பொருட்களை உற்பத்தி செய்யும் உழைப்பாளர்களுக்கு உற்பத்திக் கருவிகளில் உரிமை இல்லாத பொறிமுறைமை முதலாளித்துவப் பொருளாதார முறை. இதில் உழைப்போரின் பங்கு உழைக்கும் சக்தியினை கூலிக்கு விற்பது மட்டுமே.
இப்பொறிமுறை பொருளாதார நெளிவு சுளிவுகளுக்கு ஏற்ப முதல் உடையோருக்குப் பொருத்தமான வடிவங்களை அறிமுகப்படுத்தும். அவ்வாறான ஒரு பொறிமுறைமையே வெளியார் உற்பத்தி முறைமை.
ஐரோப்பிய வல்லரசு நாடுகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஆசியா, ஆபிரிக்க நாடுகளில் பொருளாதார முறைமையினை தமக்கு வருவாய் தரும் முறையாக மாற்றி அமைத்தனர். குடியேற்ற நாடுகளின் பொருளாதார பண்புகளில் வீரியமாகத் தென்படுவது இந்த அம்சமே ஆகும். தமது வருமானதை பெருப்பிக்க அவர்கள் வர்த்தகப் பயிர்களை அறிமுகப்படுத்தினர்
இலங்கையில் போர்த்துக்கேயர் வாசனைப் பொருட்களுக்கும், யானைத் தந்தங்களுக்குமே முன்னுரிமைக் கொடுத்தனர். இலங்கை அரசர்களோடு செய்து கொண்ட பல ஒப்பந்தங்களின் முக்கிய கருப்பொருள் இவையே. இதில் ஓரடி மேலே போன ஒல்லாந்தர் கறுவா விளையும் பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த செயற்பாடே பிற்காலத்தில் முழு நாடும் அந்நியருக்குச் சொந்தமாவதற்கு மடை திறப்பானது.
ஆங்கிலேயர் இதற்காக முழு நாட்டையும் அடிமைப்படுத்தி வர்த்தகப் பயிர் பொருளாதார முறையை வளர்த்தெடுத்தனர். இதன் நீட்சியாக இன்றும் தேயிலையும், றப்பரும் இருக்கின்றன. இப்பயிர்ச் செய்கைக்கு இன்று சில சவால்கள், பிரச்சினைகள் எழுந்துள்ளன. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் காலத்துக்குக் காலம் தோன்றும் பிரச்சினைகள் இவை. இவை பொருளாதாரத்தின் கட்டமைப்பின் அடித்தளத்தினை அசைத்து விடா. ஆனால் முதலீட்டாளர்களின் வருவாயில் சிறு அதிர்வினை ஏற்படுத்தும். அதற்குப் பரிகாரம் என தமது லாபத்தினை உச்சமாகும் புதிய பொறிமுறைகள் அறிமுகப் படுத்தப்படும். குடியேற்ற ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருந்த கானா, கென்யா, ஐவரிகோஸ்ட், ஜாம்பியா போன்ற நாடுகளில் தான் வெளியார் உற்பத்திப் பொறிமுறை அறிமுகப்-படுத்தப்பட்டது .
வெளியார் உற்பத்தி முறைமை ஒப்பந்தப் பண்ணை முறைமை என்றும் கூறப்படுகின்றது. உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுவோர், உற்பத்தி நிலத்திற்குச் சொந்தக்காரர் ஆகிய இரு தரப்பினர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடையிலான ஒப்பந்த ஏற்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் உற்பத்திப் பொறிமுறை இது. இந்தியாவின் சில பகுதிகளிலும், சில ஆபிரிக்க நாடுகளிலும் காணி உரிமை உள்ள உற்பத்தியாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றது. இலங்கையில் காணி உரித்து அற்றோருக்கும், குத்தகைக் காரர்களுக்கும் ஒப்பந்தம் இன்றி செயல்படுத்தப்படுகின்றது. பெருந்தோட்டங்களை பிராந்திய பெருந்தோட்டக் கம்பெனிகளுக்கு அரசாங்கம் குத்தகைக்குக் கொடுத்தபோது இவ்வாறான புதிய நடைமுறைகளை புகுத்துவதற்கான ஏற்பாடுகள் இருந்ததா என்று தெரியவில்லை.
