தலைமாட்டில் குத்துவிளக்கு ஒளிர்ந்து கொண்டே இருந்தது.
மங்கிய ஒளியில் அப்பாவின் முகம் தெளிவாகத் தெரிகின்றது…..
“அப்பா” பட்டு வேட்டியில் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தார். கையுறை போட்ட கைகள் பின்னிப் பிணைந்திருந்தன. முகம் நீசமற்ற அமைதியாக இருத்தது.
அவளது உதடுகள் “அப்பா” என்று அவளை மீறி உச்சரித்தது…..
கண்களை நிறைத்த கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் வழிந்து கழுத்தைத் தொட்டது….
அவள் உதடுகள் ஏதேதோ முணுமுணுத்தன. இலேசாக அடித்த காற்றில் அங்கும் இங்குமாக எரிந்து கொண்டிருந்த விளக்கின் தீச்சுவாலை ஆடிக் கொண்டே இருந்தது…..
ஏதோ! மனம் உந்த அப்பாவின் கைகளை இறுகப் பற்றினாள். நினைவுகள் அவளை மீறி எங்கோ அழைத்துச் சென்றது…..
“மாயா கவனமாப் பார்த்து முன்னுக்கு நடவம்மா” என்றவர் சாராவின் கையைப் பிடித்து முன்னுக்கு போம்மா.
அக்கா போல பார்த்து நடவம்மா என்றா
எங்கள் ஊரில் மார்கழி மாதத் திருவெண்பா நடக்கும் போது….
லீவு நாட்கள் பார்த்து ஐஞ்சு மணிக்கு குளிச்சிட்டு இரண்டு மைல்கள் நடந்து நானும் சாராவும் போவோம்.
ஊர்க் கோயிலில் எல்லோரும் ஊரவர்கள், சொந்தக் காரர்கள் என்றால் சொல்லத்தேவையில்லை. பொங்கலும், பொரிச்ச மோதகமும், உளுந்து வாசம் மணக்கும் வடையும் சாப்பிட்டது போக தாராளமாகக் கொண்டு வருவோம் வீட்டிற்கும்.
பாடசாலை நாட்கள் போக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பாலைமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவதும், அடம்பன் குளத்தில் நீச்சல் அடிப்பதும்,
உயரமான அடம்பன் மரத்தில் ஏறிக் குதிப்பதும் அலாதிப் பிரியம் மாயாவுக்கு
இன்னும் எத்தனை எத்தனை விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்திருப்பார்கள்.
அம்மா அப்பாவோடு இருந்த காலங்களில் சின்னச் சின்ன மகிழ்ச்சிகள்தான்.
உண்மையான அழகு நிறைந்த வாழ்க்கை என்பதை மாயா உணர்ந்திருந்தாள்.
திருமணம் ஆகி வெளிநாடு சென்ற இந்தப் பத்து வருடங்களில், நிற்காமல் ஓடும் இரயில் போல் எதையும் நினைக்கக் கூட நேரம் இல்லாமல் இருந்தது வாழ்க்கை.
இந்த பத்து வருடம் அப்பாவைத் தொலைபேசியின் கண்ணாடிச் சதுரத்தில்தான் பார்த்து வாரமொரு முறை பேசுவாள். எப்போ இங்கு பேரப் பிள்ளைகளோடு வருவாய் என்று நாசுக்காக அவர் கேட்பார். சில விடயங்களை காலம் கடந்த பின்னர் தான் உணர்ந்து நிற்கிறோம்.
அப்பாவோடு வாழ்ந்த காலத்தில் அவர்களுடைய தேவைகள் அனைத்தும் சாப்பாட்டையும் உடுப்பையும் படிப்பையுமே நோக்கியதாக இருந்தது.
அப்பா கமக்காரர்தான். சில தடவை காலநிலையால் விதைக்கும் வேளாண்மை கூட பிரச்சினை ஆகிவிடும்.
அப்போதெல்லாம் பாடசாலை விட்டு வந்து நெல் வெட்டும் காலங்களில் மாயாவும் சாராவும் வயலில் கதிர் பொறுக்கப் போவார்கள்.
