மலையக மக்களின் உழைப்பு தோட்டக் கம்பனிகள், தனியாருக்கு சொந்தமான தோட்ட நிர்வாகங்கள், தோட்டத் தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகள் என பல தரப்பினரினாலும் உறிஞ்சப்பட்டு இந்த மக்கள் இணைய யுகம் என வர்ணிக்கப்படும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் வீட்டு முகவரி அற்றவர்களாக, வீட்டுரிமை, காணியுரிமை அற்றவர்களாக கணிசமான தொகையினர் இன்றும் ஆங்கிலேயரினால் கட்டப்பட்ட லயன் அறை குடியிருப்புகளிலேயே பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் அவல வாழ்க்கை வாழ்கிறார்கள். இந்த மக்களின் பிள்ளைகள் அரச உரிமைகள், அரச சலுகைகள் கல்வி வாய்ப்புகள் தொழில் வாய்ப்புகளை உரிய முறையில் பெற முடியாதவர்களாக மிகுந்த மன வேதனையுடன் வாழ்கிறார்கள்.
இந்த மக்களை தொழில் ரீதியாக தோட்டத் தொழிற் சங்கங்களும் அரசியல் ரீதியாக மலையக அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுத்தும் போதிலும் தோட்டத் தொழிற்சங்கங்களினாலும் மலையக அரசியல் கட்சிகளினாலும் அவர்கள் உரிய பயன்களை பெறாதமையே காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு தோட்டத் தொழிலாளிமார்கள் மூலம் மாதாந்தம் சந்தா செலுத்தப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக அரசியல் கட்சிகள் காலத்திற்கு காலம் நடத்தப்படும் தேர்தல்களின் போது அவர்களின் வாக்குகளை பெற்று சுகபோகம் அனுபவிக்கின்றன. ஆனால் தோட்டத் தொழிற்சங்கங்கள், மலையக அரசியல் கட்சிகள் மூலம் இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களில் தோட்டத் தொழிலாளர்களும் தோட்டத் தொழிலாளர்கள் அல்லாதோரும் உரிய விதத்தில் பதவிகள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வந்தமையே வரலாறாக உள்ளது.
உள்ளது உள்ளபடி குறிப்பிடின் தோட்டத் தொழிற்சங்கவாதிகளுக்கும் மலையக அரசியல்வாதிகளுக்கும் வறுமையின் கொடுமை புரியவில்லை.
உரிய கல்வித் தகைமைகளை கொண்டவர்களுக்குக் கூட தோட்டத் தொழிற்சங்கங்களோ மலையக அரசியல் கட்சிகளோ தகைமை அடிப்படையில் பதவிகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கவோ பால் வேறுபாட்டை கருத்திற் கொள்ளாது பெண்களை பதவிகளில் அமர்த்துவதிலோ உரிய விதத்தில் கரிசனை காட்டவில்லை. தொழிற் சங்கங்களினாலும் மலையக அரசியல் கட்சிகளினாலும் கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்டு வந்த மலையக பெண்கள் மூவரும் ஆண்கள் மூவரும் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து இவர்களில் சிலர் பல தசாப்த காலமாகவும் சிலர் சில வருடங்களாகவும் அந்த கட்சியின் செயல்பாடுகள் மூலம் அவர்கள் வாழும் பிரதேச மக்களுடாக நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி மக்கள் சேவையில் உரிய அனுபவத்தை பெற்றதோடு அந்த மக்களின் வாக்குகளை இந்த நாட்டின் பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய நடத்தப்பட்ட பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் பெற்று வெற்றியீட்டியுள்ளார்கள்.
இந்த நாட்டின் எழுபத்தாறு ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் பெண் அதாவது மலையக தமிழ் பெண் ஒருவர் கடந்த காலங்களில் பாராளுமன்ற அங்கத்தவராக உருவாகவில்லை. ஆனால் இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக மூன்று மலையக பெண்கள் இந்த நாட்டின் பத்தாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் சின்னத்தில் போட்டியிட்ட சரோஜா சாவித்திரி போல்ராஜ் 148,379 வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். ஏனெனில் மாத்தறை மாவட்டத்தில் பெரும்பான்மை சமூகத்தினரான சிங்கள மக்கள் அதிகளவில் வாழ்கிறார்கள்.
