பதில் கூறும் நிலையின்றி இருந்த அரவிந்தன், “என்னுடன் வா பிள்ளை” என அவளையும் அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையம் நோக்கிப் போனான். பாடசாலைச் சீருடையுடன் வந்த வெண்ணிலாவையும், அரவிந்தனையும் பொலீஸ் உயர்அதிகாரி அழைத்து விசாரித்த பொழுது “ஐயா! நான் ஒரு கூலித்தொழிலாளி. பெற்ற தாயை இழந்த என் மகள் இவள். நாங்கள் இல்லாத சமயம் பார்த்து யாரோ விசமிகளால் எனது வீடு உடைத்து சுக்கு நூறாக்கியது மட்டுமல்ல வீட்டு உடமைகளயும் களவாடி நாசப்படுத்திவிட்டார்கள்..” என குமுறி அழுதான். “என்னென்ன பொருட்கள் களவாடப்பட்டன“ என அதிகாரி அரவிந்தனை ஆசுவாசப்படுத்தி வினவினார்.
“நான் சமையலுக்காக இரண்டு கிலோ அரிசியும், ஒரு கிலோ கோதுமை மாவும், அரைக்கிலோ சீனியும் வாங்கி வைச்சன். அதோட நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த ஐயாயிரம் ரூபா காசும் போட்டுது ஐயா! பிள்ளைக்கு ஒரு தோடு வாங்க வேண்டும் என்று மிச்சம் பிடிச்சு பிடிச்சு சேர்த்து வைத்த காசு ஐயா அது” என்று தன்னிலை தளர்ந்து நின்றான். “அட கடவுளே! இப்படியும் ஒரு திருட்டா? கவலைப்படாதீர்கள் கள்ளனைக் கண்டு பிடிப்போம்” என ஆறுதல் கூறிய அதிகாரி தம் அலுவலக கான்ஸ்டபிளை அழைத்து, இவர்கள் இருவருக்கும் சாப்பாடு வாங்கி வரும்படி தனது பணத்தை எடுத்துக் கொடுத்தார். வெண்ணிலாவைப் பார்க்கும் போது தனது மகளைப் போல் உணர்ந்த அவர் அவர்களது வீட்டு விலாசத்தைப் பெற்றுக் கொண்டு, “சரி நீங்கள் வீட்டிற்கு போங்கள் நாங்கள் மாலை நான்கு மணிக்கு வந்து பார்க்கிறோம்” என அவர்களை அனுப்பி வைத்தார் பொலிஸ் அதிகாரி.
அதிதீவிர சிகிச்சைக்காக சுவிஸ் நாட்டிற்கு அனுப்பப்பட்ட அஞ்சலிக்கு அங்கு மேலதிக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆறு மாதங்களாக கோமா நிலையில் இருந்தவள் அந்நாட்டு மருத்துவர்களின் விடாமுயற்சியால் கண் திறந்தாள். இருந்தும் அவளால் தனது பெயர் ஊர் உட்பட கடந்த கால சம்பவங்களை நினைவுபடுத்த முடியவில்லை. தொடர் சோதனைகளுக்கு அவளை உட்படுத்திய மருத்துவர், அவளிற்கு அதிர்ச்சியால் ஞாபக மறதி ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். வேறு ஒரு அதிர்ச்சி வரும்போது அல்லது காலப்போக்கில் சுய நினைவை பெற சந்தர்ப்பம் உள்ளது என தனது சக வைத்தியர்களிடம் கூறியபடி அஞ்சலியை சுவிஸ் நாட்டு செஞ்சிலுவைச் சங்க நலன்புரிக் காப்பகத்திற்கு இடம் மாற்றும் ஒழுங்குகளை மேற்கொண்டார்.
