Home » பொய்க் கேஸ்

பொய்க் கேஸ்

by Damith Pushpika
October 6, 2024 6:00 am 0 comment

இ லங்கையில் ‘ஐஸ்’ போதைப் பொருளை விற்றால் இனி மரண தண்டனை. புதிய சட்டமொன்று வெளிவந்திருக்கிறது. இலங்கையில் ‘ஐஸ்’ எனப்படும் மெத்தம் பெட்டமைன் (Methamphetamines) போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் 2022.நவம்பர் 24 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வந்துள்ளது, என்ற பத்திரிகைச் செய்தியை படித்த வஸீம் தன் நண்பர்கள் இருக்குமிடத்தை தேடி மூச்சு வாங்க ஓடி வருகிறான்.

“டேய் மச்சான்… வஸீம் என்னடா இப்படி தலைதெறிக்க ஓடி வருகிறான். அவன் காலையிலயே அடிச்சிருப்பான் போல மச்சான்” என்று சொல்லி நண்பர்களான றம்சான், ரிபாஸ், ஹரி, மபாஸ் அவர்களுக்குள்ளேயே சிரித்தார்கள்.

“டேய் மச்சான்” என்று ஓடி வந்தவன் வார்த்தைகள் வராமல் தட்டுத் தடுமாறினான்.”டேய் இப்போ என்னாடா நடந்ததுஇப்படி அதறப்பதற ஓடி வாராய்”

“டேய் முதல்ல சிரிக்கிறத நிறுத்துங்கடா”

“சரி சரி.. சிரிக்கல சொல்லுடா”

அப்போது வஸீம், தான் காலையில் படித்த பத்திரிகைச் செய்தியை நண்பர்களிடம் சொல்லத் தொடங்கினான். அதுவரை சிரித்துக் கலாய்த்து நின்றவர்கள் மெது மெதுவாக தங்களது இதழ்களிலிருந்து புன்னகையை தூர வீசத் தொடங்கினார்கள். வியர்வை சொட்டச் சொட்ட மரமரத்துப் போய் நின்றார்கள்.

“டேய் என்னடா சொல்றாய்…” அந்த பத்திரிகை தாளை யாருக்கும் தெரியாமல் கிழிச்சு எடுத்துட்டு வந்திருக்கேன். படிக்கிறேன் கேளுங்கடா”

“படி”

‘ஐஸ் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை தண்டிப்பதற்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் போதுமானவையாக இருக்கவில்லை. இதன் பிரகாரம் அந்தச் சட்டம் திருத்தப்பட்டு அதன் மூலம் மரண தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“டேய் வஸீம், இது உண்மையாடா?”

ஹரி சொன்னான், “இது சும்மாடா இந்த பத்திரிகைக்காரன்கள் பப்ளிசிட்டிக்காக எழுதிருக்கான்கள்.

பைத்தியமா உனக்கு” என்றதும் வஸீம் கோபமானான். நீதி அமைச்சர் விஜேயதாஷ ராஜபக்ஷ அனுமதி எடுத்துட்டாராம். “எனக்குண்டா ஒண்ணும் புரியல” என்று மபாஸ் சொன்னான்.

“நாம கூட ஒரு வருசத்துக்கு மேலாக குடிக்கிறோம். நமக்குண்டா இந்த ஐஸ் சந்தோசத்தைதானே தந்திருக்கு. இதற்குப் போய் மரண தண்டனையா? என்ன வேடிக்கையான அரசாங்கமாக இருக்கு இது.”

“டேய் என்னடா இப்போ போய் பகிடியா நினைச்சிட்டிங்க போல சீரியசாக யோசிச்சிப் பாருங்கடா. இதற்கு அப்புறம் இந்த பொலிஸ்காரர்களின் நிலைமையை இப்பவே நம்மள குடிச்சதுக்கு ஒரு தடவை ரோட்ல வெச்சி சிக்கலாகி ‘கேஷ்’ போடுவேன் என்று மிரட்டி நம்மட நிறைய பணத்தை பறித்து பிரச்சினைக்குள் சிக்க வச்சாங்கள்”

மரண தண்டனையென்றால் இதையே காரணம் காட்டி நம்மள என்னவெல்லாம் பண்ணப் போறானுங்களோ”

“ஆமால்ல…”

“சரிதாண்டா நீ சொல்றது..”

