200 வருட கால வரலாற்றை கொண்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் தனியொரு தேசிய இனமாக உள்வாங்கப்படக்கூடிய சகல தகுதிகளையும் பெற்றுள்ளனர். 85 வருடங்களாக இ.தொ.கா சமூகத்திற்காக அர்ப்பணித்து செயற்பட்டு வந்துள்ளது. மலையக சமூகம் அனுபவிக்கும் சகல உரிமைகளும், சலுகைகளும் இ.தொ.காவின் சாணக்கியத்தால் பெறப்பட்டவையாகும்.
இத்தருணத்தில் இந்த வரலாற்றுப் பதிவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 85 ஆண்டுகளை நிறைவு செய்து எதிர்வரும் ஜுலை 25ஆம் திகதியன்று 86ஆவது அகவையில் அடியெடுத்து வைப்பதையொட்டி இக் கட்டுரை பிரசுரமாகின்றது.
அதிகார பலத்தாலும், பண வலிமையினாலும் ஒரு தலைவனாக உருவாவதைவிட சமுதாய மக்களின் இதய உணர்வுகளை இனங்கண்டு அவற்றின் தேவைகளை நிறைவேற்றி சமுதாய நெஞ்சங்களை கொள்ளை கொள்வதன் மூலம் ஒரு தலைவனாக திகழ்வதே சிறப்புடையதாகும்.
இந்த வகையில் இலங்கை இந்திய காங்கிரஸ் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனங்களின் தன்னிகரில்லாத தலைவர் என்ற முறையில் தலைவர் தொண்டமான் தலைமை தாங்கி நடத்திய தொழிலாளர் போராட்டங்கள் மிகப்பல. வெற்றியீட்டிய போராட்டங்களும் மிகப்பலவாகும். ஒரு சிலவற்றில் வெற்றிகாண முடியாவிட்டாலும், தொழிற்சங்க வரலாற்றில் கொள்கை ரீதியான சாதனைகளுக்கு அத்தகைய போராட்டங்கள் மூலம் வழிவகுத்திருக்கிறார்.
85 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தொழிற்சங்கத்தை ஸ்தாபித்துக் கட்டி எழுப்புவது என்றால் இலகுவான காரியமல்ல. இந்த நாட்டை ஆண்ட வெள்ளைக்காரர்களின் இனபந்துக்களாக ஆங்கிலேயர்களே தோட்டங்களின் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் தோட்டங்களில் தொழிற்சங்கம் முளைப்பதை விரும்பவில்லை. முளையிலேயே நசுக்கிவிட முனைந்தார்கள். தொழிற்சங்கங்களை பாதுகாக்க சட்டங்கள் இருக்கவில்லை.
சங்கங்களின் வளர்ச்சியை தடுப்பதற்கு சங்க அங்கத்தவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொழிற்சங்கங்களை அழிப்பதற்கு பணமும், அதிகாரமும், வெறித்தனமும், கட்டுமீறி பயன்படுத்தப்பட்ட காலமே அது. தோட்டத்தொழிலாளர், தொழிற்சங்கம் என்றால் இழிவாக நினைத்த காலமும் அது.
ஒரு தொழிற்சங்கம் சற்று தலைதூக்கினால் அதை உடைத்து சீர்குலைத்து விட மாற்றுத்தொழிற்சங்கங்கள் போட்டியுடன் செயல்பட்டன. முதலாளிகளுக்கு துணைபோகும் சங்கங்களுக்கும், தொழிலாளியை காட்டிக் கொடுக்கும் நயவஞ்சகர்களுக்கும் குறைவிருக்கவில்லை. இப்படியான பின்னணியில்தான் தலைவர் தொண்டமான் இலங்கை இந்திய காங்கிரஸின் தலைமையை ஏற்று இந்த நாட்டில் தோட்டத்தொழிலாளரை ஒரு மாபெரும் சக்தியாகத் திரட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரஸை உருவாக்கினார், வளர்த்தெடுத்தார், வெற்றியும் கண்டார்.
தோட்ட முதலாளிகளின் இப்படியான செயல்களை எதிர்த்து நிறுத்துவதற்கு தொழிற்சங்கங்களுக்கு இருந்த ஒரே சக்தி போராட்டம்தான். போராட்டம் என்றால் அப்போது அது வேலைநிறுத்தப் போராட்டமாகவே இருந்தது.
தொழிற்சங்க போராட்டங்கள் மூன்று வகைப்பட்டன.
தொழிலாளர்களின் தொழில் உரிமைகளைப் பெறுவதற்கு நடைபெறும் போராட்டம்.
தொழிற்சங்க தத்துவத்தின்படி ஒரு கொள்கை நிலைநாட்டுவதற்காக நடைபெறும் போராட்டம்.
உரிமையையும், கொள்கையையும், ஏக காலத்தில் பெறுவதற்காகவும், நிலை நாட்டுவதற்காகவும் நடைபெறும் போராட்டம்.
