Home » சட்டவிரோத கட்டட நிர்மாணம் இனிமேலாவது தடுக்கப்படுமா?
மலையக வெள்ள அனர்த்தம்

சட்டவிரோத கட்டட நிர்மாணம் இனிமேலாவது தடுக்கப்படுமா?

அரசிடம் வேண்டிநிற்கும் மக்கள்

by Damith Pushpika
December 15, 2024 6:00 am 0 comment

கடந்த வாரத்தில் இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாரிய பாதிப்பு நாடு முழுவதும் ஏற்பட்டது. குறிப்பாக உயிரிழப்புகள், மண்சரிவு காரணமாக இடம்பெயர்வுகள், குடியிருப்புகள் பாதிப்பு என பல வழிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. இவ்வாறான ஒரு நிலையில் மலையக பகுதிகளிலும் பாரிய அளவில் பாதிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில், வீடுகள் விவசாய நிலங்கள் போன்றவை அதிக அளவில் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தை பொறுத்த அளவில் 395 குடும்பங்களை சேர்ந்த 1495 பேர் பாதிக்கப்பட்டனர். 222 வீடுகள் பகுதி அளவில் பாதிப்படைந்துள்ளன. பாதிப்பிற்கு உள்ளானவர்கள் 12 அனர்த்த முகாமைத்துவ நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.136 குடும்பங்களை சேர்ந்த 539 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு மூன்று நாட்களுக்கான உலர் உணவு பொருட்கள் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டது. பொருட்கள் அனைத்தும் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாம்களின் ஊடாக சமைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் பிரதேச செயலகமும் கிராம சேவகர்களும் மேற்கொண்டிருந்தனர். இவர்களுக்கு ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒரு சில சமூக சேவகர்களும் இணைந்து சில உதவிகளையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நுவரெலியா சாந்திபுர நுவரெலியா பௌத்த விகாரை கொன்கோடியா தோட்டம், எஸகடேல் பிரிவு, பீட்று சமரகிரி தோட்டம், வலப்பனை பண்டிதயா கும்புர குருந்து ஒயா, அங்குரன்கெத்த தீகல இன்ன கொத்மலை, அங்குரன்கெத்த ஹோப் தோட்டம், தலவாக்கலை வௌர்லி, போட்மோர் தலவாக்கலை, கிளாஸ்கோ தலவாக்கலை, என்போல்ட் ஆகிய பகுதிகளிலேயே அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இது தவிர பாதிப்பிற்கு உள்ளான ஒரு சிலர் தங்களுடைய நண்பர்களின் வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருந்தனர். இவர்களுடைய தகவல்கள் உரிய முறையில் பதியப்படவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள்; என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அனர்த்த முகாமைத்துவ நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களின் வீடுகள் சிலவற்றிற்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தது. எத்தனை வீடுகளுக்கு சிவப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டது அவர்களுகக்கான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக இதுவரையில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அந்த பாதிப்புகளை மதிப்பீடு செய்து 25 இலட்சம் ரூபா வரை வழங்க முடியும் என்பது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவல்களின் அடிப்படையில் தெரியவருகின்றது. இந்த மதிப்பீட்டு தொகையானது பெருந்தோட்ட துறைக்கு பொருந்தாது. ஏனெனில் காணி உறுதி உள்ளவர்களுக்கு மாத்திரமே இந்த தொகையானது மதிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்படும்.

இவ்வாறான ஒரு நிலையில் தோட்ட குடியிருப்புகள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் அவர்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக எந்த ஒரு கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். இந்த விடயம் தொடர்பாக எங்களுடைய கடந்த கால அனைத்து தலைவர்களும் பொறுப்பு கூற வேண்டியவர்களே. இவர்கள் பாராளுமன்றத்தில் இருந்த காலப்பகுதியில் இதற்கான ஒரு சட்டத்தை ஏற்படுத்தாமையானது எமது மக்களுக்கான பாரிய ஒரு பாதிப்பாகும். எனவே இதனை இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற எங்களுடைய பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றவர்கள் நிவர்த்தி செய்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும். பொதுவாகவே மலையக பகுதிகளில் அனர்த்தங்கள் நடைபெற்ற பின்பு பாதிக்கப்பட்ட மக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையங்களில் தங்க வைக்கப்படுவதும் அவர்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்கள், சமைத்த உணவுகளை மூன்று நாட்களுக்கு பெற்றுக் கொடுப்பதும் பின்பு அவர்களை வழமைபோல தங்களுடைய வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைப்பதும் ஒரு வழமையான செயற்பாடாகவே நடைபெற்று வருகின்றது. காலநிலை சீரடைந்தவுடன் எந்த ஒரு அதிகாரியும் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லை.

