அரச மருத்துவமனையின் இருநூற்று ஒன்பதாவது கட்டில். எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவில் மாவுக் கட்டுடன் தொங்கிக் கொண்டிருக்கும் காலுக்குச் சொந்தக்காரன் பெயர் கோடீஸ்வரன். ஊரில் அறியப்பட்ட திருடன். இதுவரை எத்தனையோ களவுகள் செய்திருக்கிறான். களவு செய்வதைவிட மாட்டிக்கொள்ளாமல் இருப்பது என்பதில் மிக அவதானமாகச் செயல்பட்டிருக்கிறான். அப்படியே பிடிபட்டாலும் அடி வாங்கிக்கொண்டேனும் தப்பித்துப் போயிருக்கிறான். ஆனால் நேற்று முன்தினம் நடந்த இந்த சம்பவம் அவனுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. ‘பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான்’ என்ற வாக்கிற்கு வலுச்சேர்க்கும் வண்ணம் நிகழ்ந்துவிட்ட அந்த சம்பவத்தை எண்ணும்போது அவமானமாகவும் கேவலமாகவும் இருந்தது அவனுக்கு. ஒரு கால் கட்டுடன் தொங்கும் வேதனையிலும், மறுகால் தப்பித்துச் சென்றுவிடுவான் என்று சங்கிலியால் பிணைக்கப்பட்ட வேதனையிலும் பார்க்க, உயிரை பணயம் வைத்துத் திருடிய அந்தப் பொருளை எண்ணும்போதே வேதனை பன்மடங்காகியது அவனுக்கு.
ஒரு மூன்று மாதத்திற்கு முன்பு பெண்ணின் கைப்பையைப் பறித்துக் கொண்டு ஓடியபோது துரத்தி வந்த ஒரு கும்பலையே, நாலாபக்கமும் அலையவிட்டு திசைமாற்றித் தப்பித்துச் சென்றதிலும் பார்க்க இம்முறை தப்பிப்பது மிகவும் சிரமமாகவே இருந்தது. அன்று அத்தனை சிரமம் எடுத்துக் கொண்டபோதும் அந்த பையில் வெறும் நூறு ரூபாய் மாத்திரமே இருந்தது. ஆனால் இந்தப்பொதி… வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்த இந்தப்பொதி. அடியும் உதையும் என்றல்லாமல் எலும்புமுறிவுமென எல்லாம் கொடுத்துப் பொலிஸிலும் மாட்டிவிட்ட பொதி. இது பொதியல்ல சதி. வேதனையும் விரக்தியும் பாடாய் படுத்தியது. ம்.. என்ன செய்ய மாட்டியாச்சி. இனி இதிலிருந்து விடுபடுவதற்கான வழியைத் தேட வேண்டும். அதற்குள் கால் குணமாக வேண்டும். காலில் போடப்பட்டிருக்கும் கட்டையும் அது கொடுக்கும் வலியையும் பார்த்தால் இப்போதைக்கு குணமாகுமென்ற நம்பிக்கை இல்லை. ஆனால் சம்பவம் பொலிஸ் கைக்குள் சிக்கியதால் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை.
இன்று ஞாயிறு. நாளை திங்கட்கிழமை நீதிமன்றம். ஒரு ஆளைப் பிடித்தால் இருபத்து நான்கு மணித்தியாலத்திற்குள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற சட்டத்திற்கு அமையைக் கூட்டிச்செல்வார்களோ இல்லையோ என்று தெரியவில்லை. கால் இருக்கும் நிலைமையப் பார்த்தால் கூட்டிச் செல்வார்கள் என்று சொல்ல முடியாது. அதற்கான மாற்று வழியாக வேறு ஏதேனும் செய்வார்ளோ என்றும் தெரியாது. யார் மூலமும் அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பும் இல்லை. அப்படியே கூட்டிச் சென்றாலும் களவாடிய பொருளைச் சமர்ப்பிக்க முடியுமோ இல்லையோ என்பதும் தெரியவில்லை. அல்லாமல் விசயத்தை இந்த அடி உதையோடு மறைத்து எச்சரித்து அனுப்புவார்களோ தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் காலின் எலும்பு முறிவு குணமாக சற்று தாமதமாகும் என்பதில் துளியும் ஐயமில்லை. வைத்தியர்கள் பேசிக்கொண்டதை வைத்துப் பார்க்கும்போது இன்னும் ஒருசில மாதத்திற்குக் காலை ஊன்றி நடமாட முடியாது என்றே தெரிகிறது. சிகிச்சையில் முன்னேற்றம் வரும்வரை ஒரு சில வாரத்திற்கு வைத்தியசாலை சாப்பாட்டோடு ஓட்டி விடலாம். அதன்பின் தண்டனை என்று சிறையிலிட்டாலும் தண்டனையைப் பொருத்து கொஞ்சக் காலத்தைக் கடத்திவிடலாம். இரண்டுமல்லாமல் கால் சற்று குணமானதும் அபராதத்துடன் விட்டுவிட்டால் அடுத்து என்ன செய்யலாம் என்று எண்ணிய கோடீஸ்வரன், பிச்சைக்காரன் ஆவதிலிருந்து தப்ப முடியாமல் இருந்தான்.