கதிரோடு வெட்டி வைத்த உப்பட்டியும் அள்ளி வந்து தாமே காலால் கசக்கி
ஒரு போகத்தில் மூன்று மூடை நெல் சேகரித்து விடுவார்கள். இது அவர்களுக்கு பிடித்தமான விடயமாக இருந்தது. குற்றிய புதுப்பச்சரிசி கமகமக்க
சோதியம்மா வீட்டில் தந்த தயிர் ருசிக்க வெந்தயக் குழம்பும், புளியம்பூச் சொதியும் போதும்!
கையை மணக்கும் போதே சாப்பாட்டு ருசி தெரியும். கடற்கரை பக்கம் தான் என்பதால் சில நேரங்களில் அப்பா அங்க போவார். பழகிய சம்மாட்டிமார்கள்.
தங்கள் தங்கள் படகில் இருக்கும் கலவாய், குண்டூறு, நண்டு, திருக்கை என்று போட்டுக் கொடுப்பார்கள். அப்பா அள்ளிக் கொண்டு வருவார். பனையோலை கொழுத்தி நண்டு, குண்டூறு மீன் என்று சுட்டு உடைத்து உடைத்து சதையை ஊட்டி விடுவார்.
அப்பாவை பல பேருக்கு பிடிக்கும். எப்போதும் வீட்டிற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் சாப்பிடுங்கள் என்பதுதான் அவரது வார்த்தையாக இருக்கும். நடுச் சாமங்களில் கூட அம்மா எழும்பி சமைக்கும் சத்தம் கேட்டு கண்ணை இறுக்கி மூடிப் படுத்துக் கொண்டு பார்த்த காலங்கள் நினைவுக்கு வருகிறது.
மாலை ஆனதும் தலைவாசலில் இருக்கும் திண்ணையில் ஒரு ஐந்து ஆறு பேர் கூடிடுவினம். சர்க்கரையோடு அம்மா தேனீர் கொடுக்க,
அரசியல், விவசாயம் பற்றி பேச்சுகள் சூடு பறக்கும்.
காட்டு விலங்குகள் பற்றி பலவிதமான சம்பாசணைகள் நடக்கும். வீட்டின் மூலையில் இருந்து படித்துக் கொண்டு இருக்கும் மாயா இதில் சில விடயங்களை மனதில் பதித்துக் கொள்வாள்.
இதன் காரணமாகவோ தெரியவில்லை அப்பாவோடு வேட்டைக்குப் போக வேண்டும் என்ற ஆவல் இவளுக்கு பல காலமாக இருந்தது. அப்போதெல்லாம் கமக்காரருக்கு வேளாண்மையைப் பாதுகாக்க அரசாங்கம் துவக்கு கொடுத்திருந்தது. அப்பா பதினாறாம் நம்பர் துவக்கு வைத்திருந்தார். ஒருநாள் ஆசைப் பட்டது போல மாயாவும், சாராவும் அப்பாவோடு வேட்டைக்குப் போயும் வந்தார்கள். ஊரில் இருக்கும் உறவினர்கள் எல்லோரின் வாய்க்குள்ளும் ஒரு முணு முணுமுணுப்பு…
சரியான செல்லத்தை பெட்டப் பிள்ளைகளுக்கு கொடுக்கிறாய் என்பதாக அது இருந்தது.
அப்பா எப்போதும் மற்றவர்களை விட சற்று வித்தியாசமானவர் பெண் பிள்ளைகளை ஆண் பிள்ளைகள் போல துடிப்போடு வளர்க்க நினைத்ததை அவளால் உணர முடிந்தது. ஆழமான குளத்தில் கழுதளவு நீரில் நின்று பிள்ளைகள் இருவரையும் நீந்தி வரச் சொல்லுவார். அதனால்தானோ என்னமோ அந்த மிக ஏழ்மையிலும் அவரோடு வாழ்ந்த வாழ்க்கை அவளுக்கு மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தந்திருந்தது. அந்த ஜீவனுக்குத் தெரிந்த தெல்லாம் பிள்ளைகள் வீடு, வயல், அடுத்து காடு இவையோடு மாலையில் சந்தியில் தேனீர்க் கடை அவ்வளவு தான்.
மாயாவிற்கு அடிக்கடி ஒரு பழக்கம் இருந்தது.
