Home » இடமாற்றம்

இடமாற்றம்

by Damith Pushpika
September 29, 2024 6:00 am 0 comment

அந்த கடிதம் கையில் கிடைத்த வேளையிலிருந்து ஆசிரியர் விமலனுக்கு ஒரு படபடப்பு. அவர் செய்யவேண்டிய வேலை யாவும் ஸ்தம்பிதம் ஆகியது. அன்று பாடசாலைக்கு எடுத்து வந்த பகல் சாப்பாட்டைக் கூட பிரித்து பகிர்ந்து சாப்பிட மனம் இல்லாமல் இருந்தது விமலனுக்கு.

சக ஊழியர்கள் கேள்வியுற்று வந்து ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது போல் துக்கம் விசாரித்தனர். இருப்பினும், அரச சேவையில் இருப்பவர்களுக்கு இப்படியான இடமாற்றங்கள் வருவது சகஜம்.

தமக்கென தனியான பாடவேளைக்குரிய நேர சூசி இல்லாதவர்கள், ஒரே பாடசாலையில் நீண்ட காலம் சேவையாற்றியவர்கள் இப்படி சில அடிப்படையில் இடமாற்றங்கள் வழங்கப்படுவது விமலனும் அறிந்ததுதான். விமலனுக்கு இதில் இரண்டாவது காரணத்தின் அடிப்படையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

கணித பாட ஆசிரியரான விமலன் திறமைசாலி, இந்த பாடசாலைக்கும் நல்ல பெறுபேறுகள் கிடைக்கப் பாடுபட்டவர்.

விமலனுக்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்று விளங்காமல் இருந்தது. இது அவரது முதல் அனுபவம் என்பதால், ஒருபுறம் பழகிய பாடசாலை, அதன் நினைவுகள், பரிச்சயமான ஆசிரியர் குழாம், மாணவர்கள் என்று பலவாறான எண்ணங்கள் இதை விட்டுப்போவதும் ஒரு வேதனை கலந்த உணர்வை உள்ளத்தில் உண்டாக்கியது. மறுபுறம் மனைவி பிள்ளைகள்… எப்படியும் இந்த இடமாற்றத்தை ஏற்றால் வீட்டிலிருந்து சற்று தூரம் போக வேண்டிய நிர்ப்பந்தம்.

உண்மையிலேயே இன்றைய இந்த நிலைமை வாழ்விலொரு புதிய அனுபவமாக தெரிகிற அதேவேளை, பாரிய குழப்பமாகவும் இருந்தது அவருக்கு. தன்னை சுதாகரித்துக்கொள்ள முடியாமல் வெளியிலும் தெரிவித்துக் கொள்ளாதவராக பாடசாலைக்குள் நடமாடிய விமலனை, அதிபர் காரியாலயத்துக்கு வரும்படி அழைப்பு வந்தது. என்ன சொல்லப்போகிறார் என்ற சிந்தனையுடன் காரியாலயத்துக்குப் போனார்.

சார்…

ஆ… வாங்க விமலன் உட்காருங்க!

நன்றி சார். என்றவாறு அவரின் முன்னால் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டார் விமலன்.

என்ன இப்ப நீங்கள் மாறுதலானாலும் எங்களுக்கும் பிரச்சினைதான். எதற்கும் இன்று பாடசாலை விட்டு கல்வி காரியாலயத்துக்கு சென்று பணிப்பாளருடன் இது பற்றி கதைத்து பார்ப்போம்.

சரி. சார்….

அதற்கு முன் நீங்க ஒரு அப்பீல் கடிதத்தை அந்த சுமனா டீச்சரிடம் சொல்லி சிங்களத்தில் எழுதுங்க!

சரி. சார்….

எப்பீல் கடிதம், விஷயம் நடக்குற மாதிரி இருக்கனும்

சரி. சர்….

சரி நீங்க இதை ஏற்பாடு செய்ங்க! நாங்க கொஞ்சம் நேரத்துடன் ஸ்கூலிலிருந்து போவோம் என்றார் அதிபர்.

சரி. சர்… என்றபடி விமலன் அதிபர் குறிப்பிட்ட ஆசிரியையைத் தேடிப் போனார். அவருடன் கதைத்து அதிபர் கூறியபடி எப்பீல் கடிதம் தயாரானது.

பாடசாலைக்குள் என்ன நடக்கிறது என்பதே விமலனுக்கு மனதில் படுவதாய் இல்லை.

சக ஆசிரியர்கள் எப்படியாவது இடமாற்றத்தை இரத்து செய்து கொண்டு இங்கேயே வந்துவிடுங்கள் என்கின்றனர். ஆனால் எப்படி செய்வது? யாரைக்கொண்டு கதைப்பது? என்பது குழப்பமாக இருந்தது விமலனுக்கு

கருத்துக்களுக்கு குறைவில்லை. அங்க போங்க! இங்க போங்க! மாகாண காரியாலயம் போங்க! இப்படி எண்ணில்லா ஆலோசனைகள் இதுபோல் ஆயிரம் ஆலோசனைகள் வந்தாலும் தானே தனித்து ஒரு தீர்மானத்துக்கு வரனும் என்பதே விமலனுக்கு பட்டது. ஏனெனில் அரச உத்தியோகம் இடமாற்றம் என்பதெல்லாம் சொந்த உறவுகளை தேடிப்போகும் பயணமல்ல. நாம் நினைத்தால் போக அல்லது போகாமல் விட எப்படியும் தொழிலை சரியாக செய்கின்றோமோ இல்லையோ தொழில் சட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டியதே அரச பணி.

