பேருவளை சீனன் கோட்டை குட்டிமலை ஜாலிய்யா தர்கா ஸாவியா மஸ்ஜிதில் வருடாந்த காதிரிய்யா மனாகிப் மஜ்லிஸ் தமாம் வைபவம் இன்று (13.10.2024) அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பமாகவுள்ளது.
கலி பதுஷ்சாதுலிகளான மௌலவி எம்.எம்.செய்னுலாப்தின் (பஹ்ஜி) அஷ்ஷேய்க் இஹ்ஸானுதீன் அபுல்ஹசன் (நளீமி) ஆகியோர் நிகழ்வுக்கு தலைமை வகிப்பர். பிரபல பேச்சாளர் கலி பதுல் அருஸி மௌலவி முஹம்மத் முஸ்தகீம் (நஜாஹீ) விஷேட பேச்சாளராக கலந்துகொள்வார். நேற்றிரவு (12) திக்ர் மஜிலிஸ் நடைபெற்றது.
ரஸல் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பின்னர், அன்னவர் வழிவந்த கலீபாக்கள் ஸஹாபா தோழர்கள், இமாம்கள் வழிமார்கள் என்று வழித்தோன்றல்கள் பலரும் புனித இஸ்லாம் மார்க்கத்தைப் பேணி வளர்த்து வந்தார்கள். உலகின் நான்கு பக்கங்களிலும் இஸ்லாம் பரவ வழிகோலினர்.
இஸ்லாம் தோன்றி ஏறத்தாழ 500ஆம் ஆண்டளவில் அரேபியாவைச் சூழவுள்ள சில நாடுகளில் வாழ்ந்த மக்கள் மனங்களில் இஸ்லாமிய வழிமுறை மங்க ஆரம்பித்தது. பெயரளவில் இஸ்லாமியர்களாகவும் பழக்க வழக்க நடைமுறைகளில் இஸ்லாத்துக்கு புறம்பாகவும் வாழத் தலைப்பட்டனர்.
இதனைக் கண்ட இமாம்கள் ஸூபியாக்கள் மிகவும் வேதனைப்பட்டார்கள். இக்கால கட்டத்தில் தான் மகான் ஆத்மீக ஞானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்கள் பாரசீகத்தில் வடமேல் மாகாணத்திலுள்ள ஜீலான் என்ற ஊரில் ஹிஜ்ரி 470 இல் – கி.பி 1077 இல் பிறந்தார்கள். இறைத்தூர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பரம்பரையில் பிறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவயதிலையே தந்தையை இழந்த முஹ்யித்தீன் அப்தில் காதிர் ஜீலானி (ரலி) அவர்கள் அன்னையின் அரவணைப்பிலே வாழ்ந்தார்கள். அன்னை உம்முல் ஹைர் பாதிமா அவர்கள் அருமை மகனை கண்ணின் மணி போன்று பேணி வளர்த்தார்கள். பிஞ்சு நெஞ்சிலே தீனின் விதையை விதைத்தார்கள் கல்வி அறிவூட்டி சன்மார்க்க நெறியோடு அறிவு ஞானமிக்கவராக வளந்தார்கள்.
முஹியத்தீன் அப்தில் காதர் ஜீலானி ரலி அவர்கள் தன் ஊர் மத்ரஸாவிலே ஆரம்ப கல்வியைப் பெற்றார்கள். சிறுவயதிலையே அல்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார்கள். சரீஆ சட்டங்களை சரியாக கற்று அதன்படி பேணி நடந்தார்கள். தனது 18 ஆவது வயதிலேயே மேற்படிப்பை நாடி இஸ்லாமிய கல்வி ஞானத்திலே பிரசித்தி பெற்று விளங்கிய பக்தாத் நகருக்குச் சென்றார்கள். அங்கு இஸ்லாமிய பிக்ஹூ, குர்ஆன் விளக்கம், ஹதீஸ் கலை போன்றவற்றை கற்றுத் தேர்ந்தார்கள் அத்துடன் அறிவியல் நூல்களையும் எழுத ஆரம்பித்தார்கள். அவற்றுள் பத்குத் தைய்யான், பத்ஹூர் ரப்பானி, பத்ஹூல் கைப் இன்று வரையும் மிகவும் பிரபல்யம் மிக்க நூல்களாக திகழ்கின்றன.
அன்று ஸூபித்துவத்தில் மிகவும் பிரசித்திபெற்றுத் திகழ்ந்த அப்துல் காதர் ஹம்மாத் என்ற ஞான மகானின் கருத்துக்களாலும் கொள்கையாளும் மிகவும் கவரப்பட்டார். அவரிடம் கற்று ஸூபித்துவத்தில் தலைசிறந்த ஞானியாகத் தன்னை வளர்த்துக் கொண்டார்கள். இறைநேசராக உயர்வடைந்தார். அன்னாரின் ஆத்ம ஞானத்தையும் இறை நேசத்தையும் கண்ட பெறும் திரலான மக்கள் அன்னாரை பின்பற்றலானார்கள்.
