்பிடாமல் சொல்லு அஞ்சலி” என்றான். “உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் திருமணம் செய்யலாமா?” என தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படையாகவே கூறி விட்டாள். அஞ்சலியின் வார்த்தையால் அதிர்ந்த அரவிந்தன் ”அஞ்சலி, இந்த நினைப்பை மறந்திடு. நான் ஒரு அநாதை. நீ அப்படியில்லை. நான் படிக்க வேணும்” என்றபடி விரைவாக நடக்க ஆரம்பித்தான்.

“நீங்கள் இதற்கு ஓம் என்று சொல்லாட்டில் நான் உயிருடனே இருக்கமாட்டன். இந்த உலகை விட்டே போய்விடுவேன்” என கூறியபடி அவனை பின்தொடர்ந்தாள் அஞ்சலி. ”அப்படி எல்லாம் முட்டாள்தனமான முடிவு எடுக்காதே. எதற்கும் அவசரப்படாதே. ஆறுதலாக யோசித்து முடிவெடுப்பம்” என்றபடி தன்னை பின்தொடர்ந்தவளின் கண்களை உற்று நோக்கினான். அரவிந்தனின் வார்த்தையும், பார்வையும் அஞ்சலிக்கு நம்பிக்கையையும், ஆறுதலையும் கொடுத்தது. நடந்து வந்த தூரமே தெரியாமல் பாடசாலையை அடைந்தவர்கள் தத்தம் வகுப்புகளுக்குச் சென்றனர்.

காலமும் உருண்டோட இருவரினதும் காதலும் பாடசாலையில் கசிந்து கிராமம் வரை பரவி, இருவரது வீட்டையும் அடைந்தது. இச்செய்தியை அறிந்த சிவசம்பு உடையார் ”ஏய் சிவகாமி! சிவகாமி” என குரலை உயர்த்தியபடி தனது மனைவியை அழைத்தார். “என்னப்பா என்ன?என்ன?” என பதற்றமானாள் சிவகாமி. ”உவள் அஞ்சலி பள்ளிக்கு படிக்கத்தான் போறாளோ? இல்லை மாப்பிளை பிடிக்க போறாளோ? இன்றையோட அவள் பள்ளிக்கூடப் பக்கமே போகக்கூடாது” என கொந்தளித்தார். “நான் வைச்சதுதான் சட்டம். என்ரை சொல்லை மீறி நடந்தாளென்றால் நான் அவளை தலைமுழுகி விட்டிடுவன்” என்று கத்தியவாறு “இன்றைக்கு உவள் வரட்டும். ஒரு முடிவு கட்டுறேன்” என்றபடி அஞ்சலியின் வருகைக்காக காத்திருந்தார். “இஞ்ச பாருங்கோ, கோவப்படாதேங்கோ” என சிவகாமி ஆறுதல் கூறும்வேளை அஞ்சலியும் பாடசாலையிலிருந்து வந்தாள். அஞ்சலியை நோக்கி ஓடிய சிவகாமி “அஞ்சலி! அப்பா ஏதோ கோபமாக இருக்கிறார். நீ உன்ரை அறைக்குப் போ. வெளியே இப்போதைக்கு வரவேண்டாம்” என அவளை அறைக்குள் அனுப்பிவைத்தாள்.

நண்பகல் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தனர். “அஞ்சலி, உனக்கு அப்பாவைப்பற்றி நல்லாத் தெரியுந்தானே. உன்ரை காதலை இன்றையோட நிப்பாட்டு. உனக்கு அந்த அனாதைப் பயலா கிடைச்சான்”. “இல்லை அப்பா. அவர் நல்லவர். எனக்கும் அவரை பிடிச்சிருக்கு. அதுதான்…” என்று இழுத்தாள். “இஞ்சைபார் அஞ்சலி, எங்கட சொல் கேட்டு இருக்கிறதென்டால் இரு. இல்லாட்டி அவன்தான் வேணுமெண்டால் அவனோடே போ. நாங்கள் செத்து தொலைந்து போறம்” என்றவர் உணவுத்தட்டை விசுக்கி எறிந்து விட்டு கோபத்துடன் எழுந்து சென்றார். அதன் பின் வீடே மயான அமைதியானது. அஞ்சலிக்கு புத்திமதி சொல்வதில் தோற்றுப் போன சிவகாமியும் மனக்குமுறலுடன் மூலையில் முடங்கிவிட்டாள்.

