Home » வாழ்க்கை வளைவு

வாழ்க்கை வளைவு

by Damith Pushpika
November 3, 2024 6:00 am 0 comment

காதர் நானா தான் செய்த பெரிய தவறை நினைத்து மனதில் புழுங்கிக்கொண்டிருந்தார். தனது மனதில் நீங்காத இடம்பிடித்துக் குடிகொண்டிருந்த அருமை மனைவி ஃபழீலா தற்போது உயிரோடு இருந்திருந்தால் தனக்கு இப்படியொரு நிலை நேர்ந்திருக்காது என்பதை நினைக்க நினைக்க காதர் நானாவுக்கு கவலை மிகுதியால் உள்ளம் கலங்கிப் போனது.

அன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் தனது நெருங்கிய நண்பன் மக்கீன் ஹாஜியாரைப் பார்த்துவிட்டு வந்தால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தவராக தனது கடைசி மகள் அகீலாவிடம் சொல்லிவிட்டு மெதுவாக வீட்டிலிருந்து கிளம்பி வந்துவிட்டார்.

பாதையில் தெரிந்த முகங்கள், அக்கம் பக்கத்தவர்கள், நண்பர்களைக் காணும் போது அவர்களுடன் கொஞ்சமாகக் கதைத்துக்கொண்டே வருவது காதர் நானாவின் மனதுக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. ஒருவாறு மக்கீன் ஹாஜியாரின் வீட்டை அடைந்த காதர் நானா,

அஸ்ஸலாமு அலைக்கும் மக்கீன் .. என்று அழைத்தவாறே கதவைத் தட்டினார். தன் நண்பனின் குரலை எதிர்பாராத தருணத்தில் கேட்ட மக்கீன் ஹாஜியார்,

மச்சான் காதர் நீயா..? என்று கேட்டபடி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்.

தனது நெருங்கிய நண்பன் காதர், நீண்ட நாட்களுக்குப் பிறகு வீடு வந்திருக்கிறான். ஏதோ முக்கியமான விடயமாகத்தான் இருக்கும், என்று நினைத்துக்கொண்டவராக காதரைக் கட்டித் தழுவி அன்போடு குசலம் விசாரித்தார். தனது நண்பனின் மனநிலையை ஊகித்துக்கொண்ட மக்கீன், பழைய கால மற்றும் பாடசாலைக் கால சுவாரஸ்யமான கதைகள் சிலவற்றைக் கூறி காதரின் மனநிலையை மாற்ற முயன்றார்.

இதற்கிடையில் மக்கீன் ஹாஜியாரின் மனைவி சிற்றுண்டி வகைகளோடும் தேநீரோடும் வந்து எட்டிப் பார்த்துக்கொண்டு,

“இந்தாங்கோ.. இதக்கொஞ்சம் எடுங்கோ.” என்று கையிலிருந்த தட்டை நீட்டினாள்.

நண்பர்கள் இருவரும் கதைகள் பேசிக்கொண்டே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டவாறு தேநீரையும் அருந்தினர்.

“மச்சான் இன்றைக்கு இரவைக்கும் நீ எங்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும்” என்று காதரை அன்பாகக் கேட்டுக்கொண்டார்.

“மச்சான் நான் உன்னோட முக்கியமாக ஒரு விசயம் பேசத்தான் இப்போது வந்திருக்கிறேன். இங்கே கதைக்க முடியாது. பக்கத்திலுள்ள சிறுவர் பூங்காவரை கொஞ்சம் போய் வருவமா” என்று மக்கீனுக்கு கேட்குமளவு மெதுவாகச் சொன்னார் காதர்.

“சரி மச்சான் கொஞ்சம் நில்லு. மனைவியிடம் சொல்லிவிட்டு வருகின்றேன்..”

ஞாயிற்றுக் கிழமை மாலை என்பதால் சிறுவர் பூங்கா சிறுவர்களாலும் பெற்றோர்களாலும் நிரம்பி வழிந்தது. சனம் குறைந்த ஓரிடத்தைத் தேடிப் பிடித்து நண்பர்கள் இருவரும் ஒரு பென்ச்சில் அமர்ந்துகொண்டனர். கலங்கிய கண்களோடு இருந்த காதரைக் கண்டுவிட்ட மக்கீன் ஹாஜியாரே முதலில் பேசத் தொடங்கினார்.