அங்கு அவள் “ஜெசிக்கா” எனும் பெயரில் அழைக்கப்பட்டாள். அன்று முதல் பழையன மறந்த புதிய அஞ்சலி, ஜெசிக்கா எனும் பெயரில் சுறுசுறுப்பாய் செயல்படத் தொடங்கினாள். நாட்கள் நகர்ந்தன. நலன்புரிக் காப்பகத்திலிருந்து அஞ்சலி முதலில் பிரென்ஸ் மொழி கற்கத் தொடங்கினாள். படிப்பில் கெட்டிக்காரியான அஞ்சலி மிக விரைவாகவும் இலகுவாகவும் தன் கல்வித்தகைமையை வளர்த்துக் கொண்டாள். ஒரு பிரபல நிறுவனத்தில் அவளுக்கு வேலை கிடைத்தது. அவள் தன் வேலையிற் காட்டிய கண்ணியம், கடமை, பொறுப்புணர்வால் விரைவில் பதவி உயர்வும், சம்பள அதிகரிப்பும் பெற்றுக் கொண்டாள். தனது சக ஊழியர்கள், தோழியர்களுடன் அன்பாகவும், மரியாதையாகவும் நடக்கும் அஞ்சலி எல்லா வசதிகளையும் அனுபவித்தாலும், அவள் மனதில் “நான் யார்?” என்ற வினா எப்போதும் குடைந்து கொண்டே இருந்தது. சிலசமயம் ஓய்வு நேரத்தில் தனிமையில் இருந்து யோசிப்பாள்.
அன்றொரு நாள் காலை நேரம். வேலைக்காக அஞ்சலி பயணம் செய்த பேருந்து வண்டி பாரிய விபத்துக்குள்ளானது. அவ்விபத்தினால் மயங்கமடைந்த அஞ்சலி அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். சோதனை நடத்திய மருத்துவர்கள் “பயப்படும்படியாக ஒன்றுமில்லை. இது அதிர்ச்சியால் ஏற்பட்ட மயக்கம். ஒன்றிரண்டு மணித்தியாலத்திற்குள் எல்லாம் சரியாகிவிடும்” என்று அவளை தாதியர்களின் கண்காணிப்பில் விட்டனர். சில மணித்தியாலங்கள் கழித்து கண்விழித்துப் பார்த்த அஞ்சலி தான் ஒரு புதிய சூழலில் இருப்பதை உணர்ந்தாள். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. மேலே மின் விசிறிகள் சுற்றுகிறது. மின் விளக்கு எரிகிறது.மெல்ல மெல்ல பழைய ஞாபகங்கள் அஞ்சலிக்கு அடுக்கடுக்காய் வரத் தொடங்கின. “ஐயோ! என்குழந்தை வெண்நிலா எங்கே? என் அரவிந் எங்கே?” என புலம்பத் தொடங்கினாள். அவளை ஆறுதல்படுத்தியபடி மருத்துவர்கள் அவளின் சகல விபரங்களையும் கடந்த கால நிகழ்வுகளையும் பதிந்து கொண்டனர். இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் அஞ்சலியை அவள் குடும்பத்தவருடன் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவள் வேலை செய்த கம்பனி அவளுக்குரிய இலவச விமானப் பயணச்சீட்டையும், அவளது ஓய்வூதியப் பணத்தையும் கொடுத்துதவியது. அத்துடன் எட்டு ஆண்டுகளாக உழைத்த சேமிப்புடன் விமானம் மூலம் இலங்கை நோக்கி தற்காலிக கடவுச்சீட்டுடன் பயணித்தாள் அஞ்சலி. தன்னிருக்கைக்கு அருகே தன் வயதொத்த பெண்மணி இருப்பதை பார்த்து நிம்மதி அடைந்தவளாய் “ஹலோ” என்றாள். அவளும் பதிலுக்கு” ஹலோ, நான் அனுசா” என்று புன்முறுவல் செய்தாள்.