இதன் அடிப்படையில் இன்று உயர்ந்து நிற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பின்னோக்கிப் பார்த்தால் பல்வேறு சம்பவங்களையும் நினைவு கூரலாம்.
1946ஆம் ஆண்டு நடைபெற்ற உருளவள்ளி தோட்ட போராட்டத்துடன்தான் தலைவர் தொண்டமானின் போராட்ட வரலாறு ஆரம்பித்தது. அவற்றுள் முல்லோயா, கந்தஹேன, ஹைபோரஸ்ட், வனராஜா, கலேபொக்க, சென்ஜேம்ஸ், மொன்றிகிறிஸ்டோ, கடியன்லேன, சென்.கிளேயர்ஸ் போன்ற போராட்டங்களை குறிப்பிடலாம்.
இவ்வாறான போராட்டங்களின் நிமித்தம் ஆண், பெண் இருபாலாருக்கும் 1984ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் சமசம்பளம் பெறக்கூடியதாக இருந்தமை ஒரு வரலாற்று சாதனையாகும்.
இதனையும் தாண்டி 1985ஆம் ஆண்டு மாபெரும் பிரார்த்தனை இயக்கத்தை ஆரம்பித்து நாடற்றவர்கள் என்று கருதப்பட்ட இலங்கைவாழ் இந்தியர்கள் அனைவருக்கும் குடியுரிமை பெற்றுக் கொடுத்ததையும் நினைவூட்டுகின்றோம்.
இ.தொ.கா வின் பலத்திற்கான காரணம்
இ.தொ.காவின் அங்கத்தவர்களில் பெரும்பான்மையானோர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்த போதிலும், பல ஆயிரக்கணக்கான வர்த்தகத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளூராட்சி மத்திய ஆட்சி தொழிலாளர்களும் அங்கம் வகிக்கிறார்கள். இலங்கை தொழிலாளர்களின் பலம் அதன் அங்கத்தவர்கள் தொகை, அவர்கள் தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தன்மை, நிர்வாக அமைப்பு, கட்டுப்பாடு ஆகிய காரணிகளில் தங்கியுள்ளது. எட்டு தசாப்தங்களாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இலங்கையில் மட்டுமல்ல தென் ஆசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்சங்கமாக விளங்கி வருகின்றது. அதன் உறுப்பினர் தொகை காலத்துக்கு காலம் வேறுபடுகின்ற போதிலும் என்றுமே பல லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான சிங்களத் தொழிலாளர்களும்; அடங்குவர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்கள் தோட்டத்துறையின் எல்லாப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருக்கின்றனர். அத்துடன் வாலிப, மாதர் பகுதிகள் பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. கல்வி, தொழிற்பயிற்சி கலை, கலாசாரம், இலக்கியம், விளையாட்டுத்துறை, சமூக சீர்திருத்தம் ஆகிய தொழிலாளரின் வாழ்க்கையில் எல்லா அம்சங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நடவடிக்கைகளும், செயற்பாடுகளும் பிணைந்து நிற்கின்றன.
சமீபகாலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சிங்கள தோட்டத் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதோடு தோட்டத்துறை சாராத தொழிலாளர்களையும் அரவணைத்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அமைப்பு மிகவும் இறுக்கமானது. தோட்ட மாவட்ட, மாநில, தேசிய மட்டங்களாக வகுக்கப்பட்டு இறுக்கமாக நிர்வாக, நிதி விடயங்களில் பிணைக்கப்பட்டுள்ளன.
மலையக அரசியலின் இன்றைய மலர்வு இ.தொ.கா பாசறை தந்திருக்கும் பயிற்சியின் புலர்வு. மலையக அரசியல் கட்சிகளின் பின்புலம் எல்லாமே இ.தொ.கா. சமூகத்திற்கு வழங்கிய கொடைகள்.
அமரர் தொண்டமான் 1977ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை நன்கு பயன்படுத்தி அமைச்சரவையில் ஓர் அமைச்சராகவும் விளங்கினார். தமது மக்களின் ஒற்றுமையை பயன்படுத்தி அதையே எதிரியை மடக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்தி, ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை மூலம் அஹிம்சை வழியில் பல்வேறு போராட்டங்களுடன் பிரார்த்தனை இயக்கத்தினூடாக 1985ஆம் ஆண்டு பிரஜாவுரிமைச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து வாக்குரிமையும், தேசிய அந்தஸ்தும் கிடைத்தன. இது அமரர் தொண்டமான் ஆற்றிய சேவைகளில் மிக உச்சமானது எனலாம்.
இது இ.தொ.காவின் 86ஆவது அகவை. நாட்டிற்கு தந்திருக்கும் நல்ல செய்தி இலட்சிய பயணம் இனிதாக தொடர நாமும் வாழ்த்துகின்றோம், பிரார்த்திக்கின்றோம்.
தேவதாஸ் சவரிமுத்து இ.தொ.க ஊடக பிரசார செயலாளர்