வெள்ளிப் பனிமலை மீதிருந்து தடைகள் பல தாண்டி தவழ்ந்து வரும் அருவியது. தங்க மணிச் சப்தமதாய் சலசலத்து தாளத்துடன் தன்பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது.
இமயத்துத் தென்றல் இதமாக வீசிடும் அந்தி மயங்கும் நேரமதில் அழகான பெண் ஒருத்தி அணி முத்துக் கழுத்தினிலே பொன்மணி மாலை மின்னலிட துள்ளிக் குதித்த வண்ணம் தாள லயத்துடன் நடந்து வந்திட்டாள். நடக்கையிலே அவள் அழகு அப்பப்பா! சொல்வதற்கோ கம்பனோ, கண்ணதாசனோ இங்கு இல்லை. பட்டுக் கோட்டையாரோ தன் இளவயதில் போய்விட்டார். இருந்திட்டால் அழகான கவிதை ஒன்று தந்திருப்பார். கண்ணதாசன் இருந்திருந்தால் கூட ‘ஆகா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்’ என சினிமாவுக்கு எழுதிய பாட்டல்லாமல் வேறு நடைப்பாடல் ஒன்றை யாத்திருப்பார்.
ஆமாம், அவள் நடக்கும் அழகில் இடை அங்கே தாளமிட காலிரண்டும் பின்னலிட கார்குழல்தான் இதமான தென்றலின் அசைதலில் கார் முகிலாய் கோலமிட அடிமேலே அடி எடுத்தாள் அன்னமவள்.
அவள் இல்லம் அருவிக்கு வடகரையில் சீனத்துப் பாணியில் மூங்கில் மரம் கொண்டு செய்யப்பட்ட சிறு குடிசை. இல்லை இல்லை! அவளுக்கு அது மாளிகை; ஒப்பற்ற அரண்மனை. அருவிக்கு அருகில் அமையப்பெற்ற இல்லமதில் இருந்த வண்ணம் இயற்கை அழகை இரசித்திடுவாள்.
நினைத்தவுடன் அருவிக்கரை ஓரம் வந்து ஒய்யாரமாய் மணற்தரையில் அமர்ந்த படி பொழுததனைப் போக்கிடுவாள் வாடிக்கையாய்.
அன்றொரு நாள் வாடிக்கை மறந்திடாத கிள்ளை, அந்தி மயங்கும் நேரமதில் அருவிக்கரை வந்திட்டாள். குளிர் நீர், தளிர்மேனி தனில் சில்லென சலனத்தை ஏற்படுத்த, தனிமையிலே நீராடி மகிழ்ந்தாள். தற்செயலாய் அருவியை நோக்கியவாறு நின்றாள். அங்கே அவள் கண்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. தன்னையறியாமல் அருவியின் கரையேறி கடிதினில் தன்மேனி ஒட்டியிருந்த நீராடைதனைச் சரிசெய்தபடி நாணம் மேலிட நாணிக் கோணி நின்றாள்.
அழகான இக் காட்சிதனை ஓரிளைஞன், கட்டிளம் காளையொருவன் கண் கொட்டாமல் தூரத்திலிருந்து ரசித்த வண்ணம் அவளைப் பார்த்து நின்றிருந்தான். பின் அவள் நின்றிருந்த திசை நோக்கி அவள் நீராடிய இடம் நோக்கி சைகையால் ஏதோ சேதி சொல்லி நின்றான்.
அறியாத பாவையவள் தண்ணீரை நோக்கி நின்றாள் ஆசையுடன் தன்னை நோக்கி வந்த மடலை அள்ளி எடுத்தாள். பக்குவம் தவறாது தண்ணீரில் மூழ்கிடாது. ஆர்வமாய் அவள் உள்ளம் அம்மடலைப் படிப்பதற்கு அவளை உந்தித்தள்ள விழி இரண்டும் வேகமாய் அதனைப் படிக்க,
“அன்னமே நான் உன்னை எண்ணத்தால் என் உள்ளத்தால் விரும்புகின்றேன். உன் விருப்பம் அறிந்திட்டால் நீ எந்தன் சொந்தமாய் ஆகிடுவாய் உன் விருப்பம் எதுவென்று நான் அறிந்திடலாமோ? நான் கள்வன் நீ அறியாது உன் அழகை நதிக்கரையின் பற்றைக்குள் இருந்தவாறு கொள்ளையடித்து உன் அங்க அசைவுகளை ஆசைதீர கண்களினால் பருகியவன். என்னை மன்னித்துவிடு. உன் விருப்பம் என் விருப்பம் ஒன்றானால் இணைந்திடலாம் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவராய் துணையாக உன் விருப்பம் அதுவானால் நாளை மாலை வேளையிலே நான் இங்கு வந்திடுவேன், இல்லையேல் கண் காணாத் தூரத்திற்கே சென்றிடுவேன்” என அந்த மடல்தான் பேசியது.
