Home » மனித நேயம்

மனித நேயம்

by Damith Pushpika
June 23, 2024 6:00 am 0 comment

எனக்கு வயது முப்பத்திரெண்டு, நான் பன்னிரெண்டு வயதிலிருந்து ஒரு கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றேன். நான் மட்டுமல்ல, எனது பரம்பரையே கூலித்தொழிலாளர்கள்தான்.

எனது தந்தை தொடர்மாடிக் கட்டடமொன்றில் வேலை செய்யும் போது தவறிவிழுந்து மரணமடைந்து விட்டார். அப்பொழுது எனக்கு வயது பன்னிரண்டு. எனது தங்கை அம்மாவின் வயிற்றில் கருவுற்றிருதாள் அவளுக்குத் தந்தையைத் தெரியாது.

எனது தந்தை இறந்ததும் எங்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய எவரும் முன்வரவில்லை. இதனால் இளவயதிலே நான் ஒரு கூலித் தொழிலாளியாக மாறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆரம்பத்தில் எனக்கு வழங்கிய சம்பளம் எனது குடும்பத்தைக் கொண்டுநடத்தப் போதுமானதாக இருக்கவில்லை. அதனால் எனது தாயும் ஒரு கூலித் தொழிலாளியாக மாறினாள். இருவரின் சம்பளத்துடன் எமது குடும்பமும் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தது.

என்னைப் போல எனது சகோதரியும் ஒரு கூலித்தொழிலாளியாக மாறுவதை நான் விரும்பவில்லை. அதனால் எப்பாடுபட்டாவது அவளைப் படிப்பித்து ஒரு அரச உத்தியோகத்தில் அமர்த்த வேண்டும் என்பது எனது ஆசை. அதனால், அவளின் படிப்பில் கண்ணும் கருத்துமாக இருந்தேன்.

அவளும் இளமையிலிருந்தே படிப்பில் ஆர்வமுடையவளாகக் காணப்பட்டாள். அவள் முதலாந் தரம் தொடக்கம் பதினோராந் தரம் வரை முதலாம் இடத்தைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டாள். இறுதியாக அவள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றாள். அதனால் அவளுக்குப் பாராட்டுதல்களும், பரிசில்களும் குவிந்தன. இது எனக்குப் பெருமையாக இருந்தது. அதனால் அவளைத் தொடர்ந்து படிப்பிக்க வேண்டும் என்ற வெறி எனக்குள் ஏற்பட்டது.

அவளும் எப்பொழுதும் புத்தகமும் கையுமாகவே, காணப்பட்டாள். இதனால் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மருத்துவப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தில் தெரிவு செய்யப்பட்டாள்.

மருத்துவத்துறையில் அவளைப் படிப்பிக்க வைப்பதாயின் பெருந்தொகைப் பணம் செலவிட வேண்டுமெனப் பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். எங்களுடைய வருமானமோ அதற்குப் போதாது. இருந்தாலும் அவளைத் தொடர்ந்தும் படிப்பித்து ஒரு டாக்டராக்க வேண்டும் என நினைத்தேன்.

அதனால் ஊரிலுள்ள பணக்காரர்களிடமும் அயலூரில் உள்ள கனவான்களிடமும் சென்று கடனாகப் பணம் கேட்டேன். எல்லோரும் கைவிரித்து விட்டார்கள்.

இந்நிலையில் என்ன செய்யலாம் என யோசித்தேன். அப்பொழுது என் தாய்மாமனின் நினைவு எனக்கு வந்தது.

எனது தாய்மாமன் எங்களோடு உறவு கொண்டாடுவதில்லை. அவர் பெரிய கட்டட ஒப்பந்தக்காரர். பணக்காரர் பட்டியலில் முதலாம் இடத்தை வகிப்பவர். அதனால் அவர் கைகளில் எப்பொழுதும் பெருந்தொகைப் பணம் புரண்டுகொண்டே இருக்கும்.

