Home » வாத்தியார்

வாத்தியார்

by Damith Pushpika
July 21, 2024 6:00 am 0 comment

மாசி மாத பின் பனி, அதிகாலை. குளிர் சாதனப்பெட்டிக்குள் இருப்பது போல் இருந்தது. வீட்டிற்குள் குளிர் தாங்கமுடியவில்லை. ஓட்டை ஏதாவது இருக்கின்றதா எனும் சந்தேகத்தில் கூரையை உற்றுப்பார்த்தபடி மல்லாக்காக படுத்திருந்தார் சுப்பிரமணியம் வாத்தியார். “தையும் மாசியும் வையகத்து உறங்கு” என கொன்றை வேந்தனில் கூறிய ஒளவையை மனதுக்குள் அவரால் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

சிறுவனாக இருந்த போது பனை ஓலையால் வேய்ந்து அதன் மேல் வைக்கோல் பரப்பப்பட்ட கூரையின் கீழ், சறத்தால் இழுத்து போர்த்தியபடி ஓலைப்பாயில் உறங்கியதும், அம்மா தனது பழைய நூல் சேலையால் காலையில் குளிர் கூடும் போது அவரை போர்த்தி விடுவதும் அவருக்கு ஞாபகத்துக்குவர அருகில் படுத்திருந்த மனைவியைப் பார்த்தார். அவள் குழந்தை போல் உறங்கி கொண்டிருந்தாள்.

வேலை கிடைத்த உடனேயே பெற்றோர்கள் அவரது குறிப்பை தூசு தட்டி பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்துவிட்டனர். கல்யாணம் செய்து வைத்து மகிழ்வதிலும்பார்க்க அவருக்கு ஒரு கால்க்கட்டு போட்டு பொது வாழ்க்கையில் இருந்து அவரை ஒதுங்க வைக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதில் வெற்றியும் கண்டனர் என்றுதான் கூற வேண்டும்

வரப்போகும் மனைவி குறித்து அவருக்கு அப்போது பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இருக்கவில்லை. அவரது தாயார் அவருக்காக பார்த்த முதல் பெண்ணை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. பணக்கார வீட்டு பெண். அழகியும் கூட. ஆனால் அவளுக்கு அவரை பிடிக்கவில்லை.

இரண்டாவதாக பார்த்த பெண்ணின் பெயர் கமலம். அவள் ஒரு ஆசிரியை. இருவரும் நன்றாக ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர். கமலத்தின் மேல் சுப்பிரமணியம் வாத்தியாருக்கு ஒரு ஊமைக்காதல் இருந்தது. ஏன் இப்போதும் அவரது அடிமனதின் ஒரு மூலையில் அது உள்ளது. “மூல நட்சத்திரமாம். பெண் மூலம் நிர்மூலம். அதோடை சாதகத்திலை தோசமும் இருக்காம். சாத்திரியார் சொன்னவர்” என்று கூறி அவரது தாயார் அந்த கல்யாணத்திற்கு மறுத்து விட்டார். அந்த சாத்திரியை இப்ப பார்த்தாலும் அவருக்கு கோபம் பொங்கி வரும். “எனது வாழ்க்கையை கெடுத்தவன்” என்று கூறி அந்த சாத்திரிக்கு எதிராக ஒரு வழக்கு போட அவருக்கு ஆசை.

“எங்களை தவிர வேறு ஒரு இனத்தவரோ, மதத்தவரோ சாதகம் பார்ப்பதில்லை. அவர்களுக்கு தோசம், குற்றம் ஒன்றும் இல்லை. ஏன் என்றால் அவர்களுக்கு சாதகமே இல்லை” என வெளிநாட்டில் இருந்து வந்த நண்பன் ஒருவன் கூறியதை நினைத்து அவரது மனம் குமுறியது.

கமலம் இன்றுவரை திருமணம் செய்யவில்லை. மூல நட்சத்திரமும், சாதகத்தில் இருக்கும் தோசமும் ஊர் சாத்திர விஞ்ஞானிகளும் தான் அதற்கு காரணம். அவளைப்போல் படித்த வடிவான ஒருத்தியை திருமணம் முடிக்க ஒருத்தருக்கும் குடுத்து வைக்கவில்லை என நினைக்கும் போது அவரது இயலாமை பெருமூச்சாக உருமாறியது. கமலம் இப்போது கல்விப்பணிப்பாளராக பதவி வகிக்கின்றாள். “திருமணம் செய்திருந்தால் பெரிய பதவிக்கு உயர்ந்திருப்பாளோ? என்பது கேள்விக்குறிதான். எப்படியும் ஒரு அம்மா ஆகியிருப்பாள்” என தனக்குள் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு தனது மனதுக்கு கடிவாளம் இட்டார்.

அவருக்கு மூன்றாவதாக பார்த்த பெண் தான் அவரது மனைவி பாக்கியம். பெரிதாக படிக்கா விட்டாலும் அவரது வாழ்வில் பாக்கியத்தால் பிரச்சினை என்று குறிப்பாக கூறும்படி எதுவும் இல்லை. நான்கு பிள்ளைகளின் தாயாக வாழ்கையை முனைப்புடன் வழி நடத்துபவள். நல்ல குடும்பப் பெண். தனது வேலை பழுவினாலும், ஆணாதிக்க சிந்தனையாலும் அவளிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு அவளது தேவைகளை சரியாக கவனிக்கவில்லை எனும் கவலையும் குற்ற உணர்ச்சியும் இப்போது அவரது மனதுக்குள் அடிக்கடி தோன்றி மறைகின்றது. நாளையில் இருந்து அவளுக்கும் ஓய்வு கொடுக்கவேண்டும். எனது வேலைகளை நானே செய்யவேண்டும். வீட்டு வேலைகளை அவளுடன் பகிரவேண்டும் என நினைத்தவாறு கடிகாரத்தை பார்த்தார்.

