“மகன் எழும்புங்க. டைம் ஆயிட்டு. சுபஹுக்கு பள்ளிக்குப் போகணும்” என்ற எனது உம்மாவின் சத்தம் கேட்டு மெல்ல எழுந்தேன். அடித்துப் போட்ட உடலைப் போன்று உடல் முழுக்க அசதி ஒரு தொற்று நோயாய் அப்பியிருந்தது. மீண்டும் மீண்டும் எழும்புமாறு தாய் குடைச்சல் கொடுத்துக் கொண்டேயிருந்தாள். இன்று செய்வதற்கு ஏகப்பட்ட வேலைகள் மீதமிருந்தன. ஒரு வாரத்துக்கு முன்பே திட்டமிட்டதைப் போன்று முதல் வேலையாக ஹப்புத்தளை பிரதேசத்துக்குச் செல்ல வேண்டும். அறையின் மின்குமிழை ஒளிரச் செய்து விட்டு, சுவரில் தொங்கியிருந்த கடிகாரத்தைப் பார்த்தான்.
கடிகார முட்கள் நான்கரை மணியை காட்டிக் கொண்டிருந்தது. நானும் எழுந்து சென்று தேவைகளை முடித்துக் கொண்டு வுழு செய்து கொண்டு பள்ளிக்குச் சென்றேன். சுபஹ் தொழுகையை இமாம் ஜமாத்தாக தொழுது விட்டு இன்று ஹப்புத்தளையில் இருக்கும் என் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டி இருப்பதால் துஆ முடிந்தவுடன் வீடு திரும்பி விட்டேன். ஒவ்வொரு நாளும் சுபஹ் தொழுதுவிட்டு வீடு திரும்பும் போதும், வீட்டில் தேநீர் தயாராக இருக்கும். அன்றைய நாளும் தேநீரை அருந்தி விட்டு சற்று நேரம் தாயுடனும் தந்தையுடனும் பயணத்தை பற்றி பேசிவிட்டு, என் அறைக்குச் சென்றேன்.
பயணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு நானும் தயாராகிக் கொண்டு “உம்மா, வாப்பா போய் வாரேன். துஆ செய்யுங்க” என்று சொல்லிவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விட்டேன். நேரம் 5:30 கடந்திருந்தது. அம்பாறை நோக்கி செல்லும் பஸ் ஒன்று வரவே அதில் ஏறிக் கொண்டேன். ஏறியதும் வந்த யோசனை “எப்படி போய்ச் சேரப் போகிறேனோ அவ்வளவா சிங்களமும் தெரியாது. எத்தனை மணி ஆகுமோ?” என்ற சிந்தனைதான்.
எவ்வளவுதான் பஸ்ஸில் போய் பழக்கம் இருந்தாலும், ஒவ்வொரு முறையும் போகும்போதும் முதல் முறை போகும் உணர்வு தான் வரும்; பயம்- சந்தோஷம்- ஜன்னலோர இருக்கை- இயற்கை காற்று- முகம் எல்லாம் புழுதி- நெரிசல்-புதிய முகங்கள்- தூக்கம் இப்படி அதன் உணர்வுகளே சற்று அலாதியானவை. அம்பாறையில் இருந்து பண்டாரவளைக்கு சரியாக அதிகாலை 6:15 க்கு ஒரு அரசுப் பேருந்து செல்லும்.
அதை எப்படியாவது அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், அவ்வளவு அவசரமாக இன்றைய நாளில் என் தயாரிப்புகள் எல்லாம் இருந்தன. அம்பாறையை அடையும் போது நேரம் 6:30 ஐ தாண்டி விட்டிருந்தது. ஆம், நீங்கள் நினைப்பது போலவே, பஸ்ஸைத் தவற விட்டுவிட்டேன். என்ன செய்வது என்று அறியாமல் தரிப்பிடத்தில் இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது என் அருகில் உட்கார்ந்திருந்த ஒரு மனிதர் “எங்கயன் போகப் போறீங்க?” என்று கேட்டார்.
நான் “ஹப்புதளைக்குப் போகப் போறேன்” என்றேன். “அப்படியா இங்கினக்கிருந்து 7:15 க்கு இன்னொரு பஸ் ஈக்கிது. அது பாணந்துறைக்கு போகுது, அதுல போய் வெள்ளவாயல எறங்கி அங்கினயிருந்து ஹப்புதளைக்கு பஸ் எடுங்க” என்றார். எனக்கு ரொம்ப சந்தோஷம்.
நானும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவருடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன். சரியாக 7:10 க்கு பஸ் வந்தது. நானும் அவருக்கு போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.
பஸ் 7:15 க்கு பயணத்தை ஆரம்பித்தது. நானும் வெள்ளவாயவிற்கு டிக்கெட் எடுத்துவிட்டு, மூன்று பேர் உட்காரக் கூடிய இருக்கையில், ஜன்னலோரமாய் பார்த்து உட்கார்ந்து கொண்டேன். பஸ்ஸும் தன் பாட்டிற்கு வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
இருபக்கமும் காடு, நடுவே தார் வீதி. கண்ணுக்கு எட்டும் தூரத்திற்கு வாகனங்களே இல்லை, பச்சை மரங்களெல்லாம் சட்டென என்னை மறுத்து, கோபித்து புறந்தள்ளுவது போல், ஒரு உணர்வு; இது தனிமையின் அடையாளம் என்பதை, காற்றின் வருடல் கொண்டு புரிந்து கொண்டேன்.
