Home » 2025ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி? பலன்கள்

2025ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி? பலன்கள்

by Damith Pushpika
December 29, 2024 6:00 am 0 comment

மேஷம்

மேஷ இராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. எந்த செயல்களைச் செய்தாலும் அதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய அனுபவங்கள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையிலும், பணியிடங்களிலும் அனுசரித்துச் செல்வது நன்மை பயக்கும். வலிமையான உறவை அவர்களிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது உங்களுடைய வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவியாக இருக்கும். புதிய தொழில், புதிய வியாபாரம், புதிய வாய்ப்புகள் ஏற்படும் ஆண்டாக இருக்கும்.

பரிகாரம்: விநாயகரை வணங்குங்கள். ஒளவையார் அருளிய அகவலை தினமும் படியுங்கள். எலுமிச்சை மரக்கன்று நட்டு பராமரியுங்கள். ஏழைப் பிள்ளைகளுக்கு உதவுங்கள். எதிலும் வெற்றி கிட்டும்.

ரிஷபம்

2025 ஆம் ஆண்டில் ரிஷப இராசிக்காரர்கள் சரியான திட்டமிடலுடனும், பொறுமையுடனும் இருப்பது அவசியம். கடினமான காலகட்டங்களைச் சமாளிக்கும் வகையில் ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும், சரியான முடிவை எடுத்தால் வெற்றி வாகை சூடுவீர்கள். கடந்த காலங்களில் செய்த தவறுகளில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களுக்கென உள்ள தனித் திறமையையும், தனித்துவத்தையும் கடைப்பிடிப்பது அனுகூலத்தை உண்டாக்கும்.

பரிகாரம்: திருப்பரங்குன்றத்து முருகனை சஷ்டி திதிகளில் வணங்குங்கள். கந்தர் சஷ்டி கவசம் படியுங்கள். மாமரக்கன்று நடுங்கள். ஏழைப் பெண்ணின் கல்யாணத்துக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். நல்ல பலன் மேலும் அதிகரிக்கும்.

மிதுனம்

இந்தப் புத்தாண்டு மிதுன இராசிக்காரர்களுக்கு செழிப்பான ஆண்டாக இருக்கும். இருப்பினும், அனைத்து செயற்களிலும் கவனத்துடன் இருப்பதும் அவசியம். உங்களுடைய இலக்கை அடைய சரியான திட்டமிடலும், விழிப்புணர்வும் மிகவும் அவசியம். பண வரவு உண்டாகும். பணத்தை சரியாக சுப விரயமாக செய்வது நல்லது. தொழில், பணி, கல்வி சார்ந்த புதிய விடயங்களைக் கற்றுக் கொள்வது நல்லது. அறிவுப்பூர்வமான விடயங்களில் கவனம் செலுத்துவதால் ஆதாயம் உண்டாகும். உங்களுடைய இலக்குகளை அடைய இவை உதவியாக இருக்கும்.

பரிகாரம்: அம்மனை வழிபடுங்கள். தென்னை மரக்கன்று நடுங்கள். வாய் பேச இயலாத மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். நல்ல பலன்கள் அதிகரிக்கும்.

கடகம்

புத்தாண்டில் கடக இராசியினருக்கு அஷ்டம சனி விலகவுள்ளதால் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவுகள் இணக்கமாக நடந்து கொள்வார்கள். எந்தவொரு செயலைச் செய்தாலும் நிதானமாக நடந்து கொள்வதால் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு உண்டாகும். இந்தப் புத்தாண்டு மகத்தான ஆண்டாக அமையும்.

பரிகாரம்: கற்கடேஸ்வரரை வழிபடுதல் நன்று. ஏழ்மையின் நிலையில் இருக்கும் மாணவிக்கு படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். முல்லைக் கொடி நடுங்கள். எதிலும் திருப்தி ஏற்படும்.

சிம்மம்

2025 புத்தாண்டில் சிம்ம இராசிக்காரர்கள் நேர்மறை எண்ணங்களுடன் செயற்பட்டால் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளையும் சமாளிக்கலாம். நிதானமாகவும், கடின உழைப்புடனும் செயற்பட வேண்டியது அவசியம். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் ஆர்வம் கூடும். படைப்பாற்றல் உங்களுக்கு அதிகரிக்கும்.

பரிகாரம்: அண்ணாமலையாரை அமாவாசை திதியில் வணங்கி, கிரிவலம் வாருங்கள். அருணாசலப் புராணம் படியுங்கள். வன்னி மரக்கன்று நடுங்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். சங்கடம் தீரும்.

கன்னி

2025 ஆம் ஆண்டில் கன்னி இராசிக்காரர்கள் செய்யும் செயல்களில் உறுதியுடன் இருப்பது நல்லது. வேலையில் அடுத்தகட்டமாக முன்னேறுவது நல்லது. கடந்த காலங்களில் மிகவும் சோர்ந்து போய் காணப்பட்ட நீங்கள் மிகவும் வலிமையாக உணர்வீர்கள்.