அலாரம் அடிக்க பதினைந்து நிமிடங்கள் இருந்தது. குளிர் அவருடன் ஒட்டியபடி பாக்கியத்தை உறங்க வைத்துக்கொண்டிருந்தது. தன் மேல் இருந்த அவளின் கையை எடுத்து விட்டபின் அவளது போர்வையை சரிசெய்தார். கால் ஓசை படாமல் மெதுவாக நடந்து குளியல் அறைக்குள் சென்று அங்கிருந்த கண்ணாடி முன்னால் நிற்கும் போது தலையில் உள்ள நரை மயிர்களின் எண்ணிக்கை நேற்றையைவிட இன்று அதிகமாக உள்ளது போல் அவருக்கு ஒரு பிரமை. “என்ன பைத்திய காரத்தனம்” என தனக்குள் சிரித்தபடி முகத்தில் தெரிந்த நரை மயிர்களை மழிக்கத்தொடங்கினார். தனது இளமைக்காலத்து அடர்ந்த கரும் தாடி அவருக்கு கண் முன்னே வந்து போனது.

தாடி வைத்திருப்பவர்களும், கடும் நிற மேலாடை அணிபவர்களும் இடதுசாரி தீவிரவாத போக்குள்ளவர்கள் என்பது அவரது தந்தையின் நம்பிக்கை. அது ஓரளவுக்கு உண்மையும் கூட. அதனால் அவரது தந்தை தாடியை மழி என்பதும், கடும் நிற மேலாடை அணியும் போது, அதை மாற்று என நச்சரிப்பதும், அவர் மறுப்பதும் அதனால் வீட்டில் ஏற்படும் சண்டைகளும்! அவரால் இப்போதும் மறக்க முடியாதவை.

“பெற்றோருக்கு நான் நல்ல மகனாக இருந்தேனா?” என தன்னைத் தானே அடிக்கடி கேட்கும் கேள்வி அவர் மனதில் அப்போதும் எழுந்தது. “அவர்கள் உயிருடன் இருக்கும் போது எழாத கேள்வி இப்போது ஏன் அடிக்கடி எழுகின்றது” என தன்னை தானே கடிந்து கொண்டார். “பிள்ளைகளை வளர்க்கும் போது தான் எல்லோருக்கும் தங்களது பெற்றோர்களின் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கின்றது” எனக்கூறுவது எவ்வளவு உண்மை. ஆனால் அப்போது பெற்றோர் உயிருடன் இருப்பதில்லை.

“அப்பா இப்பவும் பள்ளிக்கூடம் போகின்றார்” என அவரது பிள்ளைகளின் கிண்டலுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றது. ஐந்து வயதில் தொடங்கிய பாடசாலை நோக்கிய பயணம், இன்று முடிவடைகின்றது. அது அவருக்கு மகிழ்ச்சியையும் துக்கத்தையும் மாறி மாறி கொடுக்கின்றது. “அறுபது வயதில் கட்டாய ஓய்வு பெற வேண்டும் எனும் சட்டம் மிகவும் பிழையானது. இச்சட்டத்தால் பல அனுபவசாலிகளின் சேவையை நாடு இழந்து நிற்கிறது” என வெளிநாட்டில் இருக்கும் அவரது பல்கலைக்கழக நண்பன் தொலைபேசி உரையாடலின் போது கூறியது இன்று சரியென அவருக்கு தோன்றியது. வளர்ந்த நாடுகளில் பலர் அறுபதுகளில்தான் திருமண‌ம் செய்து வாழ்க்கையை தொடங்குகிறார்கள். இங்கு ஐம்பது என்றவுடனேயே “பழசு, தாத்தா, கிழடு” என கூப்பிட தொடங்கி விடுகிறார்கள். அது அவர்களை மனதளவில் வயதானவர்கள் ஆக்கி விடுவது மட்டுமல்லாமல் முதுமைத் தோற்றத்தையும் பரிசாக கொடுத்து விடுகின்றது.

குளியலறைத்தொட்டியில் உள்ள நீர் கடும் குளிராக இருந்ததனால் கிணற்றடி நோக்கி நடந்தார். கிணற்று நீர் எப்போதும் சூடாக இருக்கும். முதல் வாளி உடம்பில் ஊற்றும் போது அவரது உடல் சிலிர்த்தது. பின்பு படிப்படியாக ஏற்றுக்கொண்டது.

வாழ்க்கையும் அது தானே. “முதலில் அப்படித்தான் இருக்கும். பிறகு பழக பழக எல்லாம் சரியாகி விடும்” என அம்மா அவருக்கு திருமணம் நடந்த புதிதில் கூறிய அறிவுரையை குளிக்கும் போது மீண்டும் உறுதி செய்து கொண்டார்.

