நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று சில நாட்களாகின்றன. சுதந்திரத்திற்குப் பின் கடந்த 76 வருடங்களாக மாறி, மாறி ஆட்சிக் கட்டிலில் இருந்த இருபெரும் கட்சிகளையும், அதன் வழி வந்த அரசியல் தலைமைகளையும், வாரிசுத் தலைமைகளையும் நிராகரித்துவிட்டு கம்யூனிச சித்தாந்தங்களைக் கொண்டதாகக் கூறிக்கொள்ளும் ஒரு புதிய தலைவரை அதிகார பீடத்தில் அமரவைத்திருக்கிறார்கள் நாட்டு மக்கள். இந்த வரலாற்று திருப்பத்தை அரசியல் – சமூக விமர்சகர் என்ற மட்டில் எப்படி பார்க்கிறீர்கள்?
இது ஒரு வரலாற்று திருப்பம் என்பதில் ஐயமில்லை. வரலாற்றுத் திருப்பங்களை நிகழ்த்துவது இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல. நேர்மறையான திருப்பங்களை விட எதிர்மறையான திருப்பங்களையே அது அதிகம் நிகழ்த்தியிருக்கிறது. சுதந்திர இலங்கையில் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. சிறிமா_ சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டது, விடுதலைப் போராட்டத்தை யுத்தத்தின் மூலம் அடக்கியது என்று பலவற்றைச் சொல்லலாம். இவையெல்லாம் சிறுபான்மைத் தமிழர்களின் பார்வையில் பார்க்கும் போது தான் எதிர்மறையான திருப்பம். இதுவே பெரும்பான்மை இனத்தின் பார்வையில் நேர்மறையான திருப்பமாக இருக்கலாம்.
எப்படியிருப்பினும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு பாரிய திருப்பத்தைக் கொண்டு வந்ததாக 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற “அரகலய” போராட்டத்தைச் சொல்லலாம். அப்போராட்டத்தின் வெற்றி என்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியையும், யுத்த வெற்றியின் கதாநாயகனாகவும், நவீன துட்டகைமுனுவாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டவர் நாட்டை விட்டு ஓடியதும் உள்ளூரிலேயே ஓடி ஒளிந்ததுமாகும்.
அதன் பின்னடைவு என்பது “மஹிந்த கோஸ்டி” ஐ மட்டும் குறிவைத்து காலிமுகத்திடலில் மட்டும் அப்போராட்டத்தை நடத்தியதுதான். அப்போராட்டமானது உள்ளூர் மட்டத்தில், அந்தந்தத் தேர்தல் மாவட்டங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வெடித்திருக்க வேண்டிய போராட்டம்.
எனினும் அரகலயவின் நீட்சியாகவே இந்த அதிகார மாற்றத்தைப் பார்க்கலாம். அரகலயவிற்கு பின்வந்த நாட்களில் அதிரடித் திருப்பம் ஒன்று நாட்டில் ஏற்பட்டது.
2019 பொதுத்தேர்தலில் தோல்வியடைந்து தனது கட்சிக்கு போனஸ் சீட்டாக வைத்திருந்த ரணில் விக்கிரமசிங்க, ஒரு வருடம் தாமதித்து தானே அவ்வாசனத்திற்கு பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். எதிர்பாராத வேளையில் பிரதமராகி, கோட்டாபய நாட்டைவிட்டு ஓடியவுடன் தானே ஜனாதிபதியானார். அதாவது ஜீரோவிலிருந்து ஹீரோவாகினார். ஒன்றும் இல்லாமையிலிருந்து உயர்ந்த நிலைக்கு வருவதெப்படி என்பதற்கு உதாரணமானார்.
இரண்டு வருடத்திற்கும் சற்று அதிகமான அவரது ஆட்சிக்காலத்தில் வரிசையுகத்தை மாற்றினார் என்பது வரலாறு. அரசியலில் தனக்குள்ள அனுபவம், சர்வதேச நாடுகளுடனும், அமைப்புக்களுடனும் தனக்குள்ள இராஜதந்திர தொடர்பு, மேற்குலக நாடுகளின் செல்லப்பிள்ளை என்ற சலுகை, நிர்வாகத் திறன் போன்ற தன் ஆளுமையைப் பயன்படுத்தி கடன்சுமையை இருபது வீதம் குறைத்தது, சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் என்று நாட்டை படிப்படியாக பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப முற்படுகையில்தான் ஜனாதிபதி தேர்தல் வருகிறது.