“நீங்கள் தமிழ் தானே” எனத் தொடங்கிய உரையாடல் இருவரையும் அந்நியோன்ய சினேகிதிகளாக்கி விட்டது. விமானப் பயணம், விமானநிலையம் பற்றி எதுவும் அறிந்திராத அஞ்சலிக்கு உடன் பயணித்த அனுசாவின் சந்திப்பு பெருநிம்மதியைத் தந்தது. “நீங்கள் எந்த இடம்?…”
“நான் யாழ்ப்பாணம். நீங்கள்…?” என்ற அனுசாவிற்கு “நான் சாவகச்சேரி” என்றாள் அஞ்சலி. “யார் எயர்போர்ட்டிற்கு கூட்ட வருவார்கள்” எனக் கேட்ட அனுசாவிற்கு பதில் கூற முடியாது கலங்கிய அஞ்சலி, “எனக்கு யாருமில்லை. எப்படி வீடு போவதென தெரியவில்லை” என கவலைப்பட்டாள். “சரி….சரி கவலைப்பட வேண்டாம். என்னை ஏற்ற வரும் வாகனத்தில் என்னுடன் நீங்களும் வரலாம். போகும் வழிதானே.” என்ற அனுசாவின் வார்த்தை நிம்மதியை தந்தது.
விமானமும் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. இடையே உறங்கி எழுந்த இருவரும் மீண்டும் உரையாடத் தொடங்கினர். “எப்போது நீர் சுவிஸ் நாட்டிற்கு வந்தனீர்” என்ற அனுசாவிற்கு தனது முழு வாழ்க்கை வரலாற்றையும் அஞ்சலி சொல்லி முடிக்க விமானமும் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இருவரும் குடிவரவு அலுவல்களை முடித்துக் கொண்டு வெளியே அவர்களுக்காக காத்து நின்ற வாகனத்தில் யாழ் நோக்கி பயணம் ஆகினர். அஞ்சலியின் நினைவுகள் பின்னோக்கி ஓடத் தொடங்கியது. எங்கள் வீடு எப்படியிருக்கிறதோ? வெண்நிலா பெரிய பிள்ளையாய் வளர்ந்திருப்பாள். அரவிந் எப்படி இருப்பாரோ.?அம்மன் கோவில் குமாருக் குருக்கள் இருக்கிறாரோ தெரியாது குட்டி பப்பி நாய்.. என்ன செய்யும்? என பலவித சிந்தனைகளுடன் பயணித்தாள்.
காலை பத்து மணி. வான் சாவகச்சேரியை வந்தடைந்தது. தனது வீட்டை ஒருவாறு கண்டு பிடித்த அஞ்சலி வானை நிறுத்தி இறங்கியதுடன் அனுசாவையும் தம் வீட்டிற்கு அழைத்தாள். இன்னொரு நாள் நிச்சயமாய் வருவதாக உறுதி கூறி விடை பெற்றாள் அனுசா.
வீட்டு வாசலில் இறங்கிய அஞ்சலிக்கு எல்லாம் வியப்பாக இருந்தன. இது எங்கட வீடா..? ஓ..முற்றத்தில் நின்ற அதே விலாட்டு மாமரம் கொஞ்சம் பெரிதாய் வளர்ந்து விட்டது. கிணற்றடியில் நின்ற ஈரப்பலா எவ்வளவு செழிப்பாக…! சந்தேகமில்லை. இது தான் எங்கள் வீடு என அஞ்சலி முடிவெடுத்தாள். அன்று சனிக்கிழமை. பாடசாலை விடுமுறை நாள். அரவிந்தன் வீட்டில் இல்லை. வெண்ணிலா மட்டும் தான் வீட்டில் இருந்தாள். “வான் ஒன்று எங்கள் படலையில் நின்று விட்டுப்போகுது. யாரோ வெளிநாட்டுக்காரர் இறங்கி நிற்கினம்” என நினைத்தபடி வீட்டிலிருந்து எட்டிப் பார்த்தாள் வெண்ணிலா. பப்பி நாய் அஞ்சலியை அடையாளம் கண்டு விட்டது. ஓடிச் சென்று அஞ்சலி மேல்த்தாவி ஆ…ஊ..