அவரது நண்பர்களில் பலர் சேவையில் இருந்தும், சிலர் இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் ஓய்வடைந்து விட்டனர். இவை அனைத்தும் அவரது மனதை சற்று தளர்த்தி இருந்தன. தானும் இன்றுடன் ஓய்வு பெற்றவர்களின் பட்டியலில் இடம் பெறப்போகின்றேன் என நினைக்கும் போது அவரது மனம் சற்று தயங்கியது.

ஓய்வடைந்த பின் என்ன செய்வது? என யோசித்தவரின் தலை சுற்றுவது போல் இருந்தது. குளிப்பதை நிறுத்தி விட்டு உடுப்பை மாற்றினார். தனது குளித்த ஈர உடுப்பை வழமையாக கிணற்றடியில் மனைவியை துவைப்பதற்கு விடுபவர் இன்று துவைத்து கொடியில் உலர விட்டார். மனைவியின் சில ஈர உடுப்புக்களும் கிணற்றடியில் துவைப்பதற்காக காத்திருந்தன. அவற்றை துவைத்து காயப்போட அவரது மனம் விரும்பியபோதும் அவரது மூளை ஏற்றுக்கொள்ளவில்லை. “நாளையில் இருந்து செய்யலாம்” என தன்னை தானே தடுத்தபடி கிணற்றடியை விட்டு நகர்ந்தார்.

மனைவியின் வழமையான காலைச் சாப்பாடும் தேநீரும் மேசையின் மேல் அன்று இல்லை. என்னவாக இருக்குமென அறையை எட்டிப்பார்த்தார். ஆழ்ந்த நித்திரையில் அவள் இருந்தாள். “ஒரு வேளை இன்றிலிருந்து எனக்கு ஓய்வு என தவறாக புரிந்து விட்டாளோ? அல்லது உடம்புக்கு ஏதாவது – – – ” என அவர் மனம் பலவிதமாக யோசிக்க துவங்கியது. அறியாத ஒரு பயம் அவரது மனதில் தோன்றியது. அப்படி ஒன்றும் இருக்காது என சுதாகரித்தவாறு தேநீர் வைத்து குடிக்கலாம் என்று அடுக்களை நோக்கி நடந்தார். அடுக்களைக்குள் எங்கு என்ன இருக்கின்றது என்று தேடிக்கண்டு பிடிப்பதற்குள் அவருக்கு வியர்த்து விறுவிறுத்து விட்டது. அவர் போட்ட சத்தத்தில் நித்திரையால் விழித்து ஓடிவந்தாள் பாக்கியம். “என்னை எழுப்பி இருக்கலாமே? ஒரு தேநீர் கூட போடத்தெரியாது” என்ற தனது வழமையான “உங்களுக்கு ஒன்றும் தெரியாது” எனும் பல்லவியுடன் தேநீரை தயார் செய்தாள். தனது கணவனுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுவதில் பாக்கியம் அடையும் மகிழ்ச்சி அளப்பரியது. இலவசமாக அவள் அடையும் மகிழ்ச்சியை அவர் ஒருநாளும் தடுத்ததில்லை. காலைக்குளிருக்கு சூடான தேநீர் இதமாக இருந்தது. சாப்பாட்டை தயாரிக்க தொடங்கியவளிடம் “நேரம் போகுது” என்றபடி தனது துவிச்சக்கரவண்டியை நோக்கி நடந்தார். அவளது பார்வையில் சற்று கோபம் தெரிந்தது. “நீங்கள் இல்லாவிட்டாலும் பள்ளிக்கூடம் நடக்கும். இன்றையோடை என்ன பள்ளிக்கூடத்தை பூட்டப்போறாங்களா?” என்றபடி “மதிய சாப்பாட்டிற்கு என்ன செய்யப்போகிறீர்கள்” என்றாள் சற்று கவலையுடன். “நான் இன்றைக்கு விரதம் இருப்பம் என்று யோசிக்கிறன். விரதம் இருப்பதும், நோன்பு இருப்பதும் உடம்புக்கு நல்லது என்கிறார்கள்” என்று சிரித்தபடி தனது பாதணிகளை அணிந்து கொண்டு துவிச்சக்கர வண்டியை நோக்கி நடந்தார். துவிச்சக்கர வண்டியின் சக்கரங்களும் பாத அணிகளும் அவரைப்போல் தேய்ந்திருந்தன. அவரைப்பார்த்து “நாளையில் இருந்து எங்களுக்கும் ஓய்வா?” என அவை கேட்பது போல் அவருக்கு ஓர் உள்ளுணர்வு.

வீட்டை விட்டு வெளியேறும் போது பக்கத்து வீட்டுக்காற பொடியன் “வணக்கம் வாத்தியார். ஏன் மோட்டார் சயிக்கிள் ஒன்றை வேண்டி ஓடுறது. வயதான காலத்திலை. உந்த பெட்டையள் எல்லாம் ஓடுறாளவை” என்று சிரித்தபடி தனது மோட்டார் சைக்கிளை துடைத்துக் கொண்டிருந்தான். “இவன் எனக்கு வயது போட்டுது என்கிறானா? அல்லது என்னால் மோட்டார் சயிக்கில் ஓட முடியாது என்கிறானா?” என மனதுக்குள் நினைத்தபடி “அப்பா எங்கையடா தம்பி” என்றார் சுப்பிரமணியம் வாத்தியார். “தோட்டதுக்கு போட்டார்” என்றான் தலையை குனிந்தபடி. “வேலை வெட்டி ஒன்றும் செய்யாமல் உதை துடைக்கிறதிலும் பார்க்க தோட்டத்திலை போய் அப்பாவுக்கு ஏதாவது செய்து குடு” என்று சற்று கோபமாக கூறியபடி துவிச்சக்கர வண்டியை உறுட்டினார்.

