“நான் ஒரு என்டர்டெயினர்” என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மதகஜராஜா’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படத்தினை மக்களுடன் காண இயக்குநர் சுந்தர்.சி திரையரங்குக்கு சென்றார். அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
ரூ.1000 கோடி வசூல் படம் பண்ணுவது எப்போது?
“ரூ.1000 கோடி வசூல் என்றெல்லாம் வாய்விட்டு மாட்டிக் கொள்ள நான் தயாராக இல்லை. படம் நல்லபடியாக ஜெயித்து, அனைவரையும் சந்தோஷப் படுத்தினால் அதுவே எனக்கு சந்தோஷம். வசூல் எல்லாம் எனது ஏரியா அல்ல. நான் ஒரு இயக்குநர். மக்களுக்கு பிடிக்கும் வகையில் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பது மட்டும் என் எண்ணம். மக்கள் திரையரங்கிற்கு வந்தால் கவலை எல்லாம் மறந்து 20 நிமிடமாவது சிரித்து சந்தோஷாக இருக்க வேண்டும். அதுவே என் ஆசை. வசூல் கணக்கு எல்லாம் தயாரிப்பாளர் பக்கம் தான்”
“அனைத்து ஜானரிலும் படங்கள் வரவேண்டும். அதில் மாற்று கருத்தில்லை. ஆனால், என்னுடைய ஜானர் என்பது இதுதான். நான் ஒரு என்டர்டெயினர். சும்மா உட்கார்ந்திருப்பது ரொம்ப கடினம். 2 மணி நேரம் இருட்டு அறைக்குள் படம் பார்க்க வைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அப்படி வரும் மக்களை சந்தோஷமாக வைத்திருப்பது தான் எனது கொள்கை. இதுவரை எடுத்த படங்கள் அத்தனையும் அப்படித்தான் எடுத்துள்ளேன். ரூட் மாறினால் படத்தை தோல்வி அடைய வைத்து, மீண்டும் என் ரூட்டுக்கு வர வைத்துவிடுகிறார்கள். இனி வரும் படங்கள் அனைத்துமே என்டர்டெயின்மென்ட் படங்களாகவே இருக்கும்”
12 ஆண்டுகள் கழித்து படத்தை ரசிக்கிறார்களே?
“எனது பழைய படங்களை இப்போதும் ரசிக்கிறார்கள். எந்த நேரத்தில் பார்த்தாலும் ரசிக்கக் கூடிய படங்களாக தான் எடுக்கிறேன். யாருமே 12 ஆண்டுகள் என்பதை கணக்காக எடுத்துக் கொள்ளவில்லை. புதிய படமாக பார்க்கிறார்கள்” என்று தெரிவித்தார்.