அன்றிரவு வீட்டில் நடந்த சம்பவங்கள் அத்தனையையும் அரவிந்தனுக்கு கோர்வையாக தொலைபேசி மூலம் கூறினாள் அஞ்சலி. குழப்பத்தில் இருந்து ஒரு முடிவிற்கு வந்தவள், தனது மனதை திடமாக்கி கொண்டு கடிதம் ஒன்றை எழுத ஆரம்பித்தாள். “அன்புள்ள அப்பா, அம்மாவிற்கு! என்னை மன்னித்து விடுங்கள். எனது விருப்பப்படி எனக்குரிய வாழ்க்கைத்துணையை நானே தெரிவுசெய்கிறேன். தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்” என எழுதி வைத்துவிட்டு இரவோடிரவாக அரவிந்தனை தேடிச் சென்றாள். அவளது வரவால் தடுமாற்றமடைந்த அரவிந்தன் ஒரு முடிவிற்கு வந்தவனாய் அவளது கரம்பற்றி நகர்ப்புறம் நோக்கி தனது துணையுடன் நடந்தான். அவர்களது வாழ்வின் விடியல்போல், அதிகாலைப் பொழுதில் அவர்கள் கண்முன் அந்த அம்பாள் ஆலயம் தெரிந்தது. இருவரும் அம்பாளை வேண்டி தமது மனச்சுமையை இறக்கிவிட்டு அருகில் இருந்த மடாலயத்தின் பக்கம் ஒதுங்கினர்.

சிறிது நேரத்தில் தம்மை நோக்கி வந்த ஆலயக் குருக்களைக் கண்டு இருவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். தன்னை யார் என அறிமுகப்படுத்திய குருக்களிடம், “ஐயா! நாங்கள் அயற் கிராமத்திலிருந்து வந்திருக்கின்றோம்..” என்று தங்கள் வரலாறு முழுவதையும் ஒப்புவித்தனர். “இப்போது எங்கே தங்குவது என யோசிக்கின்றோம்..” என்று கலங்கி நின்றவர்களிடம் “கவலைப்பட வேண்டாம் பிள்ளைகள். கஷ்டப்படுபவரைக் காப்பாற்றவே நம் அம்பாள் இருக்கிறா. எனது பழைய வீடு ஒன்றிருக்கு. அங்கே நீங்கள் தங்கலாம். வாருங்கள்” என்ற குருக்கள் தனது வீடு நோக்கி இருவரையும் அழைத்து சென்றார்.

நேரமும் காலமும் நகர்ந்து கொண்டே சென்றது. குருக்களுக்கு உதவியாக அரவிந்தன் கோவில் வேலைகள் யாவும் செய்து வந்தான். அத்தோடு கிடைக்கும் கூலிவேலைகளையும் செய்து அவர்களது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினர். வருடம் இரண்டு ஆகிவிட்டது. அப்போது தான் வெண்நிலா என்ற குழந்தைக்கு அஞ்சலி தாயானாள். இப்போது தான் இவர்கள் வாழ்வில் பணக்கஷ்டமும் தலையெடுக்கத் தொடங்கியது. குழந்தையை ஆரோக்கியமான முறையில் வளர்த்தெடுக்கவும், தம் நாளாந்த வாழ்க்கைச் செலவை சமாளிக்கவும் அரவிந்தனின் ஊதியம் போதவில்லை. வாழ்வை நகர்த்த முடியாமல் திண்டாடினர். அப்போது தான் அஞ்சலிக்கு, தன் உயிர்த்தோழி ஒருத்தி நல்ல வசதிகளுடன் கொழும்பில் இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. அவளிடம் கொஞ்ச பண உதவி கேட்கலாம் என நினைத்தாள். அன்று புதன்கிழமை. தான் திரும்பி வரும்வரை அரவிந்தனுக்கும் நிலாவிற்கும் வீட்டில் இரண்டு நாட்களுக்கான வசதிகளைச் செய்து விட்டு கொழும்பு நோக்கிப் புறப்பட்டாள் அஞ்சலி.

