வாழும் காலங்களில் தனிமை என்பது காய்ச்சல் போல வந்து போய் விடனும், இல்லாவிடின் அதே தனிமை எவ்வாறான பிரச்சினைகளையும் விபரீதங்களையும் தோற்றுவிக்கும் என்பதை நான் நேற்று அறிந்து கொண்டேன்.
பஸீரின் வாழ்க்கைக்குள் ஏற்பட்டிருந்த ஒரு வருட தனிமையின் வலி அதன் காயம் அவனை வேறு வகையான எண்ணங்களுக்குள் புகுத்திக் கொண்டது. பஸீரின் இந்த தனிமை ஏற்படுத்திய இடைவெளி பெரிது. இவனது முன்னைய வாழ்க்கை முறைக்கு முரணானது. ஊரில் மிகப் பக்குவமானவன் சமூக சிந்தனை மிக்க ஒரு நாற்பது வயதை எட்டிய இளைஞன், தனது திருமண வாழ்வும் அதற்கான பரிசுமான ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையுமென மகிழ்ச்சிகரமான அந்த வாழ்க்கையை மிகவும் அன்போடு நகர்த்தி வந்திருந்த போதுதான் பஸீரின் தொழிலில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது. வறுமை தொடர்ந்தது பிள்ளைகளின் சின்னச் சின்ன ஆசைகளைக்கூட சரி செய்து மகிழக்கூட முடியாத சங்கடமான நிலை உருவானது.
இப்போது அவனது மனைவின் முடிவு அவனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாய் மாறி நின்றது. அவள் வெளிநாடு செல்ல எடுத்த முடிவை யாரும் ஏற்றுக்கொள்ள வில்லை குழந்தைகள் படிக்கின்ற நிலையில் இவ்வாறான முடிவு சரி வராது. உன் முடிவை மாற்றிக்கொள் என்று மனைவியிடம் மன்றாடினான்.
மனைவி, நம் பிள்ளைகளின் எதிர்காலம் இதற்காக மட்டும் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். என்னை தடுக்காமல் என் உணர்வை புரிந்து கொள்ளுங்கள். என் சந்தோசத்திற்காகவோ, ஆடம்பர வாழ்வுக்காகவோ நான் இந்த முடிவை எடுக்க வில்லை. உங்களாலும் இப்போது இந்த தொழில் நெருக்கடியிலிருந்து மீள முடியாது. நீங்கள் வெளிநாடு போறது என்றாலும் நம்மிடம் ஐந்து லட்சமாவது பணம் வேண்டும். இப்படி இருக்கையில் நான் எடுத்திருப்பது தகுந்த முடிவு தான். எனக்கு கிடைக்கின்ற கமிஷன் பணத்தில் ஏதாவது செய்து, இந்த பிள்ளைகளை மகிழ்ச்சி படுத்த நமக்கு ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என் முடிவை ஏற்று சந்தோசமாக அனுப்பி வையுங்கள்.
நீ சொல்வது நியாயமாக இருந்தாலும் என் மனசாட்சி இதனை ஏற்க மறுக்கிறது.
மனைவி பஷ்மி தொடர்ச்சியாக பஸீரை சம்மதிக்கச்சொல்லி பல முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருந்தாள், இப்போது பஷீருக்கு புரிந்தது. இனி அவள் தன் முடிவிலிருந்து பின்வாங்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து சம்மதிக்கிறான். மனைவியும் வெளிநாடு செல்கிறாள் இன்றோடு சரியாக ஒரு வருடம் கடந்து விட்டது. அங்கே போய் ரெம்ப கஷ்டப்படுறாள். போன இடமும் சரியில்லை, வரவும் முடியாத நிலை நேரத்திற்கு உணவில்லை, நேரத்திற்கு தூக்கமில்லை, இங்கே சந்தோசத்தை தரப் போகிறேன் என்று போனவள் அவளும் மகிழ்ச்சியாய் இல்லை. நாங்களும் மகிழ்ச்சியாய் இல்லை என்று என்னிடம் பஷீர் அந்த ரீலோட் போடும் கடையில் சந்தித்த போது சொல்லி அழுதான். அதை பார்க்கும் போது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவனை ஆறுதல் படுத்தவும் மகிழ்ச்சியாக்கவும் எனக்கு முடியல. தோளில் தட்டி விட்டு அவசரமாக போக வேண்டி இருந்தது. நான் போய்ட்டு இன்னொரு நாள் சந்திப்பதாக கூறி மனசு சுமந்த ஒரு மூட்டை வலியோடு அங்கிருந்து வந்தேன்.
அதன் பிறகு பஷீரை ஒரு மூன்று மாதங்களுக்கு பிறகு தன் பிள்ளைகளுடன் கடற்கரைக்கு வந்திருந்த போது சந்தித்தேன். அப்போது அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போல எனக்கு தெரிந்தது அவனது பேச்சிலும் நடவடிக்கையிலும் மாற்றம் தெரிந்தது எனக்கு. அவனை அப்படி பார்ப்பது மகிழ்ச்சியாக தான் இருந்தது.