“இப்ப என்னடா பண்ணுறது…”

“ஒவ்வொருவரும் தலையை பிய்த்துக் கொண்டிருக்கும் போதுதான் மபாஸின் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

“டேய் மபாஸ் எங்கடா இருக்காய்..?”

“நான் எங்கே இருந்தாலும் உனக்கு என்னடா” என்று போனை கட் பண்ணிட்டான்.

“டேய் என்னாச்சு..?”

“ஏன் கோபமா இருக்காய்?”

“போர்ன் எடுத்தது யாரு? அவன்தான் துரோகி…யாரு ரனீஸா?”

“ஆமா…”

“என்னவாம் அவனுக்கு..?” என்று கேட்கவும், மீளவும் தொலைபேசி அழைப்பு வருவதற்கும் சரியாகவிருந்தது.

“இவனுக்கு… ஆ…ஆ…” என்று சலித்தவாறே தொலைபேசி அழைப்பு பட்டனை மீண்டும் ‘ஆன்’ செய்தான்.”

“டேய் எதுக்குடா சும்மா சும்மா கோல் அடிச்சி தொந்தரவு பண்ணுறாய்?”

“டேய் ஒரு நிமிசம் நான் என்ன சொல்ல வாறேன்று கேளு நான் ஒண்ணும் உங்கிட்ட நட்பு பாராட்ட வரல”

“நீ என்கிட்ட சொல்ல என்ன இருக்கு நீயெல்லாம் ஒரு மனுஷனா? துரோகி..”

“டேய் நான் துரோகியாகவே இருந்துட்டு போறேன்”

“இப்போ இதை நான் உன்கிட்ட சொல்லாமல் போனால்தான் துரோகியாகிடுவேன்.”

“டேய் சும்மா கடுப்பேத்தாமல் சொல்லுஎன்ன சொல்லணும் இப்போ…”

“மபாஸ் அந்த சனத் பொலிஸ் உங்க மாமா, உவைஸ்கிட்ட காசு கொடுத்து ஜெமீலாட பர்சாத்தை பிடிக்க ஐடியா பண்ணீட்டாங்க. நீ அங்கே போய்டாத இது சத்தியமான உண்மை நம்பு. இதை உன்கிட்ட சொல்லத்தான் கோல் பண்ணினேன். நான் வைக்கிறேன்.”

“டேய்..டேய்” அழைப்பை துண்டித்து விட்டான்.

“என்னாடா?”

“டேய் மச்சான் ஹரி நீ பர்சாத்கிட்ட பொருள் வாங்கப் போகாதே”

“ஏன்டா சொல்ரத மட்டும் கேளு”

“ரிபாஸ், ரம்சான் நீங்க செத்தாகிட்ட போய் நம்மட காசை வாங்கிக் கொண்டு வந்திடுமற்றதெல்லாம் அப்புறம் சொல்றேன்”

“இவன் என்னாடா சொல்றான் ரம்சான்”

“டேய் ஏதோ இருக்கு அவன் சொன்னா அதுல அர்த்தமிருக்கும்.”

“சரி..வா போய் அவன் சொன்னதை செய்வோம்”

“ஹரி நீ வீட்ட போ… நாங்க வந்து கோல் தாறோம்”

“ஓகேடா மச்சான்”

