கே : இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து உங்கள் கருத்தை பகிர்ந்துக் கொள்வீர்களா?
பதில் : இலங்கை வரலாற்றில் முதன் முறையாக சாதாரண விவசாய குடும்ப பின்னணியைக் கொண்ட, கல்வி கற்ற, இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு சாதாரண குடிமகன் நாட்டின் தலைவராக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவின் தெரிவானது மக்கள் ஆட்சியில் சாதாரண குடிமகனுக்கான முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. இது இலங்கையின் மறுமலர்ச்சிக்கான ஒரு ஆரம்பமாக இருக்கின்றது.
கே : திசைக்காட்டிய ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொண்டு வருவதில் நீங்கள் மலையக மக்கள், வட, கிழக்கு மக்கள், புலம்பெயர் மக்களிடம் கூட பரப்புரை செய்தீர்கள். தமிழ் பேசும் மக்களையும் இணைத்து செல்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள் அல்லவா?
பதில் : இந்த நாட்டில் ஒரு மாற்றம், ஒரு மறுமலர்ச்சி இடம்பெறுகின்றது என்றால் அதில் தமிழ் பேசும் மக்களுடைய குறிப்பாக மலையக, ஏனைய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களுடைய பங்களிப்பு இன்றியமையாததாகும்.
இந்த மக்களும் இந்நாட்டின் பிரஜைகள், வாக்காளர்கள், வரி செலுத்துபவர்களாகும். எனவே அரசியல் மாற்றத்தில் அவர்களுடைய பங்கை நீக்கி விட்டு பார்க்க முடியாது. ஆனால் கடந்த பல வருடங்களாகவே, மலையக, தமிழ், முஸ்லிம் மக்களுடைய, வட, கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களுடைய அரசியல் போக்கானது வித்தியாசமானதாகவே இருக்கின்றது. எனவேதான் அவர்களையும் ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டியிருக்கின்றது. 2022 மக்கள் போராட்டத்தில் கற்றுக்கொண்ட பாடமானது நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செல்லவேண்டியதன் அவசியத்தை காட்டிநிற்கின்றது. இந்த நாட்டிலே வருகின்ற எந்த அரசாங்கமும் ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்ததாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே தமிழ்பேசும் மக்களும் ஆட்சியமைப்பதில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அனைவரும் இணைந்து செல்லவேண்டி ஏற்படுகின்றது. அதேவேளை தேசிய மக்கள் சக்தியில் உண்மையாக செயற்படுகின்ற எவரும் தனிப்பட்ட எந்த நன்மைகளையும் எதிர்பார்த்து வேலைசெய்து பழக்கப்பட்டவர்கள் அல்லர். ஏனைய கட்சிகள் போல் அரசியலை தனிநபர் நலத்திற்கோ அல்லது சுரண்டலுக்கே இங்கு பயன்படுத்த முடியாது.
கே : ஜனாதிபதி அநுர அடுத்து எவ்வாறான திட்டங்களை முன்வைக்க இருக்கின்றார்?
பதில் : தேசிய மக்கள் சக்தியானது கொள்கை திட்டமொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் முன்னெடுத்து செல்லப்படும் இந்த திட்டங்களும் கூட்டு முயற்சியாகவே நடைபெறும்.
குறிப்பாக உணவு, கல்வி சுகாதாரம் போன்றவற்றுக்கான வற்வரி நீக்கப்படுவதினூடாக இந்த நாட்டிலே வாழுகின்ற அனைத்து மக்களும் நன்மை அடைவார்கள் ஆரோக்கியமான உணவு, சிறந்த கல்வி, நல்ல சுகாதாரம் என்பவை உறுதிப்படுத்தப்படும் அதேவேளை நாட்டின் பொருளாதார துறையில் உற்பத்தி வருமானத்தை அதிகரிப்பதில் கவனம்செலுத்தப்படும். மேலும் இனங்களுக்கிடையிலான பாகுபாட்டினை நீக்குதல், சமத்துவத்தை உறுதிப்படுத்துதல் என்பவற்றோடு, இலஞ்சம் ஊழல் என்பவற்றை ஓழித்தல் என்பவை அடுத்து வருகின்ற முக்கிய பொறுப்புக்களாகும்.