என்னடா மச்சான் ரெம்ப சந்தோசமாக இருக்கா போல…. என்னடா நடந்த இந்த மூன்று மாதத்திற்குள் என்றதும், அவன் என்னைப் பார்த்து மெல்லிய புன்னகையொன்றை உதிர்த்தான்.
அப்புறம் மச்சான் மனைவி சுகமா எப்போது நாட்டுக்கு வாரதாம் என்று பேசிக்கொண்டிருக்கும் போதே பல தடவை அவனது தொலைபேசிக்கு அழைப்பு வந்து கொண்டேயிருந்தது.
சிரித்து சமாளித்து, வந்த அழைப்பை துண்டித்து துண்டித்து கொண்டிருந்தான்.
டேய்… ஏன்டா அழைப்பை துண்டிக்கிறா பேசண்டா…
இல்லை மச்சான் கடன்காரன் இப்போ பேச முடியாது.
அதை விட்டுடு நீ சொல் எப்படியிருக்கா என்றான்.
நான் என் சுகம்பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது மீண்டும் அழைப்பு வந்தது. எனக்கு சரியாக விளங்கியது. நான் இருக்கவும் தான் இவன் பேசமால் வருகின்ற அழைப்பை துண்டிக்கிறான். சரிடா…. மச்சான் நான் இன்னொரு நாள் பேசுறேன் என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டேன்.
எனக்கு யோசனையாகவே இருந்தது. இவன் இப்படி நடந்துக்கிற ஆள் இல்லையே! என்னது இப்படி பதற்றமா இருந்தான். அந்த அழைப்பு வரும் போதெல்லாம் ஒன்றும் புரியவில்லையே, என்னவோ அவனுக்கு ஆயிரம் பிரச்சினை இருக்கலாம் என்று மனதை தேற்றிக்கொண்டு நான் வீடு வந்து விட்டேன்.
இப்படி சில மாதங்கள் கழிந்தது. அவனது பக்கத்து வீட்டில் வசிக்கின்ற எனது உறவினர் ஒருவரை எதேச்சையாக சந்திக்க கிடைத்த போது பஸீர் பற்றி விசாரித்தேன் அவரிடம். அப்போதுதான் எனக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.
யாரே கேட்குறா நீ? அந்த சாகுல் கமீதுட பொடியன் வெள்ளையனயா?
ஓ அவனே வெள்ளையன்டா சொல்ர பஷீர் என்றுதான் எனக்கு தெரியும்.
அவன்தான் அதே ஏன் கேட்குறா?
ஏன்? அவன் இப்போ பொண்டாட்டிகூட இல்லையே,
என்ன சொல்ரா? ஆமா வாழ்க்கை பிரிஞ்சிட்டு ஒரு நாலு மாசமிருக்கும் பெரிய கேவலம் ஊரெல்லாம் அவன்டயும் அவன்ட பொண்டாடியிட கதையும் தான் கொஞ்ச நாளா.?
என்னா சொல்ரிங்க தெளிவா சொல்லுங்க…
எல்லாம் இந்த வட்ஸ் அப் படுத்துன பாடு.
அல்லாஹ்வே கொஞ்சம் தெளிவா நடந்ததை சொல்லுங்களேன். அவன் எனக்கு நல்லா பரீச்சயமானவன், ஒழுக்கமானவன், அப்படித்தான் இந்த ஊருக்கும் தெரியும். மனிசன் தானே, சந்தர்ப்ப சூழ்நிலை இப்படியெல்லாம் தடுமாற வச்சிடும் கவனமாக இருக்காட்டி.
தம்பி அவன்ட பொண்டாட்டி வெளிநாட்டிலே இருந்த போது, அடிக்கடி ரீலோட் போட அந்த கம்சா லெவ்வைட கடைக்கு போறவன். அப்படியே ஒருவருசத்துக்கு மேலே கடனுக்கு ரீலோட் போடுற. மாசம் பொண்டாடி காசி அனுப்பினதும் கொடுக்கிற, இப்படி இருவருக்குள்ளும் நல்ல ஒரு நட்பு.
ஒரு நாள் கம்சா லெவ்வை அவசரமாக வெளியே ஒரு வேலையாக போக வேணும் நீ கடையில் கொஞ்சமிரு என்று சொல்லிட்டு போயிருக்கான், அந்த நேரம் பார்த்து ஒரு பெண் அங்கே ரீலோட் போட வந்திருக்கா போட வந்தவர்கிட்ட ரீலோட் போடும் டேடா முறைமை தற்போது மாறிட்டு 455 ரூபாட டேடா இப்போ 988 ரூபாவாக உயர்ந்திட்டு என்று சொல்லிருக்கான்.
அந்தப் புள்ள குறைவாக பணம் கொண்டு வந்திருக்கு. பரவாயில்ல நான் ரீலோட் போடுறேன் நீங்க பிறகு தாங்க என்று சொல்லி ரீலோட்டை போட்டுவிட்டான்.
அந்தப் புள்ளையும் நாளைக்கு தருவதாக சொல்லி விட்டு போய் விட்டது.
