அஸர் தொழுகையை முடித்துவிட்டு வந்த நிசார் அமைதியாக குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தான். அப்போது தேநீர் கோப்பையை அவனிடம் நீட்டியவளாய் ‘என்னங்க ஏதோ ஒரு கூட்டம் இருக்குன்னு சொன்னீங்களே மறந்துட்டிங்களே போகலயா?’ என பேச்சுக் கொடுத்தாள் மனைவி நிசாயா. ‘ஆமா நிசாயா மறந்தே போயிட்டன். நல்லவேள நீங்க ஞாபகப்படுத்தினீங்க’ எனக் கூறிக் கொண்டே தேநீரை பருகி முடித்த நிசார் அவசரமாக கூட்டத்திற்குச் செல்லத் தயாரானான்.
நிசார் அங்கு வந்ததும் உடனடியாக கூட்டம் ஆரம்பமானது. முதற்கட்டமாக கூட்டத்தை உடனடியாக கூட்டியதன் நோக்கம் பற்றி விளக்கமளிக்கத் தொடங்கினார் சங்கத் தலைவர் தாஹிர் முதலாளி.
‘அன்புக்குரிய நண்பர்களே, நாங்கள் இந்தக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியதற்கான காரணம், உங்க எல்லோருக்கும் தெரியும். அதாவது எங்க நபி (ஸல்) அவங்க பிறந்த பொன்னான நாள நாங்க எல்லாம் எதிர்நோக்கி கொண்டிருக்கோம். அதனால போன முறைய போலில்லாம இந்த தடவ நபி ஜனனதின விழாவை வெகு சிறப்பாக கொண்டாடனும். நாடளாவிய ரீதியில் போட்டிகள் வைக்க வேணும். முக்கிய பிரமுகர்களை எல்லாம் அழைக்கணும். இப்படியாக இந்த முற எங்க மீலாத் விழாவ ஒரு தேசிய விழாவா நடத்த நான் ஆசைப்படுறன். இதற்கு உங்க ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பும் எனக்கு தேவைப்படுது. இதற்காக உங்களுடைய ஆலோசனைகள இப்ப நீங்க தாராளமா தெரிவிக்கலாம்.’ தனது கருத்தை முடித்துக் கொண்டு எதிர்பார்ப்புகளோடு தனது இருக்கையில் அமர்ந்தார் தலைவர். கூட்டத்தில் ஓரே சலசலப்பு. ஒவ்வொருவரும் விதவிதமான ஆலோசனைகளை வழங்கினாலும் அனைவரதும் கருத்தும் மீலாத் விழாவை ஜாம் ஜாம் என்று கொண்டாடுவதிலேயே ஒன்றுபட்டிருந்தது.
ஆனால் நிசார் மட்டும் அதில் வேறுபட்டுக் காணப்பட்டான். எல்லாரும் அவர்கள் கருத்துகளை கூறி முடித்ததும் நிசார் அமைதியாகச் சொன்னான்.
‘இந்த விழாவ பெருசா கொண்டாடுறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. ஆனா கொஞ்சம் நாங்க சிந்திச்சிப் பார்க்கணும்.
இன்னக்கி எங்க சகோதர ஜீவன்கள் உண்ண உணவில்லாம, உடுக்க உடையில்லாம வறுமையில வாடறாங்க. இந்த நிலையில எங்களுக்கு இப்படிப்பட்ட பெரிய விழாக்கள் தேவைத்தானா? இதற்கொரு பெரிய தொகை செலவாகுமே? நம்ம இஸ்லாம் வீண் விரயத்த கண்டிச்சிருக்கு என்கிறது உங்க எல்லாருக்கும் தெரியும் தானே. அதனால விழாவ சிம்பிளா முடிச்சிப்போட்டு இல்லாதவங்களுக்கு ஏதாவது உதவி பண்ணினா நல்லம்னு நான் நெனக்குறன்’ நிசார் அமைதியாக தனது கருத்தை சொன்னான். நிசாரின் கருத்தைக் கேட்டவர்கள் அதிர்ந்து போனார்கள். ஒருசில அங்கத்தவர்கள் நிசார் சொல்வது சரிதான் என அதை ஆமோதித்ததும் தலைவரின் முகம் மட்டும் ஏனோ சிவப்பாக மாறியது. அங்கு நிலவிய அமைதியை கலைத்தது தலைவரின் குரல்.