ஆ..ஊ… என தன் மொழியில் ஆரவாரமிட்டதுடன், பிரமிப்புடன் பார்த்து நின்ற வெண்ணிலாவிடமும் அஞ்சலியிடமும் மாறி மாறி ஓடியது. கட்டையாக வெட்டப்பட்ட தலைமயிர், ஜீன்ஸ், ரீசேர்ட், கறுப்புக்கண்ணாடி, கையில் விலையுர்ந்த போன், தங்கச்சங்கிலி, வளையல்களுடன் வந்து நின்ற அஞ்சலியை வெண்ணிலா அதிசயத்துடன் பார்த்தாள். வீட்டின் முன்விறாந்தையில் தனது படத்திற்கு மாலைபோட்டு விளக்கேற்றி தொங்கவிடப்பட்டிருப்பதும், அதன் அருகில் தான் கொழும்பு போகும்போது கொண்டு சென்ற கைப்பையையும் கண்டு சிரிப்பதா? அழுவதா? என முடிவெடுக்க முடியாமல் திகைத்து நின்றாள் அஞ்சலி. “அன்ரி வாங்கோ. இதிலை இருங்கோ” என்ற வெண்ணிலாவின் குரல் அவளை நிலைகுலைய வைத்தது.
இரண்டு வயதில் விட்டுப் போன வெண்ணிலா பருவப்பெண்ணாக தன்முன்னே நின்று “அன்ரி” என தன்னை அழைத்த போது ஓவென்று கதற வேண்டும் போல் இருந்தது அஞ்சலிக்கு. ஒருவாறு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள் “உனது அப்பா எங்கே?” என்றபோது “அப்பா வேலைக்குப் போய்விட்டார்” என்றாள் நிலா. இந்தப் படத்தில் இருப்பது யார்? என வினாவ,” இது அன்ரி, என்ரை அம்மா தான். எனக்கு இரண்டு வயதில் அவ சாமியிட்ட போயிட்டா” என அழத் தொடங்கினாள். பொறுமை இழந்த அஞ்சலி ஓடிச் சென்று அவளை அரவணைத்து, அவளது கண்ணீரைத் துடைத்து “இல்லை உன் அம்மா இன்னும் உயிரோடுதான் இருக்கிறா” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டாள். வந்திருப்பது தன்னைப் பெற்ற தாய்தான் என்பது வெண்ணிலாவிற்கு எப்படிப் புரியும்? ஆனால் இது தான் எங்கள் அம்மா என்று ஐந்தறிவுடைய பப்பி நாய் தொங்கித் தொங்கி அவளில் தாவியது. கண்ணீர் மல்க பப்பியைத் தடவிக் கொடுத்த அஞ்சலியை பார்த்து “அன்ரி நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்ற வெண்ணிலாவை பார்த்து “இல்லை இல்லை” என தன்னைச் சமாளித்து கொண்டிருந்தாள் அஞ்சலி.
அப்போது “அப்பா வந்து விட்டார்” என அஞ்சலி ஆவலுடன் எழுந்தாள். கூடவே படுத்திருந்த பப்பியும் எழுந்து அரவிந்தனை நோக்கி ஓடியது. தனது மொழியில் ஏதோ கூறி அரவிந்தனை வீட்டிற்குள் வரவழைத்தது. வீட்டில் புதிய கோலத்துடன் நின்ற பெண்ணைக் கண்டு “யாரோ வெளிநாட்டுக்காரர் போலத் தெரியுது. யாராய் இருக்கும்?” என யோசித்தபடி பக்கத்தில் நின்ற மாமரத்தின் கீழ் தோளிலிருந்த மண்வெட்டியை வைத்துவிட்டு துவாயால் தனது வியர்த்த தன் முகத்தை துடைத்துக் கொண்டான். “யாரம்மா வந்தது?” என நிலாவை அழைக்க, “அப்பா!. ( iv ஆம் பக்கம் பார்க்க)
தம்பு முருகா