Home » நினைவெல்லாம்
தீபாவளி சிறப்பு சிறுகதை

நினைவெல்லாம்

by Damith Pushpika
October 27, 2024 6:08 am 0 comment

“அப்பாடா.. எட்டு வருடங்கள்.. எப்படிப் போனதோ தெரியல்ல..”. வாய் முணு முணுக்க.. சார்னிய தேயிலைத் தோட்ட அம்பாள் கோயில் சந்நிதி மண்டபத்து வாயிற் படிக்கட்டில் அமர்ந்தான் சந்திரன்.

பச்சைப் பசும் தளிர்கள்.. பார்ப்போரை இச்சை கொள்ள வைக்கும் சார்னியா தேயிலைத் தோட்டம்.. பதுளையில் மிக உயரமான மலை சூழ்ந்த அற்புதமான பிரதேசம். அது. இயற்கை அழகு கொழிக்கும் சார்னியாத் தேயிலைத் தோட்டத்தின் வடக்குப் பக்கமாக அமைந்திருந்தது முத்து மாரி அம்பாள் ஆலயம். எட்டு வருடங்களுக்குப் பின் சார்னியாத் தோட்டத்துக்கு மீண்டும் வந்திருந்தான் சந்திரன்.

“அம்பாள் ஆலயத்தில் மாற்றம் ஏதும் இல்லயே. இப்ப கூட அம்பாள் ஆலயம் அப்படித்தானே இரிக்குது. எப்படியும் அம்பாளுக்கு எத்தனை திருவிழாக்கள்.. விசேட பூசைகள் நடந்திரிக்கும். நான்தான் அவை எதையும் பாக்கக் கொடுத்து வைக்கல்ல.

”அதோ.. வருவது ஆலயப் பூசாரிதான். இப்பவும் அவருதான் பூசாரியாக இருக்காரு அவரிலதான் கொஞ்சம் மாற்றமிருக்கு அவருட்டு தலை மயிர் வெள்ளயாப் போய் முன் வழுக்கை விழுந்திருந்தது அவளவுதான் ”.

சந்திரன் ஆலய பூசாரியை நன்கு அடையாளம் கண்டு கொண்டான். மதிய நேரப் பூசைக்கு இன்னமும் நேரம் இருந்தது. இனிமேல்தான் பக்தர்கள் வருவார்கள். ஒற்றையாளாக, சந்திரன் மட்டும்தான் ஆலயத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்தான். அவன் இருப்பதைக் கண்டதும் அருகில் பூசாரி வந்தார்.

“ஓ..என்னை அவரு அடையாளம் கண்டு கொண்டார் போலும். அதான் என்னிடம் கதைக்க வரார்”.

அவன் மனதில் எழுந்த.. மகிழ்ச்சி அடுத்த கணம் காணாமல் போய் விடும் என சந்திரன் நினைக்கவில்லை.

அவனருகில் பூசாரி வந்ததும். சந்திரன் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றான். ”அவர் என்னை எப்படித்தான் மறப்பார், அவருக்கு நடந்தவை எல்லாம் தெரியுமே”.

அவன் மனதில் பழைய சம்பவங்கள் அந்த நேரத்தில் வந்து நங்கூரமிட்டன.

“ம்ம்..யாரப்பா நீ, பூசைக்கு வந்தியா ஆ”

அவரது வினாவில் சந்திரன் உடைந்து போனது என்னவோ உண்மைதான். பூசாரியைப் பார்த்து தலையாட்டி விட்டு அவன் அவரோடு கதைக்க எத்தனித்தான்.பூசாரி அவனது பதிலை எதிர்பார்த்து நிற்கவில்லை. அவரும் தலையசைத்து விட்டு மறு நிமிடம் கோயிலுக்குள் நுழைந்து விட்டார். அவர் வேலைதான் அவருக்கு முக்கியம். அந்த ஏமாற்றமும் வேதனையும் சந்திரனை வருத்தியது.

“தினமும் கோயிலுக்கு வரும் என்னய பூசாரி எப்படி மறந்து போனார். அந்தச் சம்பவம் நடந்து எட்டு வருடமாச்சே.. மறக்காமல் இருப்பாரா”.