சின்னச் சின்னத் திருட்டுகளில் ஈடுபட்டு படிப்படியாய் கொள்ளை, கொலை என்று மேலோங்கி சிறைவரை சென்றவர்கள் வாழும் உலகத்தில் கோடீஸ்வரா ‘உனக்கேண்டா இந்த நிலை?’ தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். ஒரு ஐந்து வருடத்திற்கு முன் ஊரில் பிழைக்க வழியற்று தொழில்தேடி இந்த நகருக்கு வந்த கோடீஸ்வரனுக்கு ஆங்காங்கே சிறு சிறு வேலைகள் கிடைத்தன. கூலி வேலைதான் என்றாலும் அதுவும் நிரந்தரமாக இல்லாமல் அவ்வப்போது அல்லாடினான். ஒரு நாள் ஒரு நேர உணவு. ஒருசில நாள் பட்டினி என்று போராடிய வாழ்க்கையில் கேட்ட இடமெல்லாம் இல்லை என்று கை விரிக்கும் நிலையிலேயே துவண்டுவிட்டான்.
ஊர்ப்பக்கம் திரும்பிப் போவதென்றாலும் பயணச் செலவுக்குக்கூடப் பணமில்லை. வயிற்றுப் பசி என்று ஒன்று வாட்டி வதைத்து. எதையாவது செய் என்று இடும் கட்டளைக்கு தலை வணங்கியே ஆக வேண்டிய கட்டாயம். யாசகம் கேட்டாலும் ‘கை கால் நல்லாத்தானே இருக்கு ஒழைச்சி சாப்பிட என்ன கேடா’ என்றே திட்டிப்போகும் மனிதர்கள். என்னவோ கையில் வேலையைக் கொடுத்து அதை விட்டுவிட்டு வந்து யாசகம் கேட்டு நிற்பது போன்ற நினைப்பே எல்லோருக்கும். இந்த நகரைப் பொறுத்தவரை எந்த வேலையானாலும் தெரிந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். அவர்கள் கள்வர்களாக இருந்தாலும். நேர்மையான நம்பிக்கையான நல்லவர்கள், புதியவர்களாக இருந்தால் புறக்கணித்து விடுகிறார்கள். எச்சில் கையால் காக்கை விரட்டாதவர்களே இல்லாதவரைத் திட்டித் தீர்ப்பதில் வள்ளலாகும் இந்த நகரில் ஒருநாளை ஓட்டுவதென்பது மூச்சடக்கி முத்தெடுப்பதற்கு நிகரானது. ஒருநாள் இரவு ஒரு பத்து மணியிருக்கும். வேலை எதுவும் கிடைக்காமல், பசி வயிற்றைக் கிள்ள தெருவொன்றில் நடந்து வந்து கொண்டிருந்தான். தாகத்திற்குத் தண்ணீராவது குடிக்கலாமே என நினைத்தான். அருகே உணவகங்கள் இல்லாத அத்தெருவில் யார் வீட்டுக் கதவைத் தட்டியேனும் தண்ணீர் கேட்கலாமென்றால் எல்லா வீடுகளின் வாயில்களிலும் உட்புறமாக அவர்களின் மனசளவு பூட்டுகள் தொங்கியிருந்தன. ‘சரி ஏதாவது வீடு திறத்திருக்கிறதா எனப் பார்ப்போம்’ எனப் பார்த்துக் கொண்டே வந்ததில் ஒரு வீட்டின் நுழைவாயில் லேசாகத் திறந்திருந்தது. அருகில் சென்று கண்களை மேயவிட்டான். வீடு மங்கிய ஒளியில் மயங்கிக் கிடந்தது. எல்லோரும் உறங்கத் தொடங்கிவிட்டார்கள் என்று புலனாகியது. தண்ணீர் குடிக்க வழி இருக்கிறதாவெனத் துலாவினான். பௌர்ணமிக்குப் பிந்திய மங்கிய நிலவொளியில் வீட்டின் முன் வாசலுக்கருகில் தோட்டத்திற்கு நீரிறைக்கும் குழாய் கண்ணில் பட்டது. மெதுவாக உள்ளே நுழைந்துகுழாயைத் திறந்தான்.