அந்த மக்களின் கணிசமான வாக்குகளுடன் தமிழ், முஸ்லிம் மக்களினதும் வாக்குகளையும் பெற்று அவர் வெற்றியீட்டியமை சிறப்பாக குறிப்பிடத்தக்கது. இவர் பல தசாப்த காலமாக தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அவரின் அர்ப்பணிப்பு அவரை மகளிர் மற்றும் சிறுவர் பராமரிப்பு அமைச்சர் பதவியை பெற வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதுளை மாவட்டம், அப்புத்தளை தோட்டத்தில் வசிக்கும் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் மூன்றாவது உறுப்பினராக பதுளை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் பாரம்பரிய கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை தோல்வியடையச் செய்து பதுளை மாவட்டத்தில் இருந்து வெற்றியீட்டியுள்ளமை ஒரு வரலாற்று சாதனை என்று குறிப்பிடின் பொருந்தும். நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் சின்னமான திசைகாட்சி சின்னத்தில் போட்டியிட்ட மலையக பெண்ணான கிருஷ்ணன் கலைச்செல்வி 33,346 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு சமூக ஆர்வலர். தேசிய மக்கள் சக்தியின் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த நாட்டின் பத்தாவது பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல்மூலம் மூன்று மலையக பெண்கள் தெரிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்கள். கடந்த காலங்களில் பாரம்பரிய மலையக கட்சிகள் பெண்களுக்கு தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. ஒவ்வொரு கட்சியும் அதன் வேட்பாளர் பட்டியலில் இருபத்தைந்து சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த நாட்டில் எந்த கட்சியும் தேர்தலில் அதன் வேட்பாளர் பட்டியலில் இருபத்தைந்து சதவீதத்தை ஒதுக்கவில்லை. பெரிய தேசிய கட்சிகளில் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே அதனது வேட்பாளர்களாக முப்பத்து மூன்று பெண்களை களம் இறக்கியது.
ஆனால் அவர்களில் பத்தொன்பது பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் மூலம் ஒரு பெண் சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் சின்னத்தில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட அகில இலங்கை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் 60,041 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் சின்னத்தில் போட்டியிட்ட ஆசிரியர் சுந்தரலிங்கம் பிரதீப் 112,711 வாக்குகளைப் பெற்று இரண்டாவது உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து நேரடியாக தெரிவு செய்யப்பட்ட முதல் பாராளுமன்ற மலையக தமிழ் உறுப்பினர் என்னும் சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளார். அவர் பிரதி அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளராக சில வருடங்கள் செயல்பட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தியின் மூலம் பெற காரணகர்த்தாவாக விளங்கியவர் ராமலிங்கம் சந்திரசேகர். இவர் ஒரு மலையக தமிழர். தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்து செயல்பட்டவர். நாடளாவிய ரீதியில் ராமலிங்கம் சந்திரசேகரன் கடற்றொழில் மற்றும் நீர்வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே, தேசிய மக்கள் சக்தியின் மூலம் மூன்று மலையக ஆண் களும் மூன்று மலையக தமிழ் பெண்களுமாக ஆறுபேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் ஆறுபேரும் இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த இந்திய வம்சாவளி தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி நன்கறிந்தவர்கள்.
தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு முகவரியற்ற பிரச்சினைக்கும் ஒட்டு மொத்த இந்திய வம்சாவளி தமிழர்களின் இன அடையாளமாக மலையக தமிழர் என கொள்ள முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களில் தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர் அல்லாதோரின் பிரச்சினைகளை இனம் கண்டு உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக தீர்வுகளை காண வேண்டும்.
இந்த நாட்டின் வரலாற்றில் முன்னைய காலங்களில் எந்த ஒரு கட்சியும் வெற்றியீட்டாத விதத்தில் பத்தாவது பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர் குடும்பத்தினருக்கு இந்திய அரசாங்கத்தின் பத்தாயிரம் வீடமைப்பு திட்டத்தின் மூலம் வீடுகளை நிர்மாணித்து வழங்கி அவர்களின் வீடில்லாத பிரச்சினையை முற்று முழுதாக தீர்த்து வைக்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் அமோக வெற்றியில் இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களும் தமது பங்களிப்பை நல்கியுள்ளார்கள். எனவே தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களையும் அரவணைத்து அவர்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களை இந்த நாட்டில் சுபீட்சமாக வாழ வைக்க வேண்டும்.
சி.ப.சீலன்