காலை பகலவனின் உஷ்ணம் சற்று அதிகமான நேரமது.. கட்டடங்களுக்கு மேலால் ஊடுருவும் பறவைகளோ சாம்பலாக மாறும் அனல். இருந்தும் வீட்டு முற்றத்தில் வெறுங்கோலோடு அவசர அவசரமாக பாக்கு வெட்டியை தொலைத்த தாத்தா போல தனது தாயாரை தேடிக் கொண்டிருந்தாள் இளைய மகளான மிஸ்ரா. ‘உம்மா’ என்ற வார்த்தையை பலமுறை கேட்டு சலிக்காத நிலையிலும் சற்று ஓரிரு மயிர்க்கற்றைகள் கறுப்பு நிறமாக எட்டிப் பார்த்த நிலையிலும் சமையலறையில் இருந்து திரை மறைப்பை நீக்கி எட்டிப் பார்த்தாள் மைமூன்.
‘ஏண்டி மகளே என்ன தங்கம் கூப்பிட்டது?’ என்று மைமுன் சொல்லவே..
‘ சல்மா தாத்தா ஒரு விசயம் சொன்னாங்க’ என தனது வாயின் நுனியில் இருந்து அவற்றை சொல்லியே விட்டாள்..
என்ன சொன்னாங்க என்று மைமுன் கேட்க முன்னே ‘ நாளைக்கு மதிய சாப்பாட்டுக்கு பிறகு ஒரு கட்சி வேட்பாளரின் பிரச்சாரமாம் வந்தால் 2000 ரூபாய் கிடைக்குமா அவங்களும் போறயாம் உங்களையும் வரட்டாமாம்’ என்று சொல்லிக்கொண்டு நிற்காமல் சென்று விட்டாள்.. இந்த வார்த்தையை கேட்ட மைமூனுக்கோ தனது உடலை கிள்ளி பார்க்க கூட நேரம் இருக்கவில்லை..
‘ போவதா உம்மா ‘ என்று ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டியபடி மைமூனை பார்க்காமலே கேட்டாள் மிஸ்ரா.. மைமூனுக்குள் இருந்த ஆனந்தங்களோ ஏராளம் என உணர்ந்த மிஸ்ராவோ அவளின் மௌனத்திலேயே உணர்ந்து கொண்டாள். மைமூன் என்பவள் விதவைதான் என்று அறிந்த சல்மா தான் இதனை செய்திருக்க வேண்டும் என மனதிற்குள் சல்மாவுக்கு நன்றி சொன்னாள் மைமூன்.
தன் கணவனை இழந்து அந்த துயர் வெள்ளத்தில் மூழ்கி இன்னும் விடுபடவே இல்லை என்பதுடன் ‘இந்த கடவுளுக்கு கருணையே இல்லை’ என்று சிலர் சொல்லும் அளவிற்கு அவளின் மூத்த மகளோ சென்ற வாரம் தான் மரித்துப் போனாள். சற்று பாழடைந்த தோற்றத்தில் வீடு. சரிந்து கிடக்கும் வீட்டின் முற்றத்து மணல். ஏற்ற இறக்கம் கொண்ட அவளின் மாளிகை அது. தன் மகளை பறிகொடுத்த நிலையில் இன்னும் இரண்டு பெண்பிள்ளைகளின் வாழ்க்கையை கரை சேர்ப்பது குறித்து நித்தம் யோசனை. கிடைக்கும் வேலைகளில் கிடைக்கும் வீடுகளில் கிடைக்கும் நேரத்தில் செய்து தன் பிள்ளைகளுக்காக வாழ்பவள் அவள்.
‘மிஸ்ரா எங்கம்மா’ என அப்போது பாடசாலை விட்டு வந்த தனது இரண்டாவது மகளின் குரல் கேட்டு அந்த இரண்டாயிரம் ரூபாவினால் கற்பனை உலகத்தில் மிதந்த மைமூன் நினைவு திரும்பினாள்.