“இன்றைக்குதான் கடைசி நாள்” என்றபடி பவளம் இடையில் புகுந்தாள். “இன்றைக்கு வேலையிலைதான் கடைசிநாள். வாழ்க்கையில் இல்லை” என்றவாறு துவிச்சக்கர வண்டியில் தெத்தி ஏறினார்.

“அவருக்கு இன்றுடன் ஓய்வு. அது தான் அவர் ஆட்களிலை கொதித்து விழுகிறார். நீ யோசிக்காமல் துடை தம்பி” என்ற படி வீடு நோக்கி நடந்தாள் பவளம்.

போகும் பாதையில் இன்றைக்கு பாடசாலையில் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமென சுப்பிரமணியம் வாத்தியாரின் மனம் வழமை போல பட்டியல் இட்டுக்கொண்டிருந்தது. ஆசிரியர்கள் பிள்ளைகளை தண்டிக்க முடியாது எனும் சட்டம் வந்த பின்பு ஆசிரியத்தொழில் மிகவும் கடினமாகிவிட்டது. பிள்ளைகள் சொல்லுக்கேட்குதுகள் இல்லை. வகுப்புகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகி விட்டது. ஒரு சில குழப்படிகார பிள்ளைகளுடன் வாத்திமார்களின் நேரம் வகுப்பறைகளில் விரயமாகிறது. படிக்க ஆசைப்படுகின்ற பிள்ளைகளுடன் நேரம் செலவிட முடியாது உள்ளது என பல வாத்திமார்கள் புலம்புகின்றனர். சிலர் தாமாகவே முன்வந்து ஓய்வு பெறுகின்றனர். புதிதாக ஆசிரியர் தொழிலுக்கு தகுதியானவர்கள் வருவதும் குறைந்துவிட்டது. அப்படி வருகின்றவர்களும் தங்களது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பாடசாலைகளில் வேலை தேடுகின்றனர். அதிபர் பரீட்சைக்கும், நிர்வாக பரீட்சைக்கும் தங்களை தயார்படுத்துவதில் உள்ள ஆர்வத்தை பல ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பதில் காட்டுவதில்லை.

வழமையாக வாங்கும் புதினப் பத்திரிகைக்காக அவரது துவிச்சக்கர வண்டி சந்திக்கடையில் நின்றது. “வணக்கம் வாத்தியார். இன்றையோடு ஓய்வாம். நாளையில் இருந்து பத்திரிகையை வீட்டிற்கு அனுப்பிவிடட்டா?” என்ற படி கடைக்காரர் பத்திரிகையை எடுத்து நீட்டினார். “என்னடாப்பா, வேலையிலை இருந்து இளைபாறினால் வீட்டுக்குள்ள தான் இருக்கவேணும் போல” என்றபடி பத்திரிகையுடன் அவரது பயணம் பாடசாலை நோக்கி நகர்ந்தது. “கடைக்காரனிடம் தேவையில்லாமல் கோபித்துவிட்டேனோ?” எனும் குற்ற உணர்வு சற்று அவர் மனதில் தோன்றியது.

வீதிக்கரையில் உள்ள பிள்ளையார் கோயிலில் உண்டியல் குலுக்கி வீதியால் போறவர்களிடம் கட்டடத்திற்கு நிதி சேகரித்து கொண்டிருந்தனர். அதைப்பார்த்த வாத்தியாரின் மனதில் “பிச்சை எடுத்தாவது ஏழைப்பிள்ளைகளை படிப்பிப்பேன்” என காமராசர் கூறியது நினைவுக்கு வர, அவரது துவிச்சக்கர வண்டி நிற்காமல் வேகமாக கோயிலை கடந்தது.

கோயிலைக் கடந்தவுடன் வரும் பாலத்தடியில் காற்று பலமாக அடித்து கொண்டிருந்தது. நீர்க்கரையில் உள்ள நானல் புற்கள் காற்றடிக்கும் பக்கம் தலை சாய்த்து எப்படி உலகில் வாழ வேண்டு்ம் என பாடம் எடுத்து கொண்டிருந்தன. சுப்பிரமணியம் வாத்தியாரின் பார்வை காற்றை எதிர்த்து நிற்கும் பனைகள் மேல் தாவியது. காற்று அவரது துவிச்சக்கர வண்டியை மெதுவாக நகர்த்தியது. பல வருடங்களுக்கு முன்பு இருக்கையை விட்டு எழுந்து நின்று துவிச்சக்கர வண்டியை மிதித்து காற்றை கிழித்துக்கொண்டு போவது ஞாபகம் வர “அதெல்லாம் இப்ப வேண்டாம்” என தன்னைத் தானே கட்டுப்படுத்தி கொண்டார். பாலத்தை அதி கூடிய வேகத்தில் கடந்து கொண்டிருந்த பார ஊர்தியால் உண்டான விசையுடன் கூடிய காற்று அவரை பாலத்திற்குள் தள்ள, அதற்கு சரணடைந்து துவிச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி சிறிது நேரம் உருட்டியபடி நடந்தார். “எத்தனை சண்டைகள்? எத்தனை சமாதானங்கள்? எத்தனை சரணடைவுகள்? எல்லாம் கடந்த எனக்கு இப்போது இந்த பாலத்தை கடப்பது ஒரு விடயமாக உள்ளதா?” என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“உன்னால் முடியும்” எனும் தாரக மந்திரத்தை மீண்டும் மீண்டும் தனக்குள் கூறியபடி தனது மனதை உற்சாக படுத்திக்கொண்டார். “இது சக்தி வாய்ந்த பிள்ளையார். உண்டியலில் காசு போடாட்டி விபத்து உண்டாகுமாம்” என ஊருக்குள் கதைப்பது ஞாபகத்துக்கு வர அவருக்கு சிரிப்பு உண்டானது. “காசு கொடுக்காவிடில் விபத்து உண்டாக்கிறவர் எப்படி கடவுள் ஆகமுடியும்? வெருட்டி சனத்திட்டை பணம் பறிக்க உருவாக்கிய ஒரு புரளிக்கதை.