மபாஸ் வீட்டுக்குச் சென்றான். அங்கு பலரும் அழுது கொண்டிருப்பதை கண்டு தனது தங்கையிடம் விபரத்தை கேட்டான். சகோதரி சொன்ன பதிலை கேட்டு அப்படியே உறைந்து போகிறான். மாமா உவைஸ் ஒரு தினக் குடிகாரன். “கசிப்பு வடி சாராயம் இல்லாம இருக்கவே மாட்டான். ஆனால், அவன் வடிசாராயமும், பீடியும் தான் பிடிப்பான். குடிக்க காசு இல்லாட்டி திருடுவான். இப்படியானவனைத்தான் சனத் பொலிஸ் தன் வலையில் சிக்க வைத்து “ஐஸ் போதை இன்னாருடைய வீட்டில் விற்பனை செய்யப்படுகிறது என்று எங்களுக்கு தெரியும். நீ போய் வாங்கிக் கொண்டு வந்தா உனக்கு எந்த பிரச்சினையும் பண்ணாமல் இப்போ உன்னை விட்டுடுவோம். இன்னும் மூன்று நாளைக்கு குடிக்க நாங்களே காசும் தாறோம்.

இந்தா பிடி ஐயாயிரம் ரூபா. இது உனக்கு. இந்தா பத்தாயிரம். இதுக்கு ‘ஐஸ்’ தூள் வாங்கிக் கொண்டு தா.

“ஓகே மாத்தயா.., நான் வாங்கிட்டு வாறேன்” என்று நேற்று பொலிஸ் ஆட்களிடம் பணத்தை வாங்கியவன், அவர்கள் சொன்ன வேலையையும் செய்யவில்லை. காசையும் திருப்பிக் கொடுக்கவில்லை. தலைமறைவாகி விட்டான். கொடுத்த காசுக்கெல்லாம் சாராயத்தை வாங்கி குடித்து விட்டானாம். அதனால் இவனை பொய்யாக வழக்குப் போட்டு சபீலாட வீட்ல மகமாரு கிராமத்துல வச்சி அடிச்சி பிடித்துக் கொண்டு போய் விட்டாங்களாம். இப்போ அவனை ‘ஐஸ்’ ஏஜன்ட் என்று சொல்லுறாங்களாம். இதற்கு அவன் சாராயத்தை தவிர வேற எதையும் குடிக்க மாட்டான். என்று ஊருக்கே தெரியும். அவனைப் போய் இப்படி பண்ணீட்டானுங்க.

இந்த கதையை கேட்டதும் மபாஸ் அதிகமாகவே பயந்து போயிருந்தான். நண்பர்களுக்கு நடந்த விடயத்தை சொல்லி “கொஞ்ச நாளைக்கு நம்ம ஒருவருக்கொருவர் சந்திக்க வேணாம்டா” என்ற சேதியையும் சொல்லி விட்டு இவனும் அமைதியாக இருந்து விட்டான்.

இப்படியே ஒரு வாரம் கழிந்தது. பொலிஸ் கெடிபிடிகள் அதிகரித்தன. அகப்படுறவனையெல்லாம் பிடித்து நீதிமன்றக் கூண்டில் ஏற்றி விடுகிறார்கள்.

கேஸ் போடுறது பணம் பறிப்பது என்று பொலிஸின் அட்டகாசம் அதிகரிக்கவே இவர்கள் ஆசுவாசமாக உள்மனதுக்குள் முணகிக் கொண்டிருந்தனர். இப்படியான நேரத்தில்தான் பொலிஸ் யுனிபோர்ம் அணிந்த இரண்டு பேர் மகரூப் நகர்ல “மௌசுக் என்றால் யாரு? இவர் திருகோணமலை சிறைச்சாலையில் சண்டை போட்டு மண்டை உடைக்கப்பட்டு வைத்தியசாலையில் அட்மிட் ஆகியிருக்கார்’ என்ற தகவலையும் சேர்த்து சொல்லி விட்டுச் சென்றார்கள். ஒரு வாரமாக பொலிஸ் நிலையத்திலிருந்து “ஒவ்வொரு நாளும் மௌசுக் என்பவர் யாரு?” என்று தேடி விசாரித்து அலைந்து களைத்து விட்டார்கள்.