மக்கள் பாவனை குறைந்த இரவு வேளை என்பதால் பெரிய ஓசையுடன் நீர் அதிவிரைவாய் பீச்சி அடித்தது. அதை அவசரமாய் அடைக்க முற்பட்டான். அது சாத்தியப்படவில்லை. அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து ஒரு குரல். ‘கொஞ்சம் கூடக் கவனம் இல்லாத பிள்ளைகள். தோட்டத்துப் பைப்பைத் திறந்து போட்டுவிட்டிருக்காங்க’
என்றவாறே கதவைத் திறக்க முற்படும் ஓசைக் கேட்டது. அதற்குள் சுதாரித்துக்கொண்டு அருகே இருந்த மரமொன்றில் மறைந்து நின்றான். கதவைத்திறந்து வந்த ஒரு ஐம்பைத்தைந்து அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி குழாயடிப் பக்கமாகச் சென்றாள். எப்படியும் குழாயை அடைக்கச் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தவன் வேறு யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். யாரும் வருவதற்கான அறிகுறி இல்லை. மரத்துக்கும் வீட்டு வாசற்படிக்கும் அதிக தூரமில்லை. வீட்டைப் பார்த்தான். வீடு மங்கிய ஒளியில் மிதந்தது. அந்தப் பெண் வருவதற்குள் வீட்டிற்குள் நுழைந்து ஒளிந்துகொண்டால் சமையலறையில் சாப்பாடு ஏதும் கிடைத்தால் உண்ணலாம் என்ற தீர்மானத்திற்கு வந்தவன் செயலில் இறங்கினான்.
வீட்டில் எல்லோரும் அவரவர் அறைகளில் உறங்க குழாயை அடைத்துவிட்டு வந்த அந்த பெண்மணி வராந்தாவின் அருகில் இருக்கும் அறைக்குள் நுழைந்து தாழிட்டுகொண்டாள், ஒரு பத்து நிமிடம் அமைதியாய் இருந்தவன் வீட்டை ஆராய்ந்தான். மங்கிய ஒளியில் சமையலறைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கவில்லை ஓசைப்படாமல் சென்று பார்த்தான். பாத்திரங்கள், எல்லாம் சுத்தமாகக் கழுவிக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது, ஒரு பானையில் மாத்திரம் எதையோ மூடி வைத்திருந்தார்கள். திறந்தான், அது அன்று எஞ்சிய சாதம், குழம்பு அடங்கலாகத் தெரிந்தது. விடிந்ததும் நாய்க்கு அல்லது குப்பையில் போட வைத்திருக்கலாம். ஆராய இதுவா நேரம். எதுவானாலும் உண்போம் என பானையில் கையைப் போட்டான். கையில் ஒரு எலும்புத்துண்டு அகப்பட்டது. ஏதாவது சதைத்துண்டு ஒட்டியிருக்குமா என்றுப் பார்த்தான். அது ஏதோ பலநாள் பட்டினியில் கிடந்தவன் சாப்பிட்டுட்டுக் கழித்த எலும்பைப் போன்று இருந்தது. அதை நாய்க்குப் போட்டால் நாய் இதை எண்டா போட்டாய் என்று கேட்கும் அளவிற்குச் சுத்தமாக இருந்தது. அதை அப்புறப்படுத்திவிட்டு ஏனைய கறி சாதத்தைத் தின்று தீர்த்தான், வயிறு நிறைந்தது விட்டது. இனி திரும்பிச்செல்ல வேண்டும். சற்று நேரம் இருந்தவன் காதுகளில் அறையில் உறங்கும் பெண்மணியின் குறட்டைச் சத்தம் விழுந்தது. இதுதான் சரியான நேரம் என எண்ணி ஓசைப்படாமல் கதவை மிக அவதானமாகத் திறந்து வெற்றிகரமான தனது முதலாவது திருட்டை முடித்துக்கொண்டு வெளியேறினான்.