‘நிசார் சொல்வது ரொம்ப தப்புன்னு நான் நெனக்கிறன்.
ஏன்னா உலகத்துக்கே ஒளி கொடுத்து சென்ற உத்தமரின் பொறந்த நாள கஞ்சத்தனமா கொண்டாடினா அடுத்த மதத்தவங்க நம்மள மதிப்பாங்களா? என நான் கேட்க விரும்புகிறேன்.’ தலைவர் அப்படி வினாத் தொடுக்க வேதனைப்பட்டது நிசாரின் நெஞ்சம். ‘முஸ்லிம் என்ற போர்வையில் முற்று முழுதா ரஸீலுல்லாஹ்ட வாழ்க்கைய உதாசீனம் பண்ணிட்டு அவர்களுக்கு பெரிய விழா எடுக்குறதால மட்டும் மத்தவங்க நம்மள மதிப்பாங்களாக்கும்.’ எனக் கூற நினைத்த நிசார் அதைத் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.
1 எது உண்மை, எது போலி என்றறியாத இன்னும் சில அங்கத்தவர்கள் தலைவரின் பேச்சுக்கும் ஆமாம் சாமி போட்டனர். எவ்வித சலனமும் இன்றி தலைவர் மீண்டும் உரையைத் தொடர்ந்தார். ‘இஞ்ச பாருங்க நாம தேசிய ரீதியில் பெரிசா மீலாத் விழாவ கொண்டாடித்தான் ஆகணும் என்கிறது அனைவரதும் அபிப்பிராயம். என்றாலும் கொண்டாடப் போற விழாவுல ஏழைகளுக்கு உதவுறத ரொம்ப வலியுறுத்தி பேசினா, நிசாருடைய கொள்கைக்கும் ஒத்துப் போகலாம். அதனால உடனே விழாவுக்கான ஏற்பாடுகள செய்தாகனும்.’ தலைவர் தனது உரையை முடிக்க அனைத்து அங்கத்தவர்களும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் நிசார் மட்டும் தனக்குள்ளே சிரித்துக் கொண்டான். உடனே விழாவுக்கான திகதி குறிக்கப்பட்டது.
விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஒவ்வொருவரும் தம்மால் ஆன முயற்சிகளை செய்யத் தொடங்கினார்கள்.
என்னத்தான் சொன்னாலும் இந்த முடிவு நிசாருக்கு மட்டும் பூஜ்யமாகவே பட்டது. ‘போட்டிகளுக்கும் பரிசுகளுக்கும் செலவழிக்கும் பணத்த இன்றைய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இல்லாதவங்களுக்கு கொடுத்து உதவினா அல்லாஹ்வும் சந்தோசப்படுவானே’ என்ற ஏக்கம் அவனை வாட்டினாலும் அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. என்றாலும் அடக்கமுடியாத ஆத்திரத்தை மனைவியிடம் சொல்லி ஆறுதல்படுத்திக் கொண்டான். மனைவியோ ‘எங்கட சமூகத்த அல்லாஹ்தான் காப்பாத்தனும்’ எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டு கணவனின் கவலையில் பங்கெடுத்துக் கொண்டாள்.
எத்தனையோ நல்ல காரியங்களையும், அல்லாஹ்வின் கட்டளைகளையும் உதறித்தள்ளி விட்டு வருடத்துக்கு ஒரு முறை வள்ளல் நபிக்கு விழா எடுத்துவிட்டால் பூரண முஸ்லிமாகி விடலாம் என்ற ஒரு எண்ணம் நமது சமூகத்தில் தோன்றியிருப்பதை எண்ணி உள்ளூர வருந்தினான் நிசார். அவனுக்கு அழுவதா சிரிப்பதா ஒன்றுமே புரியவில்ல.