“என்ன மச்சான் நீ முன்பு போலயே இல்லை.. மிகுந்த கவலையோடு இருக்கிறாய். ஹயாத்து மௌத்து எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் நடக்கும். அதற்காக நாம் உடைந்து போய்விடக் கூடாது தானே.

நாங்களும் ஒரு நாள் மௌத்தாகுவோம் என்பதை நினைத்துக்கொண்டால் தெளிவு கிடைக்கும் மச்சான். நான் சொல்வது எல்லாம் உனக்கு நன்றாக விளங்குகிறதுதானே மச்சான்..” என்றார் மக்கீன்.

“அதுசரி மச்சான்.. நீ என்ட இடத்தில் இருந்து பார்த்தால் தான் உனக்கு என்ட பிரச்சினை இன்னும் தெளிவாக விளங்கும். போன மாதமும் நான் உன்னிடம் வந்து எனது பிரச்சினைகள் பற்றிச் சொன்னேன் தானே..”

“எனக்கு உனது பிரச்சினைகள் எல்லாம் நன்றாகத் தெரியும். இப்போ என்ன பிரச்சினை புதிதாக வந்திருக்கு? நான் எப்படி உனக்கு உதவி செய்ய வேண்டும்? சொல்லு மச்சான்..”

“எனக்கு சொல்வதற்கே வெட்கமாகத்தான் இருக்கு. இப்போ எனது மகள் அகீலா எனக்கு ஒழுங்காக சாப்பாடு கூட தாரதில்லை. சில நாட்களில் பகல் வேளைகளில் அதிகமான பசியோடு நான் இருப்பேன். அவள் உரிய நேரத்துக்கு சாப்பாடு சமைப்பதில்லை மச்சான்.

பேரப் பிள்ளைகளும் அவ்வப்போது கடையில் ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுக்கொள்வதால் அகீலாவுக்கு உரிய நேரத்துக்கு சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மருமகனும் வேலை முடிந்து இரவு எட்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவார். அவருக்கு இரவு ஒன்பது மணிக்கெல்லாம் சுவையான வீட்டுச் சாப்பாடு இருக்க வேண்டும். அதனால் இரவுச் சாப்பாட்டை உரிய நேரத்துக்கே மகள் சமைத்து முடிப்பாள்.

பகல் சாப்பாட்டை உரிய நேரத்துக்கு தயாரிக்க வேண்டும் என்று அவள் அக்கறை காட்டுவதில்லை. அவள் சமைத்து முடிக்கும்வரை நான் பசியோடு காத்திருக்க வேண்டும். பசி தாங்க முடியாத சில நாட்களில் பகல் சாப்பாட்டை நான் கடையிலும் வாங்கிச் சாப்பிட்டுக்கொள்வேன். எனது சீதேவி ஃபழீலா இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? எனக்கும் இப்போ சுகர், பிரசர், கொலஸ்ட்ரோல் என்று எல்லாம் வந்துவிட்டது. கண்ட கண்டதெல்லாம் கடையில சாப்பிட முடியாது. ஆரோக்கியமான வீட்டுச் சாப்பாடுதான் சாப்பிட வேண்டும் என்று டாக்டர் சொல்லியுள்ளார்..”

“கோவிச்சுக்கொள்ளாதே மச்சான்.. நான் ஒரு உண்மையைச் சொல்லுகின்றேன். தப்பு உன்னுடையதுதான். அவர்களை இப்போது குறை சொல்லிப் பயனில்லை..”

” என்னடா நீ இப்படிச் சொல்கின்றாய்? நான் உன்னை நம்பித்தானே இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். உன்னிடமிருந்து ஆறுதல் வார்த்தையைத் தானே நான் எதிர்பார்க்கிறேன். உனக்கும் என்ட பிரச்சினைகள் சரியாக விளங்குதில்ல போல..|| என்று மிகவும் கலங்கியபடி கூறினார் காதர் நானா.

