பெ யரில் மட்டும் இருக்கும் அந்தச் சிறப்பு. அவளை வாழ்வில் ஆராதனை செய்யத் தவறி இருந்தது. ஆனாலும் இன்றும் அவள் ஆராதனைக் குரிய பெண்ணாகவே இருக்கின்றாள் என்பது அனைவரும் அறிந்தோ அறியாமலோ இருக்கலாம். இங்கே விளம்பரங்கள் தான் பலரின் அடையாளம் ஆகிப் போன போது, அவள் போன்ற பல பெண்கள் அறியப் படாமலே வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள். எது எப்படியோ இருக்கட்டும்.
ஆனால் சில நேரங்களில் சில மனிதர்களை காலம் அடையாளம் காட்டி விடுகிறது. அதுபோல்தான் இன்று ஆராதனாவும், ஒரு இலக்கிய விரும்பியாக இலக்கிய எழுத்துக்களால் அடையாளப் படுத்தப் பட்ட சிறு அறிமுகம் அவளுக்கென்று இருக்கிறது. அவள் கடந்து வந்த பாதையை காணக் கிடைத்தால் காயங்களை மறைத்து நிற்கும் அந்த உருவத்தை ஆச்சரியமாகப் பார்ப்பீர்கள். எப்படி இத்தனை மகிழ்ச்சியை, சமாளிப்பை அவள் கையாளுகின்றாள் என்று, அதுதான் இன்று அவளுடைய பலம்.
அதுதான் அவளை இன்று இப்படி ஆக்கி இருக்கிறது. கொஞ்சம் அவளைப் பற்றிப் பார்க்கலாம். அது அவள் உணர்வின் வெளிப்பாடாக அவளாகவே பயணிப்பதில் இன்னும் அறிதலாக அறியப்படும். ஆராதனா மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அவள் மகள் அவளருகில் இருந்தபடியே இன்று எப்படியும் அம்மாவின் டயரியை படிப்போம். அம்மாவை அதிகம் தொந்தரவு செய்யக் கூடாது என்று டொக்டர் சொல்லி இருக்கிறார்.
அம்மா பலகாலம் தனிமையில் தான் பொழுதைக் கழித்திருக்கிறார். இருந்திருக்கிறார். ஆனாலும் தற்போது சமீப காலமாக எனக்கும் அம்மாவுக்குமான உரையாடல் பெரும்பாலும் அம்மா பற்றியதாக சில நேரங்களில் அமைந்து விடுகிறது. பல விடயங்களை அவர் என்னிடம் சொல்லும் போது சில நேரங்களில் நான் யோசித்திருக்கிறேன். இதெல்லாம் தெரியாமல் எங்களோடு அவர் பயணித்து இருக்கிறார்.
நானும் ஒரு புரிதலுக்குரிய பக்குவத்தையும் தாய்மையையும் அடைந்த போது, அவருடைய பேச்சுகளை செவிமடுக்க ஆரம்பித்த போது தான் கொஞ்சம் அம்மாவின் மனதில் ஆழப் பதிந்த வடுக்களை அறிய முடிந்தது. அந்த எண்ணம் தான் இன்று வாசிப்பில் அதிக நாட்டம் இல்லாத என்னை இந்த நாட்குறிப்பு வாசிக்கத் தூண்டியது வாசிக்கிறேன்,
ஏழ்மையான குடும்பத்தில் கஷ்டமும் கவலையும் கொட்டிக் கிடக்கும் என்பார்கள். ஆனால் அங்கே தான் மிகவும் மகிழ்ச்சியான வாழ்வின் தருணங்கள், நிகழ்வுகள் இருக்கிறது என்று முன்பே யாரும் உணர்ந்து கொள்வதில்லை.
