ஞாயிறு மாலை மயங்கும் வெயில்! ஆதவன் கடலில் சங்கமிக்கும் தருணம்!
மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு என்று பல வண்ணங்கள் பிசைந்து வானத் திரையை அலங்கரித்த இயற்கை அன்னை தந்த ஓவியம்!
“என்ன ரகு.. ? பலமான யோசனை போல’ என்று எனது சிந்தனையை கலைக்கவும் பார்க்கிறேன். ஆம் ! எனது நண்பன் மதி தான் அது!.
‘சூரிய அஸ்தமனமும் என்னதான் ஓர் அழகு’ என்ற வண்ணம் என்னை விழிக்கிறான் மதி!
ைஎன்றும் சூரியன் மறையா நாடு ஓன்று உலகில் உள்ளது உனக்கு தெரியுமா மதி? ‘என்று நான் கேட்க, அவன் விழிக்க, நானே விளக்கினேன். ‘அதுதான், இங்கிலாந்து என்னும் ‘யூகே’ என்றேன்.
ஆம்! பல நாடுகளை ஒரு காலத்தில் ஆக்கிரமித்து ஆண்டு வந்தது இங்கிலாந்து!
அங்கு சூரியன் மறைந்தாலும் அதன் ஆக்கிரமித்த காலனித்துவ நாடுகளின், வேறுபட்ட நேரத்தால், அந்தந்த நாடுகளில் சூரியன் மாறி மாறி உதிக்கும். அதனால் இங்கிலாந்துதான் சூரியன் மறையாத ஒரே நாடு, தாம் என்று பெருமை பேசுகிறார்கள்’ என்றேன்.
மதி ஆச்சரியத்தோடு தன் விழியைப் பிதுக்கி ‘அப்படியா’ என்றான்..
*************
மதியுகன், என்னும் ‘மதி’ என் நண்பன்! அத்தோடு ரகுவரனாகிய நாம் இருவரும் அண்மையில் உள்ள கல்லூரியில் பட்டதாரி ஆசிரியர்கள்!
விடுமுறை என்பதால் இன்று கடற்கரைக்கு காற்றாட வந்த நேரம்! நான் ஒரு கணம் சிந்திக்கிறேன்! வர்த்தகப் பட்டதாரியாக இருந்தென்ன பயன் ? வயிற்றுப் பசிக்கு எந்நாளும் ஒரே போராட்டம்! ஆர்ப்பாட்டம், கூச்சல், பகிஷ்கரிப்பு என்று கூட்டமாக ‘உரிமைக் குரல்’ எழுப்புவது இங்கு வாடிக்கையாகி விட்டது ! கல்வியின், கற்பித்தலின் சிறப்பு எல்லாம் எழுத்துக்கு மாத்திரம் எல்லைப்படும் வினோதம், இந்நாட்டில்! விரக்தியின் எல்லையில் நான்!
நாமும் ஏன்..? இந்த சூரியன் மறையா தேசத்துக்கு சென்று உழைத்தால் என்ன? ஏனையோர் போல சுகமாக, சந்தோசமாக வாழலாமே…? என்ற என் ஆதங்கம்!
எண்ண அலைகள் இந்தக் கடலலைகள் போல் மனதில் ஆர்ப்பரிக்கிறது!
அதற்குள், இருள் சூழ்ந்து விட்டதா..?
*************
வீடு திரும்பியதிலிருந்து ஒரே சிந்தனை! இனியும் எவ்வளவு காலம் தான் இவ்வாறு வாழ்க்கையை ஓட்டுவது.?
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டாமா?
‘யூகே’ போகிற வழியைத் தேட வேண்டும்! ஏற்கனவே அங்கு சென்றிருந்த சில உறவுகளைத் தொடர்பு கொண்டதில் பல அறிவுைரகள், யோசனைகள் அள்ளிக் குவிந்தன! ஐடி (IT ) டிகிரி படிப்பு காலத்தின் தேவை, பலரின் பரிந்துரையில் அதுதான் உகந்ததாம்!. அத்தோடு வேலையும் செய்தால் லட்சங்கள் பல ஈட்டலாம் என்று நண்பர்கள் பலரின் ஆசை வார்த்தைகள்! அதுதான் இறுதியில் முடிவாயிற்று!
அதற்காக மேற்படிப்பு UK ல் தொடரவேண்டும்! காணி ஆவணம், கல்லூரிச் சான்றிதழ், UK கலாசாலைக்குக் கடிதம், வங்கி வைப்பு, சான்றிதழ் அத்தாட்சிகள், நகல்கள் என்றெல்லாம் பெற்ற ஆவணங்களால் ஒரு குட்டி அலுவலகமே வீட்டில் உருவாகியது, வீசா பெற்றுக் கொள்ள!. ஆசிரிய தொழிலுக்கு சம்பளமற்ற விடுப்புக்கு வேறு பல படிமுறைகள் அரங்கேற்றப் பட வேண்டும்! அப்பப்பா….. என்னதான் அவலம்! அலைச்சல்! கொழும்புப் பயணம், காரியாலங்கள் என்று அலைந்ததில்
மாதங்கள் நான்கு கரைந்து விட்டது!
