தமிழ்நாடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா எதிர்வரும் நவம்பர் மாதம் 02ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக திருக்கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் சு. ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
02ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை அதிகாலை 1.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1.30 மணியளவில் விஸ்வரூப தரிசனமும் தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்று காலை 5.30க்கு அருள்மிகு ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு புறப்படுதல் காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகமும் பிற்பகல் 3.30க்கு சாயரட்சை தீப ஆராதனை என்பனவற்றுடன் வழமையாக ஆன்மிக அருளுரைகளும் தங்கரத பவனி சண்முக அர்ச்சனை என்பனவும் இடம்பெறும்
சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகரும் ஆன்மீக அருளுரையாளருமான ஆறு திருமுருகன் அவர்களின் ஆன்மிக சொற்பொழிவு நவம்பர் 02ஆம் திகதி முதல் 07 திகதி வரை தேவஸ்தான சண்முகவிலாஸ் கலையரங்கில் நடைபெறும். லண்டன் V. யோகநாதன், தனது தந்தையார் நினைவாக இந்த ஆன்மிக அருளுரையை ஏற்பாடு செய்து பல வருடங்களாக அனுசரணை வழங்கி வருகிறார். நவம்பர் 7 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு சுவாமி சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளி சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறும். 8ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசுக்கு புறப்படுவார். மாலை 6 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழா நடைபெற்று அன்று இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
அதேவேளை பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை மிகத் திறம்பட நடத்தியமைக்காக இலங்கை இந்து சமய கலாசார பணிப்பாளர் அனிருத்தன் மற்றும் இலங்கை வாழ் முருக பக்தர்கள் சார்பாக அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுக்கும் அறநிலையத்துறை ஆணையாளர் பி.என். ஸ்ரீதருக்கும் அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
-எச். எச். விக்கிரமசிங்க