தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஒரு ரூபாவால் உயர்த்தினாலும் அதற்கு தோட்ட முதலாளிமார் எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள். அவர்கள் எதிர்ப்பார்கள் என்பதற்காக நாங்கள் சம்பள உயர்வைக் கோராமல் இருக்கமுடியுமா? எனக் கேள்வி எழுப்புகின்றார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் ெதாண்டமான். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வியில் 1700 ரூபாய் சம்பள உயர்வு நிச்சயம் சாத்தியமானதுதான் என்கின்றார்.
அவரது செவ்வி விரிவாக….
பொதுவாக இலங்கையின் எந்தவொரு மாகாணத்துக்கும் அம்மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படுவதில்லை. மாறாக அவ்வாறு நியமிக்கப்படும் ஆளுநர்களும் எவ்வித குறையுமின்றியே தமது பணிகளைச் செய்கின்றனர். ஆனாலும் சொந்த மாகாணங்களில் பணியாற்றக் கிடைப்பதென்பது வரப்பிரசாதமல்லவா?
இலங்கை ஒரே நாடு. பொதுவாக அமைச்சுகள் வழங்கப்படும்போது மாகாணத்துக்கென்றோ, மாவட்டத்துக்கென்றோ வழங்கப்படுவதில்லை. சொந்த மாகாண மக்களின் பிரச்சினைகளை சரியாக இனம் கண்டு வேலை செய்து அவர்களிடம் நற்பெயர் பெற்றவர்களையே அரசாங்கம் பொதுவாக ஆளுநர்களாக நியமிக்கின்றது. எங்கு பணியாற்றினாலும் நாம் செய்வது மக்கள் பணி. அதில் பேதங்கள் ஏன் பார்க்க வேண்டும், கிழக்கு மாகாண ஆளுநராக எனது பணிகள், மலையக மக்களுக்கான எனது சேவைகளை எந்த விதத்திலும் குறைத்துவிடப் போவதில்லை.
கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினைகள், எல்லைப் பிரச்சினைகள் என நிறையப் பிரச்சினைகளில் நீங்கள் தலையிட வேண்டியிருக்கும் அல்லவா? அவ்வாறானவற்றைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல்கள் என்ன?
பொதுவாக ஒருவர் நீண்டகாலமாகவே அரச காணிகளில் குடியிருந்தால் அதனை அவர்கள் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வதற்கான பொறிமுறையொன்று இருக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் காணிகள் இல்லாதவர்களுக்கு ஜனாதிபதி தற்போது காணிகள் வழங்குகின்றார். அதற்கான உறுமய வேலைத்திட்டமும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இவை தவிர, காணிகளுடன் தொடர்படைய கோப்புகளில் உள்ள குறைபாடுகளைத் தீர்த்து அவற்றை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதில் காணப்படும் அசமந்தப்போக்கு, காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தடையாக இருக்கின்றதென்றேகூற வேண்டும். ஆனாலும் நான் அந்தத் தடைகளைக் களைந்து. செயன்முறைகனை வேகப்படுத்தி, பலவருடங்களாக நிலுவையில் இருந்த 8900 காணி உரிமங்களை உரியவர்களுக்கு வழங்கியிருக்கின்றேன். காணி உரிமை வழங்கலில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் நான் எனது பணிகளைச் செய்யும் போது சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள், அல்லது அதனை விரும்புகின்றார்கள் இல்லை. ஆனால் சிலர் விரும்பவில்லை என்பதற்காக நான் அவர்களுக்கான எனது பணிகளை நிறுத்திவிட முடியாதே?
உங்களுக்கும் சூழல் தொடர்பான சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது. இதன்போது ஆராயப்பட்ட விடயங்கள் எவை?
