மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்பணி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசத்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், நியமனம் செய்திருக்கிறார். இந்த நற்செய்தியை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ மன்னார் குருமார், கன்னியர் துறவிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பேராலய மணிகள் ஓங்கி ஒலிக்க அறிவிப்புச் செய்தார்.
அடம்பனைச் சேர்ந்தவரான 57 வயதான வண. ஞானப்பிரகாசம் முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் செயலாளராகவும் மடுத்திருப்பதியின் பிரதம பரிபாலன குருவாகவும் பணியாற்றியவர். ஜோசப் ஆண்கையுடன் பணியாற்றிய நாட்களில் ஆயருக்குரிய பொறுப்புகளை நன்கு கற்று செழுமையான அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்.
மன்னார் கத்தோலிக்க சமூகத்தினதும் குருமாரினதும் பேரன்புக்குரியவரான வண ஞானப்பிரகாசம் ” வெள்ளை ரோஜா ” என்று வாஞ்சையுடன் அழைக்கப்படுகிறார். போர்க்காலத்தில் மக்களோடு மக்களாக நின்று அவர்களின் துயர்துடைக்க அரும்பணியாற்றிய அவர் மடுமாதா திருப்பதிக்கு வரும் சகல இன மக்களினதும் பெருமதிப்புக்குரியவராகவும் விளங்குகிறார். அவர் புதிய ஆயராக நியமிக்கப்பட்டமை குறித்து மன்னார் கத்தோலிக்க சமூகம் மாத்திரமல்ல ஏனைய சமூகத்தவர்களும் கூட பெருமகிழ்ச்சியடைகின்றனர்.
வண. ஞானப்பிரகாசம் ஆயராக நியமிக்கப்பட்ட செய்தி உலகில் தமிழ் மக்கள் பரந்துவாழும் மாநகர்கள் எங்கும் எட்டியபோது தேனிலும் இனிதாக வரவேற்கப்பட்டது என்று பிரித்தானிய தமிழ் கத்தோலிக்க ஆன்மிக ஒன்றிய முன்னாள் தலைவர் பொறியியல் அறிஞர் உயர்திரு இராசா சுவாம்பிள்ளை தனது முகநூல் பதிவில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். வண. ஞானப்பிரகாசத்தின் நியமனம் தொடர்பான செய்தி றோமில் வியாழன்று மதியம் வெளிப்படுத்தப்பட்டது. அந்த செய்தி லண்டன் நேரம் காலை 11 மணிக்கு கேட்டு மகிழ்ந்ததாகவும் சுவாம்பிள்ளை தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
மடுத்திருப்பதியின் பிரதம பரிபாலன குருவாக அரிய பணிபுரியும் வண. ஞானப்பிரகாசம் அந்த திருப்பதிக்கு யாத்திரை செல்லும் தமிழ், சிங்கள, சைவ, பௌத்த, இஸ்லாமிய மக்கள் அனைவரையும் மிக்க அன்போடு இன்முகத்துடன் வரவேற்று ஆசீர்வதிக்கும் ஒரு அற்புதத் துறவி. இவரின் ஆயர்பணி நியமனத்தை மன்னாரிலும் கொழும்பு, காலி, குருநாகல், யாழ்ப்பாணம் என்று இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள ஆயர்கள், குருமார், கன்னியர் துறவிகள் ஆரவாரத்துடன் வரவேற்றிருக்கிறார்கள் என்பதை சமூக ஊடகங்களில் நிரம்பி வழியும் பல்லாயிரம் பாராட்டுக்கள் மூலமாக அறியமுடிகிறது.
உலகத்தமிழர்கள் அதியுயர்வாக போற்றிவரும் மறைந்த மாமனிதர் மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் செயலாளராக, அவரின் வலதுகரம் போன்று மிகவும் ஆபத்துமிகுந்த போர்க்காலத்தில் அருட்பணி ஞானப்பிரகாசம் பல ஆண்டுகள் பணியாற்றிய பட்டனுபவத்தைக் கொண்டவர்.
ஆயர் பணி மலிவான புகழுக்கும் பகட்டான வாழ்வுக்குமான படிக்கட்டு அல்ல என்பதை உணர்த்தி இலங்கையின் ஆயர்களுக்கு ஒரு முன்னோடியாக வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்தவர் பேராயர் இராயப்பு ஜோசப். இன்று உலகெங்கும் வாழும் தமிழ்ச் சமூகம் அவரை மதித்துப் போற்றுகிறது.
அவரைப் போன்றே வண. ஞானப்பிரகாசமும் பதவிப்பற்று இல்லாத ஒரு பெருந்துறவியாக ஆயர்கள் அனைவருக்கும் மக்கள் பணியே மகேசன் பணி என தனது சேவைகள் மூலம் வழிகாட்டுவார் என்று பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
அமுது நேரு