அவருடன் நாங்கள் தொடர்பு கொள்ளாமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று நாங்கள் கூலித் தொழிலாளர்கள். எங்களுடைய நிலை அவரது அந்தஸ்த்துக்கு ஒப்பாக அமையாது. அடுத்த காரணம் நாங்கள் நாளாந்தக் கூலிகள் அதனால் மாதத்தில் சில நாட்களுக்கு எங்களுக்கு வேலை கிடைக்காது. இதனால் எமது குடும்பத்தைக் கொண்டு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்நிலையில் நாங்கள் அடிக்கடி அவரின் வீட்டுக்குச் சென்று அவரிடம் பணம் கேட்போம் என்ற நினைப்பு. இதனால் எங்கள் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழக அவர் விரும்பவில்லை.

எனினும் எனது சகோதரி மருத்துவப் பிரிவுக்குத் தெரிவு செய்யப்பட்டதை அவருக்குத் தெரிவித்து, அவளின் படிப்புச் செலவுக்கான பணத்தைக் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நப்பாசை எனக்கு ஏற்பட்டது. அதனால் அவரைச் சந்தித்துப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என எண்ணி அவரின் வீட்டுக்குச் சென்றேன்.

அவரது காவலாளி என்னை உச்சி முதல் உள்ளங்கால்வரை பார்த்து விட்டு “நீ யாரு? யாரைப் பார்க்க வந்தாய்?” என நக்கலாகக் கேட்டான். இவனே என்னைக் கிண்டலாகக் கேட்கும் போது, நான் எனது மாமாவைப் பார்க்க வந்துள்ளேன் எனக் கூறலாமா? என யோசித்தேன்.

பின்னர் என்னைச் சமாளித்துக் கொண்டு “ஐயா! ராசாவைப் பார்க்க வந்துள்ளேன்” எனக் கூறினேன்.

“ஐயா! ராசாவையா? உன்ன பாத்தா பிச்சக்காரனப் போலக் கிடக்கு? பிச்ச எடுக்கவா வந்த நீ?” என மீண்டும் கேள்விகளைக் கேட்டு என்னைத் துளைக்கத் தொடங்கினான்.

“சுவாமி வரம் தந்தாலும் பூசாரி வரம் தரமாட்டான்’ என நினைத்துக் கொண்டு, “ஐயா! ராசாவத்தான் பாக்க வந்திரிக்கன். அவரிட்ட போய் சொல்லு” எனச் சற்றுக் கடுமையான குரலில் கூறினேன்.

அவன் என்னை முறைத்துப் பார்த்து விட்டு, “அதுசரி! உண்ட பேரென்ன? அத சொன்னாதானே நான் ஐயாட்ட சொல்லலாம்?” எனச் சற்று இறங்கிய குரலில் என்னிடம் கூறினான்.

மருமகன் மதன் என்று சொன்னால் அது சிலவேளை அவரின் கௌரவத்தைப் பாதிக்கும் என்பதால் ‘மதன்’ என்று மட்டுமே கூறினேன். என்னை கேற்று வாசலில் நிற்கும்படி கட்டளையிட்டு அவன் ஐயாவின் பங்களாவை நோக்கிச் சென்றான்.

அவன் பங்களாவின் வாசலை அடைந்ததும் “ஐயா! ஐயா!!” என அழைத்தான். காவற்காரனின் அழைப்பைக் கேட்டதும் ராஜாவின் மனைவி வேலம்மாள் வந்து கதவைத் திறந்து வெளியில் எட்டிப் பார்த்தாள்.

நான் கேற்றடியில் நிற்பதைக் கண்டதும் அவள் கண்களில் அனல் பறந்தது. முகத்தை மறுபுறம் திருப்பியபடி உள்ளே விறுவிறு என்று சென்றுவிட்டாள்.

அவள் உரத்த குரலில் “சனியனுகள் எங்கள வாழவுட மாட்டுதுகள். இதிகள்ர சவகாசம் வேண்டாமெண்டுதானே இருவது வரிசமாக நிம்மதியா வாழ்ந்து வந்தம். மறுபடியும் வந்து எங்கட வாழ்கை கெடுக்கப் போகுதுகள்” என ஆவேசமாகக் கத்தியபடி ராசாவின் அறைக்குள் நுழைந்தாள்.