“நளினி எம் மாத்திரம், அவளும் என்னை மறந்து போய் இருப்பாள். கலியாணம் கூட செஞ்சிருப்பாள். அவளுக்கு இப்ப பிள்ளயளும் இருப்பாங்க”.

“நளினி, எப்படி என்னய ஞாபகத்தில வச்சிருப்பாள். செரி எங்காவது ஒரு தடவ அவள நான் பார்த்தாலே போதும்”.

அவனுள் எழுந்த ஆயிரம் வினாக்கள் அவனை ஆட்டிப் படைத்தது. ஆனால் விடை தெரியாத வினாக்கள். பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

சார்னிய தேயிலைத் தோட்டத்தின் மிகச் சிறிய நகரம் ‘கந்தகெதற’. அது எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும். வீதியின் இரு மருங்கும் நீண்ட கடைத் தொகுதி. அவற்றை அண்மித்து இணைந்திருந்த குடியிருப்புக்களில், மூவின மக்களும் ஐக்கியமாக வாழ்ந்து வாருகின்றனர். அங்கு ‘பள்ளிவாசல்’ கூடவே ‘பன்சல’யும் இருக்கு. தோட்டத்து லயன்களில் வாழும் தொழிலார்களின் நாளாந்த தேவைகள் பலதை அந்த நகரம்தான் பூர்த்தி செய்து வருகிறது.

‘கந்தகெதற’ நகரும் இந்த எட்டு வருடத்தில் எந்த மாற்றத்தையும் கண்டிருக்கவில்லை. ஆனாலும் ஒரு பொலிஸ் நிலையமும். இலங்கை வங்கிக் கிளையும்.. புதிதாக வந்து அங்கு முளைத்திருந்தன.

கணக்குப்பிள்ளை ராமையாவின் தோட்டத்து வீடு. அந்தச் சிறிய நகரை அண்டி இருநூறு மீற்றர் தூரத்தில் கீழ்ப்பகுதியில் இருந்தது. அந்தக் குடும்பத்தின் ஒரே வாரிசு சந்திரன். பதுளைக்கு போய் ஏ.எல் படித்த சந்திரன் பாதியில் படிப்பை விட்டு விட்டான்.

கங்காணி ராமையாவின் வீட்டுக்கு எதிர்ப்புறமாக சற்றுத்தள்ளி, மேற்பகுதியில் சில மாதங்களாகப் பூட்டப்பட்டுக் கிடந்த கிளாக்கர் ‘குவாட்டஸ்’ அன்று கலகலப்பாக இருந்தது. அது அந்த தோட்டத்து கிளாக்கருக்கு உரிய ‘குவாட்டர்ஸ்’.

தோட்ட அலுவலகத்துக்கு அன்று இடமாற்றம் பெற்று வந்திருந்தது கிளாக்கர் குமரேசன் குடும்பம். அதனால, அந்த கிளாக்கர் ‘குவாட்டஸ்’சும் அன்று உயிர்ப்புப் பெற்றிருந்தது.

“வீட்டுல யாராவது.. இருக்கீங்களா.. வெளியில கொஞ்சம் வருவிங்களா“.

புதிதாக வந்த குமரேசன் கிளாக்கர் மனைவி அகிலாண்டம், கங்காணி ராமையா ‘குவாட்டஸ்’க்கு வந்து கதவைத் தட்டினாள்.

“நீங்க.. ”

“நாங்கதான், மேல உள்ள ‘குவாட்டஸ்சு’க்கு புதுசாக வத்திருக்கம். இன்னைக்கு பால் பொங்கிறம். நீங்கதாம் எங்களின் பக்கமாக இருக்கிறீங்கள். நீங்களும் வந்திடுங்க“.

“ஓ..அது நீங்கானா..செரிங்க. ஏதாச்சும் தேவன்னா கேளுங்க..அவரு வேலக்கி போயிருக்காரு..நாங்க வாறம்”.

“சரிங்க.. நீங்க இப்பவே வந்திடுங்க”. கிளாக்கர் மனைவி போய் விட்டாள்.

“அப்பாவும் இன்னுந்தான் வரல்ல. சந்திரன் நீயும் வா. அங்க போய்த்து வருலாம்”.

“வேனா..ம்மா நானு வரல்ல. நீங்க போங்க”.