தற்போது இலங்கைக்குத் தேவைப்படுபவை முதலீடுகள். அதிலும் குறிப்பாக இலங்கையின் கிழக்கு மாகாணம் உள்ளூர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான இயற்கைச் சூழலை பெருவாரியாகக் கொண்டிருக்கின்றது. ஆனால் இப்போது பூகோள வெப்பமாக்கல் பற்றி அதிகளவில் பேசப்படுகின்றது. அது உலகில் எல்லா நாடுகளுக்குமே சவாலாகத்தான் இருக்கின்றது. பூகோள வெப்பமாக்கல் எங்கு சரியாகக் கையாளப்படுகின்றதோ, அங்குதான் அதிகளவிலான முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்பதே அனைத்து நாடுகளினதும் நிலைப்பாடாக இருக்கின்றது. கிழக்கு மாகாணம் சுற்றுச் சூழலை பேணுவதில் அக்கறையுடன் செயற்படுகின்றது என்று நாமே சொல்லிக்கொண்டிருப்பதால் எந்தவித பயனும் இல்லை. மாறாக, எரிக் சொல்ஹெய்ம் போன்ற ஒருவர், எம்முடன் கலந்தாலோசித்து, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முதலிடுங்கள் எனச் சொல்லும்போது அந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கப்படும். ஏனெனில் அவர் சுற்றுச் சூழலின் கோட் பாதர் போன்றவர். அவ்வாறு கிழக்கு மாகாணத்தில் முதலீடுகள் அதிகரிக்கும் போது, கிழக்கு மாகாணத்தில் புதிய புதிய தொழிற்சாலைகள் ஆரம்பமாகும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். கிழக்கு மாகாணம் விரைவில் செழுமை காணும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் நீங்களும் ஈடுபட்டிருக்கிறீர்கள். தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பின் சாத்தியத்தன்மை பற்றிக் குறிப்பிடுங்கள்? உண்மையில் மலையக மக்கள் மகிழ்ச்சியடையக்கூடிய அறிவிப்பாக இதனைப் பார்க்கலாமா?
உண்மையைச் சொல்வதானால் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு 1700 ரூபா என்பதே போதாதுதான். டொலரின் பெறுமதி 192 ரூபாவாக இருந்தபொழுது 1000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொடுத்தோம். அப்படியானால் அது அப்போது நாளொன்றுக்கு 5 டொலர் சம்பளம் என்பதாக அமையும். தற்போது நாளொன்றுக்கு 5 டொலர் படி பார்த்தால் 200 ரூபாய் தானே அதிகமாகக் கேட்கின்றோம். ஆனாலும் அந்த மக்கள் மகிழ்வடையக் கூடியதுதான். கொட்டகலையில் மேதினத்தன்று பேசிய ஜனாதிபதி, பெருந்தோட் மக்களின் சம்பத்தை 1700 ரூபாவாக அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என்றார். அந்த வர்த்தமானியில் எதிர்ப்புகளைத் தெரிவிப்பதற்கான காலஅவகாசம் இம்மாதம் 15ஆம் திகதியாக வழங்கப்பட்டிருக்கின்றது. அதன் பின்னர் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
ஜனாதிபதியின் அறிவித்தல் வெளியான மறுகணமே அதற்கு முதலாளிமார் சம்மேளனம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது. வர்த்தமானி அறிவித்தலும் கூட ஒரு தீர்மானம் அல்லவென்றும் 1700 ரூபாவை வழங்குவதற்கு எதிர்ப்பு உள்ளதா அல்லது இல்லையா என்பதனை அறிவதற்கான அறிவித்தல் மட்டுமே என்றும் சொல்லப்படுகின்றதே?
முதலாளிமார் சம்மேளனம் எப்போது தனது எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.? தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுக் கோரிக்கைகள் எழும்போதெல்லாம் முதலாளிமார் சம்மேளனம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத வரலாறு உண்டா? தொழிலாளர்களின் சம்பளத்தை 1 ரூபாவால் அதிகரிக்கக் கோரினாலும் முதலாளிமார் சம்மேளனம், அதனை எதிர்க்கும். எனவே அவர்களது கருத்துக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நாட்டிலுள்ள சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள். தோட்டத் தொழிலாளர்களும் முதலாளிமாரும் சட்டத்தின் முன் சமமாகவே மதிக்கப்படுவார்கள். இந்நாட்டில் முதலாளிமாருக்கென்று ஒரு தனிச்சட்டம், தொழிலாளர்களுக்கென்று ஒரு தனிச்சட்டம் என்று தனித்தனியாக இல்லை. முதலாளிமார் சம்பள உயர்வுக்கு இணங்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறு முதலாளிமார் சம்மேளனம் இதற்கு இணங்காத பட்சத்தில் தனியார் வசமுள்ள காணிகளெல்லாம் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று இ.தொ.கா உட்பட மலையக அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. இது நடைமுறைச் சாத்தியமானதா?