“உண்ட மருமகன் உறவ புதுப்பிக்க வந்திரிக்கான். பிச்சக்காரப் பயல்! நல்ல துணிகூட இல்லாம கிழிஞ்ச சட்டையோட வந்து கேற்றடியில் நிக்கான். என்னெண்டு கேட்டு கெதியா தொலச்சிப் போட்டு வாங்க. சொந்தம் கிந்தம் எண்டு உள்ளே கூட்டு வந்தா எனக்கு பேய்தான் புடிக்கும்” என ஆவேசமாகக் கணவனைப் பார்த்துக் கத்தினாள்.

“என்ன நீ கத்திற? அவன நான் பார்த்துக்கிறன். அவன எப்பிடி துரத்துவதெண்டு எனக்கு தெரியும்? நீ போய் உண்ட வேலய பாரு?” எனக் கூறி தனது மனைவியை சமாளித்து விட்டு ராசா கதவடியில் வந்து எட்டிப் பார்த்தான்.

இதைக் கண்டதும் எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கத் தொடங்கியது. அவன் என் தாய் மாமனல்லவா? அவரைக் கண்டதும் பாசத்தால் என் கண்கள் பணித்தன. நான் சந்தோஷ மிகுதியால் துள்ளிக் குதித்தபடி அவரை நோக்கி விரைந்து கொண்டிருந்தேன்.

“நீ! ஏன் வாறாய்? அங்க நில்லு?” என என் தாய்மாமன் கூறியதைக் கேட்டதும், என் தலையில் ஆயிரம் சம்மட்டிகள் கொண்டு அடிப்பது போன்ற வேதனை ஏற்பட்டது.

இதனிடையில் மாமாவும் விறுவிறு எனநடந்து வந்து எனது அருகில் வந்து விட்டார். நான் என்னை ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு, “உங்களதான் பாக்க வந்தன்” எனக் கூறினேன்.

“என்ன பாக்க நீயேன் வந்தாய்? உங்களுக்கும் எங்களுக்கும் உறவில்லையே? இருவது வரிசமா இல்லாத பாசம் மறுபடியும் எப்பிடி வந்தது” எனக் கூறியபடி தனது முகத்தை மறுபக்கமாகத் திருப்பிக் கொண்டார்.

“ஒண்டுமில்ல? தங்கச்சி மருத்துவ பீடத்தில் எடுபட்டிட்டாள். அதபத்தி சொல்லலாமெண்டுதான் வந்தேன்” எனக் கூறி அவரை சமாளிக்க முயன்றான்.

“அதுதானே பாத்தேன்! சோழியன் குடுமி சும்மா ஆடுமா?” எனக் கூறி என்னை ஏளனமாகப் பார்த்தார்.

“இல்ல! மருத்துவ படிப்பு படிப்பதெண்டால் நெறயப் பணம் தேவப்படுமெண்டு பலரும் எனக்கிட்ட சொன்னாங்க. அதபத்தி பேசிட்டுப் போகலாமெண்டுதான் வந்தன்” என நான் வந்த நோக்கத்தை நாசூக்காக அவரிடம் கூறினேன்.

“உங்கட தொழிலுக்கு மருத்துவ படிப்ப படிப்பிக்க முடியுமா? விரலுக்கேத்த வீக்கம் என்டபடி நம்மட தகுதிக்கேற்ற ஒரு உத்தியோகத்தை எடுத்திட்டு காலத்தை ஓட்டுற வழிய பாருங்க” எனக் கூறினார்.

“என்னத் கதைக்கிறியள்? இதுகள ஆராச்சும் கண்டிட்டா எங்கள கவுரவம்தான் போகும். சீப் இஞ்சினியரும் வாரனெண்டு சொன்னவருதானே? அத துரத்தி போட்டு கெதியா வாங்க” ராசாவின் மனைவியின் குரல் அப்பொழுது குறுக்கிட்டது.