நான் அதற்கு கொஞ்சம் விதிவிலக்காக இருந்த சிலரில் ஒருத்தியாக இருக்கலாம் . ஏனென்றால் சில நேரங்களில் இரண்டு வேளைச் சாப்பாட்டுக்கு போராடும் நிலையில் இருக்கும் போதுகூட அந்த வாழ்க்கை பிடித்திருந்தது. வயிற்றுப் பசியைக் கூட, மனதின் நிறைவுகள் ஆற்ற முனைந்த தருணங்கள் நிறையவே இருந்தன. சில நேரங்களில் பண்டிகைக் காலங்களில் புது உடுப்பு இல்லாமல் மூன்று வருடங்கள் மடித்து வைத்த உடுப்பைப் போடும் போதும் பலகாரம் என்று எதுவும் இல்லாமல் இருந்த வேளைகளில் எங்கள் கோயில் பிரசாதங்கள் எங்களுக்கு பலகாரம் போல் ஆகிவிடும். பாலைமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவதும், சொந்த பந்த வீட்டுக்கு ஒரு சுத்து சுத்திப் போட்டு வரவே இருள் இழுத்துச் சென்று எம்மை இருப்பிடம் சேர்த்து விடுவதும் வழமையாக நடப்பவை. ஆகவே பண்டிகைகள் எங்களுக்கு அத்தனை மகிழ்ச்சியைத் தரும்.
காலம் செல்லச் செல்ல வயதும் பக்குவம் அடைந்தது, சில சில்லறை விளையாட்டுகள் விடைபெற்றுக் கொண்டது. தும்பி பிடிப்பதை மறந்து வண்ணத்துப்பூச்சியையும் கம்பளப் பூச்சியையும் இரசித்தேன். காடுகளில் அவ்வப்போது தஞ்சம் கொண்டேன். காரணம் கற்பதற்கு எனக்கு அந்தத் தனிமை தேவையாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் கற்பனை செய்யவும் அந்தத் தனிமை போதுமானதாக இருந்தது. அன்புக்கும் அரவணைப்புக்கும் குறைவில்லாமல் அதிகமான சுதந்திரம் வழங்கப்பட்டது எனக்கு வீட்டில்.
அதுவே எனக்கு அதீத கட்டுப்பாட்டையும் சுயமாகக் கட்டி எழுப்பியது. என் ஊரில் நான் அமைதியான அழகான கெட்டிக்காரப் பிள்ளை. சுத்திவர சொந்தங்கள் ஆனாலும் அதிகமாக யாரோடும் ஒன்றிவிடாத தன்மையை இப்படித் தான் வளர்ந்தேன்.
என் படிப்பு, வாழ்க்கைத் துணை எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்க, என் அப்பா சொல்லாமல் தந்த உரிமை படு நிதானத்தை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. முதலில் படித்து முடிக்க வேண்டும். இந்த நேரத்தில் எனக்கும் வயதின் தடுமாற்றம், ஒரு தழும்பை ஏற்படுத்தி விட்டது. ஆனாலும் மீண்டேன், சலனங்கள் தரும் மனதை இழுத்து, இழுத்துப் பிடித்தபடி, ஒரு இலக்கை அடைய முழு மூச்சாக இருந்த போது தான்… ஒரு காதலும் மலர்ந்தது.
அது என் வீட்டின் சம்மதத்தோடு என்னும் போது என் பயணத்தில் எந்தத் தடையையும் ஏற்படுத்த வில்லை. என்னையே சுத்திச் சுத்தி வந்து காதல் செய்யும் ஒருவனாக அவன் இருக்க வேண்டும். என்னை என் செயல்களை இரசிக்கும் போதெல்லாம் அவன் வார்த்தைகளால் அவ்வப்போது வெளிக்காட்ட வேண்டும். என் குடும்பத்தை, இந்த மக்களை மதிக்கும் நல்ல பண்புள்ளவனாக இருக்க வேண்டும். நான் எப்போதும் அவன் மனம் கோணாத படி நடக்க வேண்டும். நானும் அவனும் நிறைய, நிறையப் பேச வேண்டும். அதுவும் நிலவு வெளிச்சத்தில். அவன் என்னை விடப் படித்திருக்க வேண்டும். அவன் யாராக இருக்கும்…?
பல தடவை கற்பனை கையோடு நிறைய முகங்களை நிழலாக அடையாளம் காட்டியது.
அந்தக் காலம் பல தோழிகளை எனக்குப் பெற்றுத் தந்தாலும் ஒருத்தியை மட்டும் மறக்கவே முடியாது.
என் உயிர்த் தோழியோடு மரநிழலில்அளவளாவிய காலங்கள் எல்லாமே எத்தனை அழகானவை என்பதை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது. காலங்கள் நான் நினைத்ததை விட அற்புதமாய் அதிசயமாய் நகர்ந்து கொண்டே இருந்தது. கற்பனையில் மிதந்த காதலின் உருவமாய் அவன் இருந்தது மனதில் அத்தனை ஆனந்தத்தோடு சற்று திமிரையும் தந்தது.
