வீட்டுரிமை உட்பட அனைத்து தேவைகளையும் ஆளுங்கட்சி நிறைவேற்றுவார்கள் என மலையக மக்கள் பொறுமையு டன் காத்திருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீ வன் தொண்டமான் தெரிவித்தார். தினகரன், வாரமஞ்சரிக்கு வழங்கிய விஷேட நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்தார். நேர்காணலின் முழு விபரம் வருமாறு :புதிய அரசாங்கத்துடன் உங்கள் பயணம், வேலைத்திட்டங்கள் எவ்வாறு அமையப்போகின்றது?
அதிக ஆசனங்களை பெற்று ஆட்சியமைத்துள்ள புதிய அரசாங்கத்துக்கு இ.தொ.கா சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அரசாங்கம் செய்யும் அனைத்தையும் சரியென ஏற்றுக்கொள்ளவும் முடியாது. பலமான ஒரு எதிர்க்கட்சி கட்டாயம் தேவை. பலமான எதிர்க்கட்சியொன்று அமையவேண்டுமாயின் குறைவான ஆசனங்களைப் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து சரியான தலைமையின் கீழ் செயற்படவேண்டும்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு முன்னரே பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. தேர்தலில் வெற்றியீட்டிய அரசாங்கத்தை அமைப்பதனால் மாத்திரம் எதுவும் மாறப்போவதில்லை. அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றார்களா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சியுடையது.
தற்போது, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அப் பதவியினூடாக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட்டு தோட்ட மக்களுக்கான காணி உரிமையை பெற்றுக்கொடுத்தால் சிறந்தது.
மலையக மக்கள், வீட்டுரிமை உட்பட அனைத்து தேவைகளையும் ஆளுங்கட்சி நிறைவேற்றுவார்கள் என பொறுமையுடன் காத்திருக்கின்றார்கள். எவ்வாறாயினும் மற்ற விடயங்களை விட காணி உரிமை வழங்கப்படவேண்டும் என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும். அதற்கு எந்த ஒத்துழைப்பு வேண்டுமானாலும் வழங்குவதற்கு நாம் தயார். அத்துடன் இலங்கையர் என்ற ரீதியில் பொருளாதாரத்தை ஒரு நிலையான இடத்துக்கு கொண்டுவருவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் நாம் தயாராகவுள்ளோம்.
பாராளுமன்ற தேர்தலில் இ.தொ.கா கட்சிக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்துள்ளது. இதை நீங்கள் தோல்வியாக கருதுகின்றீர்களா?
யார் முதலிடம் யார் இரண்டாமிடம் என கணக்கிடுவதற்கு இதுவொரு போட்டியல்ல. 2020 ஆம் ஆண்டு, ஒரு கஷ்டமான காலகட்டத்திலேயே இ.தொ.கா நாட்டை பொறுப்பேற்றது.
2020ஆம் ஆண்டு எந்ததெந்த கட்சிகள் இருந்தனவோ அந்த அனைத்து கட்சிகளுமே தற்போது இல்லாமல்போயுள்ளன.
ஆரம்பத்தில் 10 ஆகவிருந்த இ.தொ.காவின் ஆசனங்கள் பின்னர் 3 ஆகவும், 2 ஆகவும் தற்போது ஒரு ஆசனமாகவும் மாறியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். இதனை மக்களின் ஆணையாகவே நான் கருதுகின்றேன்.
நாம் நாட்டை பொறுப்பேற்கையில், பொருளாதார நெருக்கடி தோற்றியிருந்தது. இதன்போது பணவீக்கம் 73.8 சதவீதமாக காணப்பட்டது. வாழ்வாதார செலவு அதிகரித்தது. மக்கள் கஷ்டமான காலக்கட்டத்துக்கு தள்ளப்பட்டிருந்தார்கள். இச் சந்தர்ப்பத்தில் நாம் எவ்வளவு பகிர்ந்தாலும் மக்களின் சிந்தனை வேறாக இருந்தது. இந்த நெருக்கடிக்களுக்கு எமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தஅம் மக்களுக்கு நான் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 1 இலட்சத்து 9 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தோம். அதிகப்படியான வாக்குகளாக 2 இலட்சம் நெருக்கியது. அவ்வாறிக்கையில், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அதிகப்படியான வாக்குகளாக 4 இலட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, நாம் அதிகளவில் சேவைசெய்துள்ளோம். மலையக மக்கள் மலையக பிரதிநிதிகளுக்கு வாக்களித்துள்ளனர்.
எனவே மக்கள் ஆணையை நாம் கட்டாயம் மதிக்கவேண்டும். தற்போதைய ஜனாதிபதியின் கட்சி, இதற்கு முன் நடைபெற்ற தேர்தல்களில் வெறுமனே 2 அல்லது 3 ஆசனங்களையே பெற்று வந்துள்ளது.