இப்படி ஆரம்பிச்ச அந்த தொடர்பு என்னாச்சுன்னா அந்தப்புள்ளட நம்பர் எடுத்து வட்ஸ் அப்ல பேசத் தொடங்கிட்டான். அந்தத் தொடர்பு என்னன்டா இவனது தனிமையை ஏக்கத்தை ஆசையை திருப்திப்படுத்தியதாக உணர்ந்தவன் உறவை தொடர்ந்தான். அந்த உறவு தகாத உறவாக மாறி பல பிரச்சினைகளை உண்டு பண்ணி விட்டது.
ஒரு நாள் அந்த பிள்ளை தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை கல்யாணம் கட்டுமாறும் கேட்க, இவனுக்கு இடி விழுந்தது. அந்தக் கர்ப்பத்திற்கு இவன் காரணமில்லை என்பது இவனுக்கும் அவளுக்கும் நன்கு தெரிந்ததுதான், பாதுகாப்பாக நடந்த தவறு என்பதையறிந்தும் அந்த பெண் இவனை அடிக்கடி தொந்தரவு பண்ணத் தொடங்கிவிட்டாள். இவன் இப்போதுதான் இவளைப்பற்றி விசாரிக்கத் தொடங்குகிறான். விசாரணை இவனுக்கு இன்றும் பல அதிர்ச்சி சேதிகளை கொடுத்தது.
அந்தப் பெண் இப்படி பல பிரச்சினைகளை ஏற்கனவே சுமந்திருந்தவள். மிக தவறான பெண் என்பதை அறிந்து அவளிடம் இப்படி நீ என்னை மிரட்டுவாய் என்று சத்தியமாக எண்ணவில்லை, எதற்காக என்னை இப்படி உன் வலையில் சிக்க வைத்தாய் என்று கதறி அழுதிருக்கான். அவளுக்கு இது தான் தொழில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இவ்வாறான குடும்பஸ்தர்களை தன் வலையில் விழ வைக்கிறதுதான் இவளது வேலை என்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டான்.
என்னடா நம்மட திறமையா. தான் அவளை அடைந்தோம் என்று அதுவரை எண்ணிருந்த பஷீருக்கு உண்மை பல காயங்களை ஏற்படுத்தியது. ஊரில் மானம் போனது மரியாதை இழந்தான். மனைவி பிள்ளை குடும்பத்தாரிடம் அவமானப் பட்டான்.
அவன்ட பொண்டாட்டி வெளிநாட்டிலிருந்து வீடு வந்து எப்படியோ இருவரும் சேர்ந்து வாழ்ந்துதான் வந்தார்கள் ஊரில் எல்லோரும் அந்தப்புள்ளைக்கு பெரிய மனசு பாரேன் புருசன் செய்த அப்படிப்பெரிய தவறை மன்னித்து அவனோடு வாழுது என்றெல்லாம் புகழ்ந்து பேசப்பட்டது.
இப்படி இருக்கும் போது சில நாட்களின் பின் என்ன நடந்ததது என்றால் இவன் எதேச்சியாக தனது மனைவியின் கைபேசிக்கு வந்த ஒரு அழைப்பை எடுக்க அந்த அழைப்பில் இருந்தவர் ஒரு ஆண் என்பதை அறிந்தவர் அதன் பின்னர் மனைவியின் கைபேசியை அவளுக்கு தெரியாமல் நோண்டத் தொடங்கியிருக்கிறான். அப்போதுதான் அவனுக்கே பேரதிர்ச்சி காத்திருந்திருச்சி.
அப்படி என்ன அது?
அதை ஏன் கேட்குறா?
அவள் இவனைவிட பல மடங்கு போக்கிரி. வெளிநாட்டிலே அவள்ற தனிமையை போக்க அவளும் சில பல முடிவுகளை எடுத்திருக்காள். வட்ஸ் அபில் நோண்டிய பின் பல ஸ்கீர்ன் சோர்ட், பல வோய்ஸ் மெசேஜ், பல அந்தரங்க காட்சிகள் என பட்டியல் நீண்டது.
இப்போது யாரு பெரிசு நீயா நானா என்று தொடர்ந்த பிரச்சினை கைகலப்பாக மாறி அவளின் தலை முடியை வெட்டி எரிஞ்சிட்டான். அலங்கோலமாக அடி, உதை சண்டையென நீண்ட பிரச்சினை ஹாதி நீதிமன்றம் வரை போய் விவாக விடுதலையில் முடிந்தது. பாவம் பிள்ளைகள் ஒன்று அவனிடம் இன்னொன்று அவளிடம்.
அவள் நேற்றுத்தான் வெளிநாடு சென்று விட்டாள் பிள்ளையை தன் தாயிடம் கொடுத்துவிட்டு, வட்ஸ்அப் படுத்தின பாட்டைப் பாத்திங்களா? இப்படித்தான் பல பேருடைய வாழ்க்கை தள்ளாடிக்கொண்டிருக்கு..
இந்த சமூக வலைத்தளங்களால்.
ஜே. பிரோஸ்கான்