அவள் அதிக விடயங்களை ஆராய்ந்து சேகரிக்கும் ஒரு புத்தகமாக அவள் அப்பா இருந்தார். பழமை நிறைந்த வாழ்க்கை முறையையும், பழமையான சத்து நிறைந்த உணவுகளையும் மட்டுமல்லாமல் பல இயற்கைச் செடிகள் அதன் மருத்துவம்
இதெல்லாம் அவரிடமிருந்து அப்பப்போ அவள் சேகரிப்பாள். அவள் காணாத உறவுகளின் தலைமுறையை அப்பா விபரிக்கும் போது….
அவர்களை நேரே பார்த்தது போல இருக்கும் அவளுக்கு.
வானிலை மாற்றத்தை வைத்துக் கொண்டு எதிர்வு கூறுவதும்,
முகர்ந்து பார்த்து பாம்பு, மிருகங்கள் நடமாடும் விபரங்களைக் கூறுவதெல்லாம் இன்று நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. அவருக்கு இசை மிகவும் பிடிக்கும் என்பதை அவள் அறிவாள். அவள் கேட்கும் போதெல்லாம் பெருவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே வாயை வைத்து உடுக்கடித்து அவர் சிந்துநடையில் காத்தவிராயன் கூத்து பாடுவார் அதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
அவரைப் பற்றி நினைக்கையில் எத்தனை விடயங்கள் மனதில் வந்து நிறைகிறது.
காலையில் பழஞ்சோற்றுக் கஞ்சியை நின்றபடியே பச்சமிளகாயோடு கடித்துக் குடித்து விட்டு…
வயலுக்குப் போவார் இடியனோடு…..
வர நேரம் ஆகும்.
எங்களுக்கு பசி வயிறை விராண்டும். அம்மாவின் முகம் அடிக்கடி எங்களைப் பார்த்து வாடிக் கிடக்கும். இடையிடையே எட்டி எட்டி வாசலைப் பார்ப்பா அம்மா.
“அப்பா கெதியா வந்திடுவார்” அவர் வாய்க்குள் இருந்து வார்த்தைகள் மெதுவாக உச்சரிக்கப் படும். நீண்ட நேரத்திற்குப் பிறகு அதோ அப்பா என்று சொல்ல முன் நாங்கள் ஓடிவந்து பார்ப்போம்….
தூரத்தில் குளக்கட்டில் இருந்து ஒரு உருவம் இறங்கி வருவது தெரியும். உடனே பாருங்கள் முகத்தில் என் தங்கச்சிக்கு ஒரு சிரிப்பு வரும் ஏன் எனக்கும் தான். அப்பா உடனே வந்து அம்மாவிடம் பிளேன்ரீயை வாங்கிக் குடித்த வண்ணம் மளமளவெனக் காட்டுக் கோழியை வெட்டிக் கொடுப்பார். கெதியா சமையப்பா பிள்ளைகள் பாவம் என்று சொல்வார்.
அம்மா உணவு தரும் போது..
பசிக் களையோடும் வியர்வையோடும் எண்ணெய்த்தன்மை பளபளவென இருக்கும் உடலில் காட்டு மரங்களின் சிறு சிறு இலைகள் ஒட்டி இருக்கும். அதையும் பொருட்படுத்தாமல் பிள்ளைகளை அருகில் இருத்தி பொறுமையோடு தனி இறைச்சியை அவர் கோப்பையில் இருந்து எடுத்து சோறோடு ஊட்டி விடும் அந்தப் பக்குவம் ஒரு தாயினும் மேலான உணர்வை அவளுக்கு கண்முன்னே கொண்டு வரும் அப்போதெல்லாம்.
அப்பாவின் பரந்த தோள்களும், சுருண்ட கேசமும், ஆறடி உயரமும்
அழகான கம்பீரமும், மனக் கண்ணை ஆக்கிரமிக்க ….
ஒரு தரம் தன்னையும் மீறி அ…ப்…பா…என்று உரத்திக் கத்திக் குலுக்கி அழுகின்றாள். யாராலும் சமாதானப் படுத்த முடியாத அந்த அழுகையின் ஊடே சூடாக வெளியேறும் கண்ணீர்த் துளிகள் சொல்கிறது அவள் உள்ளத்தின் வெம்மை கலந்த வெப்பியாரமான நினைவுகளை.
அவள் அப்பா….
அவளுக்கு காலத்தைக் கடந்த சாகாப்தமே!
வன்னியூர் ஆர்.ஜெ. கலா