ஆனால் நல்லாட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் முற்போக்கு கூட்டணி அங்கத்தவர்கள் அமைச்சர்களாக இருந்த பொழுது இதற்கான ஒரு தீர்வு திட்டத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது அனர்த்தங்களால் பாதிக்கப்படுகின்ற குறிப்பாக மண்சரிவு, வீடு தீப்பற்றல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடமைப்பின் பொழுது முன்னுரிமை வழங்க தீர்மானித்து அதனை அமைச்சராக இருந்த பழனி திகாம்பரம் நடைமுறைபடுத்தியதுடன். கல்வி இராஜாராங்க அமைச்சராக இருந்த வேலுசாமி இராதாகிருஸ்ணன் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வங்கிக் கடன் பெற்றுக் கொடுத்து தோட்ட நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தனி வீடுகளை அமைப்பதற்கான ஒரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்தினார். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் பின்பு ஏற்படுத்தப்பட்ட அரசாங்கங்கள் அதனை தொடர்ந்து முன்னெடுக்கவில்லை என்பது கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

தற்பொழுது புதிய அரசாங்கத்தின் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கு மாடி குடியிருப்புகள் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு பேசு பொருளாக மாற்றமடைந்துள்ளது. அது எந்தளவிற்கு மலையக பகுதிகளுக்கு பொருத்தமானதாக அமையும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

ஏனெனில் 200 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஒரு சமூகம் காணி உரிமை கூட இல்லாமல் இருப்பது வேதனைகுரியது. அதனையே கடந்த காலத்தில் பலரும் வலியுறுத்தி வந்தனர். எனவே இந்த மாடி வீட்டுத்திட்டம் என்பது மீண்டும் அடுக்குமாடி லயன் அறைகள் என்ற நிலையே உருவாகும்.

இது தொடர்பாக மீண்டும் சிந்தித்து அந்த பெருந்தோட்ட மக்களுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படுமாக இருந்தால் அது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இந்த காலநிலை சீர்கேடு காரணமாக, பாரிய அளவில் விவசாய நிலங்களும் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்பொழது மரக்கறிகளின் விலைகளும் பாரிய அளவில் அதிகரித்துள்ளன. நுவரெலியா கந்தப்பளை, இராகலை, உடபுஸ்ஸல்லாவ, டயகம, அக்கரபத்தனை போன்ற பகுதிகளில் விவசாய நிலங்களும் பயிர்களும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதுடன் நுகர்வோரும் விலை அதிகரிப்பு காரணமாக பாரிய பாதிப்பை சந்திக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்ட அனைத்து பகுதிகளிலும் சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக நீர் வடிந்தோடுவதற்கான அனைத்து பகுதிகளும் முற்றாக தடைபட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகள், நகரசபைகள், மாநகர சபைகள் தங்களுடைய கடமைகளை சரிவர செய்யாமையே இதற்கு காரணமாகும். ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாகவும், சட்ட விரோதமாகவும் செயற்பட்டதன் காரணமாகவே இந்த வெள்ளப் பெருக்கு அநேகமான இடங்களில் ஏற்பட்டது.

எனவே எதிர்காலத்தில் இந்த சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பாக புதிய அரசாங்கம் உரிய சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த வெள்ள அனர்த்தத்தை தடுத்து நிறுத்த முடியாது. எனவே இது தொடர்பாக அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

அரசியலுக்கு அப்பால் சென்று இந்த விடயத்தை நோக்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகள் சரியாக செயற்படாவிட்டால் இந்த அனர்த்த நிலை தொடர்வதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது. இந்த நிலைமையானது நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பொதுவான ஒரு விடயமாகும். அது கொழும்பு உட்பட அனைத்து நகரங்களுக்கும் பொருந்தும். புதிய அரசாங்கமானது இந்த அனர்த்தத்தால் சேதமடைந்த பெருந்தோட்ட பகுதி வீடுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும். அதே நேரம் சட்டத்தை நடைமுறைபடுத்தி இந்த வெள்ள அனர்த்தத்திற்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே பொது மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

நுவரெலியா தினகரன் நிருபர் எஸ்.தியாகு

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division