கடந்த 2024.11.14 ஆம் திகதி இடம்பெற்ற இந்த நாட்டின் பத்தாவது பாராளுமன்றத்திற்கான அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மாவட்ட ரீதியாக 141 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக 18 ஆசனங்களையும் பெற்று வரலாறு காணாத வெற்றியை ஈட்டியது. பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 159 ஆசனங்களைப் பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விட மேலதிகமாக ஒன்பது ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.
தேசிய மக்கள் சக்தி அதனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த நாட்டிலிருந்து இலஞ்சம், ஊழல் மோசடிகள் முற்று முழுவதுமாக ஒழிக்கப்படும் எனவும் இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளதுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது கொள்கை விளக்க உரையில் இனிமேல் இந்த நாட்டில் இனவாத, மதவாத அரசியலுக்கு இடமில்லை எனவும் குறிப்பிட்டார்.
உண்மையை உள்ளது உள்ளபடி குறிப்பிடின் தேசிய மக்கள் சக்தியின் மேலே குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளே தேசிய மக்கள் சக்தியை அமோக வெற்றியடையச் செய்தது என குறிப்பிடின் அது முற்றிலும் சரியான கருத்து என்பதில் சந்தேகம் இல்லை.
நீர் வளமும் நில வளமும் மிக்க இந்த நாடு விவசாயத்தில் முன்னிலை வகிக்கக் கூடிய நாடு. இதை கருத்தினிற் கொண்டே தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டில் உற்பத்தியை பல வழிகளிலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நாட்டில் நாடளாவிய ரீதியில் தேயிலை, இறப்பர் தென்னந் தோட்டங்கள் உள்ளன. ஆங்கிலேயர் இந்த நாட்டிலிருந்து வெளியேறியதன் பின்பு அரசாங்கம் அவற்றை பொறுப்பேற்று நடத்தியது. ஆனால், அரசாங்கம் தோட்டங்களை பரிபாலனம் செய்ததில் கோடிக்கணக்கான ரூபா நட்டம் ஏற்பட்டதனால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க இந்த நாட்டில் உள்ள பெருந்தோட்டங்களை இருபத்திரண்டு தனியார் கம்பனிகளிடம் ஒப்படைத்து அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்க வழிகோலினார். ஆனால் அரசாங்கத்திற்கு சொந்தமான எங்கருவ பிளாண்டேஷன், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் ஆகியவற்றினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதோடு அந்த தோட்டங்களில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றை செலுத்தாது உள்ளன.
ஆங்கிலேயரினால் தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்ட காலத்தில் தோட்டக் காணிகள் நன்றாக பரிபாலனம் செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் வெளியார் தோட்டக் காணிகளை கபளீகரம் செய்ய முடியாத விதத்தில் பெருந்தோட்டங்களை பாதுகாத்தார்கள். ஆனால் தனியார் கம்பனிகள் இந்த நாட்டிலுள்ள பெருந்தோட்டக் காணிகளை பொறுப்பேற்றதன் பின்பு தோட்டக் காணிகள் வெளியாரினால் கபளீகரம் செய்யப்பட்டு அவ்வாறு கபளீகரம் செய்யப்பட்ட காணிகள் சிறு தோட்டங்களாக உருவாகி சிறுதோட்ட உரிமையாளர்கள் உருவானார்கள்.
இவ்வாறு உருவாக காரணம் என்னவெனில் பெருந்தோட்டக் காணிகளை அரசாங்கத்திடமிருந்து பொறுப்பேற்ற தனியார் கம்பனிகள் காணிகளை பாதுகாப்பதில் கரிசனை காட்டாது அலட்சியமாக ஏனோ தானோ என செயல்பட்டதனாலும் அவை பொறுப்பேற்ற முழு நிலப்பரப்புகளிலும் தோட்டக் கம்பனிகள் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளாதமையினாலும் பெருந்தோட்டக் காணிகள் ஆங்காங்கே காடு மண்டி கிடப்பதை நாடெங்கிலும் உள்ள பெருந்தோட்டங்களில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
எனவே, இந்த நாட்டின் உற்பத்தியை அதிகரிப்பதை கொள்கையாகக் கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனியார் கம்பனிகளிடம் உரிய விதத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அவை பொறுப்பேற்றுள்ள பெருந்தோட்டங்களில் பயிர் செய்கைக்கு உட்படுத்தாதுள்ள காணிகளில் பயிர்செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களில் பயிர்செய்கையில் அனுபவம் பெற்றுள்ளவர்கள் உள்ளார்கள். அவர்களைக் கொண்டு தரிசு காணிகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு தேவையானவற்றை தோட்டக் கம்பனிகள் வழங்கினால் அவர்கள் அந்த காணிகளில் பயிர் செய்கையை மேற்கொண்டு தோட்டக் கம்பனிகளுக்கு வருமானத்தை மேம்படுத்தி வளமாக வாழ்வார்கள்.
பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிலுள்ள பெருந்தோட்டங்களை பரிபாலனம் செய்த காலத்தில் ஒவ்வொரு தேயிலை தோட்ட மலைக்கும் காவலாளிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் தோட்ட மலைகளில் குளவிக் கூடுகள் உள்ளனவா என அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு குளவிக் கூடுகள் இருப்பின் அவை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டதனால் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டினால் பாதிக்கப்படவில்லை. தேனீக் கூடுகள் இருப்பின் அந்த தேனீக் கூடுகள் அனுபவசாலிகளைக் கொண்டு இரவு நேரங்களில் தீப்பந்தங்கள் மூலம் எரியூட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
எனவே பல்துறை சார்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வுகளை கண்டுவரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தோட்டக் கம்பனி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தோட்டத் தொழிலாளர்கள் இனிவரும் காலங்களில் குளவிக் கொட்டினால் பாதிக்கப்படாதிருக்கவும் தரிசு காணிகளில் உரிய பயிர் செய்கைகளை மேற்கொள்ளச் செய்வதன் மூலமும் தோட்டக் கம்பனிகளின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதோடு தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இந்த நாட்டின் உற்பத்தி பெருகி இந்த நாடும் வளம் பெறும். இன்னொரு விதத்தில் தேயிலை ஏற்றுமதியில் உலகளவில் சீனாவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ள நமது தாய்த்திருநாடான இலங்கை தேயிலை ஏற்றுமதியில் உலகளவில் முதலாம் இடத்தைப் பெற வழி கிட்டும்.
இவதன்