அவர் தற்போது ஜனாதிபதியாகியுள்ளார் அல்லவா? தேசியப் பட்டியலினூடாக 1 ஆசனத்தைப்பெற்று பாராளுமன்றத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க நாட்டை காப்பாற்றினாரே… நிலைமையை பொறுத்திருந்துதான் பாரக்க வேண்டும்.
இ.தொ.கா என்ற தனித்துவமான சின்னத்தை விட்டுவிட்டு வேறொரு சின்னத்தில் போட்டியிட்டமையினாலேயே இந்த பின்னடைவை சந்தித்ததாக கருதுகின்றீர்களா?
இல்லை. நாம் சரியான முடிவையே எடுத்திருந்தோம். நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 98 வேட்பாளர்கள் தேர்தலில் நின்றனர். இதில் அநேகமானவர்கள்பணத்தையும் சலுகைகளையும் வழங்கியே வாக்கு சேகரித்தனர். இவ்வாறிருக்கையில் எமக்கு ஏனைய சமூகத்தினரினதும் வாக்குகளும் தேவைப்பட்டது. அதனாலேயே, எமது கட்சிக்கு தனித்துவமான சின்னம் இருந்தும் சமூகத்தின் முக்கியத்துவம் கருதி இந்த தீர்மானத்தை எடுத்திருந்தோம்.
மேலும், 1977 ஆம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா தேர்தலில் நிற்கும்போது ஒரே தலைவர் ஒரே கட்சி மாத்திரமே இருந்த சந்தர்ப்பத்தில் கூட நாட்டினுடைய தேர்தல் முறைமையின்படி ஒரே ஆசனத்தை மட்டுமே பெறக்கூடியதாக இருந்தது. ஆனால், தற்போது அவ்வாறில்லை. வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் பல்வேறு கட்சிகள் செயற்பட்டு வரும் நிலையில் நாம் சரியான முடிவையே எடுத்திருப்பதாக நான் கருதுகிறேன்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாம் அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டுமென ஒவ்வொரு மேடைகளிலும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், அவர் ஜனாதியாகவிருந்தபோதும், பிரதமராக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாதத்தை கையில் எடுக்கவில்லை. இதனாலேயே அவர் தேர்தலில் தோல்வியை தழுவினார்.
தற்போதுள்ள செயலாளர் மற்றும் மத்தியவங்கியின் ஆளுநர் போன்றோர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவால் நியமிக்கப்பட்டவர்கள் அல்லவா? ரணில் விக்கிமசிங்கவின் ஆலோசனையின் படியே மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பொருளாதார தீர்மானங்களை மேற்கொண்டிருந்தார். அதன்படி தற்போதைய ஜனாதிபதியும் ரணில் விக்கிமசிங்கவின் பொருளாதார கொள்கைகளை அங்கீகரித்து அதனை முன்னெடுத்துச் செல்கின்றார்.
இ.தொ.காவின் பின்னடைவுக்கும் ஆசனங்கள் குறைந்தமைக்கான காரணம் தொடர்பாக ஆராய்தீர்களா?
2005 ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து போட்டியிட்ட எத்தனை கட்சிகள் தோல்வியை தழுவியது. அக் காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து யானை சின்னத்திலோ அல்லது ரணில் விக்கிமசிங்கவுடனோ இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அதிக ஆசனங்களை வென்றிருக்க முடியும். ஆனால், 30 வருடங்கள் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அமைச்சரவையில் யாரும் இருந்திருக்க முடியாது. இவை அரசியல் முடிவுகளே.
இ.தொ.கா 2 ஆசனங்களிலிருந்து 1 ஆசனமாக குறைந்துள்ளமையை பின்னடைவு என கூறினால், ஏனைய கட்சிகளும் இன்று பின்னடைவை சந்தித்திருக்கின்றதல்லவா? அவ்வாறாயின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இன்று எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்? ஐக்கிய தேசிய கட்சியில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்? பலம்பொருந்திய எதிர்க்கட்சியாக செயற்பட்ட சஜித் பிரேமதாச கிட்டத்தட்ட இன்று 20 ஆசனங்கள் இழந்திருக்கின்றார் அல்லவா? மலையகத்தில் ஒரே கூட்டணியாக செயற்பட்ட கட்சிக்கு இன்று என்ன நடந்துள்ளது? வடக்கு கிழக்கை அங்கீகரித்து பாராளுமன்றத்தில் பலம் பொருந்திய கட்சியாகவிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது என்ன நடந்துள்ளது? இவற்றை பின்னடைவு என கூற முடியும். ஆனால், ஆளுங்கட்சியின் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து நாடளாவிய ரீதியில் மக்கள் வாக்களித்துள்ளார்கள். இந்த அலையிலும் நாம் ஒரு ஆசனத்தை பெற்றுள்ளோம். இதனை பின்னடைவு என நினைக்கலாம். எனினும் இது நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளையும் பாதித்த ஒரு விடயம். இந்த விடயத்தில் எம் பக்கத்திலுள்ள குறைபாடுகளை சீர்செய்துகொண்டு முன்நோக்கி பயணிப்பதுதான் அரசியல். அதற்கான வேலைகளை செய்தால் மக்கள் வாக்களிப்பார்கள்.