தாய் மீனாட்சி சந்திரனை கட்டாயப் படுத்தி அழைத்துச் சென்றாள். நிகழ்வு அங்கு தொடங்கியிருந்தது.

“நளினி, வாம்மா.. பால் காச்சி முடிஞ்சி சாமியக் கும்புடுவம்”

மகள் நளினியை அழைத்தாள் தாய் அகிலாண்டம். அறையினுள் இருந்து அப்போது சாமி படம் முன் வந்து நின்றாள் நளினி. “தேவாரத்த பாடும்மா நளினி”.

தந்தை சொன்ன மறுகணம், கணீரென்ற குரலில் தேவாரம் பாடினாள் நளினி. மெய் மறந்து நின்றான் சந்திரன். குமரேசன் கிளாக்கர் தீபம் காட்டினார். அந்த நிமிடத்தை சந்திரனால் மறக்க முடியவில்லை. நளியின் அழகிலும் குரலிலும் மயங்கிப் போனான் அவன்.

தாய் மீனாட்சியும். அகிலாண்டமும் கொடுக்க வாங்கல் வைத்துக் கொள்ளுமளவுக்கு இரண்டு குடும்பங்களும் ஐக்கியமாகி விட்டார்கள்.

நளினி கொழும்பில் ஏ.எல் எக்ஸாம் எழுதிவிட்டு ஐ.ரீ வகுப்புக்கு பதுளை போய் வரும் தகவல்கள் தன் தாய் மூலமாகப் பெற்றுக் கொண்டான் சந்திரன்.

சந்திரனுக்கு எப்படியும் ஒரு தடவை நளினியுடன் கதைக்க வேணும் என்ற அவா மனதில் உதயமானது. ஆனாலும் அதற்கான சந்தர்ப்பம் சூழ்நிலை ஒரு போதும் கிடைக்கவில்லை.

“ஒருவேளை நளினியிடம் போன் இருக்கலாம். ஆனால் அவளது போன் நம்பர் பெறுவது அத்தனை எளிதல்ல..” தனக்குத்தானே சொல்லிக் கொண்ட சந்திரன். அந்தக் கஷ்டத்தை அடுத்து வந்த சில வாரங்களில் புரிந்து கொண்டான். சந்திரன் தன் உள்ளக் கிடக்கையை தன் முத்துமுத்தான கையெழுத்தில் நளினிக்கு கடிதமாக எழுதினான்.

“கடிதத்தைக் கொடுத்து நளினியின் விருப்பத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்”. முடிவே செய்து விட்டான் சந்திரன்.

“வாரத்தில் மூன்று நாட்கள் நளினி ஐ.ரி வகுப்புக்கு பதுளை சென்று வருகிறாள்”. அவன் எழுதிய கடிதத்தைக் கொடுக்க முன்னும் பின்னும் அலைந்ததில் இருந்து தெரிந்து கொண்டான் சந்திரன். வீட்டில் இருந்து நடந்து வந்து கந்தகெதற பஸ் நிறுத்தத்தில் பஸ் எடுப்பதையும்.. திரும்பி வந்து பஸ்சில் இறங்கும் நேரத்தையும் தெரிந்த பின், கடிதத்தைக் கொடுத்து விட நாயாக அலைந்தான். அதிலும், அவனுக்குப் பல தடைகள் வந்தன. அவன் முயற்சிகள் யாவும் ‘விழலுக்கிறைத்த நீரானது’.

“எனக்கு எதுவும் கை கூடாது. நான் ராசியிலாதவன்”. அந்த எண்ணம் அவன் மனதில் தோன்றியது. அடுத்த கணம் அந்த முயற்சியையும் அவன் கைவிட்டான்.

“மீனாட்சி, ஜோசியக்காரர் எங்க வீட்டுக்கு வந்திருக்கார். நாங்கதான் அழைச்சம். நீங்களும் ஜாதகம் பாக்கணுமா? அப்படியானால் நீங்களும் வாங்க.. பாக்கலாம்”.

கங்காணி வீட்டுக்கு வந்து சொல்லி விட்டு திரும்பிய கிளாக்கர் சம்சாரத்தோடு பேச்சுக் கொடுத்தாள் கங்காணி சம்சாரம் மீனாட்சி.