“ஒப்பந்த பண்ணை முறை ஒரு வணிக/வர்த்தக ரீதியான முன்மொழிவு” என்று கூறப்படுகின்றது. வணிகத்தில் லாப நோக்கமே உயிர்நாடி. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அடிநாதமும் இதுதான். இதன் அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பான பொறிமுறையாக காணப்படுகின்றது. அதனால் உழைப்பாளர்களுக்கு விமோசனம் தரக்கூடியதாக இருக்க முடியாது.” வாங்குவோருக்கும், விவசாயிகளுக்கு இடையிலான ஒப்பந்தத்திற்கு இணங்க மேற்கொள்ளப்படும் விவசாய உற்பத்தியே ஒப்பந்த விவசாயம் என என்று செபர்ட் (Andrew Shepard ) ஒப்பந்த விவசாயம் பற்றிய ஓர் அறிமுகம் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். உற்பத்தியின் இலக்கு நுகர்வு பூர்த்தி மட்டுமல்ல லாப நோக்கும் கொண்டது என்ற உண்மையினை இதனோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். வணிக நோக்குடைய ஒப்பந்த விவசாயம் பொருளின் உற்பத்தியிலும், சந்தைப்படுத்தலிலும் நிபந்தனைகளை விதிக்கின்றது.
இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வெளியார் உற்பத்தி முறைமை நடைமுறைப் படுத்துவதனை ஆய்வு செய்தோர் “நிலத்தினதும், தொழிலாளியினதும் உழைப்புத் திறனை மேம்படுத்தலுக்கும், தேயிலைத் தோட்டங்களின் நிலைத்திருப்பிற்கும் மூலோபாயம் ஓன்று தேவைப்படுவதாகக் கூறியுள்ளனர். இந்த நோக்கிற்கான ஒரு கோட்பாடே வெளியார் உற்பத்தி முறைமை என்று கூறும் அவர்கள் இம் முறையினை பின் வருமாறு விளக்கியுள்ளனர்.” தொழிலாளரின் பயன் முனைப்பான பங்குபற்றலோடு தோட்டத்தில் உள்ள தொழிலாளர் குடும்பம் ஒன்றுக்கு பூரணமாகப் பயன்படுத்தப்படாத அல்லது பயன் தராத காணித் துண்டு ஓன்று கொடுக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
தேயிலைக்காணியை நிர்வகிப்பதற்காக பசளை, பிற உள்ளீடுகள், தொழில்நுட்ப செயன்முறை நுண்ணறிவு போன்றவற்றை தோட்ட நிர்வாகம் கொடுக்கும்.பதிலாக அவர்கள் கொழுந்தினை தோட்ட நிர்வாகத்தினருக்கு கொடுக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் இம்முறைமை 15 % மான விவசாய வெளியீட்டினை அந்நாடுகளில் தருவதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது (Implementation of outgrower system in tea plantation ._A .W .Shyamalee &Nimal Wellala _Agricultural Economic Division ,T .R .I of Sri Lanka) என்று ஆய்வாளர் இருவர் குறிபிட்டுள்ளனர்.
நாட்டின் மொத்த குடித்தொகையில் 5%மான தோட்ட மக்கள் நகர, கிராம மக்களை விட மிகக் குறைந்த வருமானத்தைப் பெறும் இவர்கள், இலங்கையின் வறுமை ஒழிப்பு முயற்சிக்கு முக்கிய சவாலாக இருப்பதனை சுட்டியுள்ள உலக வங்கியின் கூற்றினை எடுத்துக் காட்டி, வெளியார் பொறிமுறை வருமானத்தை உயர்த்துவதோடு, தோட்டங்களில் இருந்து இடம் பெயர்வதனையும் குறைக்கும் என்று கூறியுள்ளனர்.