அன்று சந்தர்ப்பவசத்தால் திருடத் தொடங்கியவன் வேலைகிடைக்காத நாட்களில் பகலில் யார் வீட்டில் வெளியே குழாய் வைத்திருக்கிறார்கள் என்று பார்த்து வைத்துக்கொண்டு அவ்வப்போது தனது கைவரிசையைக் காட்டிவந்தான். ஒரு பொழுதுபோக்காகத் திருடி வந்தவனை கொரோனா காலத்து வேலையின்றிக் கிடந்த நாட்கள் முழு நேரத் திருடனாகப் பதவி உயர்த்தியது. அதன் பின்னர் தேசம் பொருளாதாரச் சிக்கலில் சிக்குண்ட காலம். குழாய் திறந்துவிட்டு உள்ளே நுழைந்து திருடும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. மக்களே அன்றாடம் சோத்துக்கு அலைமோத திருடனுக்கா வைக்கப் போகிறார்கள்? கையில் கிடைத்ததைத் திருடி விற்றுத் தின்று உயிர் வளர்த்தான். மிகவும் பீதியான, போராட்டமான காலங்களில் எல்லாம் திருடி யாரிடமும் பிடிபடாமல் தனிக்காட்டு ராஜாவாகத் திரிந்தான். ஆனால் இப்போது இந்தப் பொருளைத் திருடிப் பிடிபட்டுக் கூனிக்குறுகி மருத்துவமனைக் கட்டிலில் கிடக்கிறான்.
நேற்று முன் தினம் இரவு ஒரு பத்து மணி இருக்கும். வழமைபோல் தொழிலுக்குப் புறப்பட்டுச் சென்றவன் கண்ணில் தென்பட்டது அந்த கல்யாண மண்டபம். நகரில் பிரசித்தமான அம்மண்டபத்தில் பெரும்புள்ளி ஒருவருடைய கல்யாணம் போலும். வந்திருந்தவர்கள் இரவு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து தங்களின் ஆடம்பர வண்டிகளில் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியிருந்தார்கள். ஒரு பத்துப் பதினைந்து நிமிடம்வரை எதிரே இருந்த ஒரு பெட்டிக்கடையின் அருகில் நின்ற வண்ணம் மண்டபத்தையே அவதானித்துக் கொண்டிருந்தவன் வண்டிகள் எல்லாம் சென்ற பிறகு கல்யாணத்திற்கு வந்தவர்களுடன் வந்தவனாகக் காட்டிக்கொண்டு உள்ளே நுழையத் திட்டமிட்டான். தக்க தருணத்திற்காகக் காத்திருந்தவனுக்கு ஒரு சில நிமிடத்திற்குள் அதற்கான சந்தர்ப்பமும் வாய்த்தது. மெல்ல அடியெடுத்து உள்ளே நுழைய ஆரம்பித்தான். வாயிலை அவன் அண்மித்த வேளை உள்ளிருந்து ஒரு ஆட்டோ விரைவாக வந்தது. வந்த ஆட்டோவை வாயில் ஓரமாய் நிறுத்திய அதன் சொந்தக்காரர், அருகிலிருந்த காவலாளியிடம் ஏதோ கூறிவிட்டு மண்டபத்தின் பின் பக்கமாகச் சென்றார். சென்றவர் கையில் ஒரு பொதியுடன் வந்தார், பொதி சற்று கனதியாக இருந்தது.பொதியைக் கண்ட கோடீஸ்வரனுக்கு மனதிற்குள் மகிழ்ச்சி பூத்தது. எப்படியாவது அதைக் தூக்கிக்கொண்டு ஓடத் திட்டம் தீட்டி ஆட்டோவின் அருகில் செல்லவும் ஆட்டோக்காரர் பொதியை கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது, ஆட்டோக்காரர் பொதியைப் பின் ஆசனத்தில் வைத்துவிட்டு வண்டியைச் செலுத்த ஆரம்பித்த சிறு நொடிக்குள் பொதியைத் தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்துவிட்டான்
