சீனாவில் “தடைசெய்யப்பட்ட நகரம்” என்ற அரண்மனை நகரம் அமைந்துள்ளது. தியானென்மென் சதுக்கத்தின் வடக்கே, ஒரு இலட்சம் கைவினைஞர்கள் உள்ளிட்ட 10 இலட்சம் பேர் உருவாக்கியது தான் இந்த 178 ஏக்கர் பரப்பளவில் (720,000 ச. மீற்றர்) உள்ள தடைசெய்யப்பட்ட நகரம் (Forbidden City).
சீனாவில் மிக அதிகம் பேரால் (ஆண்டுக்கு 14மில். பார்வையாளர்கள்) பார்வையிடப்படும் இடம் இதுதான்.
1406இல் மிங் வம்சத்தின் மூன்றாவது பேரரசர் யாங்ல ஆட்சியின் போது, 1406 இல் தொடங்கி, 1420இல் இதைக் கட்டி முடித்தார்கள். இந்த அரண்மனை நகரத்தில் 24 பேரரசர்கள் தங்கியிருந்து 492 ஆண்டுகள் சீனாவை ஆண்டார்கள் என்பது சரித்திரம். சீன வழமைப்படி, நாட்டின் பேரரசரை விண்ணகத்தின் மகன் (Son of Heaven) என்று அழைத்து வந்ததோடு, விண்ணகத்தின் உச்சபட்ச அதிகாரம் பேரரசர் மீது பொழியப்பட்டுள்ளதாகவும் மக்கள் நம்பினார்கள். இது புனிதமான இடம் என்பதால், பொதுமக்களுக்கு இங்கு செல்ல அனுமதியில்லை. “தடை செய்யப்பட்ட நகரம்” என்று இந்தக் காரணத்திற்காகவே, சொல்லப்படுகின்றது. எல்லா இடங்களுக்கும் செல்ல முழு அதிகாரமும் உரிமையும் கொண்டவர் பேரசர் மட்டுமே! ஆணிகளைப் பயன்படுத்தாமல், மரத் துாண்களையும் உத்திரங்களையும் இணைத்து, எழுப்பப்பட்டுள்ள இந் நகரத்து சுவர்கள் மற்றும் துாண்கள், ஜன்னல்களுக்கு பெரும்பாலும் சிவப்பு, மஞ்சள் வர்ணங்களே பூசப்பட்டுள்ளன.சீனர்களுக்கு சிவப்பு என்பது அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, ஆசீர்வாதம் என்பவற்றைக் கொண்டுவரும் நிறமாகும். Ming, Qing வம்ச காலத்தில் மஞ்சள் என்பது அரச குடும்பத்திற்குரிய நிறமாக இருந்து வந்துள்ளது.
இந்த இராட்சத அரண்மனையின் கடைசிப் பேரரசர் பூயி (Puyi) 6 வயதில் பதவி துறந்து (1912) சீனக் குடியரசு மலர்ந்ததும், அரண்மனை அருங்காட்சியகமானது. இது யுனெஸ்கோவினால் 1987முதல் சீன புராதனச் சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்டது. பிரமாண்டமான இந்த நகரத்திற்குள் 90 அரண்மனைகளும் 980 கட்டடங்களும் இருக்கின்றன.
மொத்தம் 8707 அறைகள் இங்கே இருப்பதாக, 1972 கணக்கெடுப்பு ஒன்று கூறுகின்றது. அதே சமயம் இந்தப் பேரரசர் 10,000 அறைகள் கட்ட விரும்பியதாகவும், இது விண்ணகத்தில் இருக்கும் மொத்த அரண்மனைகளின் எண்ணிக்கைக்கு இணையாக இருப்பதாகச் சொல்லி கடவுள் மிகுந்த கோபம் கொண்டதாகவும், அதனாலேயே 9999.5 அறைகள் மட்டுமே கட்டப்பட்டதாகவும் செவிவழி வந்த ஒரு கதை சொல்வதும் இங்கே கவனிக்கத்தக்கது.