அரச உத்தியோகம், மாதம் முடிய சம்பளம், ஓய்வு பெற்றால் ஓய்வூதியம் இதெல்லாம் வெளியில் பளிங்கு மாதிரி மின்னினாலும் இந்த பயணத்தை கடக்க வேண்டிய சரத்துக்கள் இலகுவானதல்ல. கோடிக்கணக்கில் துஷ்பிரயோகங்கள் நடக்கலாம். ஆனாலும் சின்ன சம்பளம் வாங்குபவர்கள் படுகின்ற கஷ்டம் அதில் உள்ளவர்களுக்கே புரியும்.

ஆனால் இந்த ஆசிரியர் சேவையை சரியாக செய்தால் வேறு எந்த தான, தர்மங்களும் செய்ய தேவையில்லை. ஆசிரிய பணியில் பிள்ளைகளுக்கு எழுத்தறிவித்தல், அவர்களை நல்வழிப்படுத்தல் இது எத்தனையோ புண்ணியமான காரியம். இப்படியெல்லாம் எண்ணித்தான் தன் சேவையை சரியாக செய்தார் விமலன்.

பாடசாலை கடைசி மணி ஒலித்தது. காரியாலயம் வந்து கையொப்பம் இட்டுவிட்டு அதிபருடன் கல்விக் காரியாலயம் போக ஆயத்தமானார்.

அந்த எப்பீல் கடிதத்தை எடுத்து விட்டீர்களா என்றார் அதிபர்

ஆமா. சார்….

சரி போவோம்; என்று இருவரும் புறப்பட்டனர். விமலனின் மனதுக்குள் ஒரு படபடப்பு. ஏதோ அதிபர் பாடசாலை விடயமாக பேசிக்கொண்டு வந்தார். அது இவர் காதில் வெறும் ஓசையாகவே பட்டுக்கொண்டிருந்தது.

இன்றெல்லாம் அரச சேவையுடன் அரசியலும் கலந்து விட்டதால் இதுபோன்ற விடயங்களுக்கு அரசியல் செல்வாக்கும் அவசியம் தேவை. ஆனால் விமலனுக்கு அது இல்லை. தான் உண்டு, தன் கடமை உண்டு என்று கடமையை சரிவர செய்ததை தவிர வேறு எதையும் தேடிக்கொள்ள வில்லை. நேர சூசி இல்லாமல் மட்டுமல்ல முதல் நியமனத்தில் இருந்தே ஒரே பாடசாலையில் பல வருடங்கள் சேவை செய்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் செல்வாக்கை பயன்படுத்திக்கொண்டிருந்தாலும் விமலன் அவர்களுடன் தன்னை வைத்துப் பார்க்க விரும்பவில்லை.

இருவரும் காரியாலயத்தை வந்தடைந்தனர். அன்று காரியாலய நாள் என்பதால் சன்றுக் கூட்டமாக இருந்தது. ஆனாலும் பணிப்பாளர் தன் அறையில் இருந்தார். அது பெரிய ஆறுதலாக இருந்தது, இருவருக்கும். இருவரும் உள்ளே போகக் காத்து நின்றனர். என்ன நடக்குமோ என்ற யோசனை விமலனுக்கு. சரி அதிபர் தானே பேசுவதாக கூறினார். ஒரு தரம் முயல்வோம் என்று எண்ணினார்.

உள்ளே பணிப்பாளர் வருபவர்களுக்கு ஏதேனும் பதிலை சொல்லுவதும், கடிதங்களுக்கு கையொப்பம் இடுவதுமாக தன் கடமையை செய்துகொண்டிருந்தார். உள்ளே போக வேண்டிய தருணம் வந்ததும் இருவரும் உள்ளே சென்றார்கள். வணக்கத்தைக் கூறி அதிபர் அமர்ந்து கொண்டார். விமலன் அருகில் நின்று கொண்டார்.

விடயத்தை அதிபர் அமைதியாக எடுத்துக் கூறினார். எப்பீல் கடிதமும் காட்டப்பட்டது. அதனைப் பார்த்தப்படி தலையை அசைத்தவாறு மூக்கு கண்ணாடிக்கு மேலாக விமலனை பார்த்தார் பணிப்பாளர்.

ம்… என்றொரு பெருமூச்சுடன் கதைக்க தொடங்கினார். எப்போதுமே இது போன்ற அதிகாரிகளிடம் சில தரவுகள் இருப்பது வழமை அதன்படி தனிப்பட்ட பிரச்சினைகளை உங்கள் தொழிலுடன் தொடர்பு படுத்த வேண்டாம்.