இந்தத் தேர்தலில் அவர் நாமல் ராஜபக்ஷவை ஒரு பொருட்டாக மதித்திருக்கவே முடியாது. அநுர, சஜித், ரணில் என மும்முனைப் போட்டியாக இருந்தாலும் தான் வெற்றியீட்டிவிடுவோம் என்ற ஓர் அசாத்திய நம்பிக்கையில் தான் ரணில் இருந்திருப்பார். அநுரவோ, சஜித்தோ முன்வராத போது தான் பிரதமராகி, ஜனாதிபதியான ‘ஆபத்பாந்தவன்’ அல்லவா. அவர் சஜித் பிரேமதாசா பெற்ற வாக்குகளைவிட அரைவாசியே பெற்றிருப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
ஆனால் மக்கள் தீர்ப்பு வேறாக அமைந்துவிட்டது. மக்கள் ரணில்மேல் நம்பிக்கை இழந்ததற்குக் காரணம் குறுகிய காலத்தில் அவர் அடைந்த வெற்றியல்ல. மாறாக ஊழல்வாதிகளை அவர் காப்பாற்றியதுதான். தன்னுடைய கட்சியில் மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கில் சிக்கியவர்களைக் காப்பாற்றியது. பொருளாதார வீழ்ச்சிக்கு மஹிந்த தரப்பே காரணம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும், ஈஸ்டர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மற்றும் அரகலயவை ஆயுதப் பலம் கொண்டு அடக்கியது, என்பவையே மக்களின் கண்களுக்குப் பிரதானமாக தெரிந்திருக்கிறது.
இரண்டு வருடங்களாக நாட்டைத் தோளில் சுமந்தது அல்ல, 76 வருடங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்களது பலவீனமான பொருளாதாரக் கொள்கையும் ஊழலும் தானே நாட்டை வங்குரோத்து நிலைக்குச் இட்டுச் சென்றிருக்கிறது என்ற எண்ணமே அவரை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக ஆசனத்தில் அமர்த்த முடியவில்லை.
ரணிலிடம் காணப்படும் மேட்டுக்குடி உணர்வால், சஜித் பிரேமதாசாவை புறந்தள்ளி ஐக்கிய தேசிய கட்சியை உடைத்ததும் ஒரு காரணம் எனலாம். பச்சைக் கட்சி உடையாமல் சஜித்தோ, ரணிலோ யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் தேர்தல் பெறுபேறு வேறு விதமாக அமைந்திருக்கும்.
தேர்தலுக்குப் பின்னாலான இந்த சில நாட்களை எவ்வாறு அவதானிக்கிறீர்கள்?
தேர்தலுக்கு முந்திய வாரத்தில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். இந்தத் தேர்தலில் அநுர ஜெயித்தாலும் ஆட்சி அமைக்க முடியாது. அமைச்சரவையை உருவாக்க முடியாது என்றார். ஆனால் சாதகமற்ற சூழலிலும் சந்தர்ப்பங்களை உருவாக்குவது சாத்தியம் என்பதற்கு அநுர சாட்சியாகத் திகழ்கிறார். இருந்த அமைச்சரவையை மூன்றாக சுருக்கி, பெரும்பான்மையான அமைச்சுப் பொறுப்புக்களை தன்னகத்தே வைத்துக் கொண்டு, அமைச்சின் செயலாளர்களை நியமித்திருக்கின்றார். ஏறத்தாழ 22 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் பதினைந்து அமைச்சுக்கள் போதும். கூட்டணியில் உதிரிக்கட்சிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவே இராஜாங்க அமைச்சர்கள் உருவாக்கப்படுகின்றார்கள் என்பது யாவரும் அறிந்ததே!
புதிய பெண் பிரதமர் குறித்து?
அநுரவின் அடுத்த அதிரடி மாற்றம் என்பது புதிய பெண் பிரதமரை நியமித்ததுதான். 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 12 பெண் உறுப்பினர்களை மாத்திரம் உள்ளீர்த்திருந்தது பழைய பாராளுமன்றம். இது 6 வீதத்திற்கும் குறைவானதாகும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் இருபத்து நான்கு வருடங்களுக்குப் பின் பெண் ஒருவரை பிரதமராக நியமித்திருப்பது பெண் வர்க்கத்திற்கு செய்யப்படும் ஒரு சிறிய நீதி எனலாம். பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி குறைந்தபட்சம் 30 பெண் உறுப்பினர்களை உள்வாங்கும் போதுதான் பால்நிலை சமத்துவத்தை உயர்மட்டத்தில் ஓரளவு பேணக்கூடியதாகவிருக்கும்.