இதை கப்பம் வேண்டுவது என்று கூறுவது தான் சரி” என்பது அவரின் நம்பிக்கை. “நம்பிக்கைதான் கடவுள் என்கிறார்கள். அப்படியானால் மூடநம்பிக்கையை எதிர்ப்பது தான் எனது நம்பிக்கை. அது தான் எனது கடவுள்” என நினைத்து தன்னைத்தானே தேற்றிக்கொண்டார். கடவுள் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை, வயதுடன் குறைந்து கொண்டே செல்கின்றது.

பாலத்தின் கீழாக பாயும் நீர் சற்று வற்றி இருந்தது. அவரது தலைக்கு மேலால் இரட்டைவால் குருவிகள் கீச்சிட்டபடி பறந்தன. அவை தங்களுக்கு தாங்களே காலை வணக்கம் தெரிவித்துக்கொண்டன போலும். அவை அண்ணார்ந்து பார்த்து புன்னகைத்த போது வானம் கறுத்துகொண்டு வருவது தெரிந்தது. அது மழைக்கான அறிகுறி. இன்று வகுப்புகளை ஒழுங்காக நடத்த முடியாது எனும் கவலை அவரது மனதில் குடிகொண்டது. மழை பெய்யும் போது பாடசாலை ஒழுகுவதும் அதை யாரையாவது பிடித்து எப்படியும் திருத்த வேண்டும் எனும் கனவு பலிக்காமல் போகின்றது என நினைக்கும் போது அவர் மேலேயே அவருக்கு வெறுப்பு உண்டாகியது.

கல்வித் திணைக்களத்திற்கு பல கடிதங்கள் எழுதியிருந்தார். ஊரில் உள்ள பணக்காரர்களை கெஞ்சி பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. கோயில்களுக்கு இரட்டைக்கோபுரம் கட்டுவதற்கும் யானைகள் கொண்டுவந்து திருவிழா நடத்துவதற்கும் செலவிடும் பணத்தில் ஒரு சிறுபகுதி அதற்கு போதுமானது. அவரது நண்பன் ஒருவன் “கடவுள் உன்னிடம் வந்து ஒரு வரம் கேள் என்றால் என்ன கேட்பாய்?” என கேட்க, அவர் “கடவுளே! உனது அடியார்களுக்கும் அடிவருடிகளுக்கும் அடியாட்களுக்கும் கொஞ்சம் பகுத்தறிவை கொடு. அவங்களின்ரை அட்டகாசம் தாங்க முடியவில்லை” என்பேன் எனக்கூறியது சரிதான் என மனதுக்குள் சிரித்தார்.

தூரத்து உறவுக்காரர் அவருக்கு சற்று முன்னால் இரண்டு வாழைக்குலைகளை துவிச்சக்கர வண்டியில் கட்டியபடி சந்தைநோக்கி பயணித்து கொண்டிருந்தார். அவரிலும் பார்க்க பல வயது கூடியவர். ஆனாலும் அவருக்கு ஒருவரும் ஓய்வு கொடுத்ததாக தெரியவில்லை. அவர் எப்போது ஓய்வு எடுப்பார் என அவருக்கே தெரியாது. நாளை முதல் சுப்பிரமணியம் வாத்தியாருக்கு ஓய்வூதியம் வரப்போகின்றது. இவர்களுக்கு எல்லாம் ஓய்வூதியம் இல்லை என நினைக்கும் போது அவருக்கு குற்ற உணர்வாக இருந்தது.

அரச ஊழியர்களிலும் பார்க்க மீனவனும் விவசாயியும் கூலிக்காரனும் கடுமையாக உழைக்கின்றனர். அவர்களது உழைப்பை எல்லோரும் உண்ணுகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு ஓய்வும் இல்லை, ஓய்வூதிய திட்டமும் இல்லை என்பது மிகவும் மனவேதனைக்குரியது. அவர்களிலும் பார்க்க அரச ஊழியர்கள் அப்படி என்ன பெரிசாக சாதிக்கின்றனர்? என நினைத்தபடி வாழைக்குலைகளுடன் மெதுவாக நகரும் துவிச்சக்கர வண்டியை நெருங்கினார் சுப்பிரமணியம் வாத்தியார். “வணக்கம் வாத்தியார் தம்பி” என்றவர் “என்ரை பேரப்பொடியன் உங்களிட்டை தான் படிக்கிறான்.