‘ஏங்க சும்மா யோசிக்கிறதால ஒன்னும் ஆகப்போறதில்ல. உங்க சங்கத் தலைவர் தாஹிர் முதலாளி சொன்னா சொன்னதுதானே. அதமாத்த எவருக்கும் தைரியமில்ல. அதனால நடப்பது நடக்கட்டும். கவலைகள மறந்துடுங்க.’ மறுபடியும் ஆறுதல் சொன்னாள் மனைவி நிசாயா. நிசார் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான் தாஹிர் முதலாளியின் வீடு. அதனால் நிசாயாவும் அவரைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தாள்.
காலச் சக்கரமும் வேகமாகச் சுழன்றது. அனைவரும் ஆவலாய் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது. முன்கூட்டியே போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுக்குரியவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள். மேடையேற்றத்தில் ஆண்களும் பெண்களுமாக சனத்திரள் கரைபுரண்டோடியது.
இன்னும் மேடையை முக்கிய பிரமுகர்களும், உலமாக்களும் அலங்கரிக்க தலைவர் உற்சாகத்துடன் தலைமை உரையை நிகழ்த்தத் தொடங்கினார்.
‘என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, இந்த பொன்னான விழா கொண்டாட கிடைத்தது மாபெரும் பாக்கியமாகும். நேசத்துக்குரிய அல்லாஹ்வின் அடியார்களே இவ்விழாவைக் கொண்டாடுவது மட்டுமல்ல நமது நோக்கம். எமது வாழ்வை சீர்படுத்தி கொள்வதோடு எமக்குள் சகோதரத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அந்தவகையில் இந்த பொன்னான நன்நாளிலே எமது சகோதர ஜீவன்களின் நிலைகளை கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். அதாவது அத்தியாவசிய தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் அல்லல்படும் வறியவர்களை கொஞ்சம் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். உண்ணவும், உடுக்கவும் வழியின்றி தவிப்பதோடு மட்டுமல்லாது, தமது பிள்ளைகளின் கல்விச் செலவுகளை ஈடு செய்ய முடியாமல் நம்மில் பலர் சீரழிவதைக் கண்டு உங்கள் குருதி கொதிக்கிறதா என்பதை நீங்கள் இந்த நாளில் சிந்தித்துப் பாருங்கள். இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னே ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய சகோதரத்துவ கோட்பாட்டை தெளிவாகப் போதித்துக் காட்டினார்கள்.
அதாவது முஸ்லிம்கள் பரஸ்பர அன்பு, பாசம், கருணை என்பவற்றில் ஒரு உடலைப் போன்றவர்கள் அந்த உடலில் ஒரு பகுதியில் நோயென்றால் முழு உடம்பும் வேதனையால் துடிக்கிறது.
கண்கள் வழிகிறது கைகள் நோயுள்ள இடத்தை தடவுகிறது. இப்படியாக ஒவ்வொரு உறுப்பும் வேதனையில் பங்கேற்கிறது. என்ற அந்த அன்பு நபியின் வார்த்தைகளை மறந்து இன்று நாமோ சுயநலவாதிகளாக கண்மூடி வாழ்கிறோம். அதுமட்டுமா, அன்றைய குரைசியர்களின் தொல்லைகளை சகிக்க முடியாமல் நபியவர்களும், தோழர்களும் மக்காவை விட்டு மதீனாவில் தஞ்சமானார்கள்.