பொதியோடு ஓடும் அவனைக் கண்டுவிட்ட வாயிற் காவலர் ஏய்..ஏய்.. என்று பலமாகச் சத்தம்போட்டதைக் கேட்டு வண்டிக்காரர் வண்டியை நிறுத்திவிட்டுப் பார்த்தார். அவன் சற்றுத் தொலைவாகியிருந்தான். ஓடியவனை ஓடிச் சென்று பிடிப்பதைவிட வண்டியில் சென்றால் சீக்கிரம் பிடித்துவிடலாம் என்று வண்டிச்சாரதி துரிதமாக இயங்கினான். வண்டியும் அவனுமாகப் போட்டிப்போட்டு ஓடியவேளை வண்டி நுழைய முடியாத ஒரு குறுக்குச் சந்தில் உள்நுழைந்தான். எப்படியும் ஆட்டோக்காரன் தேடி வருவான் என்பதால் ஓடிய வேகத்தில் அருகில் இருந்த ஒரு வீட்டின் மதிலில் ஏறி உள்ளே குதித்துக் குதித்த இடத்திலேயே அமைதியாக இருந்தான். இது மாதிரி மாட்டிக்கொண்டு ஓடும் சந்தர்ப்பங்களில் எல்லாம் சில மணி நேர அமைதி அவனைக் காப்பாற்றியிருக்கிறது. கூடவே ஆசுவாசப்படுத்தியும் இருக்கிறது. அதனால் அமைதி அவனுக்குப் பிடிக்கும். அமைதியாய் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை அமைதியே அவனுக்கு கற்றுக் கொடுத்திருந்தது. ஒரு முப்பது நிமிடம் கழிந்திருக்கும். இப்போது ஆட்டோக்காரன் திரும்பிப் போயிருப்பான் என்பதைக் கணிக்க மதிலுக்கு வெளியே நிலவிய வீதியின் நிசப்தம் உதவியது. சரி இதுதான் தருணம், இனி தாமதிக்கக் கூடாது என்றெண்ணியவனாய் மதில்மேல் ஏற முற்பட்டான் ஆனால் அது அவன் ஏற முடியாத அளவுக்கு உயரமாக இருந்தது. இதே மதிலில்தானே ஏறிக்குதித்தேன் ஏன் மறுபடி ஏற முடியவில்லை தனக்குள் கேட்டுக்கொண்டே மதிலைப் பார்த்தான். அப்போதுதான் தெரிந்தது மதிலுக்குள் இருக்கும் அந்த வீடு பள்ளத்தில் இருக்கும் உண்மை. பீதியில் குதித்தபோது பள்ளத்தின் அளவு தெரியவில்லை. நின்று நிதானித்துப் பார்த்தபோது மதிலுக்கு வெளியே வீதி மேடாகவும் உட்புறம் தாழ்வாகவும் இருக்கிறது. இனி வாசல் வழியாகவே வெளியேற வேண்டும். அதற்கு முன் வாசல் எங்கிருக்கின்றது என்று கண்டு பிடிக்க வேண்டும். யோசித்தவன் நிலா வெளிச்சத்தில் வீட்டை நோட்டமிட்டான். அப்போது மேலும் பல அதிர்ச்சி அவனுக்குக் காத்திருந்தது. அது ஒரு வீடு இல்லை. ஐந்து ஆறு வீடுகள் சேர்ந்த ஒரு சிறிய வீட்டுத் தொகுதி. எல்லா வீடுகளும் ஒரே மதிலுக்குள் அடங்கி இருந்தாலும் இரண்டு வாயில்கள் இருந்தன. இரண்டும் பூட்டிக் கிடந்தன. கையில் பொதி வேறு கனத்தது. வீடுகளில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதால் சற்று நிம்மதியாக இருந்தது. என்றாலும் வீட்டிலிருந்து வெளியேறுவது என்பது சற்று முடியாத காரியமாகவே இருந்தது. பசி வேறு குடலைப் பிடுங்கியது செய்வதறியாது மெல்ல நகர்ந்து வாயில் பக்கம் வந்தான்.