கே : ஜனாதிபதியின் இலஞ்ச ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை குறித்து இளைஞர் யுவதிகளுக்கிடையில் அதிகமாக பேசப்படுகின்றது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் : திசை காட்டியின் கொள்கையானது நேர்மையான மக்கள் ஆட்சி மற்றும் மக்களின் சொத்துக்களை வீண்விரயம் செய்யாமல் சட்ட ஆட்சியை நடத்துவதாகும். அதன்படி தற்பொழுது குறுங்காலத்திலே எடுக்கக் கூடிய பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை மக்களின் பொதுச் சொத்துக்களை அரசியல்வாதிகள் துஷ்பிரயோகம் செய்வதும் கொள்ளையடித்திருப்பதும் இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றது. உதாரணமாக ஜனாதிபதி செயலகத்துக்கு உரித்தான நூற்றுக் கணக்கான வாகனங்கள் இப்பொழுது கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளன. பலர் தங்களை வெளிப்படுத்தாமலே வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே இதுவரை காலமும் இந்த பொதுச் சொத்துக்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளமை இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது.
ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் ஆரம்பமாகி விட்டன.
கே : ஜனாதிபதி பதவியேற்பு வைபவம் மிகச் சாதாரணமாக நடத்தப்பட்டது. உண்மையிலேயே இதே நிலைமை தொடரும் என்று நம்புகின்றீர்களா?
பதில் : இலங்கை மக்களுக்கும் மற்றைய ஆசிய நாட்டு மக்களுக்கும் இந்த முறைமை ஒரு பாடமாக அமையும். மக்களின் சொத்துக்களை வீண்விரயமாக்காமல் நியாயமான மற்றும் சாதாரணமான முறையில் பதவி ஏற்பது செலவினங்களைக் குறைப்பதற்கும் வளங்களை ஒழுங்காக பயன்படுத்துவதற்கும் ஒரு முன்னுதாரணமாகும். கடந்த காலங்களில் இவ்வாறான விழாக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை வீண்விரயம் செய்து இந்த நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளனர். அது மக்கள் பணத்தில் சவாரி செய்த, செய்ய விரும்புகின்ற ஏனைய அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாகும். இனி வருகின்ற காலம் மாற்றம் நிறைந்ததாகவே இருக்கும்.
கே : மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தள்ளப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். நாட்டில் கடன் சுமையானது சுமக்க முடியாததாக இருக்கின்றது எப்படி மீண்டெழ போகின்றீர்கள்? திரும்பவும் வரிசை யுகம் வருமா?
பதில் : நீங்களோ மக்களோ எந்தவிதத்திலும் அச்சப்பட வேண்டியதில்லை. மக்களின் சொத்துக்களை நாங்கள் கொள்ளையடிக்க மாட்டோம். பிரச்சினைகளை கூட்டாக ஒன்றிணைந்து எதிர்கொள்ளவே விரும்புகின்றோம். அந்த அடிப்படையில் குறுகிய காலத்திலும், நடுத்தர கால அளவிலும் விவசாய, மீன்பிடி, உற்பத்தி துறையை விருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். அதேபோல் உணவு உற்பத்தித் துறையை மேலும் விருத்தி செய்ய இருக்கின்றோம். மேலும் உல்லாசப் பிரயாணத் துறை, பெருந்தோட்ட துறை, ஆடை உற்பத்தி என்பவை குறித்து கவனம் செலுத்தப்படும். விசேடமாக சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து கடன் சுமையை மறுசீரமைப்பதற்கான பேச்சு வார்த்தை நடாத்தப்பட்டு வருகின்றது.
கே : எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சி வெற்றி பெற்றால் தானே இவற்றையெல்லாவற்றையும் நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்கள். அது சாத்தியமாகுமா?
பதில் : சாத்தியப்படும். பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதற்காக மக்கள் எம்மோடு இணைந்து வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். அந்த அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகளை பெறக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்று நம்புகின்றோம்.
கே : ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்கள் உங்கள் கட்சிக்கு அளித்த வாக்குகள் குறைவாகவே இருக்கின்றது. அவ்வாறாயின் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான உங்களது நிலைப்பாடு எவ்வாறு காணப்படுகின்றது?
பதில் : உங்களுடைய கூற்றில் ஓரளவு உண்மை இருக்கின்றது. சிறுபான்மை மக்களை வென்றெடுப்பதற்கான வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்திருக்கின்றோம்.
அந்த அடிப்படையில் நான் போட்டியிடுவது குறித்து சிந்திக்கும் முன்பே மலையக மக்கள் குறிப்பாக புத்துஜீவிகள், ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் அமைப்புகள், பல்கலைகழக மாணவர்கள், புலம்பெயர் தமிழர்கள் போன்றோர் தலைமைத்துவத்தை ஏற்குமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே கட்சியின் நிலைப்பாட்டையும் மக்களின் வேண்டுகோளையும் கருத்திற் கொண்டு பயணம் செய்ய காத்திருக்கின்றோம்.
இக்பால் அலி