கே : தற்போதைய அரசு ஊழல் ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உங்கள் தேசிய மக்கள் சக்தி என்னென்ன திட்டங்களை கொண்டிருக்கிறது?
முதலாவதாக மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை வழங்க வேண்டும். ஏனைய சமூகத்துடன் ஒப்பிடுகையில் மலையக மக்கள் இன்னும் பின்தள்ளப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். 200 வருட அடிமைகளாக, சர்வஜன வாக்குரிமையை மட்டும் வழங்கிவிட்டு, இந்நாட்டின் பிரஜைகளாகவே மலையக மக்கள் கண்டுகொள்ளப்படவில்லை. ஏனைய சமூகங்களைப் போன்று மலையக மக்களும் அங்கீகரிக்கப்பட்ட சமூகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
அதன்படி, மலையக மக்களுக்கான, அவர்கள் மலையக தமிழர்கள் என்ற அடையாளத்தை வழங்குவதே தேசிய மக்கள் சக்தியின் முதலாவது திட்டமாகும்.
அடுத்ததாக, அம் மக்களின் பிரதான பிரச்சினைகளாக காணப்படுகின்ற சம்பளப் பிரச்சினை, நிலம், வீட்டுரிமை, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு தொடர்பாக தேசிய மக்கள் சக்தியால் வெளியிடப்பட்ட மலையகம் 200 ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கே : மலையகத்தில் பல வருட கால அனுபவம் கொண்ட அரசியல்வாதிகளுடன் நீங்களும் இம்முறை தேர்தலில் குதிக்கிறீர்கள் உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எவ்வாறு இருக்கப் போகிறது?
76 வருடகாலமாக மலையக அரசியல் வாழ்க்கையில் இருந்தவர்கள் பிரபலமானவர்களே. ஆனால் அவர்களால் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது கேள்விகுறியாகவே இருக்கின்றது.
அதாவது, சரியான, முறையான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. உதாரணமாக வீடமைப்பு திட்டத்தை எடுத்துக்கொண்டால், இந்திய வீட்டுத்திட்டத்தினூடாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த வீடுகளுக்கான உறுதி வழங்கப்படவில்லை. இதுவரைகாலமும் மலையகத்தை ஆட்சி செய்த தலைவர்களால், எந்தவொரு பிரச்சினைக்கும் முழுமையான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
அந்த தலைவர்கள், தேர்தல் காலங்களில், பிரசார நடவடிக்கைகளுக்காகவும், அவர்களின் பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், மலையக மக்களின் பிரச்சினைகளையும் தொழிற்சங்கங்களையும் பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
தத்தமது பதவியை பாதுகாத்துக்கொள்வதற்காக, ஆங்காங்கே தாவிக்கொண்டு, கொள்கையற்ற அரசியல் வாதிகளாகவே மலையக அரசியல் வாதிகள் இருக்கின்றார்கள். மலையகத்தை ஆட்சி செய்த அனைத்து தலைவர்களுக்கும் இவ்விடயம் பொருந்தும்.
இவர்கள் மலையக மக்களுக்காக சேவையாற்ற ஆளுங்கட்சியுடன் இணைந்திருப்பதாக தெரிவிப்பார்கள். பதுளை மாவட்டத்தின் அனைத்து மலையகத் தலைவர்களும் முன்னாள் ஜனாதிபதியுடனே இணைந்திருந்தார்கள்.
இவர்கள் அனைவருக்கும், காணி பிரச்சினை, வீட்டுப்பிரச்சினை, கல்வி, சுகாதாரம் மற்றும் சம்பளப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அதிகமாக இருந்தன. எனினும் அவர்கள் அதனைச் செய்யவில்லை.
மலையக மக்களின் வாழ்வியலை மாற்றவேண்டும், அவர்களுக்கான எழுச்சியினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் இந்த அரசியல் வாதிகளுக்கு கிடையாது.
பதவி இருந்தால் மட்டும் போதும் என நினைக்கும் இவர்களைப்போன்ற அரசியல் வாதிகளுடன் போட்டிபோடுவதில் எனக்கு எவ்வித பயமும் இல்லை. ஏனெனில் நான் வெற்றிபெறுவது உறுதி என்ற நம்பிக்கை எனக்குண்டு.
நான் பிறந்த நாள் முதல் இன்று வரை மலையகத்தில் உள்ள கஷ்டங்களை அனுபவித்து வருகின்றேன். இத்தனை நாள் ஆட்சி செய்தவர்கள் இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுத்திருந்தால் நான் அரசியலுக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
பாராளுமன்ற உறுப்புரிமையை பெறாவிட்டாலும் மக்களின் பிரச்சினைகளுக்காக மக்களுடன் சேவையாற்றி வருகின்றேன். எனது அரசியல் பயணத்துக்கு தேசிய மக்கள் சக்தி வாய்ப்பளித்துள்ளது.
அடிமட்டத்திலிருந்த நான் படிப்படியாக தேசிய மக்கள் சக்தியினூடாக மாவட்ட மட்ட நிறைவேற்ற குழு உறுப்பினர் என்ற மட்டத்துக்கு வளர்ந்துள்ளேன்.
நான் மக்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பதனால் அவர்களின் பிரச்சினைகளை அறிவேன். இந்த தேர்தலில் எனக்கு போட்டி கிடையாது ஏனெனில் மக்களின் பிரதிநிதியாகவே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
அரசியல் தலைவர் ஒருவர் சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், பெற்றோர்கள் பிள்ளைகளின் பேச்சைக்கேட்டு வாக்களிக்க வேண்டாமென தெரிவித்திருப்பதை நான் அவதானித்தேன்.