ஒருமாதிரி உருப்படியாக்கி போடுங்கோ. என்ரை பொடியனும் பெரிசாக படிக்கவில்லை. பேரப்பிள்ளை என்றாலும் படிக்கட்டும்” என்றவாறு அவருடன் சமாந்தரமாக துவிச்சக்கர வண்டியில் பயணித்தார். அவரது பேரன் அதிகூடிய கவனிப்பு இருக்கும் போது ஓரளவு படிப்பான். கல்வியின் பெறுமதியை அந்த சிறுவனால் உணர முடியவில்லை. அதை எப்படி அவரிடம் கூறுவது எனத்தெரியாமல் “ஓம் ஓம்” என்று தலையாட்டியபடி தனது கைக்கடிகாரத்தை பார்த்தார்.

“உங்களுக்கு நேரம் போகுது போல. நீங்கள் கெதியா போங்கோ” என்று கூறி அவருக்கு விடை கொடுத்தார் அந்த முதியவர். அவரது எதிர்பார்ப்பை பேரன் திருப்தி செய்வானா? என்பது சந்தேகம் தான்.

பாடசாலையை அடையும் போது, வாசலில் நின்ற அலுவலக பணியாளர் “வாங்கோ வாத்தியார்” என வரவேற்றார். அவர் “இன்று உங்களின் கடைசி நாள்” என்று கூறவில்லை எனும் மன நிம்மதியில் வணக்கம் கூறிவிட்டு உள்ளே சென்றார் சுப்பிரமணியம் வாத்தியார். *****

“எந்தவித வித்தியாசமும் இல்லாமல் தனது அன்றாடக் கடமையில் ஈடுபட வேண்டும்” எனும் இறுமாப்புடன் கடமைகளை தொடங்கினார். பிள்ளைகளுக்கு நாளைக்கு நான் பாடசாலைக்கு வரமாட்டேன் என்பது தெரியும் போல் அவருக்கு தோன்றியது. சில பிள்ளைகளின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. சில பிள்ளைகள் கவலையுடன் காணப்பட்டனர்.

பாடசாலை ஒவ்வொரு நாளும் மத வழிபாட்டுடன் தொடங்கும். பிள்ளைகள் மதரீதியாக பிரிந்து நின்று, தங்கள் மதம் சார்ந்த வழிபாட்டில் ஈடுபடுவார்கள். காலையிலேயே மாணவர்கள் மதரீதியாக பிரிந்து நிற்பது மிகவும் தவறான செயல் என அவருக்கு எப்போதும் தோன்றும். பாடசாலையில் மாணவர்கள் மதரீதியாக பிரிந்து நிற்பதுதான் சமூகம் தொடர்ந்தும் மதரீதியாக பிரிந்து நிற்பதற்கு காரணமாக இருக்குமோ? எனும் எண்ணம் அவரது மனதில் ஆழ வேரூன்றி இருந்தது. “கடவுள் ஒன்றுதான்” என்று கூறுபவர்களிள் மீது அவருக்கு கடும் கோபம் வந்தது. அப்படியென்றால் இந்த பிஞ்சு உள்ளங்களை காலையில் ஏன் பிரிக்கின்றனர்?

ஓரளவு வசதிபடைத்த மாணவர்கள் இப்போது கிராம பாடசாலைகளுக்கு போவதில்லை. அவர்கள் நகர்ப்புற பாடசாலைகளுக்கு போகிறார்கள். கிராம பாடசாலைகளில் ஏதோ ஒரு வகையில் பின்தங்கிய குடும்பங்களின் பிள்ளைகள் தான் படிக்கின்றனர். இவர்களில் பலர் காலைச்சாப்பாடு இல்லாமல் பாடசாலைக்கு வருபவர்கள். கோயிலில் கொடுக்கின்ற பிரசாதத்தை பள்ளிக்கூடத்தில் இந்த பிள்ளைகளுக்கு காலையில் குடுங்கோ என்று கோவில்காரர்களிடம் சுப்பிரமணியம் வாத்தியார் கேட்ட போது, அவர்கள் அவருக்கு அடிக்காதது ஒன்றுதான் குறை. மாணவர்களின் தேவைகளை அறிந்து அவர்களை நல்வழிப்படுத்துவது அனைவரினதும் கடமை என பலர் உணர்வதில்லை.

ஆசிரியர்கள் பலர் பாடசாலை தொடங்கிய பின் ஒன்றன் பின் ஒன்றாக பாடசாலைக்கு வருவது வழமை. ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் மோட்டார் சயிக்கில்களில் வருபவர்கள். பாடசாலை தொடங்க ஒரு மணித்தியாலத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலையில் நிற்கவேண்டும் எனும் சட்டம் கொண்டுவரவேண்டும் என அரசியல்வாதிகளிடமும் தொழிற்சங்கங்களிடமும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கூறி அவர் களைத்து விட்டார். அதனால் பிந்தி வரும் ஆசிரியர்கள் அவரை தவிர்க்க மறுபக்கம் பார்த்தபடி செல்வது வழமை.

மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். அவரால் வழமை போல் அன்று பாடத்தை நடத்த முடியவில்லை. அவரது மனம் மிகவும் வேதனை அடைந்திருந்தது. முப்பத்து ஐந்து வருடமாக செய்த வேலை. எத்தனை ஆயிரம் மாணவர்கள். இன்றுடன் அவர் ஓய்வு பெறுகின்றார் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவர் தொடர்ந்து கற்பிக்கவே விரும்பினார்.