அந்த சமயமே எதிர்பாராத அந்த சம்பவம் நிகழ்ந்தது. அதுவரை உறங்கிக் கொண்டிருந்த இரண்டு நாய்கள் குரைத்துக்கொண்டே இவன் பக்கமாக பாய்ந்து வந்தன. நாய்களைக் கண்டதும் கால் போனபோக்கில் ஓடினான். இவன் ஓட ஓட அவை துரத்தத் துரத்த நாய்க்குரைக்கும் சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட வீடுகளில் வெளிச்சம் பரவத் துவங்கியது. யாரு யாரு என்று கேட்டுக்கொண்டே ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆண்கள் கத்தியும் கம்புமாக வெளியே வந்தார்கள். வந்தவர்கள் இவன் கையில் பொதியையும் நாய்கள் அப்பொதியைக் குறிவைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்ததும் ஓடிச்சென்று பிடித்துத் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்கள். அதிலும் யாரோ முதலில் பொதியைப் பறித்துக் கொண்டு பொலிசுக்குத் தகவல் சொன்னதும் ஒரு அரை மணித்தியாலத்தில் வந்த பொலிஸ் சகல மரியாதைகளுடனும் அழைத்துச் சென்றது. திருடாத வீட்டில் தர்ம அடிவாங்கி கால் நொண்டி நொண்டிச் சென்றவனுக்கு காவல் நிலையத்திலும் இராக்கால பூசை கிடைத்தது.
பொதி பிரித்துப் பார்க்கப்படாமல் உயர் அதிகாரியின் வருகைக்காக காத்திருந்தது. காலையில் கடமைக்கு வந்த நிலையத்தின் உயரதிகாரி அவனை அழைத்து வரும்படி பணித்தார். கூண்டு திறந்து அவனை வெளியே வரச்சொன்னபோது அவனால் எழுந்திருக்க முடியவில்லை. எழுந்திருக்க மாட்டாயா என்று கேட்டு மேலும் சில உதை விழவே வலி தாங்க முடியாமல் கதறினான். ‘கால தூக்க முடியல சார்’. என்று தவழ்ந்து வர முற்பட்டான். பின்னர் அடியை நிறுத்திய காவலர் அவனது காலை பார்த்தார். முழங்காலுக்குக் கீழ் ஓரிடத்தில் ஒரு பெரிய காயமிருப்பது கண்டு உயரதிகாரியை அழைத்துக் காண்பித்தார். இரவு கிடைத்த அடி உதையிலும், இரவு கிடைக்காத உணவாலும் சோர்ந்துபோய் பரிதாபமாக இருந்த அவனிடம் வந்து விசாரித்தார். அவன் உண்மையைச் சொன்னான். ‘அப்போ நீ பசிக்காகத்தான் திருடினாய்?’
‘ஆமாங்க சார்’ ‘அந்தப் பொதியிலே இருக்கிறது போதைப்பொருள் தானே. உண்மையைச் சொல் நீ யாருக்காக வேலைபார்க்கிறாய்’ மிரட்டிக்கேட்ட அதிகாரியிடம் ‘இல்லைங்க சார், அதுக்குள்ளே இருக்கிறது என்னான்னே தெரியாதுங்க’ ‘பொய் சொல்லாத எனக்குப் பொய் சொன்னா பிடிக்காது. இப்போ பொதியை பிரிக்கப்போகிறேன் உள்ளே ஏதாவது போதைவஸ்து இருந்தா உன்னோட அடுத்தக் காலையும் ஒடிச்சிடுவேன்’ கூறியவர் பொதியைப் பிரிக்கும்படிக் கூறவே பொதி பிரிப்பதற்குத் தயாரானது. அப்போது அந்தப் பொதிக்குள் சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும் இருக்கக்கூடாது என உலகத்தில் இருக்கும் எல்லாக் கடவுளையும் வேண்டிக் கொண்டான். சற்று நேரத்தில் பொதியைப் பிரித்துப் பார்த்தபோது எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும்படியாகிவிட்டது. ஒருகணம் அதிர்ந்த அனைவரும் மறுகணம் முகம் சுளித்தனர். உடனடியாக அந்த பொருளை அப்புறப்படுத்தும்படி பணித்த உயர் அதிகாரி. வழக்குப் பதிவாகிவிட்டதா என்று கேட்டார். ஆம் என்று பதில்வரவே. இனி ஒன்றும் செய்ய முடியாது, நாளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவே வேண்டும். ஆனால் இந்தப் பொருளை அங்கு எப்படி சமர்ப்பிப்பது என்பதை எண்ணி வருந்தினார்.