பேருந்து சியபலாந்துவவைக் கடந்து செல்லும்போது இடையில், ஒரு அரசு தரிப்பிடத்தில் நின்றது. அப்போது ஒரு தாய் தன் இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் குழந்தையுடன் ஏறிக்கொண்டாள் அத்தாய். என் அருகில் இருக்கும் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள்.
பஸ் சிறிது தூரம் செல்கையில் குழந்தை அழத் தொடங்கி விட்டான், அத்தாய் தனது கையில் இருந்த கைப்பையில் இருந்து ஒரு பால் பக்கட்டை எடுத்து, அக்குழந்தைக்கு அருந்தக் கொடுத்தாள்.
அவனும் அதை அருந்தினான். சற்று நேரத்தில் அத்தாய் அக் குழந்தையை கொஞ்சம் வைத்துக் கொள்ளுமாறு சிங்களத்தில் என்னிடம் கேட்டாள்.
நானும், சரி என்று தலை அசைத்து விட்டு, அக்குழந்தையை வாங்கிக் கொண்டேன். அவனுமோ என் மடியில் உட்கார்ந்து கொண்டு ஜன்னலூடே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான், அவன் என்னிடம் நன்கு பழக்கப்பட்டு விட்டான். சிறிது நேரத்தில் தூக்கம் வரவே அந்த தாய், அதைப் பார்த்துவிட்டு எனக்கு சிரமமாய் இருக்கும் என்று சொல்லி விட்டு குழந்தையை கேட்டு வாங்கிக் கொண்டாள்.
நானும் என்னை அறியாமல் நன்கு அயர்ந்து உறங்கி விட்டேன். சிறிது நேரம் கழித்து முழிப்பு வரவே விழித்துக் கொண்டேன். அப்போது அருகில் இருந்த அக்குழந்தையை பார்த்தேன், அவனுமோ தான் அருந்தியிருந்த பால் முழுவதையும் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று அவன் எடுத்த வாந்தி அவனுடைய தாயின் ஆடை முழுவதும் பட்டுவிட்டது. அவள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தாள்.
அவளுடைய கைப்பையை திறந்து, கைக்குட்டையை எடுத்து குழந்தையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
அவனோ அழுது கொண்டிருந்தான், அவள் அவனை என்னிடம் தந்துவிட்டு பின்னர் தன்னுடைய ஆடையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அத்தாய் தன் பயணத்திற்கு ஒரே ஒரு கைப்பையை மாத்திரமே கொண்டு வந்திருந்தாள்.
அதில் அக்குழந்தைக்கு ஒரு ஜோடி ஆடை இருந்தது போலும், அதை எடுத்து தன் குழந்தைக்கு ஆடையை மாற்றி விட்டாள், ஆனால் அவள் தான் அழுக்குப்பட்ட ஆடையுடனேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
அது அவளுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. பஸ்ஸில் இருந்தவர்களுக்கு வாந்தியின் துர்வாடை வீசவே அவளை சற்று ஏளனமாக பார்த்தார்கள். அருகில் இருந்த எனக்கு அவளின் நிலை மிகுந்த பரிதாபத்தை உண்டு பண்ணியது.
பஸ் மொனராகலை மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. அங்கே பஸ் அரை மணித்தியாலத்திற்கு நிற்கும் என்று பஸ் கண்டக்டர் கூறிவிட்டார். பஸ் நின்றவுடன் என் கண்கள் சுற்று முற்றும் இருந்த சாப்பாட்டுக் கடைகளையே தேடியது, அவ்வளவு பசி வயிற்றை வாட்டி வதைத்து கொண்டிருந்தது.
கடைக்குச் சென்று ஏதும் வாங்கிச் சாப்பிடுவோம் என்று பஸ்ஸிலிருந்து இறங்கினேன்.
பேருந்தில் என் இருக்கைக்கு பின் இருக்கையில் ஒரு முஸ்லிம் குடும்பம் உட்கார்ந்து கொண்டு வந்தது.
அதில் தாயுடனும் தந்தையுடனும் சேர்த்து அவர்களது இரு பிள்ளைகளும் வந்திருந்தார்கள். நானும் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி சுற்று முற்றும் ஏதாவது முஸ்லிம் ஹோட்டல் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது அம் முஸ்லிம் தாய் என் அருகில் இருந்த அந்த சிங்கள தாயின் கையைப் பிடித்துக் கொண்டு எங்கோ அழைத்துச் சென்று கொண்டிருந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
நானும் ஒரு முஸ்லிம் ஹோட்டலுக்கு சென்று பரோட்டாவும் கறியும் வாங்கி சாப்பிட்டு விட்டு குளிர்பானம் ஒன்றையும் அருந்திவிட்டு வெளித் தேவைகளையும் முடித்துவிட்டு பஸ்ஸில் வந்து ஏறிக்கொண்டேன்.
அப்போது அங்கே நான் கண்ட காட்சி எனக்கு சற்றே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம் தாய் தன்னிடம் இருந்த தன்னுடைய ஆடையை கொடுத்து அதை அந்த சிங்களத் தாய்க்கு அணிவித்திருந்தாள், இருவரும் என்னைக் கண்டவுடன் புன்னகைத்து விட்டு, அத்தாய் அவளின் குழந்தையை என்னிடம் தந்துவிட்டு முஸ்லிம் தாயுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.
அன்றைய நாள் அங்கு நான் கண்டது தாய்மையை அல்ல, மாறாக மனிதாபிமானத்தின் உயிர் நாடியை…
ஹனீன் பைறூஸ் அல்-ஹக்கானிய்யா அரபுக் கல்லூரி