இலங்கையின் தமிழ் திரைப்படத் துறையை யுத்தம் தின்று தீர்த்தபின் இலங்கை, இந்திய கலைஞர்களின் பங்களிப்போடு மிக நீண்ட இடைவெளியின் பின் வந்த திரைப்படம் “மண்”. அந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் புதியவன் ராசய்யா. அவரது இயக்கத்தில் வெளிவந்துள்ள புதிய படம்தான் “ஒற்றைப்பனை மரம்”.
போர் நிறைவடைந்த பின்னர் இலங்கையில் யாழ். மண்ணிலும், மட்டக்களப்பு, கொழும்பு, மலையக சூழலிலும் இற்றைவரை பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளன. சில வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.
போருக்கு பின்னர் வெளிவந்த இலங்கை தமிழ் திரைப்படங்களை நடிப்பிலும், தொழில்நுட்பத்திலும் உச்ச அடைவினை பெற்றிருக்கும் தென்னிந்திய சினிமா திரைப்படங்களோடு நாம் ஒப்பிட்டு பார்க்கத்தேவையில்லை.
ஏலவே இலங்கையில் போர்க்காலத்துக்கு முன்னர் வெளிவந்த இலங்கை தமிழ் படங்களோடு ஒப்பிட்டு பார்த்தாலே இப்போதைய திரைப்படங்களின் தரத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.
இத்தகைய திரைப்படங்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வெளிவந்து இலங்கையில் மற்றும் புலம்பெயர் நாடுகளில் நிகழ்த்தப்படும் சிறப்புக்காட்சிகளோடு தமக்குள்ளே தன்னிறைவு பெற்று விடுகின்றன.
தென்னிந்திய திரைப்படமொன்றை பார்க்க டிக்கெட்டுக்கு முண்டியடிக்கும் இலங்கை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போது இலங்கை தமிழ் திரைப்படமொன்றை பார்க்க முண்டியடிப்பார்களோ அப்போதே இலங்கை தமிழ் திரைப்படங்களுக்கு விமோசனம் கிட்டும்.
இலங்கையில் உருவாக்கப்படும் இலங்கை தமிழ் திரைப்படங்களில் ஒருசில, தமிழகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் காட்சியோடு நின்றுவிடுகின்றன.
தமிழகத்தில் திரையிடப்படுவதில்லை.
அதனால் இலங்கையின் தற்போதைய சூழலும் மக்களின் வாழ்வியலும் தமிழக மக்களுக்கு சரியாக தெரிய வருவதில்லை. தமிழகத்தின் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் காட்டும் இலங்கையே உண்மையான இலங்கையென்று தற்போது வரை தமிழக மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
அந்த நம்பிக்கையை சிதைக்கும்படியாக வெளிவந்துள்ளது “ஒற்றைப்பனைமரம்”.
இந்தப்படத்தின் இயக்குனர் “புதியவன் ராசய்யா” இயக்கிய திரைப்படங்கள் தமிழகத்தில் முன்பு திரையிடப்பட்டுள்ளன. அதற்கான சூட்சூமத்தையும், சரியான திரைமொழியையும், வியாபார நுட்பத்தையும், புதியவன் ராசய்யா தெரிந்து வைத்திருப்பதனால்தான் அது அவருக்கு சாத்தியமாகிறது.
அவரது இயக்கத்தில் வெளிவந்து பல்வேறு எதிர்ப்பு, விமர்சனங்கள் மத்தியில் இன்று தமிழகத்தில் “ஒற்றை பனை மரம்” திரைக்கு வந்துள்ளது.
இத்திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் அண்மையில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றபோது அந்த நிகழ்வுக்காக என்னையும் இயக்குனர் புதியவன் ராசய்யா அழைத்திருந்தார்.இத்திரைப்படத்தை நானும் பார்த்தேன்.
தயாரிப்பாளர், தொழிலதிபர் தணிகைவேல் மிக துணிச்சலோடு இத்திரைப்படத்தை வாங்கி திரையிட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்.
பதினேழு சர்வதேச விருதுகளை பெற்றிருக்கும் இத்திரைப்படத்துக்கு பல்வேறு மட்டத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியல் நிலையில் ஒரு சிலர் படத்தை பார்க்காமலே தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இத்தகைய எதிர்ப்புக்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு ஒரே பதில் “சுடும் உண்மைகளை” காய்த்தல், உவத்தலின்றி சொன்னதுதான் என்று கூறலாம்.
படத்தை பார்த்து பல இடங்களில் நான் கண்கலங்கினேன். இத்திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள எதுவும் பொய்யில்லை. அனைத்தும் உண்மை. இதில் சில நிகழ்வுகள் தற்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. பல்வேறு உண்மை நிகழ்வுகளை இத்திரைப்படத்தில் இயக்குனர் பதிவு செய்துள்ளார். மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட பல உண்மைகளை இத்திரைப்படத்தின் மூலம் வெளிக்கொணர்ந்துள்ள இயக்குனரின் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்.
படத்தில் சிறப்பாக தமது நடித்திருக்கும் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
போராட்டத்தில் மலையக தமிழர்களின் பங்களிப்பு, யுத்தம் முடிவுக்கு பின் போராளிகள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள், கிறிஸ் மனிதன், வெள்ளை வேன் கலாசாரம் , சாதீய முரண்பாடுகள் என பலவிடயங்களை பதிவு செய்துள்ளார்.
வடக்கில் காலங்காலமாய் வாழ்ந்த இஸ்லாமிய தமிழர்கள் ஒரே நாளில் உடுத்த உடையுடனும் ஐந்நூறு ரூபாய் பணத்துடனும் பூர்வீக நிலங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்ட வரலாற்றுத் தவறினை எந்தவித வெட்டுக் குத்தலுமின்றி முதன் முதலாக தமிழ் ஈழ இயக்குனர் புதியவன் ராசய்யா பதிவு செய்துள்ளார்.
இத்திரைப்படத்தை தமிழகத்தில் உள்ளவர்கள் பார்க்கின்றபோது தமிழகத்தில் உள்ள போலித் தமிழ் தேசிய வியாதிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள மாய விம்பத்தின் உண்மை உணரப்படும் என்பதனால் இத்திரைப்படத்தை நிறுத்த ஒரு சிலர் மிகவும் அவதிப்படுகிறார்கள் என்பதை உணரமுடிகிறது.
நல்ல திரைப்படமொன்றை இயக்கியிருக்கும் இயக்குனர், நண்பர் புதியவன் ராசய்யாவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்
பொத்துவில் அஸ்மின்