அதுமட்டுமல்லாமல், ஒரு பொருளாதார நெருக்கடியில் நாட்டை பொறுப்பேற்று, அரசாங்கத்தில் இருக்கும் வளங்களை பயன்படுத்தியே பிரச்சினைகளை சீர்செய்ய முடியும். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி சார்பாக மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நின்றவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்கள். ஆனால், இன்று அமைச்சரவையில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எத்தனை பேர் இருக்கின்றார்கள்.
நான் ஊடகத்துறையிடம் ஒரு கேள்வியை கேட்கவேண்டும். கடந்த 2020 ஆம் ஆண்டு எனக்கு இராஜாங்க அமைச்சர் பதவி கிடைக்கும்போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அத்துடன், மலையக மக்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக் ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க இருவருமே தமது கொள்கை பிரகடனத்தில் மலையக மக்கள் பற்றி உரையாற்றவில்லை. இன்று அது தொடர்பாக யாராரும் கதைக்காதது ஏன்? எனினும், தற்போது தோட்ட உட்கட்மைப்பு அமைச்சு பதுளையைச் சேர்ந்த சமந்த வித்யரத்னவின் கீழ் உள்ளது.
மாகாணசபை தேர்லுக்கு இ.தொ.கா தயாராகவுள்ளதா?
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் சில விடயங்களை புதுப்பிக்கவுள்ளோம். தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும்.
அதற்குமுன் தொழிற்சங்கம் மற்றும் அரசியல் பிரிவுகளில் சில மாற்றங்களை கொண்டுவருவதற்காக தேசியசபையை கூட்டி அவர்களின் அங்கீகாரத்துடன் கட்சி என்ற ரீதியில் சில முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது.
ஆட்சி மாற்றத்தால், மலையகத்துக்கான உங்களின் வேலைத்திட்டங்கள் தடைப்படுமா? அல்லது அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்களா? அல்லது அவற்றை செயற்படுத்துமாறு அரசாரங்கத்தை வலியுறுத்துவீர்களா?
அரசியல் மாற்றம் ஒன்று வேண்டுமென மக்கள் தற்போதைய ஆளுங்கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்கள் ஆட்சியமைத்து ஒரு வாரம் நெருங்குகின்றது. அதன்படி, ஆளுந்தரப்புக்கு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள நாம் வாய்ப்பளிக்க வேண்டும். தேவைநேரத்தில் ஒத்துழைப்பையும் வழங்குவோம். வெறுமனே குறைகூறவதற்காக மாத்திரம் எதிர்தரப்பில் அமர்ந்துக்கொண்டு தவறை சுட்டிக்காட்டிக்கொண்டிருப்பது முட்டாள் தனம்.
இன்று பாராளுமன்றத்தில், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு பிரதியமைச்சர் உள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள். தேவையான நேரத்தில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி வேண்டிய உதவியையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு நாம் தயாராகவுள்ளோம். இதனை பாராளுமன்றத்தில் சந்தித்தபோது அவரிடம் தெரிவித்திருந்தேன்.
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்தில் ஒருவர் இருந்தால் மாத்திரமே, மலையக மக்களுக்கான சேவைகளை வழங்க முடியும்.
இதேவேளை, காணி உரிமை பத்திரத்ரதை அரசாங்கம் வழங்கும் என நம்புகின்றேன். நாம் ஆட்சியிலிருந்தபோது அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். அதனை தொடர்ச்சியாக செயற்படுத்துவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.
அத்துடன், அஸ்வெசும வேலைத்திட்டம் ஆரம்பித்தபோது லயன்குடியிருப்பில் ஒரு குடும்பத்தை மாத்திரமே கணக்கில் எடுப்பார்கள்.
இந்நிலையில், நான் இறுதியாக சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின்படி, தோட்டத்தில் வேலைசெய்தாலும் இல்லையென்றாலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் திருமணம் முடிந்திருந்தால் அவர்களுக்கு அந்த நலன் திட்டத்தை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தேன்.
அதற்கு அனுமதி வழங்கி வர்த்தமானி வெளியிட்டிருப்பதாக எனக்கு தெரியவந்தது. அதனையிட்டு மகிழ்ச்சியடைந்தேன். அது உண்மையில் நல்ல விடயம். பழைய கலாசாரத்தை முன்னெடுக்காது புதிய திட்டங்களை மேற்கொள்வார்கள் என நம்புகின்றேன். வாய்ப்பளித்து பார்ப்போம்.
ஏதேனும் கூற விரும்புகின்றீர்களா?
மக்கள் மாற்றம் வேண்டும் என எதிர்பார்த்தார்கள். நாம் மேற்கொண்ட பிரசாரங்களில் எம்மிடம் எவ்வாறான வளங்கள் உள்ளன. அதனை வைத்து என்ன செய்ய முடியும் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தோம். எனினும் மலையக மக்கள் தொடர்பாக பலர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள். பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.