“ஆமாங்க, நானும் எங்க மகன் சந்திரனூட்டு ஜாதகத்த பாக்கணும். எடுத்துண்டு பின்னாடி வாறன் நீங்க போங்கம்மா”.

சில நிமிடங்களில் சந்திரன் ஜாதகத்த தேடி எடுத்தாள் மீனாட்சி.

“அவருட்டு வேல முடிஞ்சி அந்திக்குத்தான் அவரும் வருவாரு. சந்திரன் பதுளை போனவன் எப்பதான் வருவானோ தெரியலயே”.

வீட்டை பூட்டிவிட்டு கிளாக்கர் வீட்டுக்கு விரைந்து போனாள் மீனாட்சி.

“ம்மா, எங்கம்மா போனீங்க, வீடு பூட்டி இருந்திச்சு. வெளியதான் நிக்க வேண்டியதாச்சி”.

பதுளை போயிருந்த சந்திரன் தாய் மீனாட்சியை அக்கம் பக்கம் தேடிக் களைத்துப் போய் நின்ற போதுதான் மீனாட்சி வந்து சேர்ந்தாள்.

“கிளாக்கருட்டுக்கு போனன். அங்க ஜோதிடகாரரு வந்திருந்தாரு. நானு உன்னூட்டு ஜாதகத்த எடுத்துப் போய் பாத்துட்டு வாறன்”. “எதுக்கம்மா இதல்லாம், தேவலாத வேல. அது செரி, அவரு என்னதான் சொன்னாரு”. “இருடா வந்து நா அப்புறமா சொல்றன்”. அடுத்த நெடி காணாமல் போன தாய் மீனாட்சி, சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டாள்.

சந்திரன், மேசையில் இருந்த சாதகத்தைப் புரட்டினான். சோதிடர் தன்னைப் பற்றி எழுதிக் கொடுத்த ஏதாவது தகவல் அதில் இருக்கும் என்ற நப்பாசையில் அவனை அதைப் புரட்ட வைத்தது.

பளீரென நெற்றிப் பொட்டில் பொறி தட்டியது. நளினியின் ஜாதகம் அது. தவறுதலாகக் கைமாறி தாய் கொண்டு வந்திருந்தாள்.

”நளினி.. மகர ராசி.. திருவோணம் நட்சத்திரம்..”. புரட்டிய சாதகத்தை மெல்ல மூடி வைத்து விட்டு நகர்ந்து விட்டான் சந்திரன். அடுத்த நிமிடம் அவர்கள் குவாட்டஸ் முன் கிளாக்கர் மனைவி அகிலாண்டம் வந்து நின்றாள். “மீனாச்சி. மீனாச்சி, வெளிய வாங்கோ நளினியின் ஜாதகத்த மாறி எடுத்து வந்துட்டியள் நீங்க.. அதத் தாங்கோ மீனாச்சி”. வீட்டுக்குள் இருந்து வெளிய வந்த அகிலாண்டத்தை கண்டாள் மீனாட்சி.

“வாங்கோ உள்ள, வந்து இருங்க. நானு அத பாக்கல்ல, இதோ எடுத்து வந்துடுறன்”. ஜாதகம் மேசையில் வைத்த படியே இருந்தது. அதை எடுத்துக் கொடுத்து விட்டாள். “இந்தாங்க உங்கோடது. நானு அப்புறமாக வாறன் மீனாச்சி..”

“செரிங்க, வாங்க..”.

சந்திரன் சாதகத்தை மீனாச்சியிடம் கொடுத்த அகிலாண்டம் போய்விட்டாள் “சந்திரன், நானு இன்னிக்கு அம்பாளு ஆலயதுக்கு போகல. நீதான் போய் அம்பாளுக்கும் அர்ச்சனை போட்டு வா. உன்னூட்டு சாதகத்தில கிரகம் மாறி நிக்காம் பிரச்சின ஏதாச்சும் வருமாம். நீ..போய் அம்பாளக் கும்புட்டுத்து வா”.

சந்திரனுக்கு மறுக்க முடியவில்லை. வழமையாக அம்பாள் ஆலயம் போய் வாறவன். “செரி..செரி.. நானு போறன்”. பூசைத் தட்டுடன் வரிசையில் நின்றனர். பக்தர்கள். வரிசையில் முதல் ஆளாக பூசைத் தட்டுடன் பூசாரி முன் நின்றான் சந்திரன்.