” இல்லடா மச்சான் நான் உன்ன நல்லா விளங்கி வெச்சிருக்கிறபடியாலத்தான் அப்படிச் சொன்னேன். நீயே கொஞ்சம் நினைச்சிப் பாரு உன்ட மனைவி ஃபழீலா மௌத்தானவுடன் உன்ட பிள்ளைகள் உனக்கு இப்படி அசௌகரியங்களை ஏற்படுத்தவில்லைதானே..? நீ எப்போ உன்ட வீடு, காணி, ஏனைய சொத்துக்கள் எல்லாவற்றையும் உனது நான்கு பிள்ளைகளுக்கும் பகிர்ந்து எழுதிக் கொடுத்தாயோ அதற்குப் பின்னர் தான் உனக்கு ஒவ்வொரு பிரச்சினையாக வரத்தொடங்கியிருக்கு மச்சான். தவறை நீதான் செய்தாய் என்று, அதைத்தான் நான் சென்னேன். உனக்கு இப்போது விளங்குகிறதா..?||

“எனக்குப் பிறகுள்ள காலத்தில் எனது பிள்ளைகள் நால்வரும் நன்றாக இருக்க வேண்டும் என்றுதானே நான் நினைத்தேன். மட்டுல்லாமல் எனது கடைசிக் காலத்துக்கு எனது நான்கு பிள்ளைகளுமே என்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பித்தானே நான் அவர்களுக்கு நியாயமான முறையில் எனது சொத்துக்களைப் பங்கிட்டு எழுதிக்கொடுத்தேன். இதில் என் தவறு என்ன இருக்கிறது நீயே சொல்லு..?

“உனது நோக்கம் சரிதான். ஆனால் அவர்களில் ஒருவரும் அதனை அப்படி நினைக்கவில்லையே. வயோதிபத் தாய், தந்தையரை முறையாகக் கவனித்துப் பார்ப்பது, அதிகமான நன்மைகளை ஈட்டித்தருகின்ற விசயம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

அவர்களிடையே இஸ்லாமிய அறிவு போதாதென்று நினைக்கிறேன். “என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்” (அல்குர்ஆன்) என்று அல்லாஹ்; கட்டளையிட்டுள்ளான். அதுபோல அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு நபிவர்கள், உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது என்றார். பிறகு எது? என்று அவர்களிடம் கேட்டதற்கு தாய் தந்தையருக்கு நன்மை புரிவது என்றே பதில் சொல்லியுள்ளார்கள்.

இப்போதுள்ள சில பிள்ளைகளுக்கு மார்க்க அறிவு குறைவு என்றே நினைக்கத் தோன்றுகின்றது மச்சான். உனது பிள்ளைகளும் அப்படியானவர்கள்தான்.”

“நான் எவ்வளவு கஷ்டப்பட்டு சொந்தமாகக் காணி வாங்கி, வீடு கட்டிக் கலியாணம் முடிச்சேன். ஃபழீலாவிடம் ஒரு சதமும் காசோ சொத்தோ சீதனம் எடுக்கவில்லை. அந்தக் காலத்தில எனக்கு பொண் தாரதுக்கு நிறைய ஆக்கள் ரெடியாக இருந்தாங்க. வசதி குறைஞ்சவங்களாக இருந்தாலும் ஃபழீலாவின் நற்குணத்துக்காகத்தான் நான் அவவக் கலியாணம் முடிச்சு நான்கு பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்தேன்.

ஃபழீலா இருக்கும் போது வீட்டில் நான் ராஜா மாதிரித்தான் இருந்தேன். எனக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. பிள்ளைகள் நால்வரையும் படிக்க வைத்து உரிய காலத்தில் நல்ல முறையில் கலியாணம் முடித்துக்கொடுத்து ஃபழீலாவும் நானும் பேரப் பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு மிகவும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும்தான் வாழ்ந்து வந்தோம்.

ஃபழீலா போய்ச் சேர்ந்தபின் இப்போது எல்லாம் தலைகீழாகப் போச்சு.

