தேசிய ஷூரா சபையின் தலைவர் சட்டத்தரணி அஸூர், தனது தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) எம்.ஏ சபையின் நிறைவேற்றுக் குழுவின் ஏகமானதான தீர்மானத்தின் படி பதில் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தான் ஜனாதிபதி தேர்தலின் போது செயற்பாட்டு அரசியலில் சம்பந்தப்பட இருப்பதனால் தொடர்ந்தும் ஷூரா சபையின் தலைமைப் பதவியில் இருக்க முடியாது என்று அஸூர் தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல், ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டதாரி, அதன் சிரேஷ்ட விரிவுரையாளர், பீடாதிபதி ஆவார். தேசிய ஷூரா சபையின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவராகவும் அது ஸ்தாபிக்கப்பட்டது முதற்கொண்டு இதுவரை சிரேஷ்ட உபதலைவர்களில் ஒருவராகவும் அவர் செயற்பட்டிருக்கிறார்.
முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களை கலந்தாலோசனை, துறை சார்நிபுணத்துவ அறிவு, ஆய்வு போன்றவற்றின் அடிப்படையை அணுகி சமூகத்தின் இலக்குகளை வரையறுப்பது, அதிமுக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை முதன்மைப்படுத்துவது போன்ற பிரதானமான இலக்குகளைக் கொண்டு சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் சபை ஸ்தாபிக்கப்பட்டதுஅதன் பொதுச் சபையில் இலங்கையில் உள்ளைமுஸ்லிம் சமூகத்தின் முன்னணி சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள், துறை சார் நிபுணர்கள், உலமாக்கள் போன்றோர் அங்கம் வகிக்கிறார்கள். சுமார் பத்துக்கும் மேற்பட்ட உறுப்பு அமைப்புகளது (Member organisations) குடை நிறுவனமாக தேசிய சூரா சபை இருந்து வருகிறது.
கடந்த காலங்களில் முஸ்லிம்களது அரசியல், பொருளாதாரம், இனங்களுக்கிடையிலான உறவு, சுகாதாரம், கல்வி போன்ற இன்னோரன்ன துறைகளோடு தொடர்பான பல வேலைத் திட்டங்களை ஷுரா சபை மேற்கொண்டு வந்திருக்கிறது.
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய கொவிட் தொற்று, பொருளாதார மந்த நிலை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட கெடுபிடிகள், இனவாதம் என்பவற்றைத் தொடர்ந்து ஷூரா சபையின் நடவடிக்கைகளில் ஓரளவு தொய்வு நிலை ஏற்பட்டாலும் அண்மைக் காலங்களில் அது மீண்டும் எழுச்சியடைந்து தனது பயணத்தை உற்சாகமாக ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(அஜ்வாத் பாஸி)