“ஆருக்கு அர்ச்சன..பெயரு, நச்சத்திரம் சொல்லுங்கோ”.

சந்திரன் கொடுத்த பூசைத்தட்டு பூசாரி கைக்கு மாறியது. தாய் மீனாட்சி சொன்னது அவன் சிந்தனையில் இப்போது இருக்கவில்லை. அவனுக்கு அம்பாளுக்கு அர்ச்சன போடும் எண்ணம் வரவில்லை.. ஆனாலும் அவன் சொன்னான்.

“நளினி, திருவோணம்..மகர லக்கினம்”

அவ்வளவு சீக்கரமாக நளினிக்கு அர்ச்சனை போட்ட விவகாரம் கிளாக்கர் குமரேசன் வீட்டில் பூதாகரமாக வெடிக்கும் என சந்திரன் எதிர்பார்க்கவில்லை.

கிளாக்கர் குமரேசன் வீட்டில் பிரளயமே ஏற்றப்பட்டது. கிளாக்கர் ஆத்திரத்தில் கர்ச்சித்தார்.

“நளினி வெளியில வா..”.

“அப்பா..”

“உனக்கு அந்த கங்காணி பய கூட எத்தன நாள் பழக்கம் சொல்லு..”

“அப்பா..புரியல்ல.. எனக்கு எந்த பழக்கமும் இல்லப்பா..”

“எனங்க, நீங்க சொல்றயள். எதுவும் எனக்கும் புரியல்ல”.

தாய் அகிலாண்டம் இடையில் புகுந்தாள்.

“எனக்கு பொய் சொல்ல வேண்டாம். நளினி, அந்த சந்திரன் பயலுக்கு உனது பெயரு.. நச்சத்திரம் நீதானே கொடுத்த..”.

ஆத்திரம் மேலிட நளினிக்கு அடிக்கப் பாய்ந்தார். அகிலாண்டம் அதைத் தடுக்க குறுக்கே வந்தாள். கிளாக்கர் ருத்திர தாண்டவமாடினார். அவரது அதே கோபம்.. கொஞ்சமும் அவருக்கு குறையவில்லை. கங்காணி ராமையா வீட்டுக்கு கிளம்பிப் போனார்.

“கங்காணி..வெளிய வா..”

சத்தம் கேட்டு வெளிய வந்தான் சந்திரன்.. மறு வினாடி..

‘பளார்..பளார்..’சந்திரன் கன்னத்தை கிளாக்கரின் கை பதம் பார்த்தது. அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் சந்திரன்.

“சார்..என்னங்க எங்கூட்டுப் பிள்ளய நீங்க அடிக்கிங்க..”

“கொன்னுடுவன். உங்கட பயல. நீங்களே கேளுங்க.. உங்க பயல் என்ன செய்திருக்கான் தெரியுமா. சீய்.. இப்பிடியா.. பயல வளப்பிங்க”

நடந்தது எதுவும் புரியாமல், மீனாட்சி மிரண்டு போய் நின்றாள். கங்காணி ராமையா அப்போதுதான் வீடு வந்து சேர்ந்தார். கணவன் கோபமாக, கங்காணி வீட்டுக்கு போவதைக் கண்ட அகிலாண்டம் அவர் பின்னால் ஓடி வந்தவள். அதேகோபத்தில் சந்திரனை அறைந்ததைக் கண்டதும் பதறிப் போனாள்.

“மீனாச்சி உங்ளோடு உறவு வைத்துக் கொண்டதுக்கு இப்பிடியா, உங்களது உறவு இனி, வேணாம் வாங்க போவம்”. அகிலாண்டம் கணவனை

அழைத்தாள்.

“இரு அகிலா.. நடந்தது என்னவென்று இவர்களுக்குத் தெரிய வேண்டாமா”.

