உலக அஞ்சல் தினத்தில் நுவரெலியா தபாலகத்தையும் அதனுடைய சொத்துக்களையும் எவருக்கும் அல்லது எந்த நிறுவனத்துக்கும் விற்பனை செய்வதில்லை என்ற வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்மானத்தை அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்திருந்தார்.
இது இலங்கையின் பழமையான வரலாற்றை கொண்ட தபால் திணைக்களத்துக்கு கிடைத்த ஒரு பெருமையும் அங்கீகாரமுமாகும்.
தபால் சேவை என்பது பழமையான அரச துறைகளில் ஒன்றாகும். இலங்கையில் சுமார் 224 வருட நீண்ட வரலாற்றை கொண்டது. புறாக்கள் தபால் சேவை, குதிரைவண்டித் தபால் சேவை பின்னர் ரயில் தபால் என இலங்கையில் தபால் சேவை வளர்ச்சியடைந்தது. 1500களில் ஆண்ட போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் தபால் சேவை போதிய வளர்ச்சியடைவில்லை. 1815 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் தபால் சேவையை மறுசீரமைத்து, இலங்கையின் முதல் நிரந்தர தபால் அலுவலகத்தை 1882 ஆம் ஆண்டு கொழும்பில் அப்போதைய ஆளுநரின் இல்லத்திற்கு எதிரே, கொழும்பு கோட்டையில் (தற்போதைய ஜனாதிபதி மாளிகைக்கு எதிரே) அமைத்தனர். இதன் கட்டுமான பணிகள் சுமார் 5 ஆண்டுகள் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. இதுவே இலங்கையின் முதல் தந்தி மற்றும் தொலைபேசி பரிமாற்ற நிலையமாகவும் செயற்பட்டது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக காலி, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், கண்டி, நுவரெலியா என தபாலகங்களின் எண்ணிகை அதிகரித்தது. குறிப்பாக மலையகத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் வளர்ச்சி காரணமாக தபால் நிலையங்கள் பல முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டன. இன்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தபால் நிலையங்களை அந்நகரங்களில் காணலாம்.
அந்தவகையில் நுவரெலியா தபால் நிலையம் தபால் சேவை வரலாற்றின் பெருமைக்குரிய நினைவுச்சின்னமாக விளங்குவதுடன் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. நுவரெலியா நகருக்குச் சென்றால், பிரதான பஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள கவர்ச்சியான சிவப்பு நிறக் கட்டடத்தை காணலாம். காலையிலும் மாலையிலும் நகரத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும் அடர்ந்த பனிமூட்டத்தில் இக்கட்டடம் தெரியும் போது பிரித்தானியாவின் சுற்றுச்சூழலைப் போல காட்சியளிக்கும். அதுமட்டுமின்றி பிரித்தானிய பாரம்பரிய கட்டடக்கலையின் சிறப்பம்சங்களை இத் தபாலகத்தில் காணலாம்.
ஆங்கிலேய Tudor கட்டடக்கலை நுட்பத்தில் சிவப்பு நிற செங்கற்களை கொண்டு 1882ஆம் ஆண்டு இக்கட்டடம் அமைக்கப்பட்டது. இரண்டு மாடிகளைக் கொண்ட கடிகார கோபுரம் பிரமிட்டு வடிவ கூரையுடன் முடிவடைகின்றது. இங்குள்ள நிர்மாணங்களுள் மணிக்கூட்டு கோபுரம் முக்கியத்துவம் வாய்ந்தது. கடிகாரம் இன்றும் இயங்கும் நிலையில் உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்த கடிகார கோபுரத்தின் கடிகாரம் பித்தளை மற்றும் எஃகினால் செய்யப்பட்டுள்ளதுடன் அது கனமான கயிற்றுக் கப்பிகளால் இயக்கப்படுவது சிறப்பம்சமாகும்..
வரலாற்று ஆர்வலர்கள் அல்லது முத்திரை சேகரிப்பாளர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம். தபால் அலுவலகத்தில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தபால் பெட்டி, அலுவலக உபகரணங்களை காணலாம்.
மேற் தளத்தில், தபால் அதிபருக்கான விடுதி காணப்பட்டது. தற்போது அது சுற்றுலா விடுதியாக இயங்குகின்றது..
நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தபால் அட்டைகள் மற்றும் கடிதங்களை நினைவுப் பரிசாக இந்த தபால் நிலையத்தின் ஊடாக அனுப்ப விரும்புகின்றனர்.
2007ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தின் பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இத்தபாலகம் இடம்பிடித்தது.
1990 ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி உலக தபால் தினத்தை நினைவு கூரும் வகையில் நுவரெலியா தபாலகத்தின் புகைப்படத்துடன் கூடிய ரூ.10 முத்திரை வெளியிடப்பட்டது.
எனினும் அதனுடைய அழகு, நேர்த்தி, மற்றும் பழமை என்பவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனை சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கான யோசனைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தன. 2012ஆம் ஆண்டு தபால் அதிபருக்கான விடுதி சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்டது.
2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதனை சுற்றுலா மையம் என்ற பெயரில் தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்வதற்கு அப்போதிருந்த அரசாங்கத்தால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் பல தரப்பினரின் எதிர்ப்பு மற்றும் தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அம்முயற்சி கைகூடவில்லை. ஆனால் கடந்த 2023ஆம் ஆண்டு மீண்டும் அப்பொக்கிஷத்துக்கு ஆபத்து ஏற்பட்டது. கண்டி, காலி கோட்டையிலுள்ள பாரம்பரிய கட்டடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
நுவரெலியா தபாலகத்தை வெளிநாட்டு நிறுவனமொன்று.ஹோட்டல் அமைக்கும் திட்டத்துடன் கையகப்படுத்த முயன்றது. அதற்கான ஒப்புதல்கள் இடம்பெற்று தபாலகம் கிட்டத்தட்ட பறிபோகும் நிலைமை ஏற்பட்டது. இதற்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட போதும் அவர்களின் குரல்கள் அடக்கப்பட்டன.
எனினும் ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றதை தொடர்ந்து நிலைமை தலை கீழாக மாறியது.
தபால் திணைக்களத்தின் 150 வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் விஜித ஹேரத் நுவரெலியா தபாலகம் மற்றும் காணி என்பன தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு அன்றி வேறு எந்தவொரு நடவடிக்கைக்கும் வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பை விடுத்திருந்தார்.
இது இலங்கையின் பழமையான வரலாற்றை கொண்ட தபால் திணைக்களத்துக்கு கிடைத்த ஒரு பெருமையும் அங்கீகாரமுமாகும்.
எனவே தபால் சேவை வரலாற்றின் பெருமைக்குரிய நினைவுச்சின்னமாகவும் சிறந்த கட்டடக்கலை அம்சமாகவும் காணப்படும் நுவரெலியா தபாலகத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும். பல மேற்கத்திய நாடுகளில் மக்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதிலும், அதன்.பழமையை பேணுவதிலும் உணர்வு பூர்வமாக செயற்படுவதை காண முடியும்..
அதற்கான சட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் முன்னோர்களின் அரும்பொக்கிஷங்களை பாதுகாப்பது தமது கடமையென வாழ்கின்றனர்.
எனவே நுவரெலியா தபாலகத்தை பேணிப் பாதுகாக்க வேண்டியது அவைரினதும் கடமை.
இதேசமயம் 224 வருட தபால் சேவை வரலாற்றை கொண்ட இலங்கையில் மலையக தோட்டப்புற மக்களுக்கு உரிய முறையில் கடிதங்கள் கூட கிடைப்பதில்லை என்பது இன்று வரை தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருந்துவருகிறது.
பல வருடங்களாக இதுதொடர்பில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நேர்முகத் தேர்வுகளுக்கான கடிதங்கள், நீதிமன்ற கட்டளைகள், நகை அடகு மீட்டல் போன்ற முக்கிய ஆவணங்கள் காலம் முடிவடைந்த பின்னரே கைகளில் கிடைப்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு பிரதான காரணம் தோட்டங்களில் லயன் வீடுகளுக்கு இலக்கங்கள் கிடையாது.
இதனால் தோட்ட அலுவலகம், தேயிலை கொழுந்து நிறுக்கும் இடங்களிலுள்ள அலுவலகங்களிலேயே கடிதங்கள் வருகின்றன. இதனால் இவை தாமதித்தே கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பலர், கஷ்டப்பட்டு உழைத்து சேர்ந்த நகை, வேலைவாய்ப்பு கல்வி என அனைத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே புதிய அரசாங்கம் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வசந்தா அருள்ரட்ணம்