ஆனால் நாட்டின் சட்டத்தில் அதற்கு இடம் இல்லை. “எழுந்து நடக்க முடியாதவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் கட்சித் தலைவர்களாகவும் இருக்கும் போது நான் ஏன் ஆசிரியராக கடமையாற்ற முடியாது?” என்று நினைத்தபடி பாடத்தை தொடங்கினார். வகுப்பறை நோக்கி வந்த அலுவலக பணியாளர் “உங்களை அதிபர் சந்திக்க விரும்புகிறார்” என்றார். மாணவர்களுக்கு சில வேலையை கொடுத்து விட்டு அவரை பின்தொடர்ந்தார். வழமை போல் அதிபர் தனது அலுவலகத்தில் இருந்து எதிர்வரும் கல்வி நிர்வாக சேவை பரீட்சைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தார்.

சுப்பிரமணியம் வாத்தியாரை கண்டதும் மேசையில் இருந்த கல்வி நிர்வாக சேவை பயிற்சி புத்தகங்களை எடுத்து தனக்கு பின்னால் இருந்த மேசையில் வைத்தார்.

இயங்காத தலைமையின் கீழ் அர்ப்பணிப்பும் ஆர்வமும் உள்ளவர்கள் வேலை செய்வது மிகவும் மன உளைச்சலானது என்பதை சுப்பிரமணியம் வாத்தியார் நன்கு அனுபவித்தவர். அர்ப்பணிப்பு இல்லாத தலைமை ஒரு நிறுவனத்தை குட்டிச்சுவர் ஆக்கிவிடும் என்பதற்கு உலகில் எத்தனை உதாரணங்கள். “வாருங்கள்” என்று புன்முறுவலுடன் வரவேற்றார் அதிபர். அது சற்று வழமைக்கு மாறாக இருந்தது. அவருடன் அடிக்கடி சுப்பிரமணியம் வாத்தியார் பாடசாலை விடயங்களில் முரண்பட்டுக் கொள்வதுண்டு.

அவரிக்கு சுப்பிரமணியம் வாத்தியாரின் ஓய்வு உள்ளூர மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அவர் மிகவும் அமைதியாக அதிபர் முன் அமர்ந்தார். “இன்று கடைசி பாடம் உங்களுக்கு ஒரு பிரியாவிடை நிகழ்வு ஒன்றை மாணவர்களுடன் சேர்ந்து ஒழுங்குபடுத்தியுள்ளோம்” என்று கதையை தொடங்கினார்.

“நல்லது” என்றார் பதிலுக்கு சுப்பிரமணியம் வாத்தியார். அத்துடன் “உங்களுக்கு ஒரு மணிவிழா எடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் நிதி சேகரிக்க உள்ளோம்” என்றார் தொடர்ந்து. அவர் சிரித்தபடி “பாடசாலையில் எத்தனையோ விடயங்கள் செய்ய வேண்டி உள்ளது. அந்த பணத்தை பாவித்து அவைகளை சரிசெய்யுங்கள். எனக்கு இந்த சிறிய பிரியாவிடை போதும்” என்றார். அதிபரின் முகம் மாறிவிட்டது. “அப்படியில்லை. கல்விப்பணிப்பாளர் கமலா அவர்களும் உங்களது பிரியாவிடைக்கு இன்று வருகின்றார். நாங்கள் இதை வடிவாக செய்யவேண்டும்” என்றார். “நான் வகுப்பிற்கு போகின்றேன்” என்று சொல்லிவிட்டு வகுப்பறை நோக்கி நடந்தார் சுப்பிரமணியம் வாத்தியார்.

இப்போதெல்லாம் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மணி விழா எடுப்பது ஒரு வழமையாகி விட்டது. அதற்கு பெருமளவிலான நிதியை செலவு செய்கிறார்கள். அதை ஓய்வு பெறுபவர்கள் பெருமையுடன் ஏற்றுக்கொள்வது மிகவும் கவலையான விடயம்.

அவரின் இதயம் அன்று சற்று வேகமாக வேலை செய்து கொண்டிருந்தது. அதற்கு ஈடுகொடுக்க கடிகாரமும் அன்று வழமையிலும் பார்க்க வேகமாக ஓடுவது போல் ஒரு உணர்வு அவருக்கு. இரத்த அழுத்தம் கூடுவதை அவரால் உணர முடிந்தது. பிரியாவிடை பேச்சில் என்ன சொல்வது என மனதுக்குள் ஒத்திகை பார்த்தார். பேசும் போது ஒருத்தரையும் குறை கூறக்கூடாது. சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என தனக்கு தானே அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டார். கல்விப்பணிப்பாளரும் திணைக்களக உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர். பாடசாலை பிரதான மண்டபத்தில் பிரியாவிடை விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் பலர் பலவிதமாக உரையாற்றிக்கொண்டிருந்தனர். சுப்பிரமணியம் வாத்தியார் இல்லாமல் இனி எப்படி பாடசாலையை நடத்துவது? என அதிபர் முதலைக்கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். ஆனால் அவரது மனம் இனி தன்னை கேள்வி கேட்க ஆளில்லை எனும் உள் உவகையில் இருப்பதை சுப்பிரமணியம் வாத்தியார் நன்கு அறிவார்.

ஆசிரியராக கடமை ஏற்றுக்கொண்ட முதல் நாள் அவரது கண்முன் வந்து போனது. அவரது மனதிலும் கல்வி கற்பித்தல் முறையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அவருக்கே வியப்பை தந்தது. மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் பாடசாலையில் கற்கின்றனர் எனும் உண்மையை எண்ணி தனக்குள் சிரித்து கொண்டார்.