கோயிலில் நடந்த சம்பவத்தை கிளாக்கர் சொன்னதும்.. கங்காணி ராமையாவுக்கு கோபம் தலைக்கேறியது. சந்திரனை இரு கைகளாலும் வெளுத்து வாங்கினார். பெரும் கூட்டம் கூடி விட்டது அங்கு. ஆனாலும் தற்காலிகமாக ஓய்ந்தது அந்தப் பிரச்சினை. கங்காணி ராமையாவுக்கு கோபம் சற்றும் குறையவில்லை.

“நீங்க எங்க மேல தோட்டமா வேலக்கி போனீங்க.. சாப்பாடுக்கும் நீங்க வரல்லியே. இங்கண நடந்தத பாத்திக்களா.. சந்துக்கு.. நீங்கலும் அடிச்சு போட்டயள்”.

“மானம் போச்சு.. பொறவு என்ன செய்ய. தோட்டத்தில வேல போட்டு கொடுத்தா அவனுக்கு செரியா வரும்”.

“வேணாங்க..”.

“கொழுந்து எடுத்த நாலு பேருக்கு குளவி கொட்டிடுச்சி. டிஸ்பென்சரிக்கு அழச்சுப் போனது நானுதான். அப்புறம் நாதான் போய் பாக்கணும்..”

“செரிங்க..அத பொறவு பாக்கலாம். இங்க கிளாக்கருட்டு பிரச்சன.. நமக்கு.

அதுவும் பெரிசா வந்திடுச்சி.. எனங்க செய்ற”.

“நம்ம மானம்.. மரியாத.. எல்லாமே போச்சி.. மீனாச்சி. இனி இங்கணைக்கு நாம இருக்றது நல்லமில்ல. எங்காச்சும் வேற தோட்டத்துக்கு மாத்தம் எடுத்து போறதான் இனி செரியா வரும்..”.

முடிவாகச் சொல்லிவிட்டார் கங்காணி. அவர் மானஸ்தன். அடுத்து வந்த சில நாட்களில் கங்காணி ராமையா குடும்பம் வீட்டை காலி செய்து விட்டு வேறு தோட்டத்துக்கு மாற்றலாகிப் போய் விட்டனர்.

“ம்மா..எனக்கு இஞ்ச இரிக்க புடிக்கல நாங்.. கொழும்புக்கு போறன்”.

“என்னவாங்..அவனுக்கு. ஒளுங்கா இஞ்ச இரிக்க முடியாதவரு.. அங்க போய் என்ன செய்வாரு.. கேளு மீனாச்சி”.

சந்திரன் தந்தையின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமலே தீபாவளி நாளன்றே அவன் மன வைராக்கியத்துடன் கொழும்புக்கு போய் விட்டான்.

“டேய் சுரேஸ் நானு உன்ன நம்பி இஞ்ச வந்தன்.எங்கூட்டுல பெரிய பிரச்சனடா. தீபாவளிக்கும் நிக்காம நான் வந்துட்டன். அத நானு அப்புறமா உனக்குச் சொல்றன். எனக்கு ஒரு வேல

தேடித் தரணும் சுரேஸ் ”சுரேஸ் தனது புடவைக் கடையில் சந்திரனை வேலைக்கு சேர்த்துக் கொண்டான். நான்கு வருடமாக அந்த கடையில் கடுமையாக.. உண்மையாக உழைத்தான் அவன். சந்திரன் உழைப்பில் சுரேஸ்சும் படிப்படியாக பெரிய தொழிலதிபராக மாறினான்.

சுரேஸ் உதவியோடு சிறிதாக ஒரு மொத்த வியாபார புடவைக் கடையை ஆரம்பித்தான் சந்திரன். அவனது அயராத உழைப்பு.. அடுத்த வந்த நான்கு வருடத்தில் மொத்த வியாபார புடவைக் கடையின் உரிமையாளனாக உயர்ந்து நின்றான் சந்திரன்.

“சந்திரன்.. தோட்டங்களில இருந்து இங்கணைக்கு வேலைக்கு வாறவங்க உழச்சி ஊதாரியா போறாங்க. நீ அப்புடி இல்லடா.. நேர்மையாக உழைச்சி முன்னுக்கு வந்திருக்கா. உன்னிடம் சாதிக்க வேணும் என்ற துணிவு இருக்கு. அதுக்கு இந்த ‘ஆல் சேல்” புடவைக் கடைதான் சாட்சி. இது எனக்கும் மகிழ்ச்சிதான்”.

