சம்மாங்கோடு, பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிகள் கோவில் ஆடிவேல் விழா நிகழ்வுகள் இன்று (21) காலை 6.30க்கு வெள்ளவத்தை மாணிக்க கங்கை சங்கமத்தில் தீர்த்தோற்சவம் நடைபெற்றதைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு மிருதங்க வித்துவான் பிரம்ம ஸ்ரீ க.சுவாமிநாதன் சர்மாவின் இசையுடன் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்று 11.30 க்கு விஷேட பூஜை நடைபெற்று கதிர்காமக் கந்தனின் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு அமுது வழங்கப்படும்.
மாலை 4 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு நவ சங்காபிஷேகம் நடைபெறும் வழமையான பூஜைகளைத் தொடர்ந்து வேல்விழா அர்ச்சனை நடைபெறும். கலைமாமணி மாலதி, லக்ஷ்மன் சுருதி இசைக்குழுவினரின் இசையில் மதிச்சியம் பாலா அருணா சகோதரிகள் வழங்கும் பக்தி இசை நிகழ்ச்சிகள் அதனைத் தொடர்ந்து இடம்பெறும்.
ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில், பம்பலப்பிட்டி.
பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் இன்று (21) காலை 10.30 மணிக்குத் பூஜைகள் ஆரம்பமாகும். மாலை 6 மணி வரை விஷேட பூஜைகள் நடைபெற்று முருகப் பெருமான் கதிர்காமத்தில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பார்.
ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி
கொழும்பு 13 ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஆலயத்தில் இன்று 21ஆம் திகதி காலை 7.00 மணிக்கு பன்னீர் காவடி கட்டி முத்திரை தரித்து அபிஷேகத்துக்குரிய பால்குடம் எடுத்து வீதி வலம் வந்து அபிஷேகம் நடைபெற்று மகேஸ்வர பூஜையுடன் விழா நிறைவு பெறும். மாலை 6.00 மணிக்கு வசந்த மண்டபத்தில் சண்முகார்ச்சனை நடைபெறும்.
திங்கட்கிழமை(22) நிகழ்வுகள்
பம்பலப்பிட்டி சம்மாங்கோடு கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் காலை 7 மணிக்கு பூஜைகள் நடைபெற்று ஆடிவேல் விழா அர்ச்சனை நடைபெறும். 11.30 மணிக்கு விஷேட பூஜை நடைபெற்று மாலை 6.30க்கு சுவாமி சித்திரத் தேரில் எழுந்தருளி காலி வீதி வழியாக அடியார்களுக்கு அருள்பாலித்து காலிமுகத்திடலை வந்தடைவார்.
ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து சித்திரத் தேரில் சுவாமி எழுந்தருளி ஜிந்துப்பிட்டி தெரு, மேட்டுத்தெரு, ஆட்டுப்பட்டித் தெரு, கபோஸ் லேன், சென் ஜோன்ஸ் வீதி, பிரதான வீதி, 5ஆம் குறுக்குத் தெரு, நொரிஸ் வீதி, 4ஆம் குறுக்குத் தெரு, கெய்சர் வீதி, செட்டியார் தெரு, ஸ்ரீ கதிரேசன் வீதி வழியாக வலம் வந்து ஜிந்துப்பிட்டி ஆலயத்தை வந்தடைவார்.
இந்த ஆலய நிகழ்வுகளில் அடியார்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டு அருட்கடாட்சம் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
எச்.எச். விக்கிரமசிங்க