பரிகாரம்: வெங்கடாஜலபதியை ஏதேனும் ஒரு திங்கள்கிழமையில் சென்று வணங்குங்கள். சுப்ரபாதம் பாடுங்கள். சனிக்கிழமைகளில் வீட்டு விலங்குகளுக்கு அன்னமிடுங்கள். வேப்ப மரக்கன்று நடுங்கள். உங்களின் கனவுகள் நனவாகும்.

துலாம்

இந்தாண்டு துலாம் இராசிக்காரர்களின் மீது குருவின் பார்வை விழுவதால் பல்வேறு நற்பலன்களைத் தரும் ஆண்டாக இருக்கும். பல விதத்தில் சாதகமான பலன்கள் தந்தாலும், வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். சுய பாதுகாப்பு மற்றும் நினைவாற்றல், மன அமைதி பெறுவதில் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் நினைத்த அனைத்த காரியங்களும் இந்த ஆண்டில் கைகூடி வரும்.

பரிகாரம்: முருகனை வழிபடுங்கள். கந்த சஷ்டி கவசம் படியுங்கள். செம்பருத்தி கன்று நட்டு பராமரியுங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நல்லதே நடக்கும்.

விருச்சிகம் :

உங்கள் எண்ணங்களில் தோன்றும் நல்ல காரியங்களை செய்வது நல்லது. புதிய அனுபவங்கள் கிடைக்கும். செய்யும் செயல்களில் ஆர்வத்துடன் செயற்பட்டு பல்வேறு பெரிய விடயங்களை சாதிக்கக்கூடிய ஆண்டாக புத்தாண்டு இருக்கும். உங்களுடைய அறிவாற்றல் உங்களுக்கு தக்கசமயத்தில் கைகொடுக்கும்.

பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள். நாமக்கல் சென்று தரிசியுங்கள். வியாழக்கிழமையில் மாருதிக் கவசம் படியுங்கள். கட்டிட வேலை செய்யும் பெண்களுக்கு உணவு, உடை கொடுங்கள். பலா மரக்கன்று நடுங்கள். நற்பலன்கள் பெருகும்.

தனுசு

இந்த 2025 ஆம் புத்தாண்டில் இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கிச் செயற்படுவது நல்லது. எடுத்த காரியங்களை ஆர்வத்துடனும், செயல்களை செய்து முடிப்பதில் உந்துதலுடனும் இருப்பீர்கள். எந்த விஷயங்ளைச் செய்தாலும் பொறுமையுடன் செயற்படுவது நல்லது.

பரிகாரம்: பூவராகவ சுவாமியை (வராஹ அவதாரம்) சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள். துளசி நட்டுப் பராமரியுங்கள். முதியவருக்கு உதவுங்கள். மகிழ்ச்சி கூடும்.

மகரம்

புத்தாண்டில் மகர இராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி முடிகிறது. இந்த மாதத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். கடந்த காலங்களில் செய்த தவறுகள் மற்றும் இழந்தவற்றை நினைவில் வைத்து, செயற்படுவது அனுகூலத்தை உண்டாக்கும். இதனால், எதிர்காலத்தில் உங்களுக்கு ஒளிமயமான வாழ்க்கை கைவசமாகும்.

பரிகாரம்: வக்ரகாளி அம்மனை நவமி திதிகளில் சென்று வழிபடுங்கள். எலுமிச்சை பழ மாலை சாற்றுங்கள். அபிராமி அந்தாதி படியுங்கள். கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்

2025 புத்தாண்டில் கும்ப இராசியினருக்கு பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்த ஜென்ம சனி முடிகிறது. இதுவரை நிலவி வந்த அனைத்து பிரச்சினைகளும் உங்களை விட்டு விலகும் என்றாலும், வேலைகளில் கவனமாக செயற்படுவது நல்லது. புதிய வியாபாரம், தொழில், முதலீடு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டாம். உங்களுடைய இலக்கை நிர்ணயித்து அதற்கேற்ற வகையில் செல்வது அனுகூலம் தரும்.

பரிகாரம்: சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை சென்று வணங்குங்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவுங்கள். முடிந்தால் பழமையான கோயிலை புதுப்பிக்க உதவுங்கள். தனம் சேரும்.

மீனம்:

2025 இல் மீன இராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கவுள்ளது. உங்களுடைய திறமைகளை அறிந்து அதற்கேற்ப செயற்பட்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். யோகா, தியானம் செய்வது நல்லது. மன அமைதி மற்றும் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. எந்த வேலைகளைச் செய்தாலும் அதில் கடின உழைப்பைத்தர வேண்டியிருக்கும்.

பரிகாரம்: விருத்தகிரீஸ்வரரை வணங்குங்கள். அமர்ந்து தியானம் செய்யுங்கள். வேப்ப மரக்கன்று நடுங்கள். ஆதரவற்ற பெண்ணுக்கு உதவுங்கள். அனைத்திலும் வெற்றி கிட்டும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division