சந்திரனின் அசுர வளர்ச்சி கண்டு அவனைப் பராட்டினான் சுரேஸ்.

கங்காணி ராமையா பென்சன் பெற்றுவிட்டார். சந்திரன் தனது தாயையும் தந்தையையும் கொழும்புக்கு வரவழைத்து தன்னோடு வைத்துக் கொண்டான்.

அன்று தீபாவளித் திருநாள்..நான்கு மணிக்கே எழுந்து விட்டான் சந்திரன்.

“ம்மா..என்னூட்டு விருப்பத்த தடுக்க வேணாம் நான் கந்தகெதற அம்பாள் கோவிலுக்கு போய் வரனும் அப்பாட்ட நீ சொல்லு..ம்மா ”.

“ஏன் சந்திரா.. இன்னும் நீ நளினிய மறக்கலையா.. அத விட்டுபுடுடா அது நமக்கு வேணாங்”.

“இல்ல..மா நான் அம்பாளிடம் போகனும் என்னை நீ தடுக்க வேணாம்மா”.

“செரிடா.. அங்க ஏதாச்சும் பிரச்சனயில நீ மாட்டிக்க வேணாம். பாத்துப் போயித்து.. வா.”

“அதொன்னும் வராத..ம்மா. நான் பாத்துகிறன்..நான் பொயித்து வாறன்”.

அன்று காலை பத்துமணிக்கே ‘கந்த அன்று காலை பத்துமணிக்கே ‘கந்த கெதற’ வந்து விட்டான். நேரே அப்பாள் ஆலயம் வந்தவன் வழமையாக.. அவன் அமரும் படிக்கட்டில் அமர்ந்தான்.

அம்பாளின் தீபாவளி விசேட பூசை பன்னிரண்டு மணிக்கு ஆரம்பமானது. சந்திரன் எழுந்து கொண்டான். அம்பாளை தரிசனம் செய்ய ஆலய மண்டபம் நோக்கி நடந்தான். அவன் எதிர்பராத ஒரு தருணம்.. அது.

“ஆ.. அந்தா ஆலயத்தை நோக்கி வருவது நளினிதான். சற்று எடை குறைந்த மாதிரி இருக்கிறது. சாறியில் இன்னும் அழகாக இருக்கிறாள்”.

அவன் மனது சொல்லிக் கொண்டது. நளினி தனியாகவே வந்தாள். அவள் கையில் பூஜைக்கான பொருட்கள். சட்டென ஆலயத்தின் மண்டபத் தூணில் தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டான் சந்திரன். இன்னும் நெருங்கி வந்து விட்டாள் நளினி. சந்திரன் நன்றாக நளினியை அவதானித்தான்.

“ஓ.. நளினி திருமணம் இன்னுமா.. திருமணம் செய்து கொள்ளவில்லை”. சந்திரன் உறுதி செய்து கொண்டான்.

“நளினியில் நெற்றியில் குங்குமப் பொட்டு.. கழுத்தில் தாலி.. எதுவும் காணப்படவில்லை’.

அம்பாளை மறைந்து நின்றவாறே உள்ளன்போடு வழிபட்டான். பூசாரி வந்தார்.

“சொல்லுங்க அர்ச்சன ஆருக்கு.. பெயர் நச்சத்திரம்.. சொல்லுங்கோ”

“சந்திரன்.. மகம் நச்சத்திரம்.. சிங்க லக்கினம்”. நளினி பூசாரியிடம் சொல்லி விட்டு அம்பாளை உள்ளம் உருகி வேண்டி நின்றாள். சந்திரன் உள்ளத்தில் தீபாவளிப் பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. “இனி எனக்கு எந்தத் தடைகளும் இருக்கப் போவதில்லை.. நளினியைப் பெண் கேட்க நாளைக்கே அம்மா.. அப்பாவைச் சார்னியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்”.

அவன் உள்ளம் உவகையில் பொங்க மனத்தில் உறுதி செய்து கொண்ட சந்திரன். அம்பாளை மீண்டும் ஒரு தடவை நிலத்தில் விழுந்து வணங்கி விட்டு உடனேயே கொழும்பு புறப்பட்டான்.

-வெல்லாவெளி விவேகானந்தம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division