தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான் சுமன். படிக்க விடாமல் கடித்து தொந்தரவு தந்த நுளம்மை விரட்டினான்.
மீண்டும் கடிக்க வந்தபோது அடிக்க முயன்றவனிடம், ‘என்னைக் கொல்லாதே…’ என்றது நுளம்பு.
“படிக்க விடாமல் தொந்தரவு செய்கிறாயே…”
“நானாக இங்கு வரவில்லையே… நீ தான் வரவழைத்தாய். என்னை குற்றம் சொல்லாதே…”
“நாங்களா அழைத்தோம்…”
வியப்பு மேலிட கேட்டான் சுமன்.
“ஆமாம்… சுற்றிலும் பார்… நீர் நிறைந்த சிரட்டைகள் மற்றும் கழிவுகள்… வீட்டை சுத்தமாக பராமரிக்கவில்லை. அறைகளை சூரிய வெளிச்சம், காற்று வரும்படி திறந்து வைத்திருக்கவில்லை. சுற்றி, கழிவுநீர் தேங்கியுள்ளது.
“தோட்டத்தில் செடிகளை பராமரிக்கவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் குப்பையாக தேங்கி உள்ளது. இவற்றை நீக்கினால், நாங்கள் வரமாட்டோம். நோய்கள் பரவாது.இப்போது புரிந்ததா…”
இறக்கையை ஆட்டி பறந்து போனது நுளம்பு.
காலநிலை மாற்றத்தால் மழை பெய்யும் போது நுளம்புகள் பெருகுவதால், டெங்கு நோய் அபாயம் ஆரம்பித்துள்ளது.
வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் வைத்தால் நோயின்றி மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பது சுமனுக்கு புரிந்தது.
நுளம்பு கற்றுக் கொடுத்த பாடத்தை மனதில் பதிய வைத்தான்.
நாம் வாழும் சூழலை சுத்தமாக பராமரிக்க கற்றுக் கொள்ளுங்கள்.