இந்த முறையால் மாதாந்த வருமானம் கூடும் என்பது சாத்தியமா என்று சந்தேகப் பட வேண்டியுள்ளது. காரணம், தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் காணியின் தன்மை பயிரிடப்படாத காணி எனில் பயிரிடமுடியாத காணியா எனும் கேள்வி எழுகின்றது. உச்ச லாபத்தினையே நோக்காகக்கொண்ட கம்பெனிக்காரர்கள் பயிரிடாமல் காணிகளை வைத்திருப்பார்களா? இக் காணிகளின் இன்னொரு தன்மை வளமற்று காணப்படுவது. இத்தகைய கனிகளில் எவ்வளவு உள்ளீடுகளைச் செய்தாலும் நல்ல விளைச்சல் கிடைக்காது.எனவே வருமானம் கூடும் என்பது நிச்சயமற்றது.
வெளியார் பயிர்ச் செய்கை ஒரு புதிய முறைமையாகையால் நோக்கினை அடைய சம்பத்தப்பட்ட எல்லா தரப்பினரின் முயற்சியும், பயனுறுதியுள்ள அவதானிப்பு முறைமையும் அவசியமானதோடு, பொருத்தமான பயிர்ச் செய்கை செயற்பாடுகளும், புரிந்துணர்வும் அவசியமென்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
வெளியார் உற்பத்தி முறைமை ஒப்பந்த விவசாய செயற்பாடு என்று கூறப்படுகின்றது. இம் முறையினை விளக்கிய பாரி பாஉமன்(Pari baumann ) என்பவர், வெளியார் உற்பத்தியாளர்களும், ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையிலான அபாயத் தேர்வு (Risk) என குறிப்பிடுகின்றார். பொருளுடைமை சமூகத்தில் பந்தயத்தில் வெல்லக்கூடியவர்கள் முதலீட்டாளர்கள் (invester) என்பது தர்க்க ரீதியான முடிவாகும். ஒப்பந்தம்
பரஸ்பர சம்பந்தத்திற்கு மேலாக, சம்பந்தத்தின் வகைக் குறியானது என அவர் விவரித்துள்ளார். ஓர் ஒப்பந்தத்தின் அமைப்பும், நிருவகிப்பும் அதில் பதிந்துள்ள அரசியல், பொருளாதார சூழலிலேயே பெரிதும் தங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
நடைமுறை அரசியல், பொருளாதாரச் சூழல் தொழிலாளர்களுக்குச் சாதகமானதல்ல. அரசியலில் தொழிலாளர்களுக்கு வாக்கு அளிப்பதனைத் தவிர்ந்த வேறு நிர்ணய பங்கு எதுவுமில்லை, சிறுபான்மை இன தொழிலாளர்களின் நிலைமை மேலும் மோசமானது. அவர்கள் மாற்றான் தாய் மனப்பாங்கோடு பார்க்கப்படுவதோடு, ஒதுக்கியும் வைக்கப்பட்டுள்ளனர்.பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே அல்லற்படுவதனை போக்க அரசாங்கம் எவ்வித பரிகார ஏற்பாட்டினையும் செய்யாதது இதனைப் புலப்படுத்துக்கின்றது.
தோட்டத் தொழிலாளரின் கூலியினை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்த செயற்பாட்டில் மௌனப் பார்வையாளராக அரசாங்கம் நடந்து கொள்வது இதனை வலுப்படுத்துகின்றது. இதேவேளை நடப்பில் உள்ள பொருளாதாரக் கட்டமைப்பு சுரண்டல் மூலதன அழுத்தத்தில் அமிழ்ந்து உள்ளதனை மனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய சூழலில் தொழிலாளர்களுக்கு விமோசனம் அளிக்கக் கூடியதாக இம் முறைமை செயற்பட முடியுமா?