பிள்ளைகளால இப்படி ஒரு சோதனை வருமென்று நான் கனவிலும் நினைக்கல்ல மச்சான்.” பூகம்பமாய் மனம் வெடித்தார் காதர் நானா.

காதர் மிகுந்த மனக் கவலையோடு சொல்வதை மக்கீன் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். காதரே மீண்டும் தொடர்ந்தார்.

“நானும் மாதம் மூன்று நாட்கள் என்று ஒவ்வொரு மாதமும் ஜமாத்தில போகின்றேன். அந்த நாட்களில் தான் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. மற்ற நாட்களில் வீட்டில பேரப் பிள்ளைகளுடனேயே நேரம் போய்விடும். ஆறுதலாக இருந்து ஒரு பத்திரிகை வாசிக்கக்கூட, நேரம் இருக்காது. ஒரு மாற்றத்துக்காக மற்ற மூன்று பிள்ளைகளிடமும் போய் எப்போதாவது தங்கிவிட்டு வந்தாலும் கடைசி மகள் அகீலாவுக்கு நான் கட்டிய முழு வீட்டையும் கொடுத்துவிட்ட கோபத்தை அவர்கள் எனக்கு வெளிக்காட்டிக்கொள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நியாயமாகத்தான் நான் அவர்களுக்கு எனது சொத்துக்களைப் பங்கிட்டுக்கொடுத்துள்ளேன்..”

“நீயும் உனது 60 வயது வரை அரச துறையில் தொழில் செய்து ‘பென்சன்’ பெற்றுக்கொண்டவர்கள். அல்லாஹ்வின் கிருபையால் உனக்கு மாதா மாதம் ஒரு தொகை ‘பென்சன்’ காசு கிடைக்கிறது. ஃபழீலா மௌத்தான ஆறு மாத காலங்களிலேயே இன்னுமொரு திருமணம் முடித்து விதவைப் பெண் ஒருத்திக்கு வாழ்வு கொடுக்க முயற்சி எடுக்கும்படி நான் உனக்குக் கூறினேன். நீதான் உன் பிள்ளைகளுக்கு விருப்பமில்லை என்று அந்த ஆலோசனையைக் கேட்கவில்லை.

இப்போ நாங்கள் இரண்டு பேரும் எழுபதுகளைக் கடந்துகொண்டிருக்கிறோம். எப்போதும் போல இந்தக் கடைசி காலத்திலையும் எம்மைப் படைத்த நாயனுக்காக வேண்டி சோதனைகளைப் பொறுத்துக்கொண்டு கப்ர் வாழ்க்கைக்காக நன்மைகளைத் தேடிக்கொள்ள வேண்டும்.

உன்ட பிள்ளைகளோட நான் பேசலாம்தான். ஆனால் அவர்கள் அதனை விரும்பமாட்டார்கள். அப்படிப் பேசினாலும் அது உனக்கு மேலும் ஒரு பிரச்சினையாகக் கூடாதென்றே நினைக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக இருந்துகொள்ளு மச்சான். எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்..” என்றார் மக்கீன்.

“ஆமாம். பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்? ஒன்று எனது மௌத்துக்குப் பிறகு சொத்துக்கள் பிள்ளைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என ஏற்பாடு செய்திருந்திருக்கலாம்.

ஃபழீலா இருக்கும் போதே இந்த ஏற்பாடுகளை நான் செய்திருக்க வேண்டும்.

எனது பிள்ளைகளுக்காவது தாய் தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை உணர்ந்து செய்யுமாறு ஆரம்பத்திலேயே மார்க்க அறிவையூட்டி வளர்த்திருக்க வேண்டும்.

தலைக்கு மேல் வெள்ளம் வந்த பிறகு நான் இவ்வாறு யோசித்து என்னதான் நடந்துவிடப் போகிறது என்று எண்ணிய காதர் நானா, ‘எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்| என்ற மக்கீனின் வார்த்தையில் ஆறுதலடைந்து, நீண்டதொரு பெருமூச்சோடு அமைதியாக விடைபெற்றுச் சென்றார்!!!

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division