யார் இந்த இளைஞன்? என அறிந்திடவே அவளுக்குள் எழுந்தது ஆசை. மறுநாள் ஓசை ஏதுமின்றி குறித்த நேரத்திலே நதிக்கரையில் காத்திருந்தாள். இளைஞனின் வருகைக்காய்.
குறித்த நேரமதில் இளைஞனும் வந்திட்டான். அவனைக் கண்டதுதான் தாமதம் அவளுள்ளம் பட்டாம் பூச்சியாய் படபடக்க உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் நடு நடுங்க ஏதோ ஓர் நாணம் இளையோடி மறைந்தது. பேச்சுத்தான் வரவில்லை. இருவரும் ஓர் நிலையில் இருந்ததனால் அங்கு மௌனம்தான் நிலவியது.
மறுகணம் மௌனம்தான் கலைந்து “தண்ணீரில் மடல் எழுதி என் திசையில் ஏவிவிட்ட சொந்தம் கொள்ள வந்த நீவிர் யார் எனவே நான் அறியச் செய்வீரோ?” எனக் கேட்டு நாணத்தால் தலை கவிழ்ந்து தன் கால் பெருவிரலால் மணல் மீது கோலமிட்டாள்.
மணல் மீது கோலமிடும் மங்கையின் வதனத்தை தன் விழி வழியே உள்வாங்கி எச்சிலை விழுங்கியவளாய் கற்சிலையாய் நின்றவளிடம் “பெண்ணே! நான் ஒன்றும் மன்னவர் காலத்து இளவரசனுமில்லை, வணிகத்தில் புகழ் பூத்த வர்த்தகனும் இல்லை,
பக்கத்து ஊரினிலே குடியிருக்கும் உறவு கொண்ட குடும்பத்தில் ஓர் உறவு அவ்வளவே, என் பெயரோ எழில் வேந்தன். கடலோடி முத்தெடுக்கும் ஒருவனே!” எனச் சொன்னான்.
பின், “வானத்து தேவதையாய் நீ இருக்க நின் பெயரை நான் அறியலாமோ?” எனக் கேட்டு நின்றான். அவள் விபரம் அறியும் நோக்கில்,
“என் பெயரோ பொன்னழகி. உறைவிடமும் இங்கேதான். அங்கேபார் அது எனது மாளிகையாம்” எனச் சொல்லி தன் மூங்கில் மர மாளிகையைக் காட்டி நின்றாள். அவள் சொன்ன திசையினிலே நோக்கியவன் பிரமித்து நின்று விட்டான். பின் “நீ என்ன இங்கே செய்கின்றாய், தனிமையிலே வந்திடுதல் ஆபத்தில் முடிந்திடாதோ?” எனக் கேள்வியும் கேட்டு நின்றான்.
“எனை எவரும் ஒன்றும் செய்திட இயலாது. நான் ஒன்றும் கோழையல்ல. நினைத்தவுடன் வந்திடுவேன். சளைத்தவுடன் சென்றிடுவேன்” எனச் சொல்லிச் சிரித்திட்டாள்.
தான் கடலோடிப் பெறுகின்ற முத்தைவிட பளிச்சிடும் அவள் முத்துப் பற்கள் அவன் கண்களைக் கொள்ளை கொள்ள, புன்னகையால் அவள் எழில் முகம் நோக்கி, “பொன்னழகி! இனிமேல் நீ என்னழகி” எனச் சொல்லி உள்ளமது கவர்ந்திட்டான்.
இரு மனமும் ஒரு மனமாய் ஒன்றாக இணைந்த பின்னால் ஒவ்வொரு நாள் மாலையிலும், அந்தி மயங்கும் வேளையில் காதல் பயிரினை வளர்த்தெடுத்தனர் அவ்விருவரும்.
இரு குடும்பமும் ஒரு குடும்பமாய் எதிர்ப்பு ஏதும் இன்றி காதல்கனிந்து கனி தரும் காலமும் வந்தது.
விடைபெறும் காலம் வந்திடவே அவளிடம் விடைபெற்றான் அவன்.
“இருந்திடலாம் என்றாலும் நான் விடை பெறும் நேரம் வந்துவிட்டது.”
“என்ன விடை பெறவா?”