அன்றைய தினம் தங்களின் வாழ்வில் வந்த இன்னொரு பயணம் என அரவிந்தனுக்கும், வெண்நிலாவிற்கும் தெரியவில்லை. ஏன் அஞ்சலிக்கும் தெரிந்திருக்கவில்லை. இலங்கை இராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தீவிர யுத்தம் நடைபெற்ற காலமது. இராணுவத்தினருக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த அமுக்க வெடியில் சிக்கி சுக்கு நூறாகியது அஞ்சலி பயணித்த பேருந்து. பயணிகள் பலர் உடல் சிதறிப் பலியானார்கள். பலத்த காயங்களுக்கு உள்ளானவர்கள் செஞ்சிலுவைச்சங்கம் மூலம் கொழும்பிற்கு அனுப்பப்பட்டனர். இன்னும் சிலர் அதிதீவிர சிகிச்சைக்காக விமானம் மூலம் சுவிஸ் நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருத்தியாய் அஞ்சலியும் அனுப்பப்பட்டமை கோமா நிலையில் இருந்த அவளிற்கு தெரியவில்லை. கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து வண்டி அமுக்கவெடியில் சிதறிய செய்தி அறிந்த அரவிந்தன் “இதே பேருந்தில் அஞ்சலியும் சென்றிருப்பாளோ? அஞ்சலிக்கு என்ன நடந்திருக்குமோ?” என தவியாய்த் தவித்தான். பொறுமை இழந்தவனாய் தனது நான்கு வயது மகளையும் தூக்கிக் கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றான். அங்கே பேருந்து வண்டி முற்றுமுழுதாய் சிதறிக் கிடந்தது. அஞ்சலிக்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. அஞ்சலி பயணஞ் செய்த வண்டி இது தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அரவிந்தன் தன்முயற்சியில் தளராது அயலிலுள்ள காவல்நிலையம் நோக்கி சென்றான்.

தன் மனைவியின் பயண விபரத்தை தெரிவித்த போது “அந்த விபத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை. எதற்கும் பெயர் விபரத்தை தாங்கோ ..” என்ற காவல்துறை அதிகாரியின் வார்த்தை அரவிந்தனின் மனதைப் பிழந்தது. சிறிது நேரத்தில் அவ்வதிகாரி அஞ்சலியின் கைப்பையும், அடையாள அட்டையும் அரவிந்தனிடம் ஒப்படைத்தார்.

வீடு திரும்பிய அரவிந்தன் அஞ்சலியின் புகைப்படம் ஒன்றையும் அதனுடன் அவளது கைப்பையையும் இணைத்து தொங்க விட்டான். படத்திற்கு மாலை அணிவித்து ஓர் அணையாவிளக்கையும் ஏற்றி கண்ணீர் மல்க துவண்டழுதான். “அப்பா! எப்ப அம்மா வருவா?” என குழந்தை கேட்கும் நேரத்தில் எல்லாம் “அவ சாமியிட்ட போயிட்டா” என மனதாலே அழுது குமுறுவான்.

திங்கள், வெள்ளிக்கிழமை தோறும் அவ்வூர் அம்மன் கோவிலுக்கு மக்கள் சென்று வருவது வழமை. ஒன்றும் அறியாப்பருவமான குழந்தை வெண்ணிலாவும் தமது வீட்டுவாசலில் நின்று கோவிலுக்கு போய் வருவோரைப் பார்த்து “என்ரை அம்மா கோவில்லை நிற்கிறாவோ?” எனக் கேட்பாள்.

தம்மனதைக் கல்லாக்கி கொண்டே அவர்கள், “காணவில்லை அம்மா” என்பார்கள். சிலர் “அவ சாமியிட்ட போயிட்டா” என்பார்கள். நிலா தாயைத்தேடி கோவிலுக்கு சென்ற சமயங்களில் கோயிற்குருக்கள் அவளை அரவணைத்து வீட்டிற் கொண்டு வந்து விட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.

வருடங்கள் பல கடந்து போக வெண்ணிலாவும் பாடசாலை செல்லத் தொடங்கினாள். படிப்பிலே மிகக் கெட்டிக்காரி வெண்ணிலா. அன்றொருநாள் அரவிந்தன் கூலிவேலைக்கு சென்றுவிட்டான். வெண்ணிலாவும் பாடசாலைக்குச் சென்றுவிட்டாள். அரவிந்தன் இருக்கும் இடத்தை ஏதோ விதமாக சிவசம்பு அறிந்துவிட்டார். தனது அடியாட்களை அனுப்பி அரவிந்தன் வீட்டையே அடித்து நொறுக்கி துவசம் செய்வித்துவிட்டார். வேலை முடித்து மதியம் சமைப்பதற்காக வீடு திரும்பிய அரவிந்தன் தன்வீட்டு நிலைமை கண்டு இடிந்து போய் ஓரமாய் உட்கார்ந்திருந்தான். பாடசாலைவிட்டு வந்த வெண்ணிலா தன் வீட்டு நிலைமையைப் பார்த்து பதறியபடி, “என்னப்பா நடந்தது?” என்றாள்.

(அடுத்த வாரம்)

தம்பு முருகா

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division