கதிரவனின் அடுத்த வாழ்வும் வந்தது மதியமும் ஆனது தன் பிள்ளைகளை வீட்டில் பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிலே அவளது அரை மனதையும் அந்த நோட்டில் அரை மனதையும் விட்டுவிட்டு பேருந்தில் ஏறினாள். காலடி எடுத்து வைத்த தருணம் தன் கண்கள் சல்மாவை தேடுவதை அவள் உணர்ந்தாள் அந்த பேருந்துக்குள் நெரிசல்களை வழி நடாத்தும் சில நபர்களிடமிருந்து அவள் வேறு பேருந்தில் ஏறிச் சென்று இருக்கலாம் என தெரிய வந்தது. ஏறத்தாழ ஐந்தாறு பேருந்துகள் முன்னும் பின்னும் போவது உணர்ந்த அவளுக்கோ பயம் பிடித்துக் கொண்டது. ‘ கூட்டம் அதிகமாக இருந்தால் காசு கொடுப்பார்களா’ என ஒரு தரம் அந்த பயத்தினால் மனதிற்குள் உச்சரித்தாள். ஜன்னலோரம் காற்று இதமான தன் கண்களில் வருட அந்த பணத்தை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என தன் சிந்தனையை தொகுத்தாள்.
சற்று நேரம் கடந்து போனதே தெரியாத அளவிற்கு ஜன்னலோர தென்றல் அவள் சருமத்தை தழுவியது ஏதோ ஒரு முன்பின் தெரியாத ஒரு இடத்தில் இறக்கப்பட்டாள். வழிநெடுக சனம் நிறைந்து வழிந்தன. வழிநடத்தும் நபர்கள் கட்டளையிட்டனர். அதை செவிமடுப்பதற்குள் கையில் ஒரு பொட்டலம் தேடி வந்தது. விரித்தாள். உள்ளே சோறு கொஞ்சம் கறி வகைகள் சற்றும் இருந்தது. அதை தன் பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்ல அவள் மனம் எண்ணியது. அவ்வாறே செய்தாள்.
அந்தப் பிரித்த பொட்டலத்தை மடித்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்குள் அவள் சன நெரிசலினால் ஒதுக்கப்பட்டு ஓர் இடுக்குக்குள் கொண்டு செல்லப்பட்டாள். சூரியன் தூங்கச் செல்லும் நேரம் அது. எதுவென்றே தெரியாத ஊரில் எந்த சொந்த பந்தம் கிடையாது ஊரில் தான் சிக்கி இருப்பதை உணர்ந்தாள். ஒரு நிமிடம் கண்ணை மூடி மனத்திரையில் தோன்றியவற்றை வாய் வழியே முனுமுனுத்தாள்.’ அல்லாஹ்வே! இது என்ன சோதனை? நான் வந்த இடமும் தெரியவில்லை போவதற்கு வழியும் தெரியவில்லை. என்ன சோதனை இது!’ எனக்கு கூறி சற்று நேரம் நடக்கலானாள் அவள் கால் முன் செல்ல மனதோ தனிமையை நினைத்து வருந்தாமல் அவளது பிள்ளைகளுக்கு அவளை தவிர வேறு நாதியில்லை என்று நினைத்து உருகினாள். தன் தாய்மை குணம் உயர்ந்தோங்கியது.
நடக்க நடக்க தூரம் தெரியவில்லை. உதவிக்கு யாருமில்லாமல் அந்த சன நெரிசலுடன் தள்ளாடப்பட்டு மீண்டும் ஊர் சென்று விடுவோம் என்று அவளுக்கோ கையில் சிறிய தொகை கூட இல்லை என்பதே நிதர்சனம். ஒரு சோற்றுப் பார்சலை யார் விலைக்கு வாங்குவார் என அவள் மனம் அலக்கழித்தாலும் அவள் அதையே எதிர்பார்த்தாள்.