“அப்படிச் சொல்லாதீர், விடைபெற்று நீர் சென்றால் நான் என்ன உயிரோடா இருந்திடுவேன்?” நானும் உன் உடலைச் சுற்றியவளாய் உயிரை விட்டிடுவேன்” எனச் சொன்னாள் அச்சம் மேலிடவே.
திடுக்கிட்டான் எழில் வேந்தன், “ஐயகோ அப்படியா நான் சொன்னேன்? அர்த்தத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்துவிடு.
நாளைக் காலையிலே உனை விட்டுப் பிரிந்து என் பிரயாணம் மேற்கொள்ள இருக்கின்றேன்.
அதற்குள் வீணான வேற்றுக் கருத்தில் கற்பனையில் என்னையே கொன்று விட்டாயே!”
“மன்னிக்க வேண்டும் மகாராசா உம்மீது கொண்ட காதல் உண்மையுள்ளத்தில் உரைந்ததனால் காதல் ஏக்கத்தில் அவ்வாறு தவறாக எண்ணிவிட்டேன். உண்மையாய்ச் சொல்லுகிறேன். உடன்கட்டை ஏறும் வழக்கு இந்நாளில் கடன் அட்டையாய் போனதால் உடன்கட்டை ஏறமாட்டேன்.
உன்னுடனே உன் வழியில் உயிரை விட்டிடுவேன்” எனத் தெளிவாகச் சொல்லி வைத்தாள்.
“பொன்னழகி! நான் ஒன்று சொல்லுகின்றேன் உன்னிப்பாய்க் கேட்டிடு” இன்று அதிகாலை விடிவெள்ளி முளைக்குமுன்னே கடிதினிலே வீட்டை விட்டுக் கிளம்பிடுவேன் தூரதேசம் செல்வதற்காய். கடலோடி முத்தெடுத்து என் தொழில் தீர்ந்து வருவதற்கு பத்துத் திங்கள் முடிந்தவுடன் உன் பக்கத்தில் நான் இருப்பேன்.
அதுவரையில் பத்திரமாய் இருந்திடவேண்டுமென வேண்டுகிறேன்.”
“என்னை விட்டு விடுங்கள், எவ்வளவும் எனக்கேதும் பயமில்லை பத்திரமாய் சென்று திரும்பிடுங்கள். பத்துத் திங்களும் பத்து நாட்களாக மாறிடாதோ? என ஏக்கத்தில் காத்திருப்பேன்.
உங்கள் வரவு மட்டும் எனக் கொன்றும் தீங்கேதும் நடந்திடாது உறுதியாய் சென்று வாருங்கள். இறுதியாய் ஒன்று சொல்வேன் உங்கள் உடம்பினைப் பார்த்துக் கொள்ளுங்கள் மறதியாய் இருந்திடாது” எனச் சொன்னாள்.
மற்றொன்று, நீங்கள் செல்லும் தேசம் எங்கும் கட்டழகுக் கன்னியரும், கண்ணழகு மங்கையரும் கணக்கின்றி உலவிடுவர். ஒரு கணமேனும் அவர் மீது மயங்கிடாது இருந்திடவும் வேண்டுகின்றேன்.
“எத்தகைய பேரழகி வந்திடினும் ஏன் உலக அழகி வந்தாலும் நான் என்ன மயங்கிடவா போகின்றேன்? நீதான் எனக்கு உலக மகா அழகு ராணி. கிளியோபற்றா இருந்திருந்தால் கூட உன் அழகுக்கு தோற்றுப் போயிடுவாள்” என்றான் பெருமையுடன்.
“அத்தான் கடும் கோபம் கொண்டிராது கேட்டிடுவீர். நான் ஒன்றும் கோழையும் அல்ல கோழை அப்பனுக்குப் பிறந்தவளும் அல்ல. வேளை வரும்போது வேண்டியது செய்து வெற்றியும் கண்டிடுவேன். இதை நீங்கள் நம்பிட வேண்டும்.”
“அஞ்சிடாதே அஞ்சுகமே! உன் நினைவாய் இருந்து நான் சென்ற வேலை முடிந்தவுடன் ஓடியும் வந்திடுவேன் இது உறுதி எனச் சொன்னான்.
பத்துத் திங்களும் பத்து யுகங்களாகக் கழிந்தது அவ்விருவருக்கும். எழில் வேந்தன் ஆழ்கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களால் செய்யப்பட்ட அழகியதொரு விலைமதிப்பற்ற முத்து மாலை ஒன்றை தன் காதலிக்காக எடுத்துக் கொண்டான். அத்தோடு திருமணத்துக்கு வேண்டிய பொருட்கள் பலவற்றையும், பரிசுப் பொருளையும் எடுத்துக் கொண்டு ஊருக்குப் புறப்படத் தயாரானான்.