“நம்மட குடும்பத்தில் பெரிய படிப்பு படிக்க தங்கச்சிக்குத்தான் கிடைச்சிரிக்கு. அதனால் அவள எப்படியாவது படிப்பிச்சிப் போடுங்க எண்டு பலரும் சொன்னாங்க. அதனால் அவள படிப்பிக்க கொஞ்ச பணத்த கடனாகத் தாங்க. புறகு உழச்சி வட்டியோட தாறன். உங்களவுட்டா வேறெவரும் உதவ மாட்டாங்க. உங்கட வசதி வாய்ப்புப் பத்தி எனக்குத் தெரியுந்தானே? அதாலதான் கேட்கிறன்” எனக் கூறினேன்.

“நீ சொல்லுற மாதிரி காசி எதுவும் என்னிட்ட இல்ல. நானும் பெரு நஷ்டமடைஞ்சி கிடக்கன். இந்த நிலயில், எவருக்கும் உதவி செய்யிற நிலையில் நானில்ல. நீ வேறெவரிட்டையாவது உதவி கேட்டுப்பாரு” என மாமா என்னைப் பார்த்துக் கூறினார்.

“நான் உங்கட்ட உதவி கேட்டவரல்ல. கடனாகத்தான் வட்டிக்கி காசி கேட்டு வந்தன். நீங்க சொல்லுறதப் பாத்தா, நான் தான் பிச்சக்காரன் எண்டு நினைச்சன் ஆனா நீங்க என்னவிட பிச்சக்காரனாக இருக்கீங்க. நான் வாறன்” என ஆவேசமாகக் கூறியபடி கேற்றை நோக்கி விறு விறு என நடந்து சென்றேன்.

அப்பொழுது கேற்றடியில் ஆடம்பர மோட்டார் வாகனம் ஒன்று உள்ளே வருவதற்காக தரித்து நின்றது. யாரும் கௌரவமானவர்களாக இருக்கலாம், அவர்கள் என்னைப் பார்த்தால் அது மாமாவின் கௌரவத்திற்கு பாதகமாக அமைந்துவிடும் என நினைத்தபடி கேற்றின் ஓரமாக ஒதுங்கிக் கொண்டேன்.

அப்பொழுது காரில கோட்சூட்டோடு அமர்ந்திருக்க அந்தக் கனவான் என்னை உற்று நோக்கினார். அவரின் பார்வையில் நான் படக் கூடாது என்ற நிலையில் எனது முகத்தை மறுபக்கமாகத் திருப்பிக் கொண்டேன்.

அவர் காரிலிருந்து இறங்கி என்னை நோக்கி நடந்து வந்தார். இதனிடையில் எனது மாமாவும், அவரது மனைவியும் கேற்றடியை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்து வந்து கொண்டிருந்தார்கள்.

அவர் என்னருகில் வந்து மீண்டும் என் முகத்தை உற்றுப் பார்க்கத் தொடங்கினார். இதனிடையில் மாமா அவரை உள்ளே வரும்படி அழைத்தார். அவரது மனைவியும் “உள்ளே வாருங்கள்” என புன் சிரிப்புடன் அழைத்தார்.

அப்பொழுது என் மாமா என்னை அவருக்கு அறிமுகம் செய்தார். “இவன் ஒரு பிச்சகாரப் பயல். அடிக்கடி பிச்ச கேட்டு வருவான். அதனால இண்டைக்கும் கொஞ்ச பணத்த கொடுத்து அனுப்பினம்” எனக் கூறினார்.

அப்பொழுது எனது மாமி வேலம்மாள், “இவன பாத்தா பாவமா கிடக்கு. கிழிஞ்ச சட்டையோடு வந்திட்டான். அதுக்கும் சேத்து கொஞ்ச காசிய கொடுத்திட்டம்” எனக் கூறியபடி என்மீது பாசத்தைப் பொழிந்தாள்.

காரிலிருந்து இறங்கிவந்த கனவான் தனது இரண்டு கைகளாலும் என் தோள்கள் இரண்டையும் பற்றிப் பிடித்துக் கொண்டே என் முகத்தை உற்று நோக்கினார்.