இவர் சேவைக்காலம் அதிகம் அதனால் இடமாற்ற காலம் சரி. ஏன் ஒரே இடத்தில் இருந்து பழைமையாகி போகிறீர்கள்.

அத்துடன் நீங்கள் நகரங்களில் நடமாட உள்ளே இருப்பவர்கள் உள்ளேயே இருக்க இடமளிக்க முடியாது. அவர்களின் பக்கமும் நாங்கள் பார்க்கவேண்டும். அதன்படி நீங்கள் மாற்றலாகிப் போவது நல்லது.

நாங்கள் தூர இடத்தில் இருக்கும் ஒருவரை உங்கள் பாடசாலைக்கு நியமிப்போம் என்று கடிதத்தை மேசைமேல் வைத்துவிட்டு வாசல் பக்கம் பார்த்தார்.

அதிபர் திரும்பி விமலனை பார்த்தார். என்ன நேரமோ பணிப்பாளரின் தொலைபேசி மணி ஒலித்தது. அதனை எடுத்தவர் ஏதோ பிரச்சினை பட்டவராய் யாரையோ அதட்டி கடுமையான சிங்களத்தில் கதைத்தார். அதில் சில வார்த்தைகள் இவர்களுக்கும் பொருந்துவது போல் இருந்தது. இருவரும் இடத்தை காலிசெய்து வெளியில் வந்தனர். அதிபர் மௌனமாக வந்தார்.

உங்களுக்கு யாராவது அரசியல்வாதிகள் அறிமுகம் இருந்தால் கொஞ்சம் முயன்று பாருங்கள் என்றார்.

விமலன் எதுவுமே பேசவில்லை. இருவரும் விடை பெற்றனர். கடிதத்தின் படி பதின்நான்கு நாட்கள் இடைவெளி இருந்தது. விமலன் அதே சிந்தனையுடன் வீடு வந்து சேர்ந்தார். சற்று நேரம் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு தன் மனைவியுடன் இது பற்றி கதைக்க தொடங்கினார்.

உடனே மனைவி… ஓ… நீங்கதானே பெரிய சேவை செய்யபோய் என்ன கிடைத்தது பார்த்தீர்களா? வேலை வேலை என்று இருந்ததுக்கு இதுதான் பலனா? சரி இப்ப என்ன செய்யபோகிறீர்கள் என்றாள் மனைவி.

விமலன் மௌனமாக இருந்தார். காரணம் தொழில் ரீதியான சில விடங்களை மனைவிக்கு விளங்கப்படுத்த முடியாது என்பது அவருக்கு தெரியும்.

இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளதான் வரும் என்றார் விமலன். மனைவி உடனே எழும்பி உள்ளே போய்விட்டாள்.

ஒரு பிரச்சினை என்றால் எத்தனை கருத்துக்கள் முரண்பாடுகள் வருகின்றன?. என்றாலும் எல்லாம் போட்டு நம்மை நாம் குழப்பிக்கொள்ள முடியாது என்பது விமலனின் எண்ணம். ஒவ்வொருவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் நாம் முடிவெடுக்கவும் இயலாது.

தீவிர சிந்தனையின் பின் விமலன் ஒரு தீர்மானத்துக்கு வந்தார். இதை இடமாற்றமாக பாராமல் முதல் நியமனம் பெற்று செல்வதாக அந்த பாடசாலைக்கு செல்ல ஆயத்தமானார். அதிபருடன் இது பற்றி கதைத்து விட்டு தான் பாடசாலைக்கு கொடுக்க வேண்டியவைகளை ஒப்படைத்து விட்டு ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் பேசிவிட்டு விடைபெற்றார்.

புதிய இடத்தில் கணித பாடத்துக்கென பயிற்றப்பட்ட கணித ஆசிரியர் இன்மையால் இவருக்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது. படிப்படியாக பயண அசௌகரியங்கள் பழகிப்போயின. பாடசாலையும் பழக்கப்பட்;டுக்கொண்டே வந்தது.

மீண்டும் ஒரு முறை பழைய பாடசாலைக்கு வந்த சமயம் அங்கு எதுவும் இயங்காமல் இருக்கவில்லை. வழமையான நடைமுறையே தென்பட்டது. உண்மையிலேயே இவர்தான் இந்த இடத்துக்கு உரியவர். இவர் இல்லையெனில் எதுவும் இல்லை என்ற எந்த கதாபாத்திரமும் மனிதரும் உலகில் இல்லை என்பது அவருக்கு ஞாபகம் வந்தது.

அது போல் எந்த பிரச்சினைகளுக்கும் தன் சுய சிந்தனையில் முடிவுகளை எடுப்பதும் அவசியம் எனப்பட்டது விமலனுக்கு.

யாரோ சொல்லி எங்கோ கேட்டது விமலனுக்கு ஞாபகம் வந்தது. நீரினில் கையை அழுத்தி இருக்கும் பொழுது தென்படும் சுழி கையை வெளியே எடுத்தவுடன் மாறிவிடும் என்று. இது இந்த விடயத்துக்கும் பொருந்தும் எனப்பட்டது அவருக்கு.

சி. முத்து சங்கரன் பண்டாரவளை

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division