அதேபோன்று தன் மாணாளன் எப்பொழுதுதான் வந்திடுவான் என்ற ஏக்கத்திலே காத்திருந்து காத்திருந்த கண்ணிரண்டும் பூத்திருந்தாள் பொன்னழகி.
ஒரு நாளிகைதான் ஆகியிருக்கும். கடற்காற்று கோரத் தாண்டவம் ஆட, அடை மழையும் பிடித்துக் கொண்டதில் கப்பலைச் செலுத்துவதில் மாலுமிகள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கினர்.
ஒரு நாளிகைதான் ஆகியிருக்கும் எழில்வேந்தன் புறப்பட்ட கப்பல் கடும் பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளான செய்தி காட்டுத்தீயாய் ஊரெங்கும் பரவியது. பொன்னழகிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாடி நரம்புகளை எல்லாம் கட்டிப் போட்டது போல உணர்ந்தாள்.
ஓடியும் சென்றாள், கடற்கரையை நோக்கி. கடற்கரையில் பெரும் கூட்டத்தின் மத்தியில் அழுகுரலைத் தவிர வேறு எதையும் கேட்க முடியவில்லை.
கடற்கரையில் கிடத்தப்பட்டிருந்த உடல்களை ஒவ்வொருவரும் இணம் காணும் முயற்சியில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் இனம் காணப்படாத உடலொன்று ஓர் ஓரமாக கிடத்தப்படடிருந்தது. எவரும் உரிமை கோராத அந்த உடலுக்கு உரியவர் இல்லை என்றாகி விட்டது.
காரணம் அந்த உடலின் கழுத்துக்கு மேலே உருக்குழைவு ஏற்பட்டு இனங்காண முடியாதபடி சிதைந்து காணப்பட்டதுதான். எல்லோரும் அது எழில் வேந்தனின் உடல்தான் என முடிவு செய்தனர்.
பொன்னழகி அழுதாள், துடித்தாள், துவண்டாள், கடும் வெய்யிலில் போடப்பட்ட புழுவாய் வேதனையால் துவண்டாள்.
பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய் கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டு அருவிக்கரை நோக்கி ஓடினாள். எவராலும் தடுத்த நிறுத்த முடியாதபடி புயலாய் புறப்பட்டாள்.
அருவி என்றும் போல் அமைதியாய் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் அருவிக்கு ஓடியவள் ஒரு கணம் நின்றாள். ‘எத்தனை வேதனைகள், சோதனைகள் வந்த போதும் உடன் கட்டை ஏற மாட்டேன்’ என்று அன்று எழில் வேந்தன் முன்னிலையில் சொன்ன வார்த்தைகள் அவளைத் தடுத்து நிறுத்தியது. அப்படிச் செய்தால் கோழை என்ற அவப் பெயரைச் சுமக்க வேண்டி வரும் என்ற காரணத்தினால் அப்படியே கற்பாறையில் அமர்ந்து கொண்டாள்.
என்ன செய்வது என்று ஒன்றும் அறியாமல் மனக் குழப்பத்தில் மூழ்கியவளாய்.
“பொன்னழகி!” அன்புடன் தன்னை எவரோ அழைப்பது கேட்டு திரும்பிப் பார்த்தாள். அவளது கண்களை அவளாலே நம்ப முடியவில்லை.
ஆம் அங்கே சிரித்த முகத்துடன் எழில் வேந்தன் நின்றிருந்தான். “அத் அத் அத்தான் நீங்கள் நீங்கள் வந்து விட்டீர்களா?” வார்த்தைகள் தடுமாற அவள் கேட்டாள்.
“ஆமாம், நான்தான் நானே தான் உன் அத்தான் எழில் வேந்தன்” எனச் சொன்ன வண்ணம் அவன் அவள் அருகில் வந்தான். “எங்கே நான் மாண்டு விட்டேன் என ஓடிவந்தாயா? கடற்கரையில் உள்ள பிணம் யார் என்று நீ அறியாய்.
கப்பலில் என்னுடன் பயணித்த வேற்று நாட்டவன். அவனும் என்னைப் போல் இருந்ததனால் நான்தான் உன் எழில் வேந்தன் என நினைத்திட்டாயா? பத்துத் திங்களில் பறந்து வந்திடுவேன் எனச் சொல்லிப் போந்தேனோ இதோ குறிப்பிட்ட திகதியில் வந்து விட்டேன்” என்றான்.
மகிழ்ச்சியில் இருவரும் தம்மை மறந்தனர்.
கலாபூஷணம் மாவனல்லை எம்.எம்.மன்ஸூர்