வாக்குமூலம் மாத்திரம் எடுத்திருந்தால் மன்னித்து இரண்டு நாள் தண்டனை வழங்கி அனுப்பிவிடலாம். இப்போது ஒன்றும் செய்ய முடியாது.
சரிசரி முதலில் இவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கட்டளையிட்டார். நாட்டில் பொருளாதார வீழ்ச்சி அடைந்தாலும் அடைந்தது மக்களுக்கு ஒரு வேளைச் சாப்பாட்டிற்காக எதை எதையெல்லாம் திருடுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டதே என்று சலித்துக் கொண்ட அதிகாரி தனது அடுத்தடுத்த பணிகளில் ஈடுபடத் தொடங்கினார் .
மேசை மீது வைத்துப் பிரிக்கப்பட்ட பொதிக்குள் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ள முடியாத கோடீஸ்வரன் லேசாக எழுந்து பார்க்க முற்பட்டான். கால் ஒத்துழைக்கவில்லை. அதற்குள் அருகில் இருந்த போலீஸ்காரர் ஒருவர். ‘இதை ஏண்டா திருடினாய்? இதுக்குத்தானா எங்களை ராத்திரி தூங்கவிடாமல் செய்தாய்’ திட்டினார். ‘அதுக்குள்ளே என்ன இருக்குதுங்க சார்?’ கேட்டான். ‘ இந்தா நீயே பார்’ என்று பொதியைத் தூக்கி அவன் முகத்துக்கு நேரே காட்டினார். பொதியில் இருந்த பொருளைப் பார்த்ததும் அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. ‘அடச் ச்சே’ போயும் போயும் இதுக்காக இத்தனை அடியும் உதையும் வாங்க நேர்ந்துவிட்டதே என்று மனம் குமுறினான். இதுவரையில் இப்படியொரு பொருளைத் திருடி அசிங்கப் பட்டதில்லை. இருந்தாலும் நடந்துவிட்டது. இன்ப துன்ப, மான, அவமானம் எல்லாமே வாழ்க்கை என்று விதிக்கப்பட்டிருக்கையில் இந்தக் கேவலத்திற்கும் முகம் கொடுத்துதான் ஆக வேண்டும். ஐந்து ரூபாய் திருடியவனுக்கு அடியும் உதையும் சிறையும் என்று தன் கடமையைச் செய்யும் சட்டம்.
கொள்ளையடித்தவனுக்கு இல்லாத கேவலம் பசிக்காகத் திருடியவனுக்கு மட்டும் விதிவிலக்காகிறது. தனக்குள் பலவாறாக எண்ணிக் கொண்டவனுக்கு அந்த நாய்கள் பொதியைக் குறிவைத்துத் துரத்த ஆரம்பித்த காரணம் புரிய வந்தது. தன்னைப் போலவே அகோரப் பசியில் இருந்திருக்கக் கூடும்.
அதனால்தான் வீட்டில் ‘நாய்’ வளர்க்கும் அந்த ஆட்டோக்காரன் கல்யாண விருந்து பரிமாறியவர்களிடம் கேட்டு வாங்கி வண்டியில் ஏற்றிய அந்த எலும்புப் பொதியை அவை மோப்பம் பிடித்திருக்கின்றன. இல்லாவிட்டால் இந்த திருட்டையும் வெற்றிகரமாக முடித்திருப்பான்.
எது எப்படியோ அன்று எவனோ ஒருவனுடைய வீட்டில் இருட்டில் எலும்புத் துண்டைக் கடித்து ஆரம்பித்த திருட்டு இன்று எவனெவனோ கடித்துப்போட்ட எலும்புத் துண்டுகளால் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்று விதி இருக்கிறது. விதியை யாரால் மாற்ற முடியும்?
மெய்யன் நடராஜ்