*************
இன்று யுகே (UK ) செல்லும் பரபரப்பான அந்நாளும் வந்தாயிற்று! மனதில் ஒர் இனம்புரியாத படபடப்பு ஆர்வம், விறுவிறுப்பு, சோகம் எல்லாம் கலந்து என்னைத் திக்கு முக்காட வைக்கிறது! என் மனைவி மக்களை, ஊரை, உறவைப் பிரிந்து செல்லும் தருணம் என்னை வாட்டி வதைக்காமல் என்ன செய்யும்?
எப்படியோ, இதற்காக போராட்டங்கள் பல செய்தாகி விட்டது. பயணத்துக்காக பெற்ற அடகுப் பணம், கடன் என்றெல்லாம் மீட்க வேண்டிய பாரிய தேவையும் பொறுப்பும் எனக்கு!
முன் வைத்த காலை பின் வைப்பதா? துணிவே துணை! என்றெல்லாம் எனக்கு நானே தத்துவ, சித்தாந்தங்களால் ஆறுதல் சொல்கிறேன்.!
பிள்ளைகளுக்கு ஆசை மொழிகள்! பெற்றோருக்கு ஆறுதல் வார்த்தைகள்! என்று கூறி சமாளித்தாயிற்று! கண்ணீர் கடலில், சோக அலைகளில் துவண்டு அல்லாடி வீட்டிலிருந்து விடைபெறுகிறேன் விமான நிலையத்தை நோக்கி….!
எனது முதல் விமானப் பயணம்!
வானத்தில் நான் உயர்வது போல
வாழ்க்கையிலும் உயர வேண்டுமே?
பல்லாயிரம் மைல்கள் கடந்து பன்னிரண்டு மணி நேரம் பறந்தாயிற்று!
விளைவு! இலண்டன் ‘ஹீத்ரோ’ (Heathrow) விமான நிலையம், அடைந்தாயிற்று! ஆஹா….! கடவுளே இது உலக மக்கள் ஒன்று கூடும் சந்தையா? என்று என்னை மலைக்க வைத்தது. பல் கலாசார மக்கள் பரபரப்பாக இயங்கும் ‘ஹீத்ரோ’ விமான நிலையத்தில் நானும் கூட்டத்தில் ஒருவனாக சங்கமிக்கிறேன். எனது சுங்க அலுவல்களை முடித்து விமான நிலையம் வெளியேறும் போது, போதும் என்றாகிவிட்டது.
*************
ஏற்கனவே, லண்டனில் சில காலம் வசித்து வரும் சதீஷ் எனக்காக வழி மேல் விழிவைத்திருந்து என்னை ஆரத் தழுவியவனாக தனது வண்டியில் ஏற்றி செல்லும்போது இரவு மணி எட்டைத் தாண்டிவிட்டது. என்றாலும் இலண்டன் பரந்த சாலையில், இயற்கையும், செயற்கையுமான ஒளியில் அப் பிரதேசமே ஜொலித்தது. காரணம் இப்பொழுது அங்கு சம்மர் (Summer) கோடைகாலம்! சூரியன் மறைய எப்படியும் இரவு பத்து மணியாகும் அதிசயம் இங்கு!
*************
சிறிது காலம் சதீஷின் மான்செஸ்டர் (Manchester) சிறுவீட்டில் அவன் எனக்குத் தந்த அடைக்கலம் பேருதவியாயிற்று.
அடுத்த வாரத்தில் இருந்து கலாசாலைக்கு மேற் படிப்புக்குச் செல்ல வேண்டும். ரொம்பவும் குளிரான காலநிலை! ஏற்கனவே சில உடைகள் இருந்ததால் எனக்கு ஓரளவு புது சுவாத்தியத்தை எதிர் கொள்ள உதவியாயிற்று.
ஐரோப்பிய தலைநகர் என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்து
கலாசாலையில் ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்க என்று உலகின் நாலா திக்கிலும் இருந்து வயது, நிற, உயர வேறுபாடு இன்றி ஆண், பெண் மாணவர்கள் அலை மோதுகிறார்கள். கறுப்பும் வெள்ளையும் இரண்டறக் கலக்கும் வெள்ளைக்கார நாடா இது ? என் மனம் வியப்பில் ஆழ்ந்தது.
நண்பன் சதீஷுடன் இருந்த இரண்டு மாதங்கள் எனக்கு பேருதவியாயிற்று. சதீஷுக்கு எவ்வளவு காலம்தான் நான் சுமையாய் இருப்பது? அவனுக்கு கோடி புண்ணியம்! அதே வேளை, சிறிது சிறிதாக பொறுப்புக்கள் வாழைப்பழத்தில் ஊசி போல் என் மீது ஏறுகிறது. ஒரு ‘பாட் டைம்: (part time) வேலை மற்றும் அறை ஒன்று தேவை! இங்கு வாரத்தில் 20 மணி நேரம் மாத்திரம் தான் மாணவர்கள் வேலை செய்யலாம் என்பது அரசாங்க சட்டமாம்!