“டேய்! நீ குணாதானே! என்னோடு ஐந்தாம் தரத்தில் கொலசிப்பில் பாஸ் பண்ணி படிப்பையும் இடைநடுவில விட்டுவிட்டாய்? இப்ப என்னடா செய்கிறாய்?” என என்னைப் பார்த்துக் கேட்டார்.

இதைக் கேட்டதும் என் இரண்டு கண்களிலிருந்தும் சந்தோஷ மிகுதியால் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. எந்தவித உறவுமில்லாத இப்பெரியார் என்னுடன் பழகும் விதம் என்னை நட்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

நான் என்னை இனங் காட்டிக் கொள்ளாதவனாக “ஐயா! நான் ஒங்கள ஒருநாளும் கண்டதில்லை. ஒங்கட அந்தஸ்தென்ன? எண்ட நில என்ன? என்னோட பழக ஒங்களுக்கு கூச்சமில்லையா? என்ன உட்டுடுங்க” எனக் கூறியபடி கேற்றைத் தாண்டுவதற்காக விரைவாக நடக்கத் தொடங்கினேன்.

அப்பொழுது அவர் என் தோள்களைப் பற்றிப் பிடித்து என்னைத் தடுத்து நிறுத்தினார். “டேய் குணம், நீ அன்றும் இப்படித்தான். எப்போதும் நீ உன்னைத் தாழ்த்தித்தான் பேசுவாய். உனது நெற்றியிலிருக்கும் தையல் அடையாளம் அன்று பார்த்த மாதிரி அப்படியே இன்றும் இருக்கிறது. இதனை எப்படியட உன்னால் மறைக்க முடியும்? என என்னைப் பார்த்துக் கேட்டார்.இவரிடம் இன்று வகையாக மாட்டிக் கொண்டேன். எப்படியும் தப்ப முடியாது? உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும் என் நினைத்தபடி “ஐயா! ஒங்கட பேரென்ன? ஒங்கள பத்தி எனக்கு ஞாபகமில்லையே?” என அவரைப் பார்த்துக் கேட்டேன்.

“என்னுடைய பெயர் உனக்குத் தெரியும்தானே? வேண்டும் என்றே பொய் சொல்லுகிறாய். நாம் இருவரும் சின்ன வயதிலே விளையாடும் பொழுது அடிபட்டு விழுந்ததால் எனது இடது கை இழுத்துக் கொண்டது. உனக்குத் தெரியும்தானே! இதோபார், இப்பொழுதும் என் கை அப்படித்தான் இருக்கிறது” எனக் கூறித் தனது இடது கையை எனக்குக் காட்டினார்.

இதனிடையில் எனது மாமாவும் மாமியும் ஆச்சரியத்தால் கண்களை அகல விரித்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“உன்னுடைய தந்தை ஒரு கூலித் தொழிலாளிதான். அவர் கௌரவமானவர், பண்புள்ளவர், மற்றவர்களை மதிக்கும் சுபாவம் கொண்டவர். அவருக்கு பிறந்த உனக்கும் அத்தனை குணங்களும் இருக்கத்தானே செய்யும். தொழிலைக் கொண்டு ஒருவரை மட்டிட முடியாது. பணம் இன்று எம்மிடமிருக்கும் நாளை வேறொருவரிடம் இருக்கும். ஆனால் மனிதன் மனிதனாகவே வாழ வேண்டும்” என எனக்கு உபதேசஞ் செய்தார்.

இவரது உபதேசம் என்னை மேலும் உற்சாகப்படுத்தியது. “அதுசரி! உங்கள் குடும்பம் எங்கிருக்கிறது? நான் இருபது வருஷத்திற்குப் பிறகு இன்றுதான் உன்னைக் காண்கின்றேன். நீ திருமணஞ் செய்து பிள்ளைகளோடு வாழ்கின்றாயா? குடும்பம் சந்தோஷமாக இருக்கிறதா?” எனக் கேட்டார்.

“இல்ல! கலியாணம் முடிக்கல்ல. தங்கச்சி ஒருத்தி இருக்காள். அவள படிப்பிச்சி, கலியாணம் முடிச்வைச்சி புறகுதான் அதபத்தி யோசிக்க வேணும்” என என்னுடைய நிலைமை பற்றிச் சுருக்கமாகக் கூறினேன்.