முந்தைய காலத்தைப்போன்று தொழிற்சங்கவாதிகள் மற்றும் தலைவர்களின் வார்த்தைகளை கேட்டு வாக்களித்த காலம்போய், தற்போது, கல்வியில் சிறந்த சமூகமாக எமது மலையக சமூகம் மாறிக்கொண்டு வருகின்றது. இன்றைய சமூகத்தினர் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றார்கள். இன்று சுயமாக சிந்திக்கின்றார்கள். முன்னைய காலத்தைப்போன்று அரசியல் தலைவர்களின் வார்த்தைகளை நம்பி தலையை சொறிந்துக்கொண்டு வாக்களித்த காலம் மலையேறி விட்டது. எனவே, தற்போது யாருடைய அழுத்தத்துக்கும் உட்பட்டு மலையக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்கால சந்ததியினரின் நலனை சிந்தித்தே அம் வாக்களிப்பார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே, நாம் வெற்று பெறுவதை உறுதி செய்து கடந்த வருடத்திலிருந்தே, மலையக மக்கள் வாக்களிப்பார்களா? இல்லையா? என்பதை பற்றி சிந்திக்காது, 76 வடங்களாக ஆட்சி செய்தவர்கள் அங்கீகாரத்தை வழங்காத நிலையில், தேசிய மக்கள் சக்தி அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கவும் அடிப்படை பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவும் தயாராகவுள்ளது.
இவ்வளவு காலமும் ஏமாற்றப்பட்ட நாம் இனியும் ஏமாறாது தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணத்தை மேற்கொள்வோமாயின் ஏனைய சமூகங்களைப் போன்றே எமது மலையக சமூகமும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கௌரவமான சமூகமாக வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
எனவே, மலையக சமூகத்தின் விடியலுக்கான காலம் நெருக்கிவிட்டது. தேசிய மக்கள் சக்தி அதன் பிரகடனத்தை நிச்சயமாக நிறைவேற்றும். மலையக பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு நான் செல்வதும் உறுதியாகிவிட்டது. அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கும் அவற்றை தீர்த்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன். என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு நான் தயாராகவுள்ளேன். ஆகையால் செய்த தவறுகளை மீண்டும் செய்யாது, மலையக மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்
கே : மலையக பெண்களின் பிரச்சினைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?
மலையக பெண்களின் பிரச்சினைகளுக்கு வரையறை கிடையாது. முக்கியமாக தொழில் ரீதியாக அப் பெண்கள் காலை 8 மணிமுதல் மாலை வரை தொடர்ச்சியாக உழைத்துக்கொண்டே இருக்கின்றார்கள்.
மாதவிடாய் காலங்கள் அப் பெண்களின் சுகாதார சலுகைகள் கேள்விகுறியாகவே காணப்படுகின்றது. அத்துடன் உணவுகளை, வேலை செய்யும் இடங்களில் அமர்ந்தவாறு உண்ணும் சூழ்நிலையே உள்ளது. எந்துவொரு பாதுகாப்பு அறையோ மலசல கூட வசதிகளோ கிடையாது. அடிப்படை உரிமைகள் புறக்கணிப்பட்ட சமூகமாக இருக்கும் தோட்டத்தொழிலாள பெண்களுக்கு, 76 வருடகாலமாக ஆட்சி செய்தவர்கள் எந்தவொரு வேலைத் திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
முக்கியமாக லயன் குடியிருப்புக்களில் ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அநேகமான பெண்கள் லயன் வாழ்க்கையை மாற்றித்தருமாறு என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். லயன் அறைகளால் அநேகமான பெண்கள் தங்கள் குடும்பங்களை, இல்லறத்தை, தொலைக்க வேண்டியிருக்கிறது. கணவனின் சந்தேகத்துக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. தனக்கு மூத்த மூன்று பெண் பிள்ளைகள் இருப்பதாகவும், தனது கணவர் இல்லற வாழ்க்கைக்காக தன்னை அழைக்கும்போது, தமது பிள்ளைகளை பற்றி சிந்தித்து அதிலிருந்து விலகிக்கொள்ளவதாகவும் பெண்ணொருவர் தெரிவித்தார். இதனால் தனக்கும் தனது கணவருக்குமிடையில் பிரச்சினைகள் ஏற்படுவதாக அப் பெண் குறிப்பிட்டார்.
இது தோட்டத்தொழிலாளர்களிடையே பொறுத்தமட்டில் லயன் குடியிருப்புகளில் வாழும் அநேகமான குடும்பங்களில் நிகழும் சம்பவமாகும்.
எனவே, பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்க வேண்டுமாயின் வீட்டு வசதிகளை நிச்சயமாக ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
அத்துடன், அநேகமான பெண் பிள்ளைகள் வீட்டுக்குள்ளேயே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.
வாழ்க்கைச்சுமை அதிகரிக்க அதிகரிக்க அநேகமான பெண்களும், பெண்பிள்ளைகளும் வெளிமாவட்டங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் தொழிலுக்காகச் செல்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கை சீரழிகின்றது.
முறையான பயிற்சிகள் வழங்காது வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் பெண்கள் அங்கு சித்திரவதைக்குளாகின்றார்கள். சில பெண்கள் உயிரிழக்க நேரிடுகின்றது.
கே : இறுதியாக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
இத்தனை வருடகாலமும் ஆட்சி செய்தவர்கள் எவ்வித தூரநோக்குடனும் தமது சேவையை செய்யாதமையினாலேயே இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றன.
தேசிய மக்கள் சக்தியூடாக இந்தபிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழப்படும் என்பது உறுதி. சாக்கடையாக இருந்த அரசியல் தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் கலாசார அரசியலாக மாறியுள்ளது.
எனவே இளைஞர் யுவதிகளும் தலைமைத்துவத்தை ஏற்க நிச்சயமாக முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
வாசுகி சிவகுமார்