அத்தகைய மாற்றமானது அடிப்படையான சமூக அலகுகளிலும், நிறுவனங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவே செய்யும். முன்பள்ளி பெற்றோர் அமைப்பு, பாடசாலை அபிவிருத்திச் சபை, கிராம அபிவிருத்திச் சபை, ஆலயங்கள் கோயில்களின் நிர்வாகச் சபை, பிரதேச சபை, அரச பணிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்ற அனைத்து அமைப்புகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் கூடி முடிவெடுக்கும் தளத்திற்கு அவர்கள் நகரவேண்டுமெனில் பெண் ஒருவரை பிரதமராக நியமித்த புதிய ஜனாதிபதி இதனிலும் கவனம் செலுத்த வேண்டும் .
சமூக வலைத்தளங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திளை வெளியிடுகின்றனவே?
அநுரவின் வெற்றியைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களின் அசுர படையெடுப்புக்களும் அவை சொல்லும் சேதிகளும் சில வேளைகளில் உண்மையாகவும், பல வேளைகளில் உண்மைக்குப் புறம்பானவையாகவும் காணப்படுகின்றனதான். காலி முகத்திடலில் ஒரே இரவில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அரச வாகனங்கள் உண்மையாக இருந்தாலும் அவை குறித்து சோடிக்கப்படும் செய்திகள் புனைவுகளாக இருக்கின்றன.
அநுரவின் ஆட்டம் ஆரம்பம், ரணில் கைது, மஹிந்த கைது, சுமந்திரனுக்கு அமைச்சர் பதவி என்று சாதாரண அரசியல் நோக்கர்களை தடுமாறச் செய்கிறது.
மக்கள் விடுதலை முன்னனி என்பது கம்யூனிச சாயம் பூசப்பட்ட இனவாதக் கட்சி எனவே சிறுபான்மையினருக்கு ஆபத்து எனக் கூறுவதும் அவரவர் எந்த நிலையில் நின்று நோக்குகிறார்கள் என்பதைப் பொறுத்ததே!
திசைவழிப் பயணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
அதிகாரத்தைக் கைப்பற்றிய ஓரிரு நாட்களில் பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலை அறிவித்திருப்பது அவசியமும், அவசரமுமானதாகும். இந்தப் பொதுத் தேர்தலிலும் அநுர அலை பலமாகவே வீசும் என நம்பலாம். படித்த இளைஞர்- யுவதிகள் வேட்பாளர்களாக உள்ளீர்க்கப்படலாம். மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்கள் தேசிய மக்கள் சக்தி காரியாலயங்களுக்குச் சென்று தங்கள் தோட்டங்களில் கட்சியை ஸ்தாபிக்க வேண்டுகோள் விடுப்பதாக செய்திகள் பரவுகின்றன.
மலையக அரசியலில் தடுமாறும் நிலை காணப்படுகிறதே?
இன்றைய சூழலில் மலையக அரசியல், மலையக அரசியற்களம் பல ஆண்டுகள் பின்நோக்கி நகர்ந்திருந்தாலும் புதிய மாற்றத்திற்குரிய வெளிச்சம் தென்படாமலில்லை. அங்கு உடனடியாக ஓர் அரசியல் சுத்திகரிப்புத் தேவைப்படுகின்றது. மலையக இளைஞர்கள் அரகலயவின் போது உள்ளூர் மட்டத்தில் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். தவறவிட்டதை நிறைவேற்ற மீண்டும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.
அங்கு வாக்காளர்கள் தேசியத் தலைமைகளின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அல்ல, மாறாக இ.தொ.கா தலைமை, மலையக மக்கள் முன்னணி தலைமை, தொழிலாளர் தேசிய முன்னணி தலைமை என்ன சொல்கிறதோ, எதற்கு கை காட்டுகிறதோ அதற்கு வாக்களிக்கும் நிலைதான் இன்றும் காணப்படுகின்றது.
அந்த மனோ நிலையை சாதகமாக பயன்படுத்தி, இன்னும் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தாமல், தொடர்ந்து அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன இக் கட்சிகள்.
சுரேஷ்