ஒரு மாணவி அவருக்காக ஒரு கவிதையை எழுதி வாசித்தாள். “காலம் காலமாக ஓடும் கடிகாரமே! குறளோடு சேர்ந்த அதிகாரமே! நற் செய்தி வழங்கும் நாளிதளே!” எனத் தொடங்கும் அக்கவிதை அவரது மனதை மிகவும் தொட்டிருந்தது. முடிவில் அவளது கண்கள் கலங்கின. அவளது பெற்றோர்கள் பிரிந்து வாழ்கின்றனர். அது அவளை மிகவும் பாதித்து இருந்தது. பல இக்கட்டான சூழல்களில் அவளுக்கு மனவுறுதியை அவர் கொடுத்திருந்தார். சுப்பிரமணியம் வாத்தியாரை ஒரு சிற்றுரை ஆற்றும் படி அழைத்தனர். அவரால் நினைத்தது போல் உரையாற்ற முடியவில்லை. “ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆசிரியம் ஒரு தொழில் இல்லை. அது ஒரு சேவை” எனத்தொடங்கி அதிபரின் கடமைகள், ஆசிரியரின் கடமைகள் என தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார். அவரது உரை பல ஆசிரியர்களை கோபப்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. “கெட்டிக்கார பிள்ளைகளுக்கும், பணக்காறர்களின் பிள்ளைகளுக்கும் கற்பிப்பது மட்டும் ஆசிரியர்களின் கடமையல்ல. பிள்ளைகளின் திறமைகளை கண்டு பிடித்து அவர்களுக்கு பகுத்தறிவையும் தன்னம்பிக்கையையும் ஊட்ட வேண்டும். பரீட்சையில் தோற்றவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் தோற்றவர்கள் அல்ல. முயற்சியை கைவிடாதீர்கள். செய்து முடியும் வரை முயற்சியுங்கள். தடைக்கற்களை படிக்கல்லாக்கி வாழ்க்கையில் உயர ஏறுங்கள். ஒழுக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள்.” என மாணவர்களுக்கு அவர் அடிக்கடி கூறும் சில அறிவுரைகளை அப்போதும் கூறினார். “மாற்றங்கள் முதலில் தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்க வேண்டும். சமூகத்தில் உள்ள பெரியவர்கள் ஒழுக்க சீலர்களாக இருக்க வேண்டும். பாடசாலை அனுமதித்தால் மீண்டும் வந்து கற்பிக்க ஆயத்தமாக உள்ளேன்” என்றவாறு நாற்காலியில் அமர்ந்தார். மாணவர்கள் அந்த கவிதையை அவருக்கு கையளித்தனர்.

அவரது வாழ்வில் கிடைத்த பெரும் பொக்கிசமாக அது அவருக்கு தோன்றியது. ஒருவாறு விடை பெற்றுக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் மாணவர்களின் கவிதையை வாய்க்குள் முணுமுணுத்தபடி வீடு நோக்கி பயணித்தார்.

மாணவர்களாவது அவரை புரிந்து கொண்டார்கள் எனும் மகிழ்ச்சியும், அவர்களை பிரிகிறேன் எனும் கவலையும் ஒன்று சேர்ந்து அவரது கண்ணை மறைத்து விட்டது போலும். அப்போது அவருக்கு முன்னாள் வந்த ஒரு பேருந்து ஒன்று அவர் மீது மோதியது. கண்விழித்து பார்க்கும் போது மருத்துவ மனையில் படுத்திருந்தார். அவரது கண்கள் மாணவர்கள் தந்த கவிதையை தேடியது. அதை படித்துக்கொண்டிருந்த, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் “வாத்தியார், நானும் உங்கடை மாணவன் தான்” என்றார் சிரித்தபடி. “ஒன்றுக்கும் பயப்படாதையுங்கோ. கொஞ்ச நாளையிலை எல்லாம் சுகமாகிவிடும்.

மருந்துகளை கவனமாக எடுங்கோ. இது நான் உங்களுக்கு தாற பரிசு” என ஒரு கைத்தடியை அவரிடம் நீட்டினார். அதை வாங்கும் போது “உடம்பை கவனமாக பாருங்கோ வாத்தியார். நான் உங்களை வீட்டை வந்து பார்க்கிறன்” என்றவாறு தனது அறையை நோக்கி நடந்தார் மருத்துவர். அருகில் நின்ற தாதியிடம் “உங்கடை டாக்குத்தர் வேலைக்கு நேரத்திற்கு வாறாரோ? முந்தி பள்ளிக்கூடத்திற்கு பிந்தித்தான் வாறவர்” என்றார் மெதுவாக. “இன்னும் திருந்தவில்லை. இப்பவும் அப்படித்தான். படிப்பித்த வாத்திமார் சரியில்லை” என்றாள் சிரித்தபடி. வாத்தியாரின் முகத்தில் அசடு வழிந்தது. இதை அருகில் நின்று கேட்ட பாக்கியம் “இனி உந்த வாத்தியார் கதையை விடுங்கோ” என்றவாறு கைத்தடியை எடுத்து அவரிடம் நீட்டினாள். மனைவியின் கைத்தாங்கலுடன் கைத்தடியை ஊன்றியபடி வீடு நோக்கி பயணித்தார் வாத்தியார்.

கந்தை நாகேந்திரம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division