உறவுகளையும், உடமைகளையும், இன்பங்களையும் இழந்து வந்த மக்கா அகதிகளை மதீனாவாசிகள் ஆரத்தழுவினார்கள். தமது சொத்திலும் சுகத்திலும் பாதி கொடுத்து அகதிகளுக்கு ஆறுதல் கொடுத்ததனால்தான் இஸ்லாம் இன்று அகிலமெங்கும் பரவியிருக்கிறது என்பது, வரலாறு கண்ட உண்மையாகும். ஆனால் நாமும் இன்று முஸ்லிம் என்று சொல்லிக் கொள்கிறோம். உத்தம நபியின் உம்மத் என்று பெருமைப்படுகிறோம். இத் தருணம் அவர்கள் பொன்னான வாழ்வை எந்தளவு பின்பற்றுகிறோம் என்றால் அதற்கு விடை பூஜ்யம்தான். எல்லோரும் சமம் என்ற உணர்வு பெருக வேண்டும். ஆகவே நற்குணம் பெருகி எல்லோரும் சகோதரர்களாக வாழ்வதற்கு இந்நன்நாளில் உறுதி பூணுவோமாக என்று கூறி எனது இந்த சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி வஸ்ஸலாம்.’
2 எதிர்பார்த்தபடி விழா முடிந்து மறுநாள் விடிகிறது. வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்து அன்றைய பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தான் நிசார். அப்போது யாரோ ஒருவர் தாஹிர் முதலாளியின் வீட்டுக்கதவைத் தட்டுவது அவன் கண்களில் பட அதையே கொஞ்சம் ஆவலாக உற்று நோக்கத் தொடங்கினான். தாஹிர் முதலாளி கோபத்தோடு வந்து கதவைத் திறக்கிறார். அங்கே நொந்து நூலாய்ப் போன ஒரு மனிதர் ‘ஹாஜி நான் பக்கத்து ஊருல இருந்து வாரன். நான் கூலி வேலதான் செய்றன். அஞ்சு புள்ளைகள் இருக்காங்க. எல்லாரும் ஸ்கூல் போறவங்க. இப்ப எனக்கு சரியா வேலயும் இல்ல. சாப்புடறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு ஹாஜி. நாங்க சரியா சாப்புட்டு மூணு நாளாகுது ஹாஜி. இந்த நிலையில எங்களுக்கு ஏதாச்சும் உதவி பண்ணினா ரொம்ப நல்லாயிருப்பீங்க’ வந்தவர் கூனிக்குறுகி, தட்டுத்தடுமாறி கூறி முடிக்க தகுதியான ஒரு இடத்திற்குத்தான் போயிருக்கிறார்; என்று சந்தோசப்பட்டான் நிசார். ஆனால் தொடர்ந்து வந்த தாஹிர் முதலாளியின் குரல் அவனை நிலைகுலைய செய்தது.
‘இங்க பாருங்க உங்களுக்கு அள்ளிக் கொடுக்க நாங்க என்ன கட்டி வைச்சுட்டா இருக்கோம்.
இப்ப நீங்க மட்டுமில்ல எல்லாரும் கஷ்டத்துலதான் வாழுறாங்க. போங்க போய் உழச்சி சாப்பிட பாருங்க. காலையிலேயே தொந்தரவு பண்ணாம இங்கிருந்து போயிடுங்க’ என கூறியவர் படாரென கதவை சாத்தினார்.
வந்தவர், முகத்தில் அழுகை கொப்பளிக்க அவமான மிகுதியால் நிசார் வீட்டுக்கும் செல்லாமல் வீதியில் இறங்கி நடந்து கொண்டிருந்தார்.
நிசாரின் உள்ளத்தில் ஆத்திரம் கொப்பளித்தது. ‘இவங்களெல்லாம் உபதேசிக்கிறாங்க, இவங்களுக்கொரு மேட, அதுல ஒரு பேச்சு’ என தனக்குள்ளே நொந்துக் கொண்டவனாய் வீட்டுக்குள் பாய்ந்து சென்று பேனையும், கொப்பியுமாய் மேசையில் அமர்கிறான்.
ஆமாம் தாஹிர் போன்ற முகம் காட்டாத கண்ணாடிகளின் தலைமையின் கீழ் இனியும் பணிபுரிய முடியாது என்ற தீர்மானத்தோடு சங்கத்திற்கு இராஜினாமா கடிதத்தை எழுதிக் கொண்டிருந்தான் நிசார்.
வரக்காமுறையூர் ராசிக்