“நீ இப்பொழுது என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டார். “எனக்கென்ன? எஞ்சினியர் தொழிலா கிடைக்கப் போகுது. அஞ்சாந் தரத்தோட படிப்ப முடிச்ச எனக்கு கூலித்தொழில விட வேறென்ன தொழில் கிடைக்கப் போகுது?” என எனது மன ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தேன்.

“அடேயப்பா! இப்பொழுது கூலித்தொழிலாளியுடைய சம்பளம் எஞ்சினியர் சம்பளத்தையும் விடக் கூட, அது உனக்குத் தெரியுமா?” எனக் கிண்டலாக என்னைப் பார்த்துக் கூறினார்.

“ஆமாம்! நீங்க சொல்லுறபடி கூடக் கெடச்சாலும் குடும்பத்தயும் பார்த்து தங்கச்சிட படிப்பையும் பார்க்க போதுமா?” என அவரிடம் கேட்டேன்.

“தங்கச்சி படிப்பதாகக் கூறினாயே? அவள் என்ன படித்துக் கொண்டிருக்கின்றாள்” எனக் கேட்டார்.

“அவள் மருத்துவ பீடத்துக்கு எடுபட்டிருக்கிறாள். அகில இலங்கை ரீதியில் முதலாவதாக இருக்கலாம் என்று சொல்லுறாங்க.” எனக் கூறினேன்.

“அப்படியா? நீ கொடுத்து வைத்தவன். இனி உன்னை யாராலும் பிடிக்க முடியாது” எனக் கூறிக் கொண்டே தன் கையால் என் தோள் மீது தட்டினார்.

அவள படிக்க வைக்க வசதியில்லாம அலஞ்சி திரியிற இப்பரதேசிய குடுத்து வைச்சவன் எனப் புகழும் போது எனக்குள் ஒருவித சிரிப்பு முகிழ்ந்தது.

“உனது தங்கையின் படிப்புக்கு என்ன செய்யப்போகின்றாய். ஏதாவது பணத்தை சேமித்து வைத்திருக்கின்றாயா?” எனக் கேட்டார்.

“பணமா? சேமிப்பா? ஒரு காசி கூட என்னிட்ட இல்ல. யாரிட்டையாவது காசி கேட்டு போனா பிச்சக்காரப் பயலே உனக்கென்னடா கடன். கடன் குடுத்தாலும் நீ எப்பிடியடா குடுப்பாய். காசி ஒரு சதங்கூட உனக்கு தர ஏலாது. ஓடிப்போடா” என்று என்னைத் திட்டித் தீர்க்கிறாங்க எனக் கூறினேன்.

“அப்படியா? இப்ப பணத்திற்கு என்ன செய்யப் போகின்றாய்?” மீண்டும் என்னைப் பார்த்துக் கேட்டார். “எல்லாம் கடவுள்தான். அவரு ஏதாவது ஒரு வழிய காட்டுவாரு தானே?” எனக் கூறி ஒரு பெருமூச்சை விட்டேன்.‘ நீண்ட பெருமூச்சாக இருக்கிறது” எனக் கூறியபடி தனது பொக்கற்ருக்குள் இருந்த ஒரு விசிற்றிங்காட்டை எடுத்து என் கையில் திணித்தார். ஒன்றும் புரியாத நிலையில் நான் திருதிருவென விழித்தபடி வைத்தகண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். “நீ நாளை காலை இதில் இருக்கும் இடத்துக்கு வா. ஆரம்பச் செலவுக்காக இரண்டு இலட்சம் ரூபா தருகிறேன்.

பின்னர் படிப்பு முடியும் வரை மாதாந்தம் பணம் தருகின்றேன். நீ போய் வா” எனக் கூறினார். இதைக் கேட்டதும் சந்தோஷ மிகுதியால் அவரைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தேன் பின்னர் வணக்கத்தை செலுத்திவிட்டு உலகத்தில் மனிதநேயம் படைத்த மகான்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என எண்ணியபடி வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன்.

(யாவும் கற்பனை)

அருள் அரசன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division