ஊரில் இப்படியொரு நபர் சிறைச்சாலைக்கு சென்றதாக தெரிந்தவர் யாருமில்லை. ஊர் மக்களுக்கும் இப்படியான தகவல் எதுவும் தெரிந்திருக்கவில்லை. “பொலிஸ் அதிகாரிகள் தேடி.களைத்துவிட்டனர்.

அப்படி பெயருடையவர்கள் தெரியாது. ஊர் பள்ளிவாசல் நிருவாகத்திடமும் அல்லது கிராம சேவகரிடமும் விசாரித்தும் கண்டு கொள்ள முடியவில்லை. இப்படி இரண்டு வாரம் கடந்த விட்டது.

இந்த நிலையில் உவைஸின் சகோதரி சபீலா இவனை சிறைச்சாலைக்கு பார்ப்பதற்காக செல்கிறார். அங்கே போன பிறகுதான் உண்மை தெரிய வந்தது. ‘மௌசுக்’ என்று பெயர் கொடுக்கப்பட்டிருப்பது தனது சகோதரன் ‘உவைஸ்’தான். அவர்தான் தற்போது வைத்தியசாலையில் உள்ளார் என்பதும் தெரிய வந்தது. ஆனால், அங்கே அவரை சிறைச்சாலை அதிகாரிகள் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை.

“இவரை பிணையில் எடுக்க வேண்டும். அவரை நான் பார்க்க வேண்டும்” என்று சபீலா அழுது புலம்பி கெஞ்சியும் அவரை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை.

“நீங்க போய் சமாதான நீதவானிடம் இந்த ‘மௌசுக்’ என்பவரும் ‘உவைஸ்’ என்பவரும் ஒருவர்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வாங்க பார்க்க அனுமதிக்கின்றோம்” என்று அவரை சிறைச்சாலை அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர்.

சபீலா வீடு வந்து உண்மையை சொல்லி சமாதான நீதவான் ஒருவரிடம் போய் சத்தியக் கடதாசி ஒன்றையும் அவசர அவசரமாக முடித்துக் கொண்டு சிறைச்சாலைக்குச் சென்றார்.

அவரை திருகோணமலை நீதிமன்றத்திற்கு போகுமாறு அனுப்புகின்றார்கள். இவரும் நீதிமன்றத்துக்குச் சென்றார். அங்கே உவைஸ் அழைத்து வரப்படவில்லை. மீண்டும் சிறைச்சாலைக்கு செல்கிறார்.

சபீலாவை அழைத்து அப்போதுதான் விடயத்தை சொல்கின்றார்கள்.

“உங்களுடைய தம்பி பொலிஸிடம் ஒரு தவறான பெயரை கொடுத்திருக்கிறார். அந்த பெயரில்தான் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கு. அவருடயை அடையாள அட்டையில் உள்ள பெயர் உவைஸ் என்று உள்ளது.

அவரிடம் ஏன் இவ்வாறு பொய் சொன்னாய்? என்று கேட்டால் என் மீது ‘பொய் கேஸ்’ போட்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கையில் நான் எப்படி உண்மை பெயரை கொடுப்பது? என்று உயர் அதிகாரிடமே தெனாவட்டாய் பேசி விட்டான். அப்புறம் நேற்று அவனுடன் சிறையில் ‘ஐஸ்’ கேஷில் பிடிபட்டு ஆறு மாத சிறைத்தண்டனை பெற்ற ஒருவருடன் ஒரு குறை பீடித் துண்டுக்காக சண்டை போட்டு ஆளுக்கு ஆள் கிடைச்ச பொருளால் ஒருவருக்கொருவர் தாக்கிய போது சிறையிலிருந்து இன்னும் இரண்டு வாரத்தில் தண்டனை முடிந்து போகின்ற அந்த பையன் உங்க சகோதரனை தூக்கி சுவரில் அடித்து விட்டான், உங்கட தம்பி இப்போ மிகவும் சீரியசாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்” என்றதும் சபீலா அங்கேயே அழுது, புலம்பி களைத்து தலைசுற்றி கீழே மயங்கி விழுந்தார்.

