கிறிஸ்மஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது கிறிஸ்மஸ் தாத்தா, குடில், மரங்கள்தான். பண்டிகை கொண்டாடுவோரின் வீடுகளில் கிறிஸ்மஸ் மரங்கள் அமைக்கப்பட்டு, அதில் வண்ண விளக்குகளையும் பரிசுப் பொருட்களையும் தொங்கவிடுவது வழக்கம்.
கிறிஸ்மஸ் மரம் என்று தனியாக ஒரு மரம் இல்லை. ஆனால், பண்டிகையின்போது இந்த மரத்தைப் பயன்படுத்தியதால் இந்த மரம் தற்போது ‘கிறிஸ்மஸ் மரம்’ என்றே அழைக்கப்படுகிறது.
‘பெர்’ மரங்களை கிறிஸ்மஸ் உடன் இணைத்து கொண்டாடிய புகழ் ஜெர்மனியரை சாரும். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் போனியாஸ் என்ற கிறிஸ்தவப் பாதிரியார் ஜெர்மனிக்கு இறைச்சேவைக்காக வந்தார். ஒரு கிறிஸ்மஸ் நாளில் இவர் ஒரு பெர் மரத்தை ஆசிர்வதித்து, குழந்தை இயேசுவுக்கு அதை ஒப்புக் கொடுத்தார்.
அன்று முதல் பெர் மரம் கிறிஸ்மஸ் மரம் ஆனது. அதிலிருந்து ஒவ்வொரு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின்போதும் இந்த மரம் வீடுகளில் நடப்பட்டது. இதன்பின்னர், ஜெர்மனிய இளவரசர் அல்பர்ட்டுக்கும், இங்கிலாந்து இளவரசி விக்டோரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
1841-இல் அல்பர்ட் இங்கிலாந்து அரண் மனையில் ஒரு கிறிஸ்மஸ் மரத்தை நட்டு, அதில் பல பரிசுப் பொருட்களைக் கட்டி தொங்க விட்டார். மரத்தைச் சுற்றிலும் மெழுகுவர்த் திகளை எரிய வைத்தார். பின்னர், இந்தப் பரிசுப் பொருட்களைப் பலருக்கும் வழங்கினார்.
இதன்பின்னர், கிறிஸ்மஸ் மரம் இங்கிலாந்து முழுவதும் அமைக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.