- இலங்கையில் எதிர்வரும் 25ஆம் திகதி வெளிவருகிறது ஆரகன்
கேள்வி : உங்களை பற்றியும் உங்களது தயாரிப்பு நிறுவனம் பற்றியும் பகிர்ந்து கொள்ள முடியுமா?
பதில் : என்னுடைய பெயர் வரகுணன் பஞ்சலிங்கம். நான் தற்போது பிரித்தானியாவில் வசித்து வருகிறேன். மிக நீண்ட காலம் இலங்கையிலே ஊடகத்துறையில் பணிபுரிந்து பின்னர் புலம் பெயர்ந்து பிரித்தானியாவுக்கு சென்று நாடகத்துறை சார்ந்த பல்வேறுபட்ட விடயங்களையும் சினிமாத்துறைசார்ந்த பல்வேறுபட்ட விடயங்களையும் நான் இங்கே மேற்கொண்டுவருகிறேன். குறிப்பாக ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் என்னுடைய பணியினை மேற்கொண்டு வருகிறேன். இந்த தயாரிப்பு நிறுவனத்தை Trending Arts Productions என்ற பெயரில் 2021ஆம் ஆண்டு நாங்கள் மூன்று சகோரதர்கள் இணைந்து உருவாக்கினோம். என்னுடைய இளைய சகோதரர்கள் இருவர். ஒருவர் நோர்வையிலே வசித்து வருகின்ற ஹரிகரன் பஞ்சலிங்கம் மற்றையவர் இலங்கையிலே வசித்து வருகின்ற மதுரதன் பஞ்சலிங்கம். நாங்கள் இணைந்து இந்த தயாரிப்பு நிறுவனத்தை 2021 ஆம் ஆண்டு ஆரம்பித்தோம். எங்களுடைய தந்தை அமரர் தம்பிப்பிள்ளை பஞ்சலிங்கம், ஈழத்தின் மிகச் சிறந்த நாடகக் கலைஞர். அதனால் தான் எங்களுக்கும் இந்த கலை ஆர்வம் ஏற்பட்டது. அதனாலேயே அவரது பிள்ளைகளான நாங்கள் இந்த நிறுவனத்தை நிறுவி கலைப்படைப்புக்களை இதனூடாக தயாரித்து வருகிறோம்.
கேள்வி : இதுவரை நீங்கள் எவ்வாறான படைப்புக்களை உருவாக்கியுள்ளீர்கள்? சமூகத்தில் அவற்றுக்கான அங்கீகாரம் எத்தகையது?
பதில் : எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் ஊடாக தயாரிக்கப்பட்ட படைப்புக்களை பொறுத்த மட்டில் 2021ஆம் ஆண்டு Paradise Island என்ற பெயரில் உருவான தமிழ் குறுந்திரைப்படம் தான் நாங்கள் முதன்முதலில் உருவாக்கியது. இந்த குறுந்திரைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
பின்னர் 2022 ஆம் ஆண்டு In the Closet என்ற ஒரு ஆங்கில குறுந்திரைப்படத்தை நாங்கள் தயாரித்திருந்தோம். அது பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்டது. எனது இயக்கத்திலும் எனது நடிப்பிலும் உருவாக்கப்பட்ட ஒரு குறுந்திரைப்படமாகும்.
அது சர்வதேச திரைப்பட விருதுக்காக அனுப்பப்பட்டு பல்வேறு சர்வதேச விருதுகளை தட்டிச்சென்றது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் சர்வதேச விருதுகளை தட்டிச்சென்றது. வெகுவிரைவில் இக்குறுந்திரைப்படத்தை நீங்கள் கண்டு மகிழமுடியும்.
கேள்வி : நீங்கள் தயாரிக்கின்ற ஆரகன் திரைப்படம் பற்றி குறிப்பிடமுடியுமா?
பதில் : ஆரகன் என்ற முழு நீள திரைப்படம் எங்களால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுநீள திரைப்படம்.
2022ஆம் ஆண்டு படப்பிடிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்து 2024 ஒக்டோபர் 04ஆம் திகதி இந்தியாவின் திரையரங்குகளில் வெளியாகி பல ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒரு Fantasy Thriller ஆக ஆரகன் திரைப்படம் அமைந்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் நீங்கள் பார்த்தால் தெரிந்திருக்கும்.
கேள்வி : இந்த திரைப்படம் இலங்கை திரையரங்குகளில் எப்போது வெளியாகும்?
பதில் : இலங்கையின் திரையரங்குகளில் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரகன் திரைப்படத்தை வெளியிட காத்திருக்கின்றோம்.
கேள்வி : இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்களை பற்றி குறிப்பிடமுடியுமா?
பதில் : இந்த படத்தில் நடித்த நடிகர்களை பொறுத்தவரையிலே பிரதான நடிகராக மைக்கல் தங்கதுரை நடித்திருப்பார். அவர் ஏற்கனவே இந்தியாவில் சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். கதாநாயகி இலங்கையை சேர்ந்த கவிப்பிரியா. கவிப்பிரியா இலங்கை ஊடகத்துறையில் பிரசித்தி பெற்று விளங்கிய ஒருவர். கவிப்பிரியா இந்த ஆரகன் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியது எங்களுக்கும் பெருமை. ஏனென்றால் நாங்களும் இலங்கையை சேர்ந்த தயாரிப்பாளர்கள் கவிப்பிரியாவின் அறிமுகம் எங்களுக்கும் பெருமையை தேடி தந்திருக்கிறது.
கேள்வி : இலங்கையை விட்டு இந்தியாவுக்கு சென்று தயாரிப்பை மேற்கொண்டதன் நோக்கம் என்ன?
பதில் : இது எங்களிடம் பலரும் வினவுகின்ற வினா. இது இந்தியாவில் நாங்கள் செய்கின்ற முதல் தயாரிப்பு. சினிமா சார்ந்த, கலை சார்ந்த சில அனுபவங்களை நாம் இந்தியாவில் பெற வேண்டி இருந்தமையினால் அங்கே சென்று தயாரிப்பை மேற்கொள்ள வேண்டி வந்தது. இருந்தபோதிலும் நாம் இலங்கையையும் இலங்கை கலைஞர்களையும் மறந்துவிடவில்லை. அவர்களுக்கான சரியான களத்தையும் வாய்ப்பையும் நாம் அடுத்து வரும் படைப்புக்களில் நிச்சயமாக வழங்குவோம். எம் கலைஞர்களை தட்டிக்கொடுத்து ஊக்கமளிக்க வேண்டிய கடமை எமக்கும் இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடவில்லை
அ. கனகசூரியன்