இல்லை. சம்பள உயர்வை முதலாளிமார் சம்மேளனம் வழங்காவிட்டால் அதற்கு எதிராக தொழில் அமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்கும். அதற்கான சட்ட நடைமுறைகள் உள்ளன என்பதைத்தான் இ.தொ.கா சொல்கின்றது.
அமைச்சர் ஜீவன் தொண்டமானால் ஆரம்பிக்கப்பட்ட 10000 வீட்டுத்திட்டம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 பேச்சர்ஸ் காணி போன்ற திட்டங்களின் முன்னேற்றம் குறித்துச் சொல்வதானால்?
இத்திட்டத்தில் காணிகளை உடனடியாக வழங்குவதில் சிக்கல் உள்ளது. காரணம் நில அளவையாளர் திணைக்களத்தில் போதிய அளவிலான நில அளவையாளர்கள் இல்லை. ஏற்கனவே அரசாங்கத்தால் கட்டப்பட்ட வீடுகள் உள்ளன. அவற்றுக்கு நிலஅளவையாளர்களால் வரையப்பட்ட வரைபடத்தைப் பெற்றுக்கொண்டு, அவற்றுக்கான உரிமத்தை வழங்கவிருக்கின்றோம். தோட்டங்களை கிராமமாகப் பிரித்து அவற்றை அளவிட்டு தோட்டப்புற மக்களுக்கு பிரித்துக் கொடுக்குமாறு ஜனாதிபதி அண்மையில் அறிவித்தார். எமது அடுத்த கட்ட நடவடிக்கை அதுவாகத்தானிருக்கும்.
இந்திய வம்சாவளியினர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 200 ஆண்டு நிறைவு சில காலங்களுக்கு முன்னர் தான் கொண்டாடப்பட்டது. அதனோடு இணைந்ததாக என்னென்ன அபிவிருத்திப் பணிகள் மலையக மக்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன?
மலையக மக்களைப் பொறுத்தமட்டில் நாங்கள்தான் அவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கான அனைத்து திட்டங்களையும் முன்னெடுக்கின்றோம். தற்போதுதான் நாடு பொருளாதார ரீதியாக சற்று மீட்சி பெற்று வருகின்றது. எனவே நாட்டின் பொருளாதார நிலை காரணமாக இடைநடுவில் கைவிடப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்போம். அதேபோல அவர்களுக்கான புதிய வேலைத் திட்டங்களையும் ஆரம்பித்து விரைவிலேயே செயற்படுத்துவோம்.
மலையக மக்களை சிறு தோட்ட உரியமையாளர்களாக மாற்றும் திட்டம் குறித்தும் சமீபகாலமாக அதிகளவில் பேசப்படுகின்றது. அது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
நிச்சயம் அது வரவேற்கப்பட வேண்டியதுதான். தோட்டக் காணிகளைப் பிடித்து வைத்து அவற்றை வீணாக்குவதை விட அவற்றை தோட்ட மக்களுக்கே பிரித்துக்கொடுத்து அவர்களை உரிமையாளராக்குவது வரவேற்கப்பட வேண்டியதுதானே?
மலையக மக்களின் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் அவர்களது வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் உயர்த்தியிருக்கின்றது. ஆனாலும் அவர்கள் இன்னமும் முன்னரைப் போலவே மிகவும் பின்தங்கிய சமூகமாகவே சித்தரிக்கப்படுகின்றார்களே?
இல்லை. மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு அவர்கள் ஏனையவர்களிலும் பார்க்க 30 வருடங்கள் பின்தங்கியவர்களாகவே வாழ்கின்றனர். இப்போது ஏனைய சமூகங்களுடன் இவர்களது வாழ்க்கையும் சரிசமனாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் தொடர்ந்தும் போராடுகின்றோம். அந்த 30 வருட காலத்தில் ஏனைய சமூகங்கள் எங்களை முந்திச் சென்றுவிட்டன. 30 வருடகால இடைவெளியை இட்டு நிரப்பவே பாடுபடுகின்றோம்.
வாசுகி சிவகுமார்