அவரையும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்குப் பின்னர் தனது சகோதரன் உவைஸை பார்க்க சபீலா அழைத்துச் செல்லப்பட்டார். அவனை பார்க்க முடியாதபடி அவனது முகமும் தலைப் பகுதியும் இனம் கண்டு கொள்ள முடியாதபடி கடுமையாக சிதைக்கப்பட்டிருந்தது. உயிர் இப்போது அப்போது என்று சில நொடியில் போய்விடுமென்ற நிலையில் தனது சகோதரனை பார்த்து அழுது புலம்பி அங்கேயே மரத்து நின்றாள் சபீலா.

சில நொடியிலேயே உவைஸின் உயிரும் போனதாக வைத்தியர் உறுதிப்படுத்தியதையடுத்து பொலிஸாரும் அவர்களுக்கு தகவல் சொன்னார்கள்.

ஊரெல்லாம் பல கதைகள், பல வதந்திகள் உவைஸின் மரணத்தையொட்டி மிக வேகமாகப் பரவியது. இது உவைஸின் குடும்பத்தாரை இன்னும் காயப்படுத்தியது. போதாமைக்கு “கஞ்சா, ஐஸ் என்று மார்க்கம் தெரியாமல் கெட்டுத் திரிந்தவனுக்கெல்லாம் பள்ளியில் ஜனாஸா தொழுகை நடாத்தக் கூடாது, முஸ்லிம்களை அடக்கம் செய்யும் “கப்ரில் “அடக்கம் செய்யக்கூடாது, தனியாக அடக்கம் செய்யப்பட வேண்டும். உயிரோடு இருந்த காலம் பள்ளியோடு தொடர்பு இல்லாத அவரை அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது” என்று கூட பல பிரச்சினைகளும், வாதப் பிரதிவாதங்களும் அடுக்கடுக்காக எழுந்தன.

இது இன்னுமின்னும் அவரது குடும்பத்தாரையும் பிள்ளைகளையும் அதிகமாக பாதிக்கச் செய்தது. எதுவும் செய்யவியலாது கவலையிலும் வருத்தத்திலும் மூழ்கி நின்றார்கள்.

இறுதியாக பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் உவைஸின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சுற்றியிருந்த உறவினர்களின் மனதில் தேங்கியிருந்த கவலைகள் பீறிட்டு அழுகை நதியாக பெருக்கெடுத்தது உடல் கொண்டு வந்தன. சுற்றத்தார் ஓவென்று அழுதனர்.

நேரங்கள் கடந்தன. அனைத்து தடைகளையும் தாண்டி உவைஸின் உடல் மார்க்க முறைப்படி மையவாடியில் அடக்கமும் செய்யப்பட்டது.

நாட்கள் நகர்ந்தது. இப்போது நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகின. உவைஸின் மனைவி ‘இத்தா’ இருந்து கொண்டிருந்தார், காலம் கடந்தது ‘இத்தா’ முடிவதற்கு இன்னும் ஓரிரு வாரங்கள் மீதமிருந்தன. பட்டினி பசி குழந்தைகளின் கல்வியினை தொடர முடியாத நிலை.குடிகாரனாக இருந்தாலும் தனது குடும்பத்தை ஒரு நாளும் பசியில் விட்டிடாத உவைஸ் இன்றில்லை. அந்த குடும்பம் இன்று வறுமையில் புதையுண்டு, சிதைந்து போயிருக்கிறது.இந்த போதைப்பொருள் பாவனை பாருங்கள் எங்கே கொண்டு போய் நிறுத்திருக்கிறது.

கொலையில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.

இந்த கொடூர கொலையின் பரிசாக உவைஸின் ஆறு பிள்ளைகளும், அவனுடைய மனைவியும் அநாதையாய் போனதைத்தவிர வேறு என்ன கிடைத்தது.

அந்த தாயின் பக்கத்தில் இப்போ ஆறு குழந்தைகளும் வாடிய முகத்துடன் ஒரு ஓராமாய் உட்கார்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

கிண்ணியா ஜே.பிரோஸ்கான்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division