ஒருவரும் வரவில்லை யாரிடமாவது உதவி கேட்பது என்றால் கூட அங்கு யாரிடம் போவது முன்பின் தெரியாத ஊர் அந்த இரண்டாயிரமும் தான் வந்த பேருந்தும் திரும்பி வராது என்பதை அவள் நினைவு படுத்த நீண்ட நேரம் எடுக்கவில்லை. அங்கே நெரிசல் அருகே ஒரு 50 ரூபாய் பணம் காற்றில் தரையில் மெல்ல மெல்ல இழுபட்டு இவள் பக்கம் வருவதை கண்ட அவளோ எடுப்பதற்கு எத்தணித்தாள். ஆனால் மனம் சம்மதிக்கவில்லை. இதை வைத்துக் கொண்டு நம் வீடு திரும்ப முடியாது என்பது அவள் அறிந்ததே. காத்திருந்தாள்.
தவித்தாள். சுற்று முற்றும் பார்த்தாள். இரவின் ராஜ்ஜியம் எங்கும் காணப்பட்டது. அவளால் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை.
தன் பிள்ளைகளின் நிலையை நினைத்து வருந்தினாள் ஒரு துளி கண்ணீர் அவளது கையின் மணிக்கட்டில் விழுவதாக அவளது மூளைக்கு தகவல் சென்றது. ஆனால் அவள் சிந்தனை வேறு. கையில் உணவை வைத்து செய்வதறியாது கண்ணீர் சொரிந்தாள். நம் வாழ்க்கை இனி அவ்வளவுதான் என்னை திட்டி தடுமாறியவளுக்கு ஒரு குரல் எங்கிருந்தோ
‘ யாருங்க நீங்க எங்க இருந்து வாரீங்க’
சற்று இளமை தோற்றம். ஓரளவு தொப்பை விழுந்திருந்தாலும் அதை மூடி மறைக்க ஒரு சட்டை. கம்பீரக் குரல். மூக்கின் நுனியில் உட்கார்ந்து இருக்கும் மூக்கு கண்ணாடி. ஒட்ட நறுக்கிய மீசை. முகத்தின் நடுவே சற்று கறுப்பு மை. அப்போதுதான் கோதிவிட்டது போல மயிர் கற்றைகள். இருட்டிலும் ‘பல்பு’ போட்டது போல இரண்டு பிரகாச விழிகள். உயரிய தோற்றம். இதையெல்லாம் மைமூன் கவனிக்க தவறவில்லை. இந்த அடையாளத்தில் ஒரு ஆண் வந்து நிற்பதையும் கவனிக்க தவறவில்லை. இருந்தும் பசி பட்டினியில் வாடியவனுக்கு திடீரென கொடுக்கப்பட்ட பிரியாணி போல அந்த மனிதரை பார்த்தவுடன் தன் துயர கதையை ஆடையில் இருந்து நூல் பிரிப்பது போல கொட்டி தீர்த்தாள்.
அந்த மனிதரோ ‘ஏனம்மா.. இப்படித்தான் ஏமாற்றுவானுங்க. நாம ஏழைகளா இருக்கிறதால தான் இப்படி ஏமாத்துறாங்க. கவலைப்படாதீங்க நான் உதவி செய்றன்.’
‘ கோடி புண்ணியம் தருவான் அல்லாஹ் உனக்கு மகன்.
உன்ன எப்பவும் மறக்கான் நான்’ தன்னால் முடிந்த ஒரு தொகை பணத்தை எடுத்து கொடுத்த அந்த மனிதரை கட்டியணைத்து தாய் என்ற பாசத்தை தழுவி கைகளிள் சோற்றோடு கண்களில் சோகத்தோடு தன் மகள்களை நினைத்தபடி தன் ஊருக்கு செல்லும் பேருந்து வரும் வரை எதிர் பார்த்து காத்திருந்தால் ஏமாற்றத்தோடு…!!
காத்தான்குடி அம்ஹர்