ஆன்மிக வழிகாட்டியாக பின் தொடர்ந்தார்கள் ஆன்ம ஞானத்தோடு கல்வி புகட்டும் பணியைத் தொடர்ந்த அன்னாரிடம் பெருந் தொகையான மாணவர்கள் இணைந்து கற்று தேறலானார்கள். தான் கற்றுத் தேர்ந்த அத்தனை கல்வி அறிவுத்துறைகளையும் தன் சிஷ்யர்களுக்கு ஊட்டி அவர்களையும் நல்ல தேர்ச்சியாளர்களாக்கினார்கள்.
அத்துடன் நில்லாது வழி தவறிச் சென்றவர்களை நேர்வழியின் பால் அழைத்துச் சென்றார்கள். சன்மார்க்க போதனையில் சளையாது உழைத்து தீனுக்கு புத்துயிர் ஊட்டினார்கள். இதனாலையே தீனை உயிர்ப்பித்தனர் என்ற பொருள்படும் முஹியத்தீன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்கள்.
நாவன்மையால் மக்களை நெறிப்படுத்திய அன்னார் அறப்போதனைக்காக தன் எழுத்தாற்றலையும் பயன்படுத்த தவறவில்லை. தீன் வழியில் நடக்கும்படி அறிவுரை பகரும் அரிய நூல்களையும் எழுதினார்கள்.
தன்மையரியாமலே இணைவைக்கும் செயற்பாடுகளுக்கு ஒப்பாக நடப்போரைக் காப்பாற்றும் வகையில் போதனை புரிந்தார்கள். அதே போன்று மார்க்கத்துக்கு முரணான புதுப் புதுப் கொள்கைகளில் ஈடுபட்டு வருவோரையும் தடுத்து நேர் வழியில் நடக்கச் செய்தார்கள். இறையச்சம் இறை நம்பிக்கைபற்றி ஆழமாக மக்கள் மனங்களில் பதியவைத்தார்கள். பத்குர் ரப்பானி என்ற நூல் இதற்கு தக்க சான்றாகும். இம்மை வாழ்வு குறித்தும் மறுமையில் நற்பெயரும் குறித்தும் அலகுர அந்நூலில் ஆணித்தனமாக முன்வைத்தார்கள்.
ஈமான் உறுதியோடு ஏகத்துவத்தின் பால் மக்கள் சீராக நடக்க தன் பிரசாரப் போதனைகளை நெறிப்படுத்தினார்கள்.
சத்தியத்தின்பால் மக்களை அழைக்க அரும் பாடுபட்ட ஆத்மீக ஞானி முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரலி) அவர்களையும் எதிர் அன்றொரு கூட்டம் இருந்தது. சீர்திருத்தவாதிகளுக்கு இத்தகைய எதிர் அலைகள் மோதுவது வரலாற்று நெடுகிலும் உள்ள உண்மையாகும். இதற்கு ஆத்மீக ஞானியும் விதிவிளக்கல்ல. அத்தனை சோதனை, வேதனைகளையும் சகித்துக்கொண்டு தன்பயணத்தை துணிவுடன் தொடர்ந்தார்கள். கொலைப் பயமுறுத்தல்கள் வந்த வேலையிலும் தயங்காது, அஞ்சாது அல்லாஹ் ஒருவன் மீது நம்பிக்கை வைத்து இலட்சியத்திலே கண்ணாக இருந்தார்கள். இதனால் ஆத்மீகத்தில் அதிஉயர் நிலையடைந்த குத்பு நாயகமாக திகழ்ந்தார்கள்.
தம் பணியை திறம்பட நிறைவேற்றிக்கொண்டு இருந்த அன்னார், சிறிது நோய்வாய்பட்டிருந்த நிலையில், ஹிஜ்ரி 561 ரபியுலர் ஆஹிர் பிறை 11 இல் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார்கள். இன்னாலில்லஹி வஇன்னா இலைஹி ராஜஊன்.
அன்னாரினால் உருவாக்கப்பட்ட காதிரியா தரீக்கா எனும் ஆன்மீக வழிமுறை இன்று உலகின் நான்கு புறங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நூற்றுக்கு நூறு வீதம் ஷாதுலியயா தரீக்காவை பின்பற்றும் சீனன் கோட்டையில் அன்னாருக்காக மனாகிப் மஜ்லிஸ் வருடாந்தம் நடத்தப்பட்டு வருகிறமையானது தரீக்காக்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.
சீனன் கோட்டை குட்டிமலை ஜலாலீய்யா தர்கா பள்ளிவாசலில் அன்னார் பெயரில் மனாகிப் மஜ்லிஸ் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அஷ் ஷெய்கு ஜமால் தீன், அஷ் ஷெய்கு ஜலாலுத்தீன் போன்ற இறைநேசர்கள் அடங்கப்பட்டுள்ள. குட்டிமலை தர்கா பல வரலாற்று சிறப்புக்களை கொண்ட ஓர் பள்ளிவாசலாகும்.
சிறந்த சுற்றாடலும் மிகவும் ஒற்றுமையாகவும் இப்பகுதி வாழ் மக்கள் வாழ்வதுடன் குத்புல் அக்தாப் கௌதுல் அஃலம் முஹ்யத்தீன் அப்தில் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் ஞாபகர்த்தமாக இந்த இந்த மனாகிப் மஜ்லிஸை மிகச் சிறப்பாக வருடாந்தம் நடத்தி வருவதை பாராட்ட வேண்டும்.
பேருவளை பீ.எம் முக்தார்