இதெல்லாம் மாறும் என்பது போல் அடுத்து வந்த காலங்களில் என் வாழ்வை முற்றிலும் மாற்றிப் போட்டது! உயரத்தில் இருந்து புதைகுழிக்குள் தள்ளி விடப் பட்டவள் போலானேன்.
என் பெரும் மூச்சில் என் எதிர்பார்ப்பு, கற்பனைகள், என் காதல் எல்லாமே கரைந்து கொண்டே போனது…
எத்தனை கஷ்டங்களை நிறைவேறாத ஆசைகளைக் கூட சமாளித்து வாழ்ந்த மனதிற்கு இந்த வாழ்வை ஏற்க முடியவில்லை. சமுதாயம், கலாசாரம், பண்பாடு என்ற போர்வையில் என் வாழ்வு பொலிவிழந்து போனது. மறுபடியும் துரோகம், ஏமாற்றம், துன்பம் எல்லாமே எனக்கு வலியோடு மன வலிமையையும் தந்தது.
யாரிடமும் என் மனதை நான் திறந்து முழுமையாகக் காட்ட வில்லை. பிள்ளைகள் பிறந்தனர். ஏதோவொரு பிடிப்பு வந்தது. பிடிக்காத வாழ்வை பிடித்ததாக நடித்து நடித்து வாழ்ந்தேன். நாடிதளர்ந்து, நலிவுற முன் கடவுளே தஞ்சம் என்றானேன்.
ஏதோவொரு உள்ளுணர்வு உந்தித் தள்ளியது. நகர்ந்தேன், எனக்கான காலம் ஒன்று வரும் என்று உணர்ந்தேன். பிள்ளைகளை முடிந்தளவு நல்ல முறையில் வளர்த்ததோடு, என் கடமைகள் அனைத்தையும் மனநிறைவோடு செய்தேன். நல்லமகளாக, மனைவியாக, சகோதரியாக தாயாக இருந்தேன்.
இப்போது திரும்பிப் பார்க்கும் போது எனக்கான காலங்கள் ஓடிச் சென்று விட்டன. இந்த மூன்று வருடங்கள் இலக்கியம் எனும் பயணத்தில் தடம் பதித்திருக்கிறேன். அது எனக்கான மன ஆறுதலை தந்தது.
யாரும் தராத நிம்மதியைத் தருகின்றது.
இந்த பயணத்தில், எத்தனையோ உறவுகள், நட்புக்கள், எதுவரை என்று தெரியாத வரைக்கும் பயணிக்கின்றார்கள். ஒரு சிலர் அதையும் மீறிக் காதல் என்ற பெயரை உச்சரிக்கும் போது, நானும் சற்று நிற்காது கொடுத்து கேட்டுப் பார்த்தேன்.
எல்லாமே வெறும் எதிர் ஒலிகளாக மனதைத் தொடலாம் ஆனால் மனதை நிரப்ப முடியாது. இதுவரை மனதை நிரப்பியதும் இல்லை.
சில தெளிவுகள் சில நெழிவுகள் இன்னும் சில சுழிவுகள் இதுதான் நிசம் என்று உணர்கிறேன். இருக்கும் ஒவ்வொரு நிமிடங்களையும் ஒரு புன்னகையோடு கடந்து போக முயன்று கொண்டே இருக்கிறேன். இதுநாள் வரையிலும் இனிமேலும்…
இதற்கு மேல் எழுதப் படாத அந்த வெற்றுத் தாள்கள் எதையோ சொல்வது போல் சடசடவென சிறகடிக்கிறது…. அப்படியே அந்த நாட்குறிப்பை கட்டுக்குள் கொண்டு வந்து மேசை மீது வைக்கின்றேன்.
சில விடயங்கள் எனக்கும் தெளிவைத் தருகிறது. பலருடைய சிரிப்புக்குப் பின்னால் யாரும் உணராத ஒரு மயான துன்பம் மருண்டு கிடக்கின்றது என்பதாக மனம் உணர்த்தியது.
வன்னியூர் ஆர்.ஜெ.கலா