இவ்வாறு கல்லூரிப் படிப்பு, நேரம் போக நான் ஒரு ‘சூப்பர் மார்க்கெட்டில்’ வேலை செய்தாக வேண்டும். எனது ஊரில் நான் ஒரு ஆசிரியன்! இங்கு ஒரு மாணவன்! அதேபோல் அன்று பொருளாதாரத்தில் பண்டங்கள், சேவைகள்’ என்று மாணவர்க்குப் போதித்த எனக்கு இன்று பண்டங்களை விற்க, சேவை புரியும் முறை பற்றி கற்றுத் தரும் அதிசயம்!
விதியின் விளையாட்டை என்னவென்பது? புதிய சூழல் ! பொறுமை தேவை! மனதை தேற்றிக் கொள்கிறேன்.
வாடகைக்கு புதிய அறை, வீட்டுக்கு பணம், எனது செலவு, போக்குவரத்து என்று பலதும் பத்தும் என்னை பதம் பார்க்கின்றன.
நேர்த்தியான சாலைகள், நவீன கட்டமைப்புகள் என்று எங்கும் தானியக்கி (Automated) சேவைகள்!
கலாசாலைக் கட்டணம், காகிதாதிகள், உணவு உடை என்று பலதுக்கும் செலவுகள் பூதம் போல் உருவெடுக்கும் போது தலையே சுற்றுகிறது!
இது போதாதென்று குடும்ப செலவு, ஈட்டு காணி மீட்பு, கடன் அடைப்பு என்று எல்லா ஓட்டைகளையும் அடைக்கும் ஒரே பசையாக பணம் ஈட்ட வேண்டுமே..? இவற்றையெல்லாம் ஈடு செய்ய வேண்டுமென்றால் இயந்திரத்தோடு நாமும் இயந்திரமாக ‘எந்திரனாக’ மாறினால் தான் உண்டு! இல்லாவிட்டால் பெருமூச்சோடு பறந்து விடும் என் அரிய வாழ்க்கை!
*************
களைப்பைப் போக்குவதற்காக பக்கத்தில் இருந்த ‘ஹைட் பாக்'( Hyde park) வருகிறேன். சிந்திக்கிறேன், அன்று எனது மாணவர்க்கு சொன்னது நினைவுக்கு வருகிறது. “பொருளாதாரத்தில் ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை பெறலாம்!”
சரிதான்! எனது மதிப்பு, தன்மானம், மரியாதை, சொந்தங்கள், பந்தங்கள், உறவுகள், உணர்வுகள் என்று பலதையும் இழந்தாகிவிட்டது!
புதிய வாழ்க்கையில் நான் படும் கஷ்டங்கள், துயரங்கள் தான் எதிர்கால முதலீடு என்று என்னை நானே பக்குவப் படுத்துகிறேன்.
அன்று இலட்சங்கள் ஈட்டலாம் என்று பலரும் சொன்னது சரிதான்!? இங்குள்ள விலைவாசி மற்றும் வரி என்பவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கிடைக்கும் ஊதியத்தில், இறுதியில் எஞ்சுவது நம் நாட்டில் பெற்றதை விட குறைவுதான்!
குளிர் காற்று என் உடலை வருடுகிறது. ஆனாலும் எனது உள்ளக் குமுறல் சூடான பெருமூச்சாக வெளியேறுகிறது. நான் இன்றிலிருந்து ஒரு ஐரோப்பிய பிரஜையாக உருவெடுக்க வேண்டும்! அதற்காக ஆண்டுகள் பல உருள வேண்டும்.
எனது ஊரின் பழைய நினைவுகள் மட்டுமே எண்ண அலைகளில் இன்று மீட்டப்படுகிறது. என்னை இயந்திரமாக்கத் தீர்மானிக்கின்றேன். ஓய்வு ஒழிவற்ற உழைப்பு தொடர வேண்டும்.
சிந்தனையில் ஆழ்ந்த என் எண்ணத்தை கலைக்கிறது வந்த தொலைபேசி அழைப்பு!
ஆம்! நான் வேலை பார்க்கும் ‘சூப்பர் மார்க்கெட்’ க்கு இன்று இரவு வேலைக்கு வருமாறு பணிக்கப்படுகிறேன்.
என்ன செய்ய? சிந்திக்கவும், கவலைப்படவும், இரசிக்கவும், எதற்கும் எங்கே நேரம்?
தூரத்தில் நகர்ந்து வரும் சிவப்பு இரட்டை அடுக்கு பஸ்ஸுக்கு (Double Decker) விரைகிறேன்! இன்னும் சில ஆண்டுகளில் இரண்டாம் பிரஜையாக உருவாகும் கனவை இரசித்த வண்ணம்…..!