Home » யால்டா எனும் “நீண்ட இரவு” பாரசீக பண்டிகை

யால்டா எனும் “நீண்ட இரவு” பாரசீக பண்டிகை

by Damith Pushpika
December 22, 2024 6:00 am 0 comment

ஈரானில் பண்டிகைகளுக்குப் பஞ்சமே கிடையாது. இஸ்லாமிய மார்க்கப் பண்டிகைகள், இஸ்லாத்துடன் சம்பந்தம் இல்லாத, தொன்றுதொட்டு வந்த பாரம்பரிய, கலாசார பண்டிகைகள் என்று அனைத்தும், இன்றளவிலும் பேணப்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒன்றுதான் யால்டா இரவு (Shab e Yalda) பண்டிகையாகும். இதனை “நாற்பதாவது இரவு” (Shab e Chelleh) என்றும் கூறுவர்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 20-21 இரவு அதிநீண்ட இரவாக இருக்கும் இந்த இரவை குடும்ப அங்கத்தவர்கள் ஒன்று கூடி, குதூகலிக்கும் இரவாக, இஸ்லாத்தின் வருகைக்கு முன்னிருந்தே பாரசீக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இவ்விரவில் தெருக்கள், கடைகள் மற்றும் வீடுகள் அனைத்து இந்த பண்டிகைக்காக விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும்.

உலகெங்கிலும் உள்ள பாரசீக மக்கள் – அவர்கள் நாடுகடந்தவர்களாக இருந்த போதும் – இவ்விரவுக்காக ஆவலுடன் காத்திருப்பர்.

யால்டா இரவு என்றால் என்ன?

யால்டா என்றால் பிறப்பு என்பதை குறிக்கும். யால்டா இரவு ஒரு அழகான பண்டைய ஈரானிய கொண்டாட்டம் ஆகும்.

இது இலையுதிர் காலத்தின் கடைசி இரவு, குளிர்காலத்தை வரவேற்கும் இரவு. இது வருடத்தின் மிக நீண்ட இரவாக இருப்பதால், அந்த விசேடத்தை அடிப்படையாக வைத்து ஈரானியர்கள் இதனைக் கொண்டாடுகிறார்கள்.இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் பெரும்பாலான பாரசீக மக்கள் சோரோஸ்த்ரிய மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தனர் என்பது அறிந்த விடயம்.

அப்போதிருந்தே இந்த கொண்டாட்டம் இருந்து வருகிறது.

இந்த இரவு தீய சக்திகளின் ஆதிக்கம் கொண்ட இரவாகவும், பிரிவு, தனிமை மற்றும் காத்திருப்பு ஆகியவற்றை உருவாக்கும் இரவாகவும் அதேவேளை இருளை ஒளி வெற்றிகொள்ளும் தினமாகவும் பண்டைய பாரசீகர்களால் நம்பப்பட்டு வந்துள்ளது என்பதை பழங்கால கவிதைகளினூடாக அறிய முடிகிறது.

இந்த நீண்ட இரவுப் பண்டிகையை ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற மற்ற நாடுகளில் உள்ள மக்களும் மதவேறுபாடின்றி கொண்டாடுகின்றனர்.

யால்டா ஈரானில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது…?

இவ்விரவில் பாரசீக மாக்கள் நீண்ட நேரம் விழித்திருந்து உறவினர்கள், நண்பர்கள் ஒன்றுகூடி குதூகலிப்பர்.

அவர்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களான, குறிப்பாக தாத்தா பாட்டி வீடுகளுக்குச் சென்று வருடத்தின் நீண்ட இரவை அவர்களுடன் சிரிப்பு, விருந்து, கவிதை என்று மகிழ்ச்சியாக கழிப்பர். மாலை முழுவதும் மகாகவி ஹஃபீஸ் இன் கவிதைகள் வரிகள் மணம் வீசிக் கொண்டிருக்கும்.

மூத்த குடும்ப உறுப்பினர்களின் மனங்களை குளிரச்செய்து அவர்களை சந்தோசப்படுத்துவதாலும் அவர்களது ஆசீர்வாதத்தாலும் குளிர்கால நோய்கள் தாக்காது என்பது அவர்களது நம்பிக்கை.

இவ்விருந்தில் பழங்களுக்கு பஞ்சமிருக்காது. குறிப்பாக மாதுளையும் தர்பூசணியும் இல்லாது இப்பண்டிகையே இல்லையெனலாம்.

ஈரானிய மக்களின் வாழ்க்கையில் மகா கவி ஹாபிஸின் கவிதைகளுக்கு முக்கிய இடமுண்டு.

ஒருவர் மனதில் ஒன்றை நினைத்து, ஹபீஸின் கவிதை புத்தகத்தின் ஒரு புத்தகத்தைத் திறந்து, அவர்கள் பார்க்கும் முதல் கவிதையானது, நினைத்ததை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான அறிவுரையாக, அதன் விளக்கமாக இருக்கும் என்பது சிலரது நம்பிக்கை.

ஆகவே யால்டா இரவில் ஒன்று கூடியுள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை மனதில் நினைத்து, ஹாபிஸின் கவிதை புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தைத் திறந்து, அதிலுள்ள முதல் கவிதையினை மூத்த ஒருவரைக் கொண்டு சத்தமாக வாசிக்கச் சொல்வர்.

வேறு நாடுகளில் குடியேறியுள்ள ஈரானியர்கள் ஒன்று கூடி அவர்களது குடும்பங்களுடன் ஈரானில் தாங்கள் செய்த அதே விஷயங்களை குடியேறியுள்ள நாடுகளில் செய்வர்.

யால்டா இரவு அவர்களுக்கு மறக்க முடியாததாக ஒன்றாக இருக்கிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division