பாரி பாஉமன் இரு சாராருக்கும் இடையிலான ஒப்பந்தம், தெளிவானதாக (clarity) உரிமைகளையும்,பொறுப்புகளையும் விளக்குவதாக இருக்க வேண்டும் என்கிறார். தொழிலாளர்கள் கல்வியறிவு குறைந்தோராகவும், முதலீட்டாளர்கள் கல்வியறிவு கூடியோராகவும் இருக்கின்ற யதார்த்த நிலையில் ஒப்பந்தத்தின் தெளிவு எவ்வாறு இருக்குமென்று யூகிக்க முடியும். ஒப்பந்தத்தின் பொருள்கோடல் வழு படக்கூடியது (vulnerable) என்று பாரி பாஉமன் கூறியுள்ளது இத்தகைய ஐயத்தினை வலுவாக்குகின்றது.
இதற்கு உதாரணமாக 18 பக்கங்களைக் கொண்ட சாம்பியாவின் ஆவணம் ஒன்றினையும், கென்யாவின் தேயிலை மேம்பாட்டு அதிகார சபை முறைப்படியான (formal) ஒப்பந்தத்தினைக் கொண்டிராமல் வெளி உற்பத்தியாளர்கள் செயற்திட்ட அதிகாரிகளின் நல்லெண்ணத்தில் தங்கி இருக்க வேண்டியுள்ளதனையும் அவர் எடுத்துக் காட்டி உள்ளார்.
இவ் விளக்கத்தின் அடிப்படையில் வெளியார் உற்பத்தி முறைமை தொழிலாளர்களுக்குச் சாதகமானதல்ல என்பதனைப் புரிந்து கொள்ளலாம். இலங்கையில் வெளியார் உற்பத்தி முறைமை அமுலாக்கலைப்பற்றி ஆய்வு செய்த தேயிலை ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளர்கள் (Implementation of outgrower system in tea plantation —W .W .Shyamalee & Wellala) இதற்கான சில வழிகாட்டல் ஏற்பாடுகளைக் குறிப்பிட்டுள்ளனர். அவை :
1. சம்பளப்பட்டியலிலுள்ள தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை
2. காணி அபிவிருத்தி செய்யப்படுவதற்குப் பொருத்தமான நீண்டகால குத்தொகை ஏற்பாடு.
3. வேறு பயிர்கள் பயிரிடப்படக் கூடாது.
4. கட்டடங்கள் அமைக்கப்படுவது அனுமதிக்கப் படாது.
5. போதுமான உச்சவருமானத்தை ஈட்டக் கூடியதாக காணி அபிவிருத்தி செய்யப்படும் வரை வாழ்வாதாரத்திற்குப் போதுமான வருமானத்தைப் பெறத்தக்கதாக மாதம் ஒன்றுக்கு வேலை வழங்குதல்.
6. செலவு மீளப் பெறும் அடிப்படையில் பொருட்களை (Materials) விநியோகிக்கப்படுவதோடு தொழில்நுட்ப நுண்ணறிவினை நிர்வாகம் வழங்க வேண்டும்.
7. தேயிலை ஆணையாளரின் (Tea controlar) சூத்திரத்திற்கு ஏற்ற அல்லது கூடிய விலைக்கு கொழுந்தினை கொள்வனவு செய்தல்.
8. காணி உரித்து அடிப்படையில் பறிக்கப்பட்ட கொழுந்தில் இருந்து ஒரு தொகையினை உரிமைத் தொகையாக நிர்வாகத்தார் பிடித்துக் கொள்ளலாம்.
9. ஒவ்வொரு வெளியார் உற்பத்தியாளரின் கணக்கு விவரங்களை தோட்டக் காரியாலயங்கள் பேணா வேண்டும்.
10. ஒவ்வொரு வெளியார் உற்பத்தியாளரும் நியாயமான அறுவடையைப் பெறத்தக்கதாக ஒரு ஹெக் காணி அல்லது 5000 /6000 தேயிலைச் செடிகள் வழங்கப்பட வேண்டும்.
இவ்வழிகாட்டல் குறிப்புகள் விமர்சிக்கப் படத்தக்க அம்சங்களைக் கொண்டுள்ளன.